வியாழன், 17 மே, 2018

மாண்புமிகு எதிர்க்கட்சிகள்...

வரலாற்றின் இருண்டமேகங்கள் நம்மை சூழ்ந்திருக்கின்றன.


உலகின் ஆகப்பெரிய ஜனநாயக நாட்டில் வாழ்கின்றோம் என்ற ஏட்டளவில் இருக்கிறது நிலைமைகள்.

அரசியல் சட்டவிதிகளுக்கு கட்டுப்பட்டு நம் தேசம் செம்மாந்து வளர்கிறது என்றால் நாமே மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்பிக்கொள்வது போலன்றி வேறில்லை.

இன்றளவும் நாம் ஒன்றுபட்ட இந்தியாவின் ஒரு அங்கமாய் இருப்பதாய் சொல்லிக்கொண்டிருந்தாலும் செயல்பாடுகள் அப்படி இல்லை.

வேண்டாத ஒரு ஆறாம்விரலாய்த்தான் இதுவரை இருந்த மத்திய அரசுகள் நம்மை மதித்து(?) வந்துள்ளதை வரலாறு சொல்லும்.

ஒரு ஆக்டோபஸாய் தன் கரங்களை காவி நாடுமுழுவதும் பரவ விட்டு உள்ளது.

சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளிலும் இப்போதுதான் பல பகுதிகளுக்கு மின்சாரம் வந்துள்ளதாய் பெருமைபட்டுக்கொள்ளும் நிலை என்றாலும்...
வாழ்கின்றது எனச்சொன்ன வடக்கு ஒன்றும் சீராட்டும் இலட்சணத்தில் இல்லை என்பதை நமது ஊர்களின் உணவகங்களிலும்,பானி பூரிக்கடைகளில் புழங்கும் இந்தியும்,கட்டடவேலைகளில் கலந்துபோன பீகார்,ஒரிசா தொழிலாளர்கள் மூலமும் காணக்கிடைக்கிறது.

நிச்சயமாக,
இந்திய வல்லரசால் இல்லாமல் போனாலும் பாரம்பரிய தமிழ் நாகரீக பண்பாட்டு தொன்மங்களின் மிச்சமாய்த்தான் நம் மாநிலம் இன்னும் மூச்சு வாங்கிக்கொண்டிருக்கிறது.

இடையில் நிகழ்ந்த பெரியார் போன்ற ஒருசில சமூக அக்கறையும் போராட்ட குணமுமுள்ளவர்கள் வாழ்ந்து போனது...
அவர்கள் நாத்திகர்கள் என்றாலும் தமிழகத்தின் வரமன்றி வேறில்லை.

மொழிக்கான நீண்ட வரலாறும் ,நாகரீகத்துக்கான கீழடி போன்ற அடையாளங்களுமே நம் நம்பிக்கைகள்.

ஆனாலும் ஒரு அதிகாரமிக்க அமைப்பின் வலிமைக்குப்பின்னால் பதவிகளுக்காகவும்,
வசதிகளுக்காகவும் எப்படியும் இருக்கலாம் அல்லது பிழைக்கலாம் என்ற அடிமைபுத்தி அதிகமானதன் விளைவை நாம் இப்போது கண்முன்னே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

சட்டங்களை இயற்றும் இடத்தில் இருப்பவர்களும்,அதை வழிநடத்தவேண்டியவர்களும் எப்படியெல்லாம் அதனை பயன்படுத்துகிறார்கள். அவர்களின் வசதிக்கு தக்கபடி எனப்பார்த்தால் ஆயிரம் உதாரணங்களை சொல்லிவிட முடியும்.

இணைய,ஊடக அச்சமின்றியும் எதிர்கால வரலாறு இவர்களை துடைத்துப்போட்ட காகிதத்தின் மரியாதை கூட அளிக்க முன்வராது எனத் தெரிந்தும் இவர்களின் செயல்கள் ஆச்சர்யமும் அருவருப்பும் மிகுந்தவை.

குடித்துவிட்டுப்புலம்பும் அமைச்சர்களும்,
குடிக்காமலே புலம்பும் அமைச்சர்களும்,
தெய்வமாகிப்போன தலைமையும் மாநிலத்தின் அறிவுசார் மனிதர்களின் வாய்களை மூடிக்கொள்ளத்தான் வைத்திருக்கிறது..

இடிப்பார் இல்லா மன்னன் கெட்டுப்போவான் என்றால் இடிப்பவன் செத்தே போகிறான்...அல்லது ஜெயிலுக்குப்போகிறான்.

மனஅழுத்தம் தாங்காமல் ஒருவன் எழுதினால் அல்லது எழுந்தால் உடனடியாக அவன் சாதி மதம் பின்புலங்களை ஆராய அத்தனை ஆர்வமாகிவிடுகிறது அமைப்பு.

நினைக்கவும் ஆச்சர்யமாய் இருக்கிறது ..
நம் மாநிலத்தின் அமைதியை இப்போது ஆட்சியாளர்கள் கொண்டுவரவில்லை.
நம்புங்கள்
அதை காவல்துறைதான் செய்து கொண்டிருக்கிறது.

நம் மாநிலத்தின் காவல்துறை மீது நீங்களும் நானும் பல குற்றங்களை சொல்லி இதை மறுத்துவிடலாம்.ஆனாலும் சில விசயங்களை நாம் விசால மனதுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
கேடுகெட்ட இந்த நாட்களில் நடக்கும் இத்தனை போராட்டங்களை இந்த காவல்துறை சமாளித்த விதம் மெச்சத்தகுந்ததுதான்..

தினமொரு போராட்டங்களால் நெரிபடும் நிலையில் போராடுவதற்கு ஆயிரம் குறைகளோடிருக்கும் அவர்கள் ஒருநாள் போராட்டம் நடத்தினால் தமிழகத்தின் அமைதி கேள்விக்குறியாகிவிடும் என்பதை நீங்களும் மறுக்கமாட்டீர்கள்.

நமது போராட்டங்கள் மிக நேர்மையானவை என்றாலும் நாம் அவர்களுக்கு ஒத்துழைப்பை கொடுத்தாகவே வேண்டும்.
அதிகார அமைப்பின் நெருக்குதலுக்காகவும்,
இன்னபிறவுக்காகவும் அவர்களும் சிலநேரம் வன்முறையை எடுத்தாலும், கடந்து போகலாம்.

அடுத்ததாய் இந்த மாநிலத்தின் ஓரளவுக்கேனும் அமைதிக்கு எதிர்க்கட்சிகளே பிரதான காரணங்கள்..

செயல்படாத எதிர்க்கட்சி,உண்டியல் குலுக்கும் தோழர்கள்,நடைபயண நாயகர்கள் என நாம் என்னதான் எள்ளினாலும் அவர்களின் அறவழிப்போராட்டத்தை குறைசொல்லமுடியாது..

ஆளுங்கட்சி என்னும் முள்ளின் மேல் இருக்கும் மாநில மக்களின் மனக்கொந்தளிப்பை ,
நல்லவேளையாக எதிர்க்கட்சிகள் நேர்மையாக அடக்கித்தான் வாசிக்கிறார்கள்.

கையாளாகாத ஒரு அரசை மக்கள் ஆதரவுடன் எதிர்க்கட்சிகள் வேறுமாதிரியான கொஞ்சம் தீவிரமான போராட்டங்களை கையிலெடுத்திருந்தாலும் நிலைமை கவலைக்குறியதாய் மாறியிருக்கும்.

பல்வேறு கொள்கை மாறுபாடிருந்தாலும் இந்த மாநிலத்தின் இயல்பு வாழ்க்கைக்காகவும்,
அமைதிக்காகவும் எதிர்க்கட்சிகளின் நிதானமான போக்கு பாராட்டத்தக்கதே.

ஆலோசனகளை முகநூலில் எழுதிவிட்டும்,தூண்டிவிட்டும் கடந்து போவது மிக எளிது.
ஆனால் சில நூறு பேர்களை ஒன்றிணைத்தும்,
வழிநடத்தியும் போராட்டம் என்ற ஒன்றை நடத்திவிடுவது அத்தனை எளிதல்ல.

மாநிலம் நம்முடையதுதான்..

கவலைக்குறியதாய்,
சில நூறுகளுக்காக அடகும் வைத்துவிட்டோம்.
ஆரம்பத்திலேயே கேள்வி கேட்காத,
பொறுத்துக்கொள்ளும் நம் அமைதியை அவர்கள் சீண்டித்தான் பார்க்கிறார்கள்..

மாய விர்ச்சுவல் உலகம் தாண்டி நம் குமுறலை அமைதியாய் முன்னெடுப்போம்..
தலைமை என்ற ஒன்று எப்போதும் நமக்கு தேவையில்லை..
நமக்கான போராட்டங்களில்
நாமே தலைவர்கள்.

அமைதி அமைதியென மூச்சுக்கு மூச்சு சொல்லுவதெல்லாம் போராட்ட  அச்சமில்லை.

நமக்குப்பின்னான நம் சந்ததிகளுக்காக வாழும் சூழ்நிலையை வைத்துவிட்டுப்போகவேண்டும் என்ற அக்கறைதான்.

கேவலமான இந்த அதிகாரத்தை எதிர்ப்பதற்காக நம் நாகரீகத்தின் வரலாற்றையும்,
பாரம்பரியத்தையும் நாமேவா குலைப்பது?










3 கருத்துகள்: