புதன், 20 ஜூலை, 2016

நீங்க உண்மையான டாக்டரா?

அன்பின் சக்திக்கு,

நீண்ட நாளுக்குப்பின் நான் உனக்கெழுத மீண்ட நாள் இது.

இந்தியாவின் மருத்துவ நகரமாய் சென்னை இருக்கிறது.

பொதுவாய் எனக்கு மருத்துவத்துறையின் மீது நம்பிக்கை கிடையாது. விபத்துகளின் போது தேவைப்படும் அளவிற்கு வாழ்க்கையின் எல்லா நேரத்திற்கும் மருத்துவம் தேவையில்லை என்பதே என் நிலை..

தவறாயிருக்கலாம்.எனக்கு அப்படித்தான்.

சக்தி!
இயற்கையிலேயே நம் உடலின் தகவமைப்பு அற்புதமான ஒன்று..
அதன் தேவையை நமக்கு எளிதில் காட்டிக்கொடுத்துவிடும்.
உண்ணும் உணவே மருந்தாயிருக்கவேண்டும்.
நம் மண்ணில் விளையும் யாவுமே மருந்தே.
பயன்படுத்தும் வழிகளும் நம் முன்னோர்கள் அற்புதமாய் சொல்லிவிட்டுப்போய் இருக்கிறார்கள்.

உணவின் பழக்கத்தை மாற்றிவிட்டு,இன்று மருந்துகளின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறோம்.

பார்க்கும் நபரிடமெல்லாம் சர்க்கரை அளவு விசாரிக்கத்தொடங்கி விட்டோம்.

சர்வதேச அரசியலில் இந்த மருந்துக்கும்பல் அடிக்கும் கொள்ளையென்பது கணக்குப்பார்த்தால் கண்ணை இருட்டாக்கிவிடும்.

உலகத்தின் அத்தனை நோய்களுக்கும் கிட்டத்தட்ட 250 வகையான மருந்துகள் போதுமாம்.அதிலும் இந்தியா போன்ற தட்பவெப்ப நாடுகளுக்கு 200 என்ற அளவிலான மருந்துகளே போதுமாம்.
ஆனால் இந்திய மருந்துக்கடைகளைப் பார்த்தால் மலைக்கவைக்கும் அளவில் கொட்டிக்கிடக்கிறது மருந்துகள்.

ஒரே வகையான மூலக்கூறுகளை கொண்ட மருந்து 3 ரூபாயிலிருந்து 500 வரை நிறுவனத்தின் பெயருக்கேற்ப விற்கப்படுகிறது.

உலகெல்லாம் பறக்கும் பிரதமருக்கு வேறு வேலைகள்.காந்தியை கொன்றது யாரென்ற பிரச்சனையை கவனிக்கவே எதிர்க்கட்சிக்கு நேரமில்லை..

மக்களின் உயிரோடு விளையாடும் இந்த பிரச்சினையில் எல்லாத்தரப்பும் கண்ணை மூடிக்கொண்டிருப்பது கவலைக்குரியது தான்.

இந்திய மருத்துவத்துறையும் மூடிமறைத்த துறையாகவே இன்றும் இருந்துகொண்டிருக்கிறது.
நாட்டின் மக்கள் தொகைக்கேற்ப மருத்துவர்களின் அளவு குறைந்துகொண்டே வருகிறதாம்.

எண்ணற்ற இளைஞர் வளம் வேலைவாய்ப்பின்றி அலைய ,
இருக்கும் மருத்துவர்களின் வயதுவரம்பை அதிகரிக்கும் ஆலோசனைகள் நடக்கிறது.

மருத்துவப்படிப்பதென்பது லட்சங்களைத்தாண்டி கோடிகளில் பறக்கிறது.
படிப்பிடங்களுக்காய் கொலைவரை அரங்கேறும் அவலங்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆயிரக்கணக்கான கிலோ தங்கம் இருந்து எடுத்த மருத்துவத்துறை உயரதிகாரி கண்டிப்பாய் இப்போது சிறையில் இருக்க வாய்ப்பில்லை.

ஆனால், நான் சொல்ல வந்தது அதுவல்ல சக்தி!

இன்றைய நாளிதழ் ஒன்றில் ஒரு செய்தி..
உலக சுகாதார நிறுவனம் ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
இந்திய மருத்துவர்களில் பள்ளிப்படிப்பு மட்டுமே முடித்த,முடிக்காத போலி மருத்துவர்கள் கிட்டத்தட்ட பாதிபேர்கள் இருக்கிறார்களாம்.

அறிக்கை வெளியிட்டு இருப்பவது சாதாரண நிறுவனமல்ல.
உலக தர நிறுவனம்.
அதன் அறிக்கையும் எளிதில் கடந்துவிடும் சாதாரண அறிக்கை அல்ல.

மக்களின் உயிரோடும்,நாட்டின் நலத்தோடும், எதிர்காலத்தோடும் பின்னிப்பிணைந்த மருத்துவத்துறையில் இத்தனை கருப்பாடுகளை வைத்துக்கொண்டு ,இந்த அரசாங்கம் எத்தனை வாய்கிழிய பேசினாலும் புண்ணியமில்லை.

மருத்துவர்களை கண்ணில் காணும் கடவுளாய் உள்ளம் மட்டுமல்ல,உடலும் திறந்து காட்டி பேசும் எங்கள் இந்திய மண்ணில் இப்படி மருத்துவர்கள் இருப்பார்களெனில் இந்தியா எப்போது முன்னேற?

நட்சத்திர விடுதிகள் போல மருத்துவமனைகள் தேவைதான்...
மருத்துவரே போலியெனில் அவை சுடுகாட்டிற்கே ஒப்பாகும்.

இந்த அரசுக்கும்,
மருத்துவத்துறைக்கும் உலகம் பூசிய கருப்புச்சாயம் இது.
எதையும் துடைத்துவிட்டுப்போகும் வழக்கம் போல் இதற்கும் இருந்தால்...

அவர்களுக்கு இந்த போலி மருத்துவர்களை வைத்தே வைத்தியம் பார்க்க வேண்டும்.

சக்தி...
கொஞ்சம் பதட்டமாய்த்தான் இருக்கிறது..
என்ன செய்ய?
எப்போதேனும் மருத்துவரைப் பார்க்கப்போனால்
அவர் நம்மைப்பார்க்கும் முன் நாம் அவரின் சான்றிதழைப் பார்த்துக்கொள்ளலாம்.

மருத்துவர் சரியாய் இருந்து மருந்து சரியாய் இல்லையெனில்..
விதிதான்.

அன்புடன்.
செல்வக்குமார்.
7 கருத்துகள்:

 1. #அவர் நம்மைப்பார்க்கும் முன் நாம் அவரின் சான்றிதழைப் பார்த்துக்கொள்ளலாம்.#
  சான்றிதழைப் பார்க்கலாம் ,அது ஒரிஜினலா ,போலியா என்று எப்படித் தெரியும் ?

  பதிலளிநீக்கு
 2. சென்னை மாநகரம் மருத்துவ உலகின் தலைநகரம் என்று சொல்லப்பட்டுப் பல வெளிநாட்டவர் குறிப்பாக பாகிஸ்தானியர்களும், ஆப்ரிக்கர்களும் இங்கு வந்து சிகிச்சை மேற்கொள்கின்றனர். ஆனால் இங்கிருக்கும் நிலைமை வெட்கக் கேடு. மருத்துவ உலகில் நடக்கும் அராஜகம் சொல்லி மாளாது. இந்திய மருத்துவக் கழகத்தின் மறுபக்கத்தைத் தோலுரித்து சமீபத்தில் இரு மருத்துவர்கள் புத்தகம் வெளியிட்டுள்ளார்கள். அவர்கள் வட இந்தியர்கள். 'Dissenting Diagnosis' by Dr Arun Gadre and Dr Abhay Shukla, சில மருத்துவர்கள் தங்கள் பெயரைக் குறிப்பிட விரும்பாமல் என்ன நடக்கிறது எனப்தையும் சொல்லியிருக்கிறார்கள். பல பயங்கரமான தகவல்கள் அதில்...

  பதிலளிநீக்கு
 3. இதுவும் ஒரு வித பயங்கரவாதம்..... பணத்திற்காக எதையும் செய்ய நினைக்கும் சிலர் இங்கேயும் உண்டு. :(

  பதிலளிநீக்கு
 4. Iru Sakkara vaaganathil irarrai vadam sangiliyudan palapakkum thanga nagaigaludan arasu maruthuvamanaiyil sigichai pera Pala panakarargal varum nerathil, oru sakara vaganathirkum vazhiyatra peyaruku irukum thaaliyai kooda adamanam vaithuvittu Periya periya thaniyaar maruthuvamanaiku yezhaigal odum avalam en maanilathil dhane? Idhu vidhiyo sadhiyo, madhiketta en seezhpiditha samudhayathirku ungalai pondra jeevangal ethanai murai operation seidhalum nangal appadiye dhan .......

  பதிலளிநீக்கு