புதன், 1 ஆகஸ்ட், 2018

இணையவெளி அச்சங்கள்..

***************************************
எங்கோ இருந்து கிறுக்கிக்கொண்டிருந்த என்னை எழுதவைத்து அட்சரம் சொல்லிக்கொடுத்த அத்தனை ஆசான்களுக்கும்... வலைப்பூவில் எழுத ஆரம்பித்த இந்த மூன்று வருடங்களில் என்னை உள்ளார்ந்து நேசித்த அன்பு உள்ளங்களுக்கும்..
மிகச்சீராக 300 பதிவுகளை தொட உதவிய அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிப்பூக்கள்...
*************************************



இந்த உலகில் மிக எளிமையாகவும் இலவசமாகவும் கிடைக்கக்கூடிய அறிவுரைகளில் எல்லாமும் இதயத்தில் நிற்பதில்லை.
ஆனால் சிலவற்றை நாம் மறக்கமுயன்றாலும் அவை ஒட்டிக்கொண்டதுபோல் நம்மை விட்டுவிடுவதில்லை.

"சொல்லாத வார்த்தைக்கு நீ எஜமான்.
சொல்லிய வார்த்தை உனக்கு எஜமான்"

கெட்டியாய் ஒட்டிக்கொண்ட பொன்மொழிகளில் இதுவும் ஒன்று.

இன்றைய நண்பர் ஒருவரின் இணையவெளிகளின் தனிமனித தகவல் பாதுகாப்பு குறித்த நீண்ட உரை பலரின் முகங்களில் அச்சப்பூக்களை மலரச்செய்து விட்டது.

"பகலில் பக்கம் பார்த்து பேசு...இரவில் அதுவும் செய்யாதே...
சுவர்களுக்கும் காதிருக்கும்" 

என்பாள் அப்பத்தா...

"ராசா காது கழுதைக்காது"
என்ற ரகசியம் கசிந்து நாதஸ்வரமான கதைகள் நமக்கு முன் எப்போதோ பிறந்து நடக்க ஆரம்பித்துவிட்டது தான்.

நண்பர் யு.கே.கார்த்திக்கின் உரையில் அவர் சொன்ன அத்தனை ஆபத்துகள் குறித்த அச்சமிருந்தாலும்..
அவர் பயன்படுத்திய சொல்லாடல்கள் அத்தனை பரவசம்.

"நாம் கண்டுபிடிப்பாளர்கள் அல்ல...பயன்படுத்துபவர்கள்"

மிக எளிமையாக பேசிவிட்டுப்போன கார்த்திக்கு இத்தனை பேச வருமா என்ற ஆச்சர்யத்தில் தான் நான் இருந்தேன்..
பேசும்போதே கண்களில் தெறிக்கும் வெளிச்சம்..
தான் பேசும் சங்கதியில் தனக்கிருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை மட்டுமே அத்தகையை வெளிச்சத்தை கொடுக்கமுடியும்.

சமூக ஊடகங்கள் ஆகட்டும்,
கூகுள் போன்ற தகவல் திட்டிகளாகட்டும் அவை தயாரிக்கப்படும் போதே சேவைக்காக அல்ல...
வியாபாரத்துக்கென்றே என்று.

சிரிக்கவைத்துக்கொண்டே நம்மை சோகத்தில் ஆழ்த்திவிடக்கூடிய வலைப்பின்னல் என்பதாலேயே அவைகளுக்கு வலை என்ற நல்ல தமிழில் பெயரிட்டிருக்கலாம்.

ஆன்றாய்ட் செயலியில் வைரஸ்களின் சதவீதம் 500℅ சதவீதத்தை எட்டி விட்டதையும்,
தனிப்பட்ட தகவல்கள் எப்படி திருடப்படுகிறது என்பதையும்,
நம்முடைய கடவுச்சொற்களை எப்படியெல்லாம் அமைத்துக்கொண்டுள்ளோம் என்ற அனுமானத்தையும் சொல்லும் போது அத்தனை வியப்பு.

ஆண்டி வைரஸ் செயலிகளை உருவாக்கும் நிறுவனங்களே வைரஸ்களையும் உருவாக்கும் என்ற சூட்சமம்...

இலவசமாகவும் விரைவாகவும் கிடைக்கும் எல்லாமே தந்திரமானவை என்ற தத்துவங்கள்..

வைக்கும் ஒவ்வொரு புள்ளியும் கூட இன்னொரு இடத்தில் களவாடப்படும் அநியாயம்..

நம்மைப்பற்றிய தகவல்களை நம்மை அறியாமலே திருடிக்கொள்ளும் புத்தி..

மிக அருமையான ஒரு எச்சரிக்கை உரையை முடித்த கார்த்திக் பாராட்டுக்கு உரியவர்.

ஆனாலும் தகவல் திருடுபவர்களின் செயல்களை நாம் அறிந்தாலும் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிதர்சனத்தையும் நெற்றியில் அடித்துச்சொல்கிறது சூழ்நிலை.

எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் தத்துவம் எத்தனை மகத்தானது.!

உலகம் சுருங்கி உள்ளங்கைகளுக்குள் வந்துவிட்டது..
ஆனால் நம் படுக்கை அறையும் குளியல் அறையும் பொதுவுக்கு வந்துவிட்டது.

கட்டற்ற தகவல் மற்றும் தொடர்புகளின் காலத்தில் அந்த பயன்களை பெற்றுக்கொள்ளும் நாம் சிலவற்றை அடைந்தே தீரவேண்டி இருக்கிறது.

உள்ளத்தையும் மூளையையும் கசக்கி எழுதும் ஒரு கவிதையோ கட்டுரையோ மிக எளிதாக போய்ச்சேர்ந்துவிடுகிறது மற்றவர் பெயர்களில்.

அலங்கரித்து எடுக்கப்படும் ஒரு புகைப்படம் அலங்கோலமாக்கப்படுகிறது.

பள்ளிகளில் படிக்கும் போது சுவர்களில் திடீரென கரியால் எழுதப்பட்டு பரபரப்பாகும் செய்திகளை ஆசிரியர் சுவரிலக்கியம் என்பார்.

தவிர்க்கவே முடியாமல் பொதுக்கழிப்பறை போகும் போது உட்கார்ந்து நிமிரும் இடத்தில் வரையப்பட்டிருக்கும் படங்களும் ,எண்களும்,பெண்களின் பெயர்களும் பரிதாபத்துக்குரியவை எனில்,
இன்றைய முகநூல் சுவர் அதற்கு எந்த வகையிலும் மேம்பட்டதாய் தெரியவில்லை...

நல்ல இலக்கியம் படித்துக்கொண்டிருக்கும் போதே இடையில் வந்து விடும் அபஸ்வரங்களைப்போல் தற்பெருமைகளும்,
சாதி தம்பட்டங்களும்,
மதங்களின் புகழ் பாடுவதும்,
வதந்திகளைப்பரப்புவதுமாய் இலவச பொதுக்கழிப்பறையாகவே குமட்டுகிறது.

நல்ல ஆழங்கால்ப்பட்ட அறிஞர்களும் உலவும் இந்த இடம் இப்போதெல்லாம் அவ்வளவு ஆரோக்கியமாக இல்லை.

இணையத்துள் வரும்போதே நம் ரகசியங்கள் யாவும் பொதுவுக்கு வந்துவிடும் என்ற உணர்வு இல்லாமல் யாரும் வருவதில்லை.

அலட்சியம்,அச்சமின்மை,என்ன செய்துவிடமுடியும் என்ற மிதப்பு இப்படித்தான் நம் மனவோட்டத்தை இணைய வியாபாரிகள் காசாக்கிக்கொள்கிறார்கள்.

உலகமே வியக்கும் ஆதார் என்றார்கள்..சமீபத்தில் அதன் ரகசியங்கள் படும்பாடு சந்தி சிரிக்கிறது.

இப்படியாக ரகசியம் என்பது எங்கே இருக்கிறது.
அது இணையமாக இருந்தாலும் இதயமாக இருந்தாலும்.
எண்ணத்தை விட்டு வெளியேறும் போதே அது பொதுவாகிப்போகிறது.

ஒரு சொல் அல்லது செயல் எப்போது வெளியேறுகிறதோ அப்போதே அது நமக்கு மட்டும் சொந்தமானதாய் இருப்பதில்லை.

ரகசியங்கள் போய்விடும் என பதைப்பதெல்லாம் பம்மாத்தன்றி வேறில்லை.
இப்படி பயந்துகொண்டிருந்தாலும் எதுவும் நடக்கப்போவதில்லை.

ரகசியங்களை உருவவேண்டும் என அவர்கள் முடிவு செய்தால் குடலுக்குள் உள்ளதையும் வெளிக்கொண்டு வரும் வித்தை அவர்களுக்குத்தெரியும்..

நம் ரகசியத்தை தெரிந்து கொண்டு அவர்களால் என்ன செய்துவிட முடியும்...
பணம் தான் எனில் எனக்கு கவலை இல்லை..

என்னைப்பற்றிய செய்திகளை அவர்கள் திருடினாலும் அவர்களை விட நான் ஒன்றும் செய்திருக்கப்போவதில்லை..

அச்சம் தவிர்த்து எழுதுங்கள்.
படைப்புகளுக்கு எல்லாக்காலங்களிலும் தடைகளுண்டு..
இது அப்படி ஒரு தடைதான்..
உடைக்கலாம்.




















16 கருத்துகள்:

  1. சரியாகச் சொன்னீர்கள்...

    மென்மேலும் தொடர வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் அண்ணா
    அச்சம் தவிர்த்து எழுதுவோம்

    பதிலளிநீக்கு
  3. சரியா சொன்னீங்க. அச்சம் தவிர்த்து எழுதுவோம்.. 300 க்கு வாழ்த்துக்கள். :)

    பதிலளிநீக்கு
  4. அச்சம் தவிர்ப்போம்.
    தொடர்ந்து எழுதுவோம்
    வாழ்த்துகள் நண்பரே

    பதிலளிநீக்கு
  5. என்று நாம் டிஜிட்டல் யூகத்திற்குள் புகுந்தோமோ அன்றிலிருந்து நமது தகவல் எல்லாம் கண்காணிக்கப்படுகின்றன அல்லது திருடப்படுகின்றன. நம்மிடம் பணம்தான் இல்லையே அதனால் எனக்கு கவலை இல்லை என்று இருக்க முடியாது.... உங்கள் தகவல்களை வைத்து யாரோ பேங்கிலோ அல்லது வேறு ஆட்களிடமோ மிகப் பெரிய அளவில் பணம் பெற்று அதை நீங்கள் பெற்றதாகவே எல்லாம் ஜோடித்துவிடுவார்கள் அதன் பின் உங்களுக்குதான் பிரச்சனை அது நான் இல்லை என்று நிருபித்து சட்டங்களில் இருந்து வெளிவருவது அவ்வளவு எளிது இல்லை அதுவும் இந்திய சட்டதிட்டங்களில் இருந்து..

    பதிலளிநீக்கு
  6. 3௦௦வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
    டிஜிட்டலைஸ் ஆகும் முன்பும் ஒன்றும் நடக்காமல் இல்லை , என்ன இப்பல்லாம் டெக்னீகலா செய்யறாங்க .... ஆதலினால் அச்சம் தவிர்

    பதிலளிநீக்கு
  7. 300-வது பதிவு. மனம் நிறைந்த வாழ்த்துகள் செல்வா... மேலும் பல பதிவுகள் வெளியிட வாழ்த்துகள்.

    அச்சம் தவிர்.... சரியாகச் சொன்னீர்கள். இப்போது எல்லாமே திருட்டு போக வாய்ப்பிருக்கிறது. முன்பு ஒரு மாதிரி திருட்டு என்றால் இப்போது வேறு வகை - டெக்னிகல் வகை.

    பதிலளிநீக்கு
  8. நண்பர் கவிஞர் மீரா செல்வகுமார் அவர்களின் 300 ஆவது பதிவினுக்கு எனது வாழ்த்துகள்.

    இணையவெளியில் உங்களுக்கு இருக்கும் அச்சம் எல்லோருக்குமே இருக்கும் ஒன்றுதான். இணையத்தில் கடவுச்சொல் (Password) பாதுகாப்பு என்பது வெளியில் சும்மா சொல்லிக் கொள்ள வேண்டியதுதான். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இணையத்தில் வைக்கப்படும் யாவுமே பொதுவுடமைதான்.

    “வலைப்பதிவர் ஒவ்வொருவரும் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு மின்னஞ்சலும் , வலைப்பதிவிற்காக இன்னொரு மின்னஞ்சலும் வைத்துக் கொள்வது நல்லது. “ என்பது எனது கருத்து.

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துக்கள் தோழர்...பிரமிப்பாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  10. மிகச்சரி தோழா.அச்சம் தவிர்ப்போம் படைப்பை படைப்போம் மூன்று சதத்துக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  11. உலகம் சுருங்கி உள்ளங்கைகளுக்குள் வந்துவிட்டது..
    ஆனால் நம் படுக்கை அறையும் குளியல் அறையும் பொதுவுக்கு வந்துவிட்டது.

    உண்மை உண்மை...
    இணையம் என்றால் பயமேதான்,
    300 க்கு வாழ்த்துகள் அண்ணா...!!

    பதிலளிநீக்கு
  12. முன்னூறு போதாது
    மேலும் பல ஆயிரங்கள்
    எழுத எனது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  13. 3 - வது பிறந்தநாள் கொண்டாடும் உங்கள் வலைதளத்திற்கும், தங்களின் 300-வது ஆக்கத்திற்கும் வாழ்த்துகள் நண்பரே...!!!
    https://www.scientificjudgment.com/

    பதிலளிநீக்கு