வியாழன், 12 அக்டோபர், 2017

முத்தன் பள்ளம்- எழுத்து மேடு

ஆக,
எனக்கு இந்த வாரம் விமர்சன வாரமாக இருந்திருக்கிறது. 


தமிழகத்தின் எல்லா எழுத்துப் போட்டிகளிலும் கலந்து கொள்வதோடு பரிசுகளையும் வாங்கிவிடும் என் தோழன் அண்டனூர் சுரா,

இந்தமுறை நாவலாசிரியராக வளர்ந்து பிரமாண்டம் காட்டிய முத்தன் பள்ளம் வெளியீட்டுவிழாவில் முழுமையாய் கலந்துகொள்ள இயலா சிறிய வருத்தத்துடனே வாசிக்க ஆரம்பிக்கிறேன்..

மேன்மை பதிப்பக திரு.மணி அவர்களின் தனிப்பட்ட அக்கறை தெரியும் வடிவமைப்பில் அச்சும் அட்டையும் அபாரம்.

நாஞ்சில் நாடனின் அணிந்துரை..
சர்க்கரைப் பொங்கலில் கிடக்கும் திராட்சை..

ஒரு நூலின் சமர்ப்பணத்தில் என்னவெல்லாம் எழுதலாம்..?

ஆசிரியரை ஈன்ற அம்மா,அப்பா,  அகரம் சொன்ன ஆசிரியர்.. மனைவிக்கு, மக்களுக்கு?
இப்படி யாரையேனும் இவர் குறிப்பிட்டிருந்தால் நான் இவரின் சமர்ப்பணத்தைப் பற்றி என் எழுத்துகளை செலவு செய்திருக்க மாட்டேன்...

தென்காசிக் கோயிலில் ஏதோ மன்னன் கல்லில் அடித்து வைத்திருக்கிறான் என்பார்கள்..
அந்தக்கோவிலுக்கு யாரேனும் நல்லது செய்தால் அவர்களை தலைமேல் வைத்து வணங்குவதாக...

இவர் சிலரின் திருவடிகள் தேடுகிறார்..
வாசித்து முடித்தால் உங்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கலாம்..
முந்துங்கள் ..
போனால் கிடைக்காது...

கிட்டத்தட்ட 200 பக்க நாவலில் இரண்டு பகுதிகளாக பிரித்துக்கொண்டிருக்கிறார்..

ஆன்ராய்ட் போன் என்னும் செல்பூச்சி ஒவ்வொருமனுஷனையும் பிடித்து அரிப்பதுபோல் போக்கிமான் என்னும் விஷேசப்பூச்சிப்பித்துப் பிடித்த ஒரு மனிதனின் பார்வையில் நகரத்தொடங்கும் கதை எத்தனை நூற்றாண்டுக்கெல்லாம் விரிவது?

கந்தர்வகோட்டையில் இருக்கும் காந்திசிலைதான் இந்த ஊர்வலத்தின் தொடக்கப்புள்ளியாகி இருக்கிறது.

அண்டனூர் சுரா..
இயல்பிலேயே இருக்கும் கதைக்கண்களால் விவரிக்கத்தொடங்கி விடுகிறார் .

சென்னையின் பெருமழைக்காலத்தை 
இவர் கதை தொடங்கும் நேரமாக்கிக்கொண்டிருக்கிறார்.

அலைபேசியின் விளையாட்டொன்றை ஊன்று
கோலாக்கிக்கொண்டு நடந்து திரியும் இவரின் கதைக்காலகள்..
அத்தனை பட்டிகளுக்கும் டிங்கரிங் செய்திருக்கிறது.

கந்தர்வ கோட்டையின் பிறப்புச் சான்றிதலும் அதன் ஆதிப்பெயரும் அறிமுகமாகிறது...

அலங்கோலப்பட்டிருக்கும் அம்பேத்கார் சிலையும்,
நாசி கூரான இந்திரா சிலையும் பதாகைகளால் படும் பாடும்,

நல்ல நாளிலேயே கந்தர்வகோட்டை தாண்டும் போது நெரிபடும் மனிதக்கூட்டத்தையும் செய்யும் எள்ளலாகட்டும், துப்புரவுப்பணியாளர்களின் துணிந்த டீக்கடை உரையாடலாகட்டும்,
பதாகைகளின் செய்திகள் குறித்த விவரணைகள் என சமகாலம் குறித்த அத்தனை அபத்தங்களோடும் மிளிரும் கந்தர்வகோட்டை இப்போது கவனிக்கப்படவேண்டியதாய் இருக்கிறது...

காலாற நடந்து போகும் கதைசொல்லி.
கடக்கும் ஊர்களின் வரலாற்றை ஒரு தேர்ந்த வரலாற்று அறிஞனாய் சொல்லிப்போவது ஆச்சர்யம்..

ஒவ்வொரு ஊரின் பெயருக்கும் பின்னால் இருக்கும் ரகசியங்கள் உடைபடும் வேளைகளில் மனசுக்குள் ஒரு மத்தாப்பு பூப்பது உண்மைதான்...

நடத்திக்கொண்டே போகும் போக்கிமான் பூச்சி முத்தன் பள்ளத்துக்குள் புகும் இரண்டாம் பாகத்தில் பறக்க ஆரம்பித்து விடுகிறது.

தல"யின் ஆத்ம ரகசிய சிநேகிதன் முத்தன் அவமானப்பட்டு ஊரை விட்டு கிளம்புவதும்,பிடிமண் சுமந்து வந்து நிலையாகும் முத்தன் பள்ளம் ஒவ்வொரு அங்குலமாய் விரிகிறது..

அம்புக்கோயில் வரலாறும்,
அம்பாள் தோப்பின் தண்டனைகளும் மறக்க முடிவதாய் இல்லை.
கல்லாக்கோட்டை சந்திப்புகளும் அன்றைய முறைமைகளும் கருப்புவெள்ளையாய் வண்ணமடிக்கும் சூழல்.

நரி சுமக்கும் முத்தனின் ரத்தக்கவிச்சி அடிக்கும் முத்தன் பள்ளக்
கதையினூடே
காவியமாய் மலரும் பைரவ தொண்டைமானின் காதல் வரலாறு..ஆஹா..ஓஹோ...

புதுக்கோட்டை உருவான விதம்..
நகர்மன்றம் கண்ட இரண்டு கோலங்கள்..
மன்னர் முடி இறங்க அழுத அந்த நாட்கள்.
என ஒரு ஓரங்க நாடகமே முத்தன் பள்ளத்தை தாண்டி மனசுக்குள் தங்கிவிடுகிறது...

ஒரு பிரிவு என நினைத்துக்கொண்டிருக்கும் முத்தரையர்களின் பூர்வீகத்தை,
அவர்களின் அத்தனை பிரிவை,
திறமையை இப்போதுதான் நான் வாசிக்கிறேன் சுரா...

பல்லவ-விசயாலயன் மற்றும் முத்தரையர்- பாண்டியர் கூட்டணி குறித்த இவரின் அலங்கார விஸ்தரிப்பு ஒரு திரைப்படக்காட்சியை பார்க்கும் பிரமிப்பை தருகிறது..

அப்பூதி அடிகளை மனசுக்குள் பிடிக்காமல் போய் வரிக்கு வரி செய்யும் கேலியும் கிண்டலும்..சூப்பர்ப்..

கதையின் ஆசிரியர் தற்கூற்றாக வரிந்து எழுதும் சில இடங்கள் மின்னல் போல் நம்மை கவனிக்கவைத்து விடுகிறது.

கிராமத்துக் கடையின் இட்டிலி மணக்கிறது..
மண்டை உடைந்து போகும் பதாகைச்சண்டைகள் நகருக்குள் தான் என்றால்,
கிராமங்களுக்கும் கிளை பரப்பியிருக்கிறது குட்டியானையில் சுமந்துபோகும் சம்பந்தப்பட்டவர்களை பார்க்கும் போது புரிகிறது.

ஒரு நாவலின் கதையாய் கடந்து போய் விடாமல் ஒரு பெருநிலத்தின் வரலாற்று ஆவணமாய் மாறியிருப்பது அபூர்வம் சுரா..

நீண்ட திட்டமிட்ட சுராவின் உழைப்புக்கு பாராட்டுகள்..


பாம்பு தீண்டி சுமந்துபோன முத்தன் பள்ளத்து சிறுமி ..பொதியாகி வருவதோடு முடியும் நாவல் நம்மையும் சுமக்கவைத்துவிடுவது அண்டனூர் சுராவின் மகத்தான வெற்றி எனில்,

கதாசிரியர் அவ்வளவாக அறியப்படாத ஒரு போக்கிமான் பூச்சியை ஏன் துணைக்கு அழைக்கிறார் என்பது எனக்கு புரியவில்லை...

கதாசிரியர் தனக்கு நன்றாக அறிமுகமாகியிருக்கும் ஒரு விளையாட்டு...
வாசிக்கும் எல்லாருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கும் பெருந்தன்மையை இப்போதுவரை என்னால் ஏற்க முடியவில்லை..
ஏனெனில் எனக்கு அந்த போக்கிமானை தெரியாது...
உங்களுக்கு அதுபற்றி தெரிந்திருந்தால் என் அறியாமையை பொருத்தருள்க..

முன் சொன்னது போலவே சென்னை பெருவெள்ள காலமெனில் அப்போது கந்தர்வகோட்டையின் காந்திசிலைக்கும்,முத்தன் பள்ளத்து வாய்க்காலுக்கும் 4G இணைய சேவை அவ்வளவு வேகமாக கிடைத்து விட்டதா என்ன?

போக்கிமான் பிடித்து திரியும் வட்டிக்கு விடும் ஒரு மனிதன்,
எந்த சூழலிலும் தன் தொழில் சார்ந்தே யோசிக்கும் ஒரு தொழிலதிபன் எப்படி ஒருநாள் முழுவதும் நடக்கத்துணிந்தான்?

சேர்ந்து நடந்தால் தாட் பூட்டென ஆங்கிலம் பேசுவதால் தனியே நடப்பதாகக் கூறுபவன் முழுக்க ஆங்கிலமே கொண்டிருந்த ஒரு விளையாட்டை எப்படிப் பின் தொடர்ந்தான்?

பதாகைகள் குறித்த அதீத விவரங்கள் கதையின் வேகத்தை மட்டுப்படுத்துவதை உணர்வீர்களா சுரா?

மிக முக்கியமான எனது பார்வை இப்படித்தான் இருக்கிறது சுரா..

இந்த நூலில் போக்கிமான் இல்லாமல் இரண்டாம் பாகம் மட்டும் இருந்திருப்பின் தமிழின் ஆகச்சிறந்த நாவல்களின் ஒன்றாய் காலம் தூக்கிவைத்து கொண்டாடி இருக்கும்..

இப்போதும் உங்கள் நாவலை தூக்கிவைத்துதான் கொண்டாடப்போகிறது...

அனாலும் சுரா..
புயலின் வேகத்தில் நகரும் வாழ்க்கைச்சுமையின் நாட்களில்  சுமந்துகொண்டு போவதை  கனம் கொஞ்சம் குறைத்திருந்தால் தூக்கிக்கொஞ்சிக்
கொண்டல்லவா போயிருப்போம்...

வாழ்த்துகள் சுரா...

அன்புடன்
மீரா செல்வக்குமார்.









12 கருத்துகள்:

  1. tha.ma.1 - நானும் இந்தநூல் பற்றிய எனது பார்வையை எழுத இருப்பதால், உங்களுடைய இந்த பதிவினை பிற்பாடு வாசிக்கலாம் என்று இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்

    பதிலளிநீக்கு
  3. நூல் பாராட்டப்படுகின்ற முறையை வைத்தே நூலாசிரியரின் எழுத்தை நாம் ஊகிக்க முடியும். தங்கள் மதிப்புரை அதனை சிறப்பாகச் செய்துள்ளது. நூலாசிரியருக்குப் பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி. (தென்காசி கோயிலில், ராஜ கோபுரத்தில் நாம் உள்ளே செல்லும்போது நமக்கு வலது புறத்தில் நீங்கள் கூறியுள்ள கல்வெட்டு உள்ளது, பார்த்துள்ளேன்.)

    பதிலளிநீக்கு
  4. அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நாவல் எனபதை தங்களின் அருமையான விமர்சனம் உணர்த்துகிறது
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான விமர்சனம்.

    // இந்த நூலில் போக்கிமான் இல்லாமல் இரண்டாம் பாகம் மட்டும் இருந்திருப்பின் தமிழின் ஆகச்சிறந்த நாவல்களின் ஒன்றாய் காலம் தூக்கிவைத்து கொண்டாடி இருக்கும்..

    இப்போதும் உங்கள் நாவலை தூக்கிவைத்துதான் கொண்டாடப்போகிறது... //

    என்ற உங்களது வரிகளை மீண்டும் மீண்டும் படித்தேன். உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  6. காலையில் தமிழ் இளங்கோ ஐயாவின் பதிவில் இதே முத்தன் பள்ளம் வாசித்தேன்...
    இப்போது உங்கள் பதிவிலும் பார்க்கிறேன்..
    அருமையான விமர்சனம்.
    புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் !

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய விளக்கணித் திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க நலம் வாழ்க பல்லாண்டு வளத்துடனும் நலத்துடனும்

    பதிலளிநீக்கு
  8. செம்மையான விமர்சனம் அண்ணே... பிரிச்சு மேஞ்சுடீங்க

    பதிலளிநீக்கு