சனி, 28 நவம்பர், 2015

கண்ணதாசன்


அனுபவம்
கடவுள்
என்றான்.
அழிந்த கதை
துணிந்து
சொன்னான்.

இடை அதிகம்
பற்றியதால்
எடை ஏதும்
குறைந்ததில்லை
அவன்
கவிதை.

மயக்கும்
மதுக்கோப்பை
குடியிருந்தான்.
மங்காத
தமிழன்னை
மடியிருந்தான்.

ஆற்றில்
கொட்டினாலும்
அளந்துகொட்டும்.
கூட்டமிடை
இவன்
கொட்டிய
பாட்டளக்க
படிகள் என்று
ஏதுமில்லை.

தத்துப்போன பிள்ளை
தத்துவங்கள்
சொல்லிவிட
இவனிலும்
யாருமில்லை.

இதயத்தால்
பேசியதால்
இரக்கமற்ற
அரசியலில்
இடமின்றிப்போன
மகன்.

இடறி
விழுந்தாலும்
இனிய தமிழ்
பாடல் சொன்னான்.

பட்டுச்சட்டை
மூடும்மேனி
பாட்டைக்கொண்டு
வாழ்ந்த ஞானி.

வனவாசம்
அவனுக்கு..
புதுத்தமிழ்வாசம்
அவனிக்கு.

அர்த்தமில்லாப்
பாட்டெழுதி
வாழவில்லை.
அர்த்தமுள்ள
இந்துமதம்
அவனே சொன்னான்.

காற்றுக்கும்
கால்முளைக்கும்
அவன் திரைக்கானம்.

இங்கே
இயந்திரங்கள்
சத்தமுண்டு
வரிகள் காணோம்.

காலம்
மறைத்த
அவன் சிரிப்பு..
காற்றில் வாழும்
அவன் படைப்பு.

காலக்கணிதன்..
அவன்
கவிப்படு பொருளை
உருப்பட வைத்தவன்.

பாட்டெழுதி
பெயரெடுக்க
யார்வரினும்
அவன் தமிழை
உருப்போட
வைத்தவன்.

செத்தாலும்
அவன் பாட்டு.
வாழ்ந்தாலும்
அவன் பாட்டு
நட்புக்கும்
அவன் பாட்டு
பிரிவிற்கும்
அவன் பாட்டு..

பாட்டாலே வாழ்ந்திருப்பான்
ஒர்
மரணம்
அவனுக்கு
இல்லை.

நாட்டுக்கு
எல்லையுண்டு
அவன்
பாட்டுக்கு
எதுவுமில்லை.

வார்த்தைக்கும்,
வாழ்க்கைக்கும்
நானெடுத்தேன்
அவன் சொல்லை...

கோபமேதும்
கொள்ளமாட்டான்
நான்
அவன்
தமிழ்
பேசும்
பிள்ளை.

கண்ணதாசனுக்கு நடந்த இன்றைய விழாவில் என் கவிதை...

16 கருத்துகள்:

  1. எந்த நிலையிலும் மரணமில்லாதவன் கவிதைகளால் கடவுளானவன்
    கவிதைகளை நேசிப்பவர்களின் காதலானவன் கடவுளையே கண்டெடுத்தவன் !
    பெருமைசேர்த்த உங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள்...7 மணிக்கு மேல் தான் வந்தேன்...

    பதிலளிநீக்கு
  3. நிழலின் அருமை வெய்யிலில் தெரியுமாம்.
    கண்ணதாசன் நினைவுகள் மறக்காமல் இருக்க இதுவே காரணம்-
    இங்கே
    இயந்திரங்கள்
    சத்தமுண்டு
    வரிகள் காணோம்.“
    உண்மை உரை.

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு பகிர்வு, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. //இங்கே
    இயந்திரங்கள்
    சத்தமுண்டு
    வரிகள் காணோம்//

    சவுக்கடி வார்த்தைகள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  6. அருமை...அருமை...இன்னும் தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. கண்ணதாசன் நிரந்தரமானவன்
    உள்ளங்களில் இருந்து
    என்றென்றும் மறைவதில்லை
    அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
  8. அருமையான வரிகள்! என்ன செல்வா இப்படி அசத்துகின்றீர்கள்! அருமை!

    பதிலளிநீக்கு