புதன், 18 அக்டோபர், 2017

அனுப்புனாத் தான் விருதுன்னா?

விண்ணப்பித்து வாங்குவதா விருது என நிலவன் அய்யா ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்..

அது நல்லாசிரியர் விருது பெற விண்ணப்பம் போடும் ஆசிரியர்கள் பற்றிய சாட்டையடி பதிவு...
மிக ஆழமான கேள்விகளால்  வாசக வரவேற்பை பெற்றது..

மிகச்சமீப காலங்களில் நான் இதைப்போன்ற பல விளம்பரங்களை பார்த்தாலும்...

இந்த படைப்பாளர்களுக்கான விருது விளம்பரம் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது..

அதிக பட்சமாக 5000 பரிசாக தரக்கூடியதாகவும்..
குறைந்ததாய் 1000 உருபா எனவும் காணப்படும் விளம்பரங்கள்..
படைப்பாளர்களை கிட்டத்தட்ட மதுக்கடைமுன் போராடி சரக்கு வாங்கும் நிலைக்கு ஒப்பானதாக்கி இருக்கிறது..

அது 64 பக்கமாக இருந்தாலும் 1000 பக்கங்களாக இருந்தாலும் இரண்டு பிரதிகள்..
படைப்பாளர் பற்றிய சுயவிவரக்குறிப்பு...
முடிந்தால் மார்பளவு படம்..
எல்லாம் இணைத்து குறிப்பிட்ட காலத்துக்கு முந்தச்சொல்கிறது விளம்பரங்கள்..

இன்றைய காலத்தில் ஒரு படைப்பாளன் தன் படைப்பை தன் செலவில் அச்சிட்டு வெளியிடுவது என்பதெல்லாம்...
சிசேரியன் மூலம் பிள்ளைப்பெறுவது போலத்தான் நிகழ்கிறது..

பேர் பெத்த படைப்பாள கடவுள்களுக்கு பதிப்பக உதவிகள் கிடைப்பதுபோல் எல்லார்க்கும் வாய்ப்பதில்லை..

அச்சடிக்கும் புத்தகங்கள் விழா நாளில் வெளியிடும் போது வரிசையாய் கையில் பிடித்துக்கொண்டு படம் எடுக்குபோதே பறிபோக ஆரம்பிக்கிறது..

அடித்த புத்தகங்கள் விமர்சனத்துக்கென நாளிதழ்களுக்கு அனுப்பினால் ..அவர்களும் தராதரம் வைத்திருக்கிறார்கள்...
கவிதை எனில் ஏதோ காணக்கூடாததை கண்டதுபோல் தவிர்த்துவிடுவதை சொல்வது தவிர்க்கமுடியாதது..

பத்து பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால் ஏதோ ஒரு புண்ணியவான் பத்தோடு ஒன்றாக சின்னதாய் போட்டு கவுரவப்படுத்தினால் உண்டு..

நிறைய நாளாகவே ஒரு சந்தேகம் அது போட்டிக்கானாலும் ..விமர்சனத்துக்கானாலும் ஏன் இரண்டு பிரதிகள் கேட்கின்றார்கள் என தெரியவில்லை..

பத்திரிக்கைகளை விடுங்கள்..

இந்த போட்டி நடத்துபவர்கள்..

இரண்டு பிரதிகள் கேட்டுப்பெறுகிறார்கள்...

எனக்குத்தெரிந்து பரிசு கிடைக்காவிட்டால் அவைகள் திரும்ப வருவதில்லை..

நல்லாசிரியர் விருதுக்கு எப்படி விண்ணப்பிக்க கூடாமல் ஆசிரியரின் தகுதிக்கேற்ப வழங்கப்பட வேண்டும் என நினைக்கிறோமோ அதைப்போலவே ஒரு படைப்பாளனின் படைப்பும் அவனாகவே விண்ணப்பித்து வாங்குவதும் குறையாகவே படுகிறது..

என் படைப்பு நல்லா இருக்கும் படிச்சுப்பார்த்து பரிசு போடுங்கள் என்பது ஒரு படைப்பாளனை பரிசின் மூலம் அவமானப்படுத்துவது ஆகாதா?

படைப்பாளன் சொல்லித்தான் அவன் படைப்புகளை பரிசீலிக்க வேண்டி இருக்குமெனில் ..
விருதுபற்றியோ போட்டி பற்றியோ அறியாத படைப்பாளன் என்ன பாவம் செய்தான்.

இப்படியும் கேட்கலாம்..பரிசுப்போட்டிக்கு மூன்று பரிசுகள் எனில் மூன்று படைப்புகள் மட்டும் வந்தால் எப்படி தேர்ந்தெடுப்பார்கள்?
அவைதான் ஆகச்சிறந்த படைப்பாகி விடுமா?

புத்தகத்தை அஞ்சலில் அனுப்பிவிடும் படைப்பாளருக்கு குறைந்த பட்சம் பெற்றதற்கான தகவலோ அல்லது பரிசுக்கு உரியது இல்லையெனில் ஏன் திருப்பி அனுப்புவதில்லை..

பரிசுகள் குடுப்பதன் மூலம் இவர்கள் என்னவோ கடவுள் அளவுக்கு ஏன் உணர்கின்றீர்கள்..?

படைப்பாளன் என்பவன் கர்வமும் ஆணவமும் பிடித்தவர்களாத்தான் இருப்பார்கள்..
அதையும் தாண்டி பரிசு பாராட்டு எனில் குழந்தைத்தன்மையும் வந்துவிடும் எளிமையானவர்களும் கூட...

இலவசமாய் படைப்பைப் பெற்றுப்போன ஒரு நண்பரோ யாரோ ஒற்றை வரியில் விமர்சனம் எழுதிவிட்டால் பறக்க ஆரம்பிப்பவனும் அவன் தான்..

பரிசுகள் என்ற பெயரில் இவர்கள் படைப்பாளரை சிரமப்படுத்துவாதாக நான் உணர்கிறேன்..

படைப்புகளை அனுப்பிவிட்டு லாட்டரி வாங்கி வீட்டில் வைத்து விட்டு குலுக்கல் நாளில் பரபரப்பவனாய் முடிவுக்கு காத்திருக்கவைப்பதும் அவனுக்கு செய்யும் பாவம் தானே...?

அவன் படைப்பு பரிசுக்கு தகுதி எனில் ஏன் அவன் விண்ணப்பிக்காமலே அவனுக்கு கொடுக்கக்கூடாது?

உங்கள் பரிசுகளால் அவன் கோடீஸ்வரன் ஆகப்போவதில்லை..
ஆனால் ஒரு படைப்பாளரை பரிசுக்காய் ஏங்கி விண்ணப்பிக்கும் பிச்சைக்காரனாக ஆக்காமல் இருக்கலாமே...

அன்பின் பரிசு கொடுப்போரே...
விளம்பரங்களை சற்று மாற்றிப்பாருங்களேன்...

படைப்பாளரை
நூலோ, படைப்போ அனுப்பச்சொல்லாதீர்கள்?

பொதுவான விளம்பரமாய் வாசகர்களுக்கு பிடித்த ,கவர்ந்த படைப்புகளை சொல்லச்சொல்லுங்கள்..மெத்தப்படித்த உங்கள் தேர்வுக்குழுவின் நீதிபதிகள் பரிசுக்குரிய ஆண்டின் படைப்புகளை விசாரிக்கட்டும்..

வாசகர்கள் அதிகம் பரிந்துரைக்கும் படைப்புகளை உங்கள் சொந்த செலவில் வாங்கிப் படியுங்கள்..இது நீங்கள் பரிசே கொடுக்கவில்லை என்றாலும் படைப்பாளரின் ஒற்றைப்பிரதி விற்பனைக்கேனும் வழிவகுக்கும்..

எல்லாம் தாண்டி உங்கள் பரிசளிப்பு விழாவில் படைப்பாளரை கவுரவப்படுத்துகிறோம் என படுத்தாதீர்கள்..

பரிசு பெறும் பத்துப்பேருக்கும்  ஒவ்வொருவருக்காய் ஒரு சால்வையை போர்த்தி மேடையை விட்டு கீழ் இறங்கியவர்களை மறுபடியும் மேலே ஏற்றி வரிசையாய் நிற்க வைத்து ஆடாமல் அடையாமல் படமெடுத்து..என உங்களுக்கு வேண்டுமெனில் பெருமையாய் இருக்கலாம்.
படைப்பாளனின் ஆழ்மனசு அதை ஏற்பதாய் எனக்கு படவில்லை...

இந்த சமூகத்தில் ஆசிரியர்களை காட்டிலும் படைப்பாளர் குறைந்தவர்கள் இல்லை..ஊதியத்திற்காக எந்த படைப்பாளரும் வீதியில் போராடுவதில்லை...

ஒருசிலவற்றைத்தவிர எந்தக்குடும்பமும் படைப்பாளரை தூக்கிவைத்துக் கொண்டாடுவதுமில்லை..
எல்லாம் தாண்டித்தான் எழுதுகிறார்கள்...
நம் ஆதிச்சமூகமும் படைப்பாளரை ஆசிரியர் என்றே அழைத்திருக்கிறது..

எல்லா மனங்களையும் ஊடுருவும் படைப்பாளனின் மனசை பரிசு கொடுப்பவர்களும் கொஞ்சம் பாருங்கள்..

உங்கள் பரிசுவழங்கும் தயாள குணத்தை வணங்கும் அதே நேரத்தில் படைப்பாளர்களின் எண்ணத்தையும் கொஞ்சம் பாருங்கள்..
















9 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பதிவைப் பற்றி சொல்வதானால், உங்கள் பாணியில் சொல்வதானால் நல்ல ‘சாட்டையடி’. காசு செலவு செய்து, இருக்கின்ற வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு டாக்சி பிடித்து வரும் பரிசு பெற்ற எழுத்தாளர்களூக்கு, கிடைப்பது என்னவோ, பெரும்பாலும் நினைவுப்பரிசு என்ற பெயரில், ஒரு பைபர் ஸ்டாண்டும், ஒரு துண்டும்தான். பணமுடிப்பு தந்து நான் கேள்விப் பட்டதில்லை.

      நீக்கு
  2. //இந்த சமூகத்தில் ஆசிரியர்களை காட்டிலும் படைப்பாளர் குறைந்தவர்கள் இல்லை..ஊதியத்திற்காக எந்த படைப்பாளரும் வீதியில் போராடுவதில்லை...

    ஒருசிலவற்றைத்தவிர எந்தக்குடும்பமும் படைப்பாளரை தூக்கிவைத்துக் கொண்டாடுவதுமில்லை..
    எல்லாம் தாண்டித்தான் எழுதுகிறார்கள்...
    நம் ஆதிச்சமூகமும் படைப்பாளரை ஆசிரியர் என்றே அழைத்திருக்கிறது..//

    சாட்டையடிப் பகிர்வு அண்ணா...
    உண்மைதான்... அவர்கள் பேர் வாங்க பொம்மைகளாக நிற்க வைத்து...

    திருந்தினால் சரி.

    பதிலளிநீக்கு
  3. யதார்த்தத்தைக் கூறிய விதம் அருமை. பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவரைப் பற்றிய பதிவினை விக்கிபீடியாவில் ஆரம்பிக்க நான் முயற்சி மேற்கொண்டபோது அவரை நேரில் சென்று புகைப்படம் எடுத்தேன். உரிய விவரங்களை நூல்களிலிருந்தும், இணைய தளத்திலிருந்தும் சேகரித்து நிறைவுறும் நிலையில் அவர் எனக்கு ஒரு நீண்ட தன் விவரக்குறிப்பினை அனுப்பி அனைத்தையும் சேர்க்கும்படி கூறினார். விக்கிபீடியா விதிகளின்படி மேற்கோள் இல்லாதனவவற்றை சேர்க்கமுடியாது என்று கூறியும் அவர் புரிந்துகொள்ளவில்லை. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நான் ரசித்த ஒன்று. பெற்ற விருதுகள் என்று ஒரு பட்டியலிட்டிருந்தார். எதிர்பார்க்கப்படும் விருது என்று அதன்கீழ் ஒரு பட்டியல் இருந்தது. அது என்ன என்று கேட்டபோது, எல்லாம் தயாராடுச்சி, இந்த வருடம் வந்துரும், முடிஞ்சா அதையும் சேத்துருப்பா என்றாரே பார்க்கலாம். அதிர்ந்துபோனேன்.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. நியாயமான ஆதங்கப்பதிவு.படைப்புக்களை அனுப்ப்புங்கள் பரிசு, குலுக்கள்,விமர்சனம் என்பதாவது பரவாயில்லை.

    விழா நடத்துகின்றோம் அதற்கு இவ்வளவு ஸ்பான்சரும் விளம்பரமும் கொடுத்தால் விருதும் பாராட்டும் அட்டைப்படமும் மேடையில் பல தடவை அறிவிப்பும் கூட கிடைக்கும் என்பது மிகக்கொடுமை. எழுத்தை விலை பேசும் இச்சமுகத்தில் நாம் போட்டி போட வேண்டுமா என ஒதுங்கிச்செல்லும் மன நிலையில் தான் நான் இருக்கின்றேன்.

    இன்றைக்கு பல புத்தகங்கள் வெளியிட்டிருப்போருக்கு தமிழை சரியாக பிழையில்லாமல் எழுதவே தெரியாத நிலை. இன்னும் சிலர் யாரோ எழுதியதை தான் எழுதியதாக வெளியிட்டு பேர் பெறுகின்றார்கள். இன்னும் சிலரோ புகழ் பெற்ற பிரபல்யங்களை தங்கள் நட்பில் இணைத்துக்கொண்டு அவர்கள் முதுகின் பின் மறைந்து கொண்டே தங்களை எழுத்தாளராக இனம் காட்டிக்கொள்கின்றார்கள்.

    இப்போதெல்லாம் விருது, விருந்து, பரிசு எனில் இதன் விலை என்னவாயிருக்கும் என தான் கேட்க தோன்றுகின்றது.ஒரு புத்தகம் வெளியிட்டு விட்டாலே தாங்களை யாரும் பிடிக்க முடியாது என நினைக்கும் பலர் இங்குண்டு.

    வசதியும் வாய்ப்பும், திறமையும் இருக்கும் பலர் இன்னும் தங்களை வெளிப்படுத்தாமல் தான் இருக்கின்றார்கள். நிறைகுடமெப்போதும் தளும்புவதில்லை என பலருக்கு புரிவதும் இல்லை.

    இலக்கியமெனும் பெயரில் இலட்சங்களை சீக்கிரம் சம்பாதிக்கசும் உடல் நோகாமல் இலாபம் காணவும் இலகு வழியாக போய் விட்டது. இலக்கியப்பற்று, தமிழார்வம் என தங்களை இனம் காட்டி நம்மை ஏமாற்றுவதை நாம் உணராதவரை எதுவும் சொல்வதற்கில்லை.

    என்னமோ நடக்கட்டும், நமக்கென்ன?

    பதிலளிநீக்கு
  6. //பொதுவான விளம்பரமாய் வாசகர்களுக்கு பிடித்த ,கவர்ந்த படைப்புகளை சொல்லச்சொல்லுங்கள்.// நல்ல ஆலோசனை.

    நமது சமூகம் எழுத்தாளர்களைக் கொண்டாடக்கூடியதாக இன்னும் உருவாகவில்லை. இது போன்ற விவாதங்களை முன்னெடுப்பது பல குறைகளைச் சரி செய்ய உதவும்.

    பதிலளிநீக்கு