செவ்வாய், 7 மார்ச், 2017

அன்னையர் தினம்?

முதல்நாளே நெல்லை எடுத்து உரலில் போட்டு குத்த ஆரம்பித்து விடுவார்கள்..


பருத்திக்கொட்டை,ஏலக்காய், சுக்கு,அரிசி என தயாரித்த மூலப்பொருட்கள் விடியற்காலை 4 மணிக்கெல்லாம் கருவேல் முட் குச்சிகள் திணித்த அடுப்பில் வேக ஆரம்பித்து விடும்..
பச்சை புகையும் அடுப்பில்
ஊதாங்குழல் என்னும் ஊதியில் ஊதி ஊதித்தான் என் அப்பத்தாவின் உயிர் கரைந்தது..

பருத்திப்பால் எனக் கூவிக்கொண்டே கொதித்த பானையின் சூடு ஓலைப்பெட்டியை ஊடுருவி அவளின் கூந்தல் இழந்ததும் அப்படித்தான்...

ஊக்குகளின் தயவில் உயிர்க்கொண்டிருந்த ஏழு ரூபாய்ச்செருப்போடு தான் கிராமங்கள் தோறும் அலைந்து எங்களுக்கு அரிசி கொண்டு வந்தாள்.
காதுவளர்த்த ஜீவன் கடைசிப்பொட்டு தங்கத்தையும் இழந்துதான் கஞ்சி வார்த்தாள்.
நண்டும் சிண்டுமாய் அவளை நாங்கள் மொய்த்துக் கிடக்கும் போதெல்லாம் அள்ளி அரவணைத்து முத்தங்கள் ஈயும் உதட்டுக்காரி...

வாழ்ந்த கதை அவள் சொல்லி அழுதால்..
வானம் அழும்..பூமி அழும்..
பிள்ளைகள் தலையெடுப்பார்கள்..
கவலை இல்லை எனக்கென்பாள்...
மெல்ல சில இலைகளாய் நாங்கள் தழைத்தபோது..
கொள்ளை நோயால் கண்ணீர்வழிய செத்துப்போனாள் பருத்திப்பால் கிழவி என் அப்பத்தா...

மூன்று அண்ணன்களோடு பிறந்த பாப்பா என் அம்மா...
பள்ளி சென்றால் அடிப்பார்கள் என பொத்திப்பொத்தி வளர்ந்த பாப்பா கடைசி மகளிடம் தான் கையெழுத்துபோடக் கற்றுக் கொண்டாள்.
அவள் புதுச்சேலை அணிந்த தீபாவளி வரவே இல்லை..
ஆறு பெற்ற பேற்றுக்காரி..
மாமியாருக்கு மகளாய்ப்போன அதிர்ஷ்டக்காரி..
ஒப்பனை இல்லா சிரிப்பையும் செலவிடத்தயங்கும் சிக்கனக்காரி..
ஓங்கி ஒருபோதும் அடித்ததில்லை பிள்ளைகளை..
இப்போதெல்லாம் அவள் பிள்ளைகளுக்குத்தான் பிள்ளையாய் இருக்கிறாள்.
தெரிந்த சில ஆங்கில வார்த்தைகளை அநாயசமாக உச்சரித்து  சிரித்து சிரிக்கவைக்கிறாள்..
வயோதிகத்தின் சாயல் படிய ஆரம்பித்திருக்கும் அவளும் பட்டபாடுகள் கொஞ்சமல்ல...

அகரம் சொல்லிக் கொடுத்து அடித்தாலும் இடுப்பில் தூக்கி வளர்த்த அத்தைகள்..

தாதியாய் இருந்த அத்தை .
மருத்துவ மனையின் செங்கல் வடிவ ரொட்டிகளால் எங்கள் பசிக்கு கல்லறை கட்டியவள்.
ஆறாப்புண்களை  விரல்களால் கருணையின்றி அழுத்தி ரத்தமும் சீழுமாய் வெளியேற்றி மருந்திட்டு கண்ணீர் துடைத்த அந்த விரல்களால் தான் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

மூத்தவனாய் பிறந்ததால் தூக்கித்திரிந்த என் தங்கைகள்..
கடைசி தங்கைக்கு நான் பெயர்வைத்த அதிசயமும் உண்டு..

பருவ வயதில் நேசத்துக்குரியவளின் மீதான அன்பே..என் சிறகுகள் விரிக்க காற்றானது.
இயற்கை எனக்கு பெண்களுடனான வாழ்க்கையை வரைந்து தந்திருக்கிறது..
பெரியவள் ,சின்னவளென இரண்டு அம்மாக்கள்...
என் அம்மா என்னை பேசாத மொழிகள் எல்லாம் சேர்த்து என்னை ஆட்டுவிக்கும் மொழிகள்..
நெடுநாளைய என் எழுத்துத் தயக்கம் சின்னவள் பற்றி எழுத ஆரம்பித்த் போதுதான் மடை திறந்தது..

பொருளாதாரம் அப்படி ஒன்றும் கொடி கட்டிப் பறக்காவிட்டாலும் எனக்கென அமைந்த ஒரு அலுவலகத்தை நான்கு ஆண்டுகளாக இன்னொரு மகளாய் கவனித்துக் கொள்ளும் பூங்கோதை..
என் எழுத்துக்களோடு என் கவலைகளையும் உள்வாங்கி உருகும் நட்புகளில் ஆண்களின் சதவீதத்தை விட தோழியின் பங்கு அதிகம்..
அவசரத்திற்கு வைத்திருந்ததை தந்துவிட்டு கேட்கத் தயங்கும் தாயுள்ளம்..
சின்னதாய் தாடி இருந்தாலும் பார்வைகளில் பாசம் சொல்லும் வரங்கள்..

ஆண்டுக்கொரு தினத்தை மகளிர் தினமென சொல்லி அவர்களை மற்றநாளில் மறந்துவிட எப்படி முடியும்..
அன்னை தெரசாவும்,மீரா பென்னும், கைவிளக்கேந்திய காரிகையும் உலகப்பெண்களில் உயர்ந்தோர்களாய் இருக்கலாம்.
என் பெண்கள் எனக்கு உயர்ந்தவர்கள்..
இன்னும் நாம் நம் பெண்களையே சொல்லி முடியவில்லையே...

பெண்கள் தினமும் எனக்கு அன்னையர் தினம் தான்..

வாழ்த்துகள்..

9 கருத்துகள்:

 1. படித்து முடித்ததும் விழிகளில் நீர்த்தேக்கம்

  பதிலளிநீக்கு
 2. அருமை..நம் பெண்களையே சொல்லி முடியவில்லையே...

  பதிலளிநீக்கு
 3. Ayya arumai arumai. Vasika vasikka kanneer . Thanga mudiyavillai. Nerthiyana nadai!!!!! Katchigalaga virigiradhu ovvoru varthaiyum. Vazhthukkal ayya������✌

  பதிலளிநீக்கு
 4. மனம் தொடும் பதிவு...நெகிழ வைக்கின்றது..

  பதிலளிநீக்கு
 5. மனசு தளம் மூலம் வந்தேன் இனி தொடர்ந்து வர முயற்சிசெய்வேன் முலாம்பூசப்படாத எழுத்துகளுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு