ஞாயிறு, 29 அக்டோபர், 2017

செஞ்சாத்து ரேகைகள்...

பண்டைக் கானாடான இன்றைய புதுக்கோட்டை பெயரில் மட்டுமே புதுமையை வைத்துக்கொண்டிருந்தாலும்
தனக்குள்ளே  முதுமக்கள் தாழி போலவே வரலாற்றுச்சான்றுகளையும் வைத்திருப்பதை ஆராய்ச்சி வல்லுநர்கள் அவ்வப்போது அகிலத்துக்கு அறிவித்துக்கொண்டே இருக்கின்றார்கள்...

இந்த மாவட்டத்தின் பிள்ளையாக கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுகள் வாழ்ந்து திரிந்தாலும்..
குளத்தின் துணி துவைக்கும் ஒரு கல்லாய்த்தான் தெரிந்திருக்கும் கரடுமுரடான கல் ஒரு  அறிஞரின் முயற்சியால் திருப்பப்படுகையில் ஒரு அழகிய சிலையாக பூக்கும் போது பிரமிப்பாய் இருந்தது தான்...எனக்கும் வரலாற்றுக்கல்லுக்குமான ஞானமும்..அனுபவமும்...

வருடமொருமுறை நார்த்தாமலை திருவிழாவிற்காக நடந்து போகும் போது தலை இல்லாத சில சிலைகளை அடையாளங்களாய் கூறிக்கொள்வதுமுண்டு...

மிக எளிதாக சமாளிப்பதெனில் எப்பவும் நமக்கு அருகில் இருக்கும் பெருமைகளை எப்பவும் நாம் அறிந்துகொள்வதில்லை..

அரசின் உயர்பொறுப்புகளில் இம்மாவட்டத்திற்கு வரும் பலர் தம் பதவிக்காலங்களில்
கடமைக்காக ஊரை உயர்த்திப் பேசிவிட்டு பறந்துவிடும் அற்றகுளத்துப்
பறவைகளாகவே இருப்பது வாடிக்கை.,.
தத்தம் பொறுப்புகளின் சுமைகளால் அவர்களுக்கு அழுத்தம் மிகுந்திருப்பது காரணமாயிருந்தாலும்...

எல்லா விடியலும் புல்லினக் கூவலில் விடிந்தாலும் சில புலரல் விடிவெள்ளிகளாலும் நிகழ்ந்துவிடுவதுண்டு.

அப்படி ஒரு புதுக்காலையாய் விடிந்தது தான் இந்நூலாசிரியரின் புதுகை வரவும்..

ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் தலைவராய் முதன்மைக்கல்வி அலுவலராய் பொறுப்பேற்றாலும் ஆசிரியர்களையே நண்பர்களாய் மாற்றியது இவரின் புதுமை என்றால்...
புதுக்கோட்டையின் கல்வித்துறை வரலாற்றில் முதன்முறையாக ஐ.எஸ்.ஓ. என்னும் தரச்சான்றை முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு பெற்றுத்தந்து கணினி மயமாக்கியது மறக்கவும் மறுக்கவும் முடியாதது..

எண்ணில்லா தமிழ் மற்றும் சமூக அமைப்புகள் விரவிக்கிடந்த மாவட்டத்தில் மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் எந்த பெயரும் இல்லாமல் சந்தித்து தமிழ் குறித்தும் சமூகம் குறித்தும் பேசுவதை தொடங்கி வைத்ததும்..பின்னர் அது வீதி என்ற பெயருடன் தொடர்ந்து இயங்கிவருவதும் நாம் அறிந்ததே...

தலைமையும்,
பணப்பரிமாற்றங்களும் அல்லாமல்,படைப்புகள் மட்டுமே புழங்கும் ஒரு இடமாக அது இயங்குவது இன்னும் புதுமை...

பதவி உயர்வுகள் என்னும் படிக்கட்டில்  மாவட்டங்கள் மாறிப்போனாலும்...
அவரின் திண்ணிய படைப்பொன்று மாவட்ட மண் உள்ள அளவும் மறையாமல் இருக்கப்போவது பற்றித்தான் இந்த கட்டுரை..

"புதுக்கோட்டை மாவட்ட பாறை
ஓவியங்கள்.."

ஒரு கலைஞனின் பார்வையில் பூமியின் பரப்பில் பாறைகளே இயற்கையின் ஓவியங்கள் தான்..
சஞ்சீவி மலையை தூக்கிப்போன போது விழுந்த கதையாகத்தான் இருக்கிறது தமிழகத்தின் எல்லாப்பாறைகளும்.

இவரின் புதுக்கோட்டை நாள்கள்.. அவர் படித்த பண்டைத்தமிழ் நூல்களின் வழியே பெற்ற அறிவால், காணும் எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்ய வைத்திருக்கிறது..

சமண ஆராய்ச்சிக்கான சான்றுகளில் அதிகப்படியானது நம் மாவட்டத்தில் காணக்கிடைத்திருப்பது நம் பெருமையே...

காலங்களின் வகைகளை,பண்டைய மனிதனின் இனக்குழு காலத்தை மிகத்தெளிவான விளக்கங்களுடன் எழுதியிருப்பதும் தெளிவு..

திருமயம் கோட்டையும்,
சித்தன்னவாசலும் நாமறிந்த சிற்றுலாத்தளங்கள் தான் இந்த நூலை வாசிக்கும் வரை..

திருமயம் என்ற ஊரின் பெயர் எப்படியெல்லாம் வந்திருக்கலாம் என்ற ஊகங்களில் ஒரு தேர்ந்த வரலாற்றாசிரியரும் தமிழறிஞரும் பின்னிப்பிணைந்திருக்கிறார்கள்.

நாலுபுறமும் கல்கோட்டையாக ஒரு திருத்தலமாய் இருக்கும் பாறைகளின் மத்தியில் நூலாசிரியர் கண்டிருக்கும் ஓவியப்படிமங்கள் எத்தனை வெளிச்சங்களை பாய்ச்சியிருக்கிறது வரலாற்றுப் பக்கங்களில்..

சூரிய வெளிச்சம் பட்டுப் பட்டு மங்கலாகிப் போன தலைவியின் நடையும்..ஆயுதமேந்திய ஆணொருவன் பின் வர கடந்து முடிந்த தாய்வழிச்சமூகம் நமக்குள்ளும் நடக்கிறது..

ராகுல சாங்கித்தியன் வரைந்த நிஷா என்னும் உப கதையை இழுத்துவந்து ஒப்பிட்டுப்பார்த்து மகிழ்கையில் நமக்குள்ளும் ஒரு உண்டாட்டு நிகழ்வதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்..

மெய்யுறு புணர்ச்சிக்கான ஒரு ஓவியத்தை துணைகொண்டு பெண் தலைவியாய் இருந்திருக்கும் கால வயதை ஆராய்வதும் ஆச்சர்யமும் விந்தையும்..

ஓவியங்களின் வகைகள்..ஓவியத்துக்கான வண்ணங்களின் வகைகளில் இத்தனை நுணுக்கங்கள் இந்த நூலை வாசிக்கும் போது வியப்பாய் இருக்கிறது.

நூலாசிரியர் நானறிந்தவரை
பேசுவதைக்காட்டிலும் எழுத்தில் சேர்த்திருக்கும் நகைச்சுவை மேலும் ஆச்சர்யம்..
திருமய பெயராராய்ச்சியில் சொல்வதை நீங்களே கேளுங்கள்.  சிவமயம் ,ஒளிமயம்,தனியார்மயம்....

திருமயம்தான் இப்படி என்றால் சித்தன்ன வாசல் இன்னொரு படி மேலாய் இருக்கிறது.
சிலபடிகள் மேலேறிச்சென்றால் விதானத்தில் சற்றே தெளிவற்று இருக்கும் ஓவியங்களோடு திரும்பிவிடும் நமக்கு ஏழடிப்பாட்டத்தை காட்டுகிறார்...

சமணப்படுக்கைகளாகவே இருந்த அவைகளின் விதானத்துள் இருக்கும் ஓவியங்கள் ஒரு வேளை ஆராய்ச்சிக்கண்களுக்குதான் அகப்படும் போல..

கல்லெழுத்துகளை வாசித்தவர்கள் சொன்னதும்,
இவரின் கருத்தும் யோசிக்கவைப்பவை..

மாவட்டத்தின் மண்ணின் நிறம் எங்கெல்லாம் மாறியிருந்தாலும் ஓடோடிப்போய் வரலாற்றுக்கண்ணாடி வைத்துப்பார்த்த இவருக்கு எப்படி நன்றி சொல்ல..

சில வரலாறுகள் போலவே தொலைந்துபோயிருக்கும் ராங்கியத்தில் டாட்டன்ஹாம் கண்டுபிடித்த கல்லாயுதம் குறித்த இவரின் ஆவலும் சோகமும் நம்மையும் பற்றிக்கொள்கிறது..

குடுமியான்மலை ஓவியங்களின் காலத்தையும் ஓவியங்களின் நிறம் கொண்டு தெளிவாக்க முயல்வது நம்பக்கூடியதாய் இருக்கிறது..
உருவமென சிலருக்கு தெரிந்த ஓவியங்கள் இவருக்கு தாவரமாய் இருப்பதும் சரியாகத்தான் இருக்கும்..

மிகச்சிறிய புத்தகம் தான்..
ஆனால் இது அத்தனை வரலாற்றை பொதிந்து வைத்திருக்கிறது.

விலைமட்டுமே சற்று அதிகமாக தெரியும் இந்நூலில்...

இடங்கள் பற்றிய சரியான அடையாளம்...
கல்மரமாகும் கோலம், கைச்சாத்து வைத்திருக்கும் சகாப்தங்களின் ரேகையை வண்ணப் புகைப்படங்களில் வழவழப்பான காகிதத்தில் வாசிக்கையில்,
கண்கள் வாசித்துக்கொண்டிருக்கும் போது, மூளை நம்மை நியாண்டர்தால் மனிதனாக்கி விளையாட்டு செய்தாலும் தன்னையறியாமல் விரல்கள் பக்கங்களை தடவிக்கொண்டிருப்பதை மனசாட்சியுடன் ஒத்துக்கொள்கிறேன்..

நன்றியும் வாழ்த்துகளும் இணைந்த வணக்கங்கள்
முனைவர்.நா.அருள்முருகன் அய்யா...








4 கருத்துகள்:

  1. ஐயா அவர்களின தேடல் போற்றுதலுக்கு உரியது

    பதிலளிநீக்கு
  2. முனைவர்.நா.அருள்முருகன் ஐயா அவர்களுக்கு எனது வாழ்த்துகளும் பகிர்ந்த கவிஞருக்கு நன்றியும் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு அறிமுகம். வாங்கிப் படிக்கத் தூண்டும் அறிமுகம். நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  4. முனைவர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்...

    பதிலளிநீக்கு