ஞாயிறு, 31 ஜூலை, 2016

அப்பா....




கருவறை
தாங்கியள்
தாயெனில்
கருவறை விட்டு
நம்
விரல்பிடித்த
சாமிகள்...
அப்பாக்கள்.

அம்மாக்கள்
முத்தங்கள்,
அழுகையென
காட்டிவிடுவார்கள்
கருணையை...
அப்பாக்களால்
எப்போதும்
அது
முடியாது...

இடுப்பில்
ஏந்தி
கற்பனைக்கதை
சொல்லுவாள்
அம்மா...
அதில்
அன்பிருக்கும்...

தோள்களில்
சுமந்து
தான்
காணா
உலகையும்
கண்ணுக்குக்
காட்டுவார்
அப்பா...
அதில்
எல்லாம்
இருக்கும்...

பிஞ்சின்
பருவக்கால்கள்
எட்டி
உதைக்கும் வேளையெல்லாம்
நீவிக்கொடுத்து..
கொழுசுக்கு
ஓடுவார்
அப்பா....

விரல்கள்
பிடித்து
நடக்கையில்
தார்ச்சாலை
பூப்பூக்கும்.

அப்பாக்கள்
எப்போதும்
வெளிக்காட்டாதவர்கள்.

தூக்கும்
மூட்டைச் சுமைகளில்,
இழுக்கும்
வண்டியின்
சக்கரச்
சுற்றுகளில்..
அடிமையாய்..
ஊழியனாய்..
நகரும்
அவன் நாட்களில்
ஒளிர்வதெல்லாம்
பிள்ளைகளின்
எதிர்காலம்..

பிள்ளையோ
பையனோ..
வயிறுகிழித்து
பெற்றுப்போட்டதில்
தொடங்கும்
சோதனை...

சுணங்கும்
குழந்தைக்குப்
பதறி...
சொட்டு
மருந்து
தொடங்கி..
விட்டுவரும்
காய்ச்சலுக்கு
கலங்கி..

பள்ளியென..
கல்வியென..
எல்லாம்
முடிந்த பின்..
அம்மாக்கள்
படமாகிறார்கள்..
அப்பாக்கள்
பாடமாகிறார்கள்..

ஆரம்பத்தில்
பிடிக்கும்
அப்பாக்கள்..
பருவத்தில்
பிடிக்காமல்
போவார்கள்.
செத்துப்போனபின்
புரியும்
தெய்வங்கள்.

அப்பாக்களிடம்
அடிவாங்கியவர்கள்
ஆசீர்வதிக்கப்
பட்டவர்கள்..
தெய்வத்தின்
தீண்டலது...

அடிவாங்கி
அழுத பிள்ளை ஓயும்..
அப்பாக்களின்
அழுகை
ஒருபோதும்
ஓய்வதில்லை...

தாயிற் சிறந்த
கோவிலில்லை
தான்...
அப்பாவெனும்
ஆண்டவன்
உறைந்தால் தான்
அது
ஆலயம்..

பெற்ற பெண்
மணமுடித்து
போகும்
நேரம்
அழுகாத
அப்பாக்கள்
எங்குமில்லை.

அப்பாக்கள்
இல்லையெனில்
ஆயிரம்
தொல்லை..

வியாபாரம்
நடக்குமெனில்
விபச்சாரத்துக்கும்
விளம்பரக்காலங்கள்..

கபாலிகர்களின்
தோட்டத்துள்
அப்பா
என்னும்
குறிஞ்சி
பூத்திருக்கிறது..

ராட்சஷர்கள்
உலவும்
திரைக்காட்டில்
ஒரு
புள்ளிமானாய்
வெளிவந்எதிர்க்கிறது
அப்பா...

அதன்
கதைகளில்
ஆக்கங்களில்
நோக்கங்களை
சொன்ன
விதங்களில்
ஆயிரம்
கருத்துக்கள்
இருக்கலாம்...
ஆனால்
அப்பா
என்னும்
தலைப்புக்கே
ஆயிரம்
முத்தங்கள்
கொடுக்கலாம்..

ஒரு
சண்டையில்லை..
துப்பாக்கிகள்
சீறவில்லை..
நாயகியின்
தொப்புள்
காணக்
கிடைக்கவில்லை...
போகாத
ஒரு நாடு
போய்
பாட்டொன்றும்
எடுக்கவில்லை..

நெய்வேலிச்
சுரங்கத்தில்
நிலக்கரி
எடுப்பார்கள்..
ஒரு
திரைப்படம்
எடுத்திருக்கிறார்
சமுத்திரக்கனி..

ஒரு
கட்டுமரம்
எடுத்துப்போன
சமுத்திரத்தில்
கப்பலளவு
மீன்
பிடித்திருக்கிறார்...
கட்டுமரம்
கரைசேர்ந்ததா
தெரியாது..
ஆயினும்
பிடித்த மீன்கள்
துடிப்பானவை..

நல்ல தமிழ்
பேசுவோர்
காமெடியானவன்
என்ற
உலகத்தில்
லட்சியங்களோடு
நடமாடுபவன்
கிறுக்கனாய்த்தான்
தெரிவார்கள்..

மிகைப்படுத்தப்பட்ட
லட்சியங்கள்..
பிள்ளைப்பேற்றுக்கு
மருத்துவமனை
போகாததை..
லட்சியம்
என்பதா?
அலட்சியம்
என்பதா..

மகனுகாய்
மனைவியை
பிரிதல்..
புரிதல்
இல்லாத
மனிதனைத்தான்
காட்டுகிறது..

எப்படியும்
பெரியாளாக
ஒருத்தரும்..
இப்படியே
இருக்கலாமென
ஒருவரும்
சமூகத்தின்
சில
சாட்சிகளாய்
உலவியிருக்கிறார்கள்..

பள்ளிகள்
சொல்லும்
பாடங்கள்..

பருவத்தில்
வரும்
கோளாறுகள்..

சாதிக்கத்தூண்டும்
ஆறுதல்கள்..
போதிக்கத்தான்
செய்கிறது..

நெஞ்சு
நிமிர்த்தி
போராடும் போது
இருக்கையின்
நுனிக்கு
வருகிறோம்..
விலை
அதிகமாய்
கொடுத்து
ஒரு
நுழவுச்சீட்டு
வாங்கியதை
எப்படி
மறப்பது..
மறுப்பது?

சினிமாத்தனங்களில்
நிரம்பித்தளும்புகிறார்
அப்பா..

பிள்ளை
காணாமல்
போவதும்..
வியர்வையும்
கண்ணீரும்
வழிய அலைவதும்
சினிமாவுக்காய்
சித்தரித்த
சிருங்காரம்.

திருநங்கை
காத்து
அழைத்துவந்தது
கருணையின்
ஸ்டிக்கர்
ஒட்டிய விளம்பரம்.

நல்ல
மாமனார்..
மோசமான
மைத்துனர்கள்
வழக்கமான பாதை.

பள்ளிப்பருவத்தில்
வரும்
பாலின
ஈர்ப்பை
இன்னும்
எளிதாய்
சமாளித்திருக்கலாம்.

பிள்ளை
கின்னஸ்
என்பதெல்லாம்
சினிமாவின்
மொழிதானன்றி
வேறில்லை..

பள்ளிகள்
பணம்
பறிப்பதும்
அடைகாத்து
மதிப்பெண்கள்
பொறிப்பதும்..
புதிதல்ல..
இன்னும்
தீ
தெறிக்காத
வருத்தம்
தான்..

பிள்ளைகள்
கூடி
கல்யாணம்
சமைப்பதும்..
வயசுக்கும்
உருவத்துக்கும்
மீறிய
செயல்களும்
அப்பாவுக்கு
அழகாயில்லை..

பாத்திரப்படைப்புகள்
நல்ல
முயற்சி...

தம்பி ராமையா
எம்பிக்குதிப்பது
ஈர்ப்பதாய்
இல்லை..

வழக்கமான
இசை...
பழக்கமான
பாதை..
அறிவியலின்
அற்புதமாய்
காட்சிப்படுத்துதலில்
புதுமை..

அப்பா
படத்தைப்பற்றிய
உங்கள்
பார்வைகளுக்கு
நான்
எதிரியில்லை..

சமுத்திரக்கனியோடு
எனக்கு
சண்டையுமில்லை.

ஆயிரத்தெட்டு
பிரச்சனைகளில்
பணத்தைத்தவிர
மூன்று
மணி
நேரத்தையும்
தொலைத்த
என்
பார்வையில்
என்ன
பட்டதோ
அதையே
பதிவு
செய்கிறேன்..

அப்பா
என்னும்
அமுதத்தை
திரைப்படமென்னும்
அரைகுறைக்கலசத்தில்
அழுத்தித்
திணித்திருக்கிறார்கள்..
அமுதமே
ஆனாலும்
அழுக்கான
பாத்திரம்
உறுத்தத்தான்
செய்கிறது..

ஒரு
ஆவணப்படமாய்
வந்திருக்க
வேண்டியது...
ஆணவக்கொலையில்
முடிந்திருக்கிறது..

நல்ல
கதை
நறுக்கென்ற
வசனங்கள்..
பிரமிக்கும்
காட்சிகள்..
பொட்டிலடிக்கும்
உண்மைகள்..
நேர்மையான
உழைப்பு..
தனித்த பார்வை.
எல்லாம்
சரிதான்..

என்ன செய்ய
எல்லாமே
வலியத்திணித்த
நடிப்பாய்
இருக்கிறதே..

இப்படியாக....
அழகாய்
இருக்கலாம்.
அறிவாய்
இருக்கலாம்.

என்
அப்பாவை
பிடித்தது போல்
எந்த
அப்பாவும்
எனக்குப்
பிடிக்கவில்லை.



































5 கருத்துகள்:

  1. கந்தர்வகோட்டையின் பெருமன்ற நிகழ்வுக்காக வாசித்தது..நீளமாய் இருப்பின் பொறுத்தருள்க...

    பதிலளிநீக்கு
  2. தங்கள் பார்வையில் விமர்சனம் அருமை...
    வாழ்த்துக்கள் அண்ணா....

    பதிலளிநீக்கு
  3. அருமையான விமர்சனம். வாழ்த்துகள் செல்வா...

    பதிலளிநீக்கு
  4. 'அப்பா ' அருமை .

    தங்களின் 'அப்பா ' அதைவிட அருமை.

    நானும் ' அப்பா' வைப் பற்றி பேசியிருக்கிறேன் .

    பதிலளிநீக்கு
  5. அப்பா படம் பற்றிய விமர்சனத்தைக் கவிதையில் தந்தது ஏன்? கவிதை எழுதத் தூண்டியிருந்தால் படம் வெற்றி தான். எனக்கும் சிற்சில விமர்சனங்கள் இருந்தாலும், மெட்ரிக் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி இருந்தால் பாராட்டுவது போல நானும் பாராட்டவே நினைக்கிறேன். (எனது விமர்சனம் அறிவியல் இயக்கத்தின் இம்மாத “விழுது” இதழில் வந்திருக்கிறது)

    பதிலளிநீக்கு