சனி, 31 மார்ச், 2018

நந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்?

மிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்..
சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு உண்மையான பிரச்சனைகளைப்பற்றிய பிரக்கினையை காலிசெய்துவிடுவதை உணர்கிறேன்...

அதிகார அமைப்பும் அப்படி ஒரு மனோநிலையிலேயே நம்மை வைத்திருக்க விரும்பிகிறது போலும்..

ஜல்லிக்கட்டுப்பிரச்சனையை கூட,அதிகாரம் அமைப்பானது போனால் போகிறது என கொடுத்துவிட்டு ரொம்பவும் எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதை அந்த போராட்டத்தை முடித்துவைத்த விதத்தில் அறிகிறோம்...

மற்றபடி எந்த போராட்டங்களும் அதிகாரத்திற்கெதிராய் வென்றிருப்பதை காணமுடியவில்லை..
1500 நாட்களுக்கு மேலாய் போராடிய கூடங்குளமாகட்டும்,கெயில் ,நெடுவாசல்,கதிராமங்களம்,காவேரி...இப்படி அத்தனை பிரச்சனைகளிலும் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை நோக்கியே பயணிக்கிறார்கள்..
நியூட்ரினோ போகும் பாதையும் அப்படியாகத்தான் இருக்கிறது...

போராட்ட விசயத்தில் எந்த கட்சியின் மீதும் நம்பிக்கை என்னைப்பொறுத்தவரை வரவே இல்லை...

ஊடகங்களைப் பற்றி நானொன்றும் புதிதாய் பேசப்போவதில்லை...

ஆனால், எதிர்க்கட்சிகளாய் செய்யும் போராட்டங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்காய்த் தெரியவில்லை.மாறாக அதன் கூரை மழுக்குவதாகவே தெரிகிறது..
வரலாறு காணாத அளவில் பேருந்து கட்டணம் உயர்ந்த போது ஆ...ஊ எனக்குதித்தார்கள்..சிறை நிறைப்புவோம் என்றார்கள்...
அதெல்லாம் சரி ..அவர்களின் போராட்டம் எத்தகைய வெற்றியை சமூகத்திற்கு கொடுத்தது..?

காவேரி பிரச்சனைக்கு இன்னும் பதினைந்து நாட்களுக்குப்பின் கருப்புக்கொடி காட்டி ...ம்ம்ம்.

கழுவத்தண்ணீர் இல்லை.. நூற்றுக்கு மேலான ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்து சாதனை..?

செத்து விழும் மனிதர்களின் போராட்டம் பெரிதாய் இருக்க 1500 மாடுகளுடன் ஜல்லிக்கட்டு..

ஆட்சியும் அதிகாரமும் செய்யும் காட்சிகள் பரமார்த்த குரு கதைகளின் அப்டேட் வெர்சன் தான்..

300 கிலோமீட்டர் நெடுஞ்சாலையில் செல்ல எத்தனை சுங்கச் சாவடிகள்?
எந்தப்பள்ளத்தில் நிறைகிறது இந்தப்பணங்கள்?
எத்தனை எதிர்க்கட்சிகள் எத்தனை போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்...
எந்த அரசியல்வாதியிடமும் சுங்கக்கட்டணம் வசூலிப்பதில்லை அவர்கள்...

வரிசையில் காத்திருந்து காசை அழுதுவிட்டுவரும் நம்மில் எத்தனைபேர் அதைப்பற்றி எழுதியிருக்கிறோம்..

1960/70 களில் கம்யூனிய இயக்கத்தலைவர்களின் போராட்ட வரலாறு அனல் பறப்பதாய் இருக்கும்..கூலி உயர்வுக்கும் அதிகாரத்திமிருக்கும் எதிராய் நெஞ்சை நிமிர்த்திய தோழர்கள் எங்கோ மறைந்து போனார்கள்...இப்போதெல்லாம் நெஞ்சை துண்டு வைத்து மூடிக்கொண்டிருக்கின்றார்கள்..
(அதெல்லாம் சரி...இந்த துண்டு போடும் சமாச்சாரத்தை எவன் கண்டுபிடித்தான்?)
இணைய ஊடகங்களில் நாளுக்கொரு பிரச்சனையை ஊதிப்பெருக்கி விளையாடிவிட்டு அடுத்த பிரச்சனைக்கு அலைகிறார்கள்...
ஊரே தீப்பற்றி எரியும் போது பிடில் வாசித்த நீரோவைப்பற்றி பேச  இனி எந்த அருகதையும் இருப்பதாய்த்தெரியவில்லை..பத்தாண்டு ,இருபதாண்டுக்கு முன் எடுத்த படம் போடும் நமக்கு...

நல்ல தலைவர்களை இனி நாமே தான் கண்டுபிடிக்கவேண்டும்..
காலைவணக்கம்,
மாலைவணக்கம்,என வணக்கங்களைப்போட்டு விட்டு விருப்பக்குறிகளுக்கு ஏங்குவதும்,சுயமிகளை பதிவேற்றிவிட்டு கருத்துக்களுக்கு பிச்சை எடுப்பதும்,தமிழனின் பெருமையென பிதற்றிக்கொண்டிருப்பதும் இன்னும் எத்தனை நாள்களுக்கு?

நேற்றைய, தோழர் ஒருவரின் ஆதங்கம்  அழிந்து வரும் தாய்மண்ணில் கொஞ்சம் சொகுசாய் வாழ்ந்த மனிதர்களாய் நாம் மட்டுமே கடைசியாய் இருக்குமோ என்று சொல்லும் போது நெஞ்சு முட்டுகிறது..
நம்மின் அடுத்தடுத்த சமூகம் தண்ணீருக்கும் காற்றுக்கும் வழியின்றி மருந்துகளில் வாழும் போது நமக்கு விடப்போகும் சாபங்களை நினைத்துப்பார்க்கவும் அச்சமாய் இருக்கிறது..
பஞ்சாங்கம் மட்டுமே இருந்த காலங்களில் நம் முன்னோர்கள் செய்த சில முயற்சிகளைக்கூட விஞ்ஞான காலத்தில் செய்யாமல் இருப்பது என்ன சாபக்கேடு?
நொடிக்குள் பரவும் இணைய வேகத்தில் ஐந்துதலைப்பாம்பின் படத்தையா பகிர்வது?

வாழ்ந்து கொண்டிருக்கும் நான் உள்பட்ட இந்த  சமுதாயத்தின் மீது மிகுந்த கவலையும் அருவருப்புமாய் இருக்கிறது...
மூச்சு முட்ட பதிந்துகொண்டிருக்கும் தகவல் மற்றும் பதிவுகளில் ஆயிரத்தில் ஒன்றாய் காணக்கிடைக்கும் அந்த ஒற்றை நம்பிக்கை வெளிச்சங்களையே விடிவெள்ளியாய் மனசு நம்பித்தொலைக்கிறது..

காலம் இன்னும் நம்மைக்கடந்து போய்விடவில்லை..
நல்ல தலைவர்களைத்தான் தேர்ந்தெடுக்க மறந்துவிட்டோம்...இப்போதேனும் நமக்கு அவசியமான நல்ல தகவல்களால் பிரச்சனைகளின் வேரறுக்க ஆராய்வோம்...
சமூகம், பண்பாடு பற்றிய செய்திகளை மட்டுமே இணைய ஊடகங்களில் பரப்புவோம்...
இடையில் சில புல்லுருவிகள் நம் பொறுமையை சோதிக்கத்தான் செய்வார்கள்..
கண்டும் காணாமல் கடந்துபோவோம்...
உங்களுக்குத்தெரியுமா? அவர்களும் அந்தப்பதிவுகளை போட்டுவிட்டு அடுத்தபதிவுக்கு போய்விடுகிறார்கள்...
அவர்களின் பதிவுகளுக்கு வந்து குவியும் ஆபாச பின்னூட்டங்களையும் ஒரு மனிதன் அநாயசமாக கடக்கிறான் எனில் ..புரிந்து கொள்ளுங்கள் எதிரி அவன் குறிக்கோளில் எவ்வளவு கவனமாய் இருக்கிறான்..?  நாம்???











7 கருத்துகள்:

  1. ஓடிக்கொண்டிருக்கும் காலசக்கிரத்திற்க்கு கொஞ்சம் நிப்பாட்டி
    ச்னேகம்(எண்ணை, என்றும் பாசம் என்றும் அர்தம்) ஊற்றதுக்கு ஆளில்லை...முன்னில் குதிக்கும் சுவடுகள்..ஒரு பத்தடி பின்னால் நடந்தால்....அங்கே மனிதர்களை பார்கலாம்...

    பதிலளிநீக்கு
  2. உண்மையான ஆதங்கம்... வருங்காலத்தை நினைத்தாலே பயமாகத்தான் இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  3. ஆதங்கம் மட்டுமே மிச்சம். வேறென்ன சொல்ல...

    பதிலளிநீக்கு
  4. மாடுகளுக்கு ஆதார் அடையாளமும் , ஆம்புலன்ஸும் தாராளமாய் கிடைக்க செய்யும் நாட்டில் ... மருத்துவமனையில் ஆம்புலன்ஸ தர மறுத்ததால் இறந்த மனைவியை தள்ளு வண்டியிலும் , இறந்த தகப்பனை சைக்கிள் ரிக் ஷாவிலும் எடுத்த செல்லும் அவலத்திற்கு ஆளாக்கிய ஜனநாயக நாட்டில் .. எதை எழுதி என்ன ஆகப்பாேகிறது ..? மக்கள் ஜீவாதார உரிமைகளை பறித்து .. மக்கள் விராேத திட்டங்களை உட்புகுத்தி..திணித்து நாட்டை பாலைவனமாக்கி விட்டு எதை சாதிக்கப்பாேகிறார்கள் ஆட்சியாளர்கள் ...?

    பதிலளிநீக்கு
  5. அரசியல் சதுரங்கம் மக்களுக்குத் தருவது வேதனை மட்டுமே.

    பதிலளிநீக்கு
  6. முகநூலில் வாசித்தேன் அண்ணா... ஆதங்கம் மட்டுமே மிச்சம். என்ன செய்வது..?

    பதிலளிநீக்கு
  7. சிந்திக்கச் சிறந்த பதிவு
    நாட்டு நடப்பு அருமை

    பதிலளிநீக்கு