செவ்வாய், 20 அக்டோபர், 2015

விலைகொடுத்து வாங்கிய வில்லங்கம்

எதுவெல்லாம் கடினமென்று சொன்னார்களோ அதுவெல்லாம் வாழ்க்கையில் (ரொம்ப எளிமையா இல்லேன்னாலும்)நிறைவேறியிருக்கிறது எனக்கு.
கல்யாணம் செஞ்சுபார்..வீட்டைக்கட்டிப்பார் என்பார்கள்.என் பாட்டன்கள் எவ்வளவு கவனமாக ஒப்பிட்டு இருக்கிறான்...
அடடா.  ரெண்டுக்கும் 


கடன் வாங்க வேண்டியிருக்கும்.
ரெண்டும் ஆரம்பத்துல சந்தோசமா இருக்கும்...
கட்டட கடனை குறிப்பிட்ட காலத்தில் அடைக்கலாம்...
கட்டிய கடனுக்கு காலவரையறை கிடையாது..
அவளுக்கு 7000ம் எனக்கு3000ம் மட்டும் வாங்கும்போது வீடு கட்டமுடிந்தது...
நான் அதுவும் இல்லாமல் இருந்தபோது கல்யாணமே கட்ட முடிந்தது...
ஆனால் இந்த முன்னுரையும்,என்னுரையும் அதைப்பற்றியல்ல...
ஏன் வீட்டை மாற்றிப்பார் என்பதையும் சேர்க்காமல் போனார்கள்?
சொந்தவீடு என்பது சீமைக்கருவேலங்காட்டுக்கு மத்தியில்,முயல் வேட்டைக்காரர்கள் இரவெல்லாம் திரியும் நகரின் அதிகபட்ச ஒதுக்குப்புறத்தில் அமைந்தது.
புதுமனை புகுவிழாவிற்கு வந்து,,பாதை தெரியாமல் பலர் பரிசுப்பொருளுடன்  போய்விட்ட சோகமும் நடந்தது.
வழக்கம்போல நடக்கும் சண்டைகளுடன்..வீட்டைச்சுற்றிலும் மரங்கள் செடிகள்...தோட்டத்தில் பாத்திகள்..ஆஹா...ஓஹோ...
உள்ளூர்வேலை பறிபோய்,திரைகடல் ஓடவேண்டிய கட்டாயம்.
பிள்ளைகளின் கால்களை இறுக்கக்கட்டி,இடுப்பளவு தண்ணீரில் மிதிவண்டி அழுத்த முடியாத நாளில்,
அவளின் பெற்றோர் வீட்டுக்கு அருகில் கொஞ்சம் சாமான்களோடு
தனிமனை போனாள்.
இரண்டு வருடம் தொலைத்து
பாரின் ரிட்டர்ன் மாப்பிள்ளையாய்
நான் வந்தபோது அந்த வீடு சுகப்படவில்லை.
பக்கத்திலேயே மீண்டுமொரு வீடு.
பாஸ்போர்ட்டில் சீல் வைத்த திமிர் எனக்கு AC கேட்டது.
வறுமைக்கோட்டிற்கு மேல் ஒரே ஜம்ப்-ல் பறந்து போன சந்தோசம்.
பின்,                             நகரின் மிக நாகரீகமானவர்களும் அல்லது அப்படி நினைத்துக்கொண்டிருப்பவர்களும் வசிக்கும் ஒரு பகுதிக்கு பயணம்.
இந்த முறை மாடி வசப்பட்டது.
இந்த இடத்தை குறித்துக்கொள்ளுங்கள்...
இங்குதான் விதி சதி செய்தது.
வீட்டு ஓனர் ஒரு பர்னிச்சர்கடை வைத்திருந்தார்.
அட வீட்டுக்கு வருபவர்கள் உட்கார ஒரு சோபா வாங்கிப்போடுவோமே என பார்க்கப்போனோம்.எதுவும் பிடிக்கவில்லை.நிச்சயம் போன பிறவியில் அவருக்கு ஏதோ தீங்கு செய்திருக்கவேண்டும்.
நாலு தெரு தள்ளி ஒரு மங்கலான வெளிச்சத்தில் இருந்த அறையைக் காட்டினார்.அவ்வளவும் சோபாகள்.
கருப்பாய் இருந்த சோபா ஒன்று கவர்ந்தது கருத்தையும்....30000 ரூபாயயும்.
கதவுகளைக்கழட்டி உள்ளே திணித்தார்கள்.
உட்கார்ந்தால் பாதி உடம்பு புதையும் பரவசம்.....அய்யோ ...அப்பா,அப்பத்தா இதைபார்க்காம செத்துப்போனீங்களே.....
வாசற்படியோடு திரும்பும் நண்பர்களையெல்லாம் நடுவீடுவரை இழுத்துவந்து கொலுவைக்காட்டுவது போல சோபாவைக்காட்டினோம்.
நீண்டநாட்களுக்குப்பிறகு வந்த அவள் தோழியின் மகன் சோபாவைப்பார்த்ததும் ஏறிக்குதித்ததில் சின்னதாய் ஒரு கீறல்.  
அவள் தோழியின் மகன் என்பதால் சின்னதாய் முறைப்பதற்கான உரிமையும் மறுதலிக்கப்பட்டிருந்தேன்.
யாரோ சொல்லியிருக்கிறார்கள் இந்த சோபாவில் உட்கார்ந்தால் உடம்பு சூடாகிவிடுமென.....
நான் சொல்வதைத்தவிர யார் சொன்னாலும் கேட்கும் அவளும் என்னைத்(?)தவிர பிள்ளைகளை அதில் உட்கார விடுவதில்லை.
மீண்டுமொருமுறை வீடு மாற்றம்.
AC கழட்டி,சாமான்களை கட்டி முடித்து..நடுவீட்டில் கிடந்த சோபாவைப்பார்க்கும் போது மயக்கமாய் வந்தது.
அதற்கென ஆட்களை அழைத்துவந்து தூக்கிச்சுமந்ததில் சின்ன கிழிசல் வளர்ந்துவிட்டது.
என்னைத்திட்டுவதுபோலவே அவர்களைத்திட்டியதில் என்னைப்பரிதாமாகப் பார்த்துப்போனார்கள்.
பழைய வீட்டு அட்வான்ஸ் பண மிச்சத்தில் சோபாவுக்கு உறை வாங்கியே வேண்டும் என விதி 110-கீழ் நிறைவேற்றி முடிந்தது.
இப்படியாகத்தான்....
சோபா எங்கள் வீட்டு சிலீப்பர் செல்லாக இருக்கிறது.
மீண்டுமொரு முறை வீடு மாற்றவேண்டியிருக்கிறது.
பலமுறை நடந்த பேருந்து,ரயில் பயணங்களில் வாஷிங் மெஷின்,ப்ரிட்ஜ் தவிர மற்றவை பயணப்பட்டு விட்டன.
இரண்டு நாட்கள் அவர்களுடன் இருந்துவிட்டு வீடு திரும்பும் நாளில் கூடத்திலிருக்கும் சோபாவைப்பார்க்கிறேன்.
பரிதாமாய் இருக்கிறது.
நமக்குத்தான் தலையெழுத்து...இது என்ன செய்தது?
விஷயத்திற்கு வருகிறேன்.
உங்களில் யாருக்கேனும் சோபா வேண்டுமா?
ஒரே வேண்டுகோள்..
பின் நாட்களில் நீங்களும் இதுபோல் ஒரு கட்டுரை எழுதக்கூடாது.

14 கருத்துகள்:

  1. உங்களிடம்தான் சொல்வதற்கென்று எவ்வளவு கதை இருக்கிறது செல்வா! எதைச் சொன்னாலும் சுவையாகச் சொல்லும் அழகு சொக்க வைக்கிறது “வாசற்படியோடு திரும்பும் நண்பர்களையெல்லாம் நடுவீடுவரை இழுத்துவந்து கொலுவைக்காட்டுவது போல சோபாவைக்காட்டினோம்“ தேவாரத்தில் பாடல்பெற்ற “புனிதத்தலம்“ மாதிரி உங்கள் சொல்லாடல் பெற்ற அந்தப் புனிதஸோபா இப்ப எங்க இருக்கு? நா ஒரு தடவை தீர்த்த யாத்திரை வந்தாவது பாக்கணுமே?

    பதிலளிநீக்கு
  2. உங்க சோகம் தான்
    படிக்கிறவங்களுக்கு
    உற்சாகம்தான்.

    So
    வேனாஞ்சாமி
    உங்க சோபாவும் சோகமும்
    இதே சந்தோசம் போதும்

    இந்த சோபா வை வச்சே பாடிடலாம்
    ஒரு பா..

    பதிலளிநீக்கு
  3. வீடு மாற்றுவதில் உள்ள இடையூறுகளை இத்தனை சுவைபடச் சொல்லும் படைப்பாளியே.. படையுங்கள் இன்னும் பல.

    பதிலளிநீக்கு
  4. இந்த பதிவை படித்தவுடன் மனதில் ஏதோ ஒரு விட்டகுறை தொட்ட குறை போன்ற உணர்வு. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. பிறந்ததிலிருந்து ஒரே வீட்டில் இருப்பதால் வீடு மாறுவதின் துயரம் எனக்கு தெரியவில்லை...30 வருடமாய் இழுத்தடிக்கும் சிவில் வழக்கு முடிந்தால்...தெரியும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெற்றிபெறுவீர்கள்...தோழர்
      வேண்டாம்....வீடு மாற்றும் துயரம்....

      நீக்கு
  7. வீடு மாற்றுவதை பற்றி அருமையாக சுவையாக சொல்லியுள்ளீர்கள் படிக்க படிக்க விறுவிறுப்பாகவும் ஒரு துயரமும் வருகிறது! நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  8. ஹஹஹ மன்னிக்கவும்....உங்கள் எழுத்து அபாரம்...ஆனால் சோஃபா சிரிக்க வைத்துவிட்டது....நகைச்சுவையுடன் வீடு மாற்றுவதின் கஷ்டத்தையும் இடைசெருகலாக்கிச் சுவையுடன் சொல்லிச் சென்றது அருமை...

    பதிலளிநீக்கு
  9. நான் கூட நினைத்ததுண்டு. எப்படி இத்தனை வீடுகள் மாறுகிறீர்கள் என்றூ/ அதுவும் குழந்தைகளுக்காகா....நீங்களும் டீச்சரும் அதிசயப்பிறவிகள் தான் உங்கள் இருவரைப் போலவும் பிள்ளைகள் காக்கும் ஒரு எல்லைச் சாமியை நான் பார்த்ததே இல்லை. டீச்சர் ரூபாய் 1200 க்கு ஒரு நகை அலங்காரம் (அதுவும் கவரிங்) வாங்குவதைக் கண்ணாரக் கண்டேன். நீங்கள் ஒரு படி மேலே போய் கார் வாங்கிணீர்களே?????

    பதிலளிநீக்கு