ஞாயிறு, 24 ஜனவரி, 2016

புகை படிந்த போதிமரங்கள்..

பட்டணத்து மரங்கள்
பாவம்.

புழுதிப்போர்வைக்குள்
மூச்சடைத்து
வாழும்
சாபம்.

உச்சிக்குடுமி
கட்சிக்கொடி
பறக்கும்...

கிளிகள்
வந்து போவதில்லை.
கிளையில்
ஒரு
ஊஞ்சல் இல்லை.

செத்த
ஓர் உறவுக்காய்
சிறுதீபம்
வேரில் இல்லை.

கொத்து விளக்கெரியும்
சில இரவில்.

மற்றபடி
பட்டினிதான்.

மின்கம்பி
தாண்டவிடா
பத்தினி தான்.

உலுக்கிப்
பழம் பொறுக்க
உற்றார்
வருவதில்லை..

தாகம் எப்போதும்.

தார்ச்சாலை
சுரப்பதில்லை.

வேட்டிவிலகாத
துயில்
கண்டதில்லை
நிழல் வீட்டில்.

பெரும்போதை
யாத்திரைகள்..
பெரும்பாலும்
முடியுமிங்கு...
ஆடையின்றி.

இலைகிள்ளி
சிறு
பீப்பி
செய்வாரில்லை..

விலையில்லாப்
பொருளாக..
வீதியிலே
நிற்க வைத்தார்..

கரும்புச்சாறு
கடை முளைக்கும்
சில நாட்கள்.

காளானாய்...
விளம்பரத்தின்
குடைவிரியும்
பகல் வேளை.

புனிதனுக்கு
சிலுவை
தந்த
தண்டனையாய்...
அங்கமெல்லாம்
ஆணிக்காயங்கள்.

நகர மரங்களுக்கு
நாலு சாதி.

கல்லூரிச்சோலைக்குள்
வளர்வதெல்லாம்
கடவுள் வரம்.

எத்தனை நாள்
ஆனாலும்
வளராத
தொட்டிமரம்.

நடைபாதை
ஓரங்களில்
தள்ளித்தள்ளி
வைத்த மரம்..

இன்னுமொரு
மரமுண்டு...

நடக்கும்
பேசும்
தின்னும்
சாகும்..

தன்னை எரிக்கவும்
பிற
மரம் தேடும்..

மனிதரைப்போலவே
இருக்கும்..

மரம் தான்...






















7 கருத்துகள்:

  1. நடக்கும்
    பேசும்
    தின்னும்
    சாகும்..

    தன்னை எரிக்கவும்
    பிற
    மரம் தேடும்..

    மனிதரைப்போலவே
    இருக்கும்..

    மரம் தான்...
    அருமை
    உண்மை
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  2. ஆஹா... எத்தனை மரம் இருந்தாலும் மனிதரைப் போலிருக்கும் அந்த தின்னும் பேசும் நடக்கும் சாகும் மரங்களே இங்கு அதிகம்...
    அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு
  3. ஆஹா.. என்னவொரு கற்பனை..

    முத்தாய்ப்பும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. நல்லதோர் கற்பனை. நேற்று உங்கள் குரலில் கேட்டு ரசித்ததை இன்று இங்கே படித்து ரசித்தேன். நன்றி செல்வகுமார்.

    பதிலளிநீக்கு
  5. மிக மிக அருமையான கற்பனை ஊற்று! செல்வா.
    இலைகிள்ளி
    சிறு
    பீப்பி
    செய்வாரில்லை..// சிறு வயது நினைவலைகள்!!

    புனிதனுக்கு
    சிலுவை
    தந்த
    தண்டனையாய்...
    அங்கமெல்லாம்
    ஆணிக்காயங்கள்.// நகரத்து சிலுவைகள்!

    நடக்கும்
    பேசும்
    தின்னும்
    சாகும்..

    தன்னை எரிக்கவும்
    பிற
    மரம் தேடும்..

    மனிதரைப்போலவே
    இருக்கும்..

    மரம் தான்...//

    எங்கேயோ போய்விட்டீர்கள்! செல்வா..அருமை அருமை!

    பதிலளிநீக்கு
  6. உண்மையை கற்பனையில் சொல்லி அசத்திவிட்டீர் ஐயா..

    பதிலளிநீக்கு