புதன், 13 டிசம்பர், 2017

என்னருமை மகளே! என் பெருமைக்குரியவளே!!

அன்பின் சக்திக்கு.

தீர்ப்பு வந்திருக்கிறது..

சரித்திரம் பேசப்போகும் ஒரு தீர்ப்பைப் பற்றி உன்னிடம் பேசவும் எனக்கு சில விசயங்கள் இருக்கின்றன.

சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு மனிதனுக்கும் சில அடிப்படை உரிமைகளை தந்திருக்கிறது.
தனக்கான இணையை தேடிக்கொள்வது அதிலொன்று.

படிப்போ,மற்ற எந்த விதமான சமூக அங்கீகாரங்களோ தேவையில்லாமல் வயதொன்றே அதற்கான தகுதியை வழங்கிவிடுகிறது.

அப்படி சட்டம் தந்திருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தும் போது சில எதிர்பார்ப்புகள் தோற்றுப்போய் கசப்பான அனுபவங்களை தந்துவிடுவதும் இயற்கைதான்..
அனுபவங்கள் அதனை சரிசெய்யும்...
சில தோல்விகளுக்காக அதனை முற்றிலும் தவறு என வன்முறைகளில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது..

வயது மட்டுமே  தகுதியாக்கப்பட்டிருக்கும் வாக்களிக்கும் உரிமையை இன்னும் சரியாக பயன்படுத்ததெரியாத அறிவுகெட்ட பிறவிகள் தான் ஆணவக்கொலையில் நியாயம் பேசுகின்றன..

ஊடகங்களில் படித்த சில பிசாசுகள் தண்டனைக்கெதிராய் முழங்கும் போது...இந்த நாட்டின் கல்வி புகட்டும் முறை குறித்தே கேள்வி பிறக்கிறது...

பெத்து வளர்த்த பெண்ணே ...அப்பனின் தண்டனைக்கு ஆதரவு தெரிவிப்பதாய் நெஞ்சம் வெடிக்கிறார் ஒரு வழக்கறிஞ மூதறிஞர்..

நாய்களும் குட்டி போடும்..
பிள்ளைப்பெறுவது ஆணுக்கு அதிகம் வலியை கொடுக்கும் சம்பவமாக இயற்கை வைத்திருந்தால் நாட்டில் மக்கள் தொகை இப்படி மிகுந்திருக்காது..

பிள்ளைகள் இவர்களுக்கு பிறந்து விடுவதாலேயே அவர்களின் சொத்தாகிவிடுவதாய் இன்னும் எத்தனை காலங்களுக்கு நினைத்துக்கொண்டிருப்பார்கள்.

பிள்ளையின் மகிழ்ச்சிக்காய் மட்டுமே வாழ்ந்தும் உழைத்தும் கொண்டிருப்பதாய் சொல்வதெல்லாம் போலி சக்தி...
ஒவ்வொரு மனிதனும் தனக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
இயற்கையும் அதுதான்..
பிள்ளைகளை படிக்கவைப்பதும்..
திருமணத்திற்காக அலைவதிலும் அவனைப்பற்றிய சமூகக்கண்ணோட்டம் குறைந்துவிடக்கூடாது என்பதன் பங்கு அதிகம்.

படித்த ஒரு பெண் தனக்கான துணையை தானே தேர்ந்து எடுத்துக்கொண்டால்...
மகளின் மீது உண்மையான பிரியம் உள்ள அப்பன்...
அவன் கனவுகள் கலைந்ததற்காக வருந்தினாலும் அவளின் எதிர்காலம் குறித்த வேலைகளை செய்வதில் தான் அர்த்தம் உள்ளது.
ஒட்டவே முடியாத மனத்தடைகள் பெற்றோருக்கு இருக்குமெனில் அவரவர் வாழ்க்கையை பார்த்துக்கொண்டு போகலாம்..
இயற்கைக்கு மாறாய்...
தோளிலும் மார்பிலும் போட்டு வளர்த்ததாய் கண்ணீர்விடும் எந்த அப்பன் கூலிப்படை வைத்து அந்தக்கொலையை செய்யச்சொல்லுவான்..?

உன் ரத்தம்...உன் எச்சம் ..மண்ணில் ரத்த வெள்ளத்தில் மிதக்க துடிக்கும் காட்சிக்காய் ஏங்குவது என்ன வெறி?

இந்த நாட்டின் நீதித்துறையின் மீது எனக்கு ஏகப்பட்ட கருத்துகள் இருந்தாலும்..இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன்...

இரட்டை ஆயுள் தண்டனை சரி?
எனக்கு இரட்டை மரண தண்டனை புரியவில்லை சக்தி.

தீர்ப்பின் சாரம் மிகுந்த சக்தியுள்ளதாய் வந்திருக்கும் வேளையில் அதன் விளைவுகளை அந்த நீதிமன்ற வளாகத்திலேயே பார்க்க முடிகிறது..
ஊடக விவாதங்களில் குற்றவாளிகளை ஆதரித்து பேசுவதாய் உளறும் சில முட்டாள்களின் வார்த்தைகளும் பயமாய் இருக்கிறது..
எந்த வினைக்கும் எதிர்வினை இருக்கும் சக்தி.

இந்த தீர்ப்பு சாதி சார்ந்த சில அமைப்புகளை வன்முறை செய்யத்தூண்டலாம்.
பாதிக்கப்பட்டவர்களின்பால் இரக்கங்கள் மேலிட்டு என்னசெய்தேனும் தங்கள் சமூகப்பெருமையை(?) நிலை நாட்டப்பார்க்கலாம்..
அவர்கள் சட்டத்தின் சக்திகுறித்து அறியாமல் இருக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

சட்டம் தன் கடமையை செய்து
கம்பீரமாய் நின்றாலும் ...
சமூகத்தின் பின்விளைவுகள் மீதும் கவனம் இருக்கவேண்டும் என்பதே என் ஆவலும் வேண்டுதலும்..
சட்டத்தை காப்பாற்றிவிட்டோம்...
இனி கௌசல்யாக்கள் மீதான கவனமே அதிகம் தேவைப்படும்..
சமூக இணைய தளங்களின் கௌசல்யாக்களின் மீதான சேற்றை அள்ளிப்பூசி அரிப்பை குறைத்துக்கொள்ளும் அநாகரீகங்களும் கூட வன்முறைதான் சக்தி..

நான் கௌசல்யாவின் பக்கம் இருப்போம்..

அன்புடன்..
மீரா செல்வக்குமார்.






5 கருத்துகள்: