ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

விமர்சனக்கோடரிகள்...

அன்பின் சக்திக்கு,

உலகப்புத்தக தினம் கடந்து எழுதுகிறேன். உனக்கு வாசிப்பைப்பற்றி எதுவும் சொல்லவேண்டியது இல்லை தான்.

ஆனால் எழுதுவதைப்பற்றி பல்வேறு விமர்சனங்கள் ஒரு மனிதனை எப்படியெல்லாம் பாதித்துவிடுகிறது என்பதை கேள்விப்படும் போது மனசு கனத்துப்போகிறது.

ஒவ்வொருவருக்கும் தன் அனுபவங்களை,ஆசைகளை பதிவு செய்துவிட வேண்டும் என்ற ஆசையிருக்கும்.

சிலர் வாய்மொழியாக பதிவு
செய்துவிடுவார்கள்.
சிலருக்கு மட்டுமே எழுத்தில் செய்ய இயலும்.

நாட்குறிப்புகளிலும்,நோட்டுகளிலும் எழுதிவைத்துவிட்டு செத்துப்போனவர்களோடு சேர்த்து எரித்ததையும் பார்த்திருக்கிறேன்.

வெகு சிலரிலும் சிலருக்கே தன் எழுத்துகளை பலரின் பார்வைக்கு கொண்டுசெல்லும் வாய்ப்பு அமைகிறது.

கட்டுரைகளாக,படங்களாக,
கவிதைகளாக வடிக்கிறார்கள்.

தன்னுடைய பதிவுகளை பலரும் படிக்கிறார்கள் என்ற உணர்வு எல்லாருக்கும்
இருக்கத்தான் செய்யும்.
எல்லாருக்கும் பிடித்தது போல எழுத நினைப்பதும் சகஜம் தான்.
ஆனால் அது அமைவது வரம்.

பதிவுகளில்  கட்டுரைகளை விட்டுவிடலாம்.
கவிதை எழுதுவோர் படும்பாடு ரொம்பசிரமம்.

அவர்களுக்கு தெரிந்த வார்த்தைகளில் தான் எழுதமுடியும்.
வாசிப்புக்கும்,
உள்வாங்கியதற்கும் உள்ள தொடர்பே கவிதையின் கனம்..

மரபுக்கவிதையில் எழுதுவார்களெனில்,
புதுக்கவிதை எழுதுவோர் புருவமுயர்த்தி பரிகசிப்பதும்,
புதுக்கவிதையெனில் நவீனத்துவம் இல்லையென நகைப்பதும்....

வார்த்தகளின் கால்களை உடைத்து அடுக்கிவைத்திருப்பது கவியா என கண்டனங்கள்...

வரிகளை கொண்டாடும் சிலரின் ரசனை குறித்தும் எள்ளல்..

குழுவாய் தாக்கும் கொடூரம்.

பரிதாபம் சக்தி.

நான் கவிதைகளை பிரித்துப்பார்ப்பதில்லை.
மரபுக்குள் அமைந்து மனசைக்கொள்ளை கொண்ட கவிதைகள் உண்டு.
ஆயிரம் முறை படித்தாலும் விளங்காத நவீன கவிதைகளும் உண்டு.

எழுதுவது கவிஞனின் உரிமை எனில்,வாசிப்பதும் ரசிப்பதும் சுவைப்பவனின் உரிமை.

அன்பின் கவிஞர்களே..
நீங்கள் இமயமாய் வளர்ந்தவர்கள் தான்.
எழுதும் எல்லாரையும் உங்களோடு ஒப்பிட்டு,எழுத ஆரம்பிக்கும் விரல்களை உடைத்து விடாதீர்கள்.
உங்களின் விமர்சன கூரிய நகங்களால் புதிதாய் வருபவர்கள் காயப்பட்டுப்போகிறார்கள்.
சில கோழை மனங்கள் உயிர் உருகியதையும் அறிகிறோம்.

காமுறும் இந்த இதயத்தை வைத்துக்கொண்டா கவிதைகள் எழுதிக்
கொண்டிருக்கின்றீர்கள்?

பாமரனும் புரிந்து கொள்ளும் வரிகள்!
என்ன நினைக்கின்றோமோ
அதன் சூடு குறையாமல் சொல்லிவிடும் வார்த்தைகள்!
வாசிப்புக்கு வெறுப்பு வந்துவிடாத நீளம்!
கடைசிவரை காணும் கண்களுக்கு முடிவில் கொஞ்சம் ஆச்சர்யம்!

அது காதலானாலும்,கருமாதியானாலும்
சமூகத்தைப்பற்றிய சிறிய சிந்தனையேனும்..!!!

என் வரிகளின் இலக்கணமாய் இதைத்தான் கொண்டிருக்கிறேன்.

வாசித்து சிலாகிக்கும் சில நட்புகள் இருக்கின்றன சக்தி...

கவிதையோ இல்லையோ..
ஆனால் ,கண்டிப்பாய் அது நான்...

எழுதுவேன்.

அன்புடன்,
செல்வக்குமார்.

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

ஏற்றுக்கொள்கிறோம்..

அன்பின் சக்திக்கு,
நல்லவர் யாரெனத்தெரியாமல் வாக்களிக்க யோசித்துக்கொண்டிருக்கும் வேளை.
சூரியப்புயலென எரிக்கும் சாலைகளில் வண்டியென இழுத்துப்போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கை.
நட்சத்திரப்பந்தாட்டம் நாசமாய்ப்போனதற்கு
தமிழக மக்களை பொறுப்பாக்கி இருப்பதாய் வாசித்தேன்.
தலைநிமிர்ந்தே ஏற்றுக்கொள்ளலாம்.

எந்த மதத்திலும்,நாட்டிலும் இல்லாத அளவில் நம் நாடு கலை மட்டுமன்றி,கடவுளர்கள் கூட கலையோடு இணைந்தே இருக்கிறார்கள்.
நடனமாடும் நடராஜரும்,இசைக்கும் வாணியும்,துந்துபிக்கும் ஒரு கடவுளும் என வடித்திருக்கிறோம்.
ஒரு காவியத்தின் வில்லனான இராவணனும் இசையின் அரசனாகவே இயற்றப்பட்டிருக்கிறான்.
தாலாட்டில் தொடங்கி ஒப்பாரியில் முடியும் வரலாறு நமக்குண்டு.

நம் வரலாறுகளிலும் கலைகளை மதித்தவர்கள் நாம்.
கலைஞர்களையும்,நடிகர்களையும் நம்மைத்தவிர யாரும் இப்படி உயர்த்திப்பிடித்ததில்லை.
நடிகர்களும் சாதாரணமாய் இருந்ததில்லை.
தமிழக நாடகக்கலையின் தந்தை எனப் போற்றப்படும் சுவாமி சங்கரதாஸ் அவர்களின் தொண்டு அளப்பறியது.
இந்திய சுதந்திரப்போராட்ட காலங்களில் பாஸ்கரதாஸின் பாடல்களில் வெள்ளைக்கொக்கை விரட்டியதை விடுத்து வரலாறு எழுத முடியாது.
முருகனாய் நடித்தாலும் சுதந்திரமயில் வேண்டிய விஸ்வநாத தாஸ் விடுத்த உயிர் கூட விடுதலைப்போராட்ட விதைதான்.
கொடுமுடி தந்த மகள் கே.பி.சுந்தராம்பாள் சாப்பிடும் தங்கத்தட்டை மகாத்மாவிடம் கொடுத்ததை காலம் மறக்காது.
ஈரோட்டுப் பெரியாரின் கருத்துக்களை பட்டிதொட்டியெங்கும் நாடகங்களில் பரப்பிய எம்.ஆர்.ராதாவும் சமூகப்போராளி தான்.
வரலாறு இன்னும் எத்தனையோ கலைஞர்களை பொதிந்து வைத்திருக்கிறது.
விடுதலைக்குப்பின் இந்தியாவின் போர் காலத்தில் சண்டை நடக்கும் இடத்துக்கே சென்று நிகழ்ச்சியின் மூலம் நிதியும்,சொந்த நகைகளையும் அள்ளித்தந்து நெகிழ வைத்தவர்கள் நம் கலைஞர்கள்.
கட்டபொம்மனும்,வ.உ.சி யுமாய் வாழ்ந்து காட்டியவர்கள் நமது நடிகர்கள்.
யார் இல்லையெனச்சொல்வது?

நன்றி மறந்தவர்கள் நாமல்ல.
எந்த நாட்டிலும் இல்லாத முறையில் கலைஞர்களின் கையில் செங்கோலை கொடுத்துவிட்டு அழகு பார்த்தவர்கள் நாம் தான். ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்ககாசு தந்ததாய் ஒப்புக்கொண்டவர்களும் நீங்கள் தான்.

நடிகர்களின் கைகளில் ஆட்சியைக்கொடுத்துவிட்டதற்காய் வரலாறு கேலிசெய்தாலும் சுரணையற்றுப்போய்த்தான் இருந்தோம்.

காமராஜரும்,பக்தவச்சலமும்,குமாரசாமி ராஜாவும்,கக்கனும்,இராமையாவுமென ரத்தினங்கள் மின்னிக்கொண்டிருந்த தமிழக அரசியலை உங்கள் கரங்களில் கொடுத்ததை விடவா இன்னும் எதிர்பார்க்கின்றீர்கள் நீங்கள்?

எதை விதைக்கின்றீர்களோ..
அதையே அறுவடை செய்வீர்கள்.

இந்த நாட்டில் உங்கள் சங்கங்களை விட மிகப்பெரிய சங்கங்கள் இல்லாமையில் இருந்தாலும் மிக அமைதியாக செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
ரயில்வே ஊழியர் சங்கம்,காப்பீட்டு ஊழியர் சங்கம்,வங்கி ஊழியர் சங்கமென பல இருக்கிறது.
எனக்குத்தெரிந்து இந்த சங்கங்கள் தங்களுக்குள் உதவுவதை விட சமூகத்துக்கு உதவுவது அதிகம்.
சமீபத்தில் பலியான சங்கரின் மனைவி கவுசல்யாவின் கல்விச்செலவை காப்பீட்டு ஊழியர் சங்கம் ஏற்றிருக்கிறது.
நலிந்த கலைஞர்களுக்கு உதவுவதாய் சொல்வதை விட என்ன சாதித்துவிட்டீர்கள் சமூகத்துக்கு?

ஊடகங்களின் மூலம் உங்கள் தேர்தல் பரப்புரையை பார்த்துக்கொண்டுதான் இருந்தோம்.
மக்கள் பிரச்சனையை அரசு பார்த்துக்கொள்ளும் என்றீர்கள்.
கணக்கு வழக்குகளுக்காய் நீதிமன்றம் சென்றீர்கள்.
அது உங்கள் பாடு.

இந்த நாட்டில் வருமான வரி பாக்கியில் நீங்களே அதிகமிருப்பதாய் செய்திகள் உண்டு.

எதற்காக இன்னும் மக்கள் பணம்?
திருடியும் பால் எடுத்து உங்கள் படமிட்ட அட்டைக்கு ஊற்றும் எங்களை இன்னும் ஏன்?
உங்களுக்கென கட்டடமும் ,நீச்சல் குளமும் வேண்டுமானால் எத்தனை நிகழ்ச்சி வேண்டுமானாலும் நடத்துங்கள்.
அழைக்கும் உங்களுக்கு இருக்கும் அதே உரிமை,உங்கள் நடிப்பை எடுத்துச்சொல்ல தமிழகத்துக்கும் இருக்கிறது.
தமிழகம் உங்கள் விளையாட்டு மைதானமாய்த்தான் எப்போதும் இருக்கவேண்டுமா?
எங்கள் இளைஞர் கூட்டம் இன்னுமா உங்கள் சிகை அலங்காரங்களில் சிக்கிக்கொண்டு சீரழிய வேண்டும்?

மைதானம் நிறையாததற்கு தமிழக மக்களே பொறுப்பாம்.

வாருங்கள் என் தமிழகமே, ஏற்றுக்கொள்வோம்.

ஆனால், இப்படியே பேசிக்கொண்டிருந்தால் அந்த மைதானம் போலவே அரங்கங்களும் காலியாகப்போகுமானால் அதற்கு தமிழகம் பொறுப்பல்ல.
உங்கள் வார்த்தைகளும்,நடத்தையும் தான்.

அன்புடன்,
செல்வக்குமார்.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

கூழாங்கற்கள்...என் பார்வைப்படுகையில்..

தண்ணீர்
செதுக்கிய
சிற்பங்கள்.

ஆற்றுக்காரியின்
ஆயிரம் கண்கள்.

கனவுப்பிரியனும்
நெஞ்சப்படுகையில்
கூழாங்கற்கள்
பொறுக்கி..
ஞாபக நதிகளில்
எறிந்திருக்கிறார்.

சிந்தனைச்
சிற்பங்களுக்கு
சிறுகதை
என்னும்
சிற்றாடை கட்டி
விளையாட
வைத்திருக்கிறார்.

சில இடங்களில்
சினிமாக்காரிகளின்
சிறிய ஆடையாய்
அது
மாறியிருப்பதை
மறுப்பதற்கில்லை.

பாம்பு பிடிக்கும்
கதையில் தொடங்கி
வர்மப்பிடி நடக்கும்
கதையில்
முடித்திருக்கிறார்.

மர்மங்கள்
அதிகமில்லை...
அந்த குறையை
தர்மங்கள்
நிறைந்து
தீர்த்து வைக்கின்றன.

கதைமாந்தர்
பெயர்களின்
கவனம் தெரிகிறது.

கல்மனம்
கொண்டவனுக்கு
செங்கராஜ்...

மற்ற கதைகளின்
கதாநாயகனாய்
கனவுப்பிரியனே
உட்கார்ந்து
கொள்கிறார்.

பிஞ்சுக்கால்கள்
மிதித்து..
களத்தில்
களிமண் வீடுகட்டி..

கதை முடித்துவிட்டு
கடந்து
போய்விடுகிறார்.
சாரலென.

பெருமழைக்கும்
பெயராத
பெருவீடாய்
மனசுக்குள்
வளர்ந்துவிட்ட
மாயத்தை
என்ன சொல்ல.?

அருவருத்த
குண்டு பாகிஸ்தானியின்
உதவிகளில்
நாமும்
நடனமாடலாம்
மணல் தேறிகளில்.
அவனிருந்த
இருக்கையில்
ஒரு
மலையாளியை
வைத்து முடிப்பது..
கொலைவாளினும்
கூரான
அங்கதம்.

ஆடு வளர்த்த வடிவு.

மச்சினிக்கு கிடைத்ததா
அழகுவிலாஸ்
கருப்பட்டி மிட்டாய்.

உப்பளத்து
தட்டாம்பூச்சி.

ஊர்ப்புறத்து
பெட்ரோமாக்ஸ்.

உருமாறும்
பனங்கொட்டை.

உள்ளம் விரும்பும்
குத்தாட்டம்.

மட்டைப்பந்தின்
தப்பாட்டம்.

அயலக
வேலையெனில்
அள்ளுக்கிறார்
பணத்தை
என்போம்.

தள்ளும்
இளமையை,
கொல்லும்
தனிமையை,

கொண்டவன்
ஒட்டகத்தோடு காய..
உள்ளூரில்
அவள் பாடு..

ஒரு
ஈ மெயிலென
டெலிட்
செய்துவிட்டு
கடந்துவிட
முடியவில்லை.

விக்கிரமன்
படங்களென
நான்கு பக்கங்களில்
வளர்ந்து விடுகிறது
வாழ்க்கை.

மத்திய
கிழக்காசியாவின்
அமீரகங்கள்.

தேம்ஸ் நதியிலும்
பயணிக்கும்
கதைப்படகு..

துருக்கியின்
இஸ்தான்புல்..

சத்தமில்லாமல்
சங்கர் படம்
பார்த்த நிறைவு..

போதைகடத்தல்,
இயந்திரங்கள்
திருடுதல்.
சாமர்த்தியமாய்
சம்பாதிக்கும்
மதிப்பெண்கள்.

ஒரு
புத்தகத்துக்குள் தான்
எத்தனை
படங்கள்.

சிறுகதையின்
சீரிய இலக்கணங்கள்..

சிரிக்காதீர்கள்.
எனக்கும்
தெரியாது.

நான்
வாசித்த உணர்வை
மட்டுமே
வார்த்தைகளில்
தருகிறேன்.

கனவுப்பிரியனின்
கதைகளை
நான்
கதைகளாகப்
பார்க்கவில்லை.

கடல்கடந்து
பேய்
போகாதென்பார்கள்.

எத்தனை
கடல் கடந்தும்
மூளையின்
மூலையில்
சிலும்பிக்கொண்டே
இருக்கும்
சின்னவயசுக்
கனவுகள்
ஒருபோதும்
உறங்காது.

அரபிப்பெண்களின்
கல்லூரி என்றாலும்,

பாலஸ்தீனனின்
வேலைக்கூடம்
என்றாலும்,

நெற்றித்தழும்பை
தடவுமிடம்
என்றாலும்..

அப்பாவுக்கு
பார்த்த பெண்
தன்னைப்பார்த்தழும்
கொழும்பாய்
இருந்தாலும்,

வந்து வந்து
குந்திக்கொள்கிறது.

சொந்த ஊர்
நினைவுகள்.

சந்தித்த
மனிதர்களின்
கதையை
சிந்தித்து
எழுதி
இருப்பதாய்த்தான்
உணர்கிறேன்.

கதையென்ன?
கருத்தென்ன?
கண்டனங்கள்
சொல்வோர்கள்
கடைசிவரிசைக்கு
போய்விடுங்கள்.

அடுத்தவர்
டயரி
வாசிப்பதில்
ஆனந்தமடைபவர்
நீங்களெனில்
வாருங்கள்..

கூழாங்கற்களை
பட்டைதீட்டிய
கனவுப்பிரியனின்
கரங்கள் பிடித்து
முத்தம் தரலாம்..

தடையொன்றுமில்லை
சபாஷ்
எனும்
சத்தம் கூட
வரலாம்..

வியாழன், 14 ஏப்ரல், 2016

ஒற்றைக்கேள்வி..

வாக்களிக்கப்
போகிறேன்

மிகுந்த
யோசனையுடன்
எடுத்த
முடிவு
ஒற்றைக்கேள்வியில்
நிற்கிறது.

முன்னால்
நான்
வாக்களித்தவர்கள்.
வந்ததேயில்லை
மீண்டும்
எங்கள் வீதியில்.

வீட்டை விற்று
வென்றார்கள்.
பங்களாக்கள்
பல உண்டு
இப்போது.

சாதியினர்
அதிகமென்று..
வாய்ப்பு வாங்கி
வென்றவர்,
கட்சியை
மாற்றி
மீண்டுமொருமுறை
நின்றார்.

செத்தவர்
பட்டியல்

உறவின்முறை
விவரங்கள்..

உள்ளூர்
எதிர்ப்பாளர்கள்..

அடுத்தகட்சியில்
அன்பாய்
இருப்பவர்கள்.

செலவுக்கு
எவ்வளவு..

யார்
காலில்
விழவேண்டும்.

உண்மையிலேயா
இவர்கள்
கூட்டணி தானா.

எவரோ 
ஒருவர்
வெல்லப்போகும்
போட்டியில்
எல்லாரும்
சிந்திக்கிறார்கள்.

அப்படியொன்றும்
நல்லபெயர்
ஒன்றுமில்லை
நாட்டுக்குள்
இவர்களுக்கு.

நல்லது
செய்வார்
என்ற
நம்பிக்கையும்
எவர்க்குமில்லை..

இருந்தும்,
அத்தனை
கர்வமாய்..
ஆர்வமாய்.

களமாடும்
இவர்களை
கவுரவிக்கத்தான்
வேண்டும்
வாக்களித்து.

யாருக்கு
என்பது தான்
அந்த
ஒற்றைக்கேள்வி.


செவ்வாய், 12 ஏப்ரல், 2016

அழுகையா வருதுங்க...

ஒரு சிறிய இடைவெளி தேவைப்பட்டது..
வாசிப்பில் மூழ்கிவிட்டதாய் பொய் சொல்லி தப்பமுடியவில்லை.

அரசியல்,நடைமுறைச்
செய்திகள் மிகுந்த சோர்வினைத்தான் தந்து கொண்டிருக்கின்றன..

நகர்த்திக்கொண்டிருக்கும் நாட்களின் அழுத்தத்தில் பதிவுகள் என்னும் மிதவைகள் தான் சற்றேனும் நிம்மதி..

காதுகளுக்கும்,கண்களுக்கும் வந்துசேரும் செய்திகள் மன அழுத்தம் தவிர யாதொன்றும் தருவதாயில்லை..

உற்சாகமாய் இருப்பதாய் எல்லாரும் நடித்துக்கொண்டிருப்பதயே அறிகிறேன்..
அவரவர் சுமக்கும் அளவினைத் தாண்டியே சுமந்துகொண்டிருக்கிறார்கள் கவலை மூட்டைகளை..

செல்பி எடுப்பவர்கள் எல்லாம் சந்தோசமாய் இருப்பதாய் ஏமாந்து போகாதீர்கள்.

முகப்புத்தகங்களும்,
இணையமும் இல்லையெனில் பலர் பைத்தியமாகி இருப்பார்கள்.

காலை விடியாத வேளையில் ஊரே நடந்து கொண்டிருக்கிறது..

காய்கறிக்கடை என்றாலும்,கறிக்கடை என்றாலும் நீண்டே இருக்கிறது வரிசை..

பள்ளிக்கட்டடங்கள் வளர்வது போல் மருத்துவமனைகளும் பெருத்துக்கொண்டுதான் இருக்கிறது..

காத்திருப்பின்றி காணமுடிவதில்லை..கடவுளைக்கூட..

அத்தனை பேருந்துகளும் நிறைமாதக்கர்ப்பினியாகத்தான் விரைகின்றன...

முப்பதுவருடங்கள் குடிப்பவன் இன்னும் சாலையில் விழுந்து கிடக்கிறான்...

முப்பது வயது நிறையாதவன் மூச்சடைத்து சாகிறான்..

ஒற்றையாய் சாகும் மனிதனின் செய்திகளை ஊடகம் விரும்புவதில்லை...கொத்துக்கொத்தாய் சாகுமிடங்களில் கூடிவிடுகிறார்கள்..

பிழைக்கவைக்க வேண்டி கோவிலுக்குப்போனவர்கள் குவியலாய்ச்செத்தால் ,
கோவிலுக்குள் இருப்பதை என்ன பெயர் சொல்லி அழைப்பது?

எங்கே நடக்கிறது மாற்றம்?
ஆட்சியின் மாற்றம் புதிய தலைமுறையால் வந்துவிடலாம் என்கிறது புள்ளிவிவரங்கள்..

சுதந்திரம் கிடைத்த இத்தனை வருடங்களுக்கும் தேவைப்படுகிறது வாக்களிக்க கெஞ்சும் விழிப்புணர்வுகள்..

ஒரு மாய உலகில்,
எல்லாக்குற்றங்களும் கண்ணுக்குத்தெரிந்தே நடக்க கையாலாகாத வாழ்க்கை தான் வாய்த்திருக்கிறது என்னைப்போன்றோர்க்கு..

ஒரு மவுனமான வேளையில் மனசு தடதடக்கிறது..

ஒரு செல்போன் எத்தனை உயரிய பிராண்டாக இருந்தாலும் அதன் அடக்கம் 200 ரூபாயிலிருந்து 1000க்குள் தான் இருக்குமாம்...
சர்வ சாதாரணமாக 10000 ல் தொடங்கி 70000 வரை விற்றுத்தீர்க்கிறார்கள்..

மொத்தவிலையில் 15 ரூபாய்க்குள் வாங்கும் வீட்டுக்கான டைல்களின் விலையை 40க்கு குறையாமல் விற்கும் மனநிலையை என்ன சொல்லி அழுவது?

பணம்..பணம் என்னும் காகிதம் தேடி ஆன்மாவை கறையாக்கும் முயற்சிதான் நடந்துகொண்டிருக்கிறது..

சிகரெட் ஆபத்தென்றாலும்..
மக்களின் மனோநிலையை காசாக்கத்தான் நினைக்கிறார்கள் ஒருபோதும் ஏற்றிய விலையை இறக்குவதில்லை..

விடியலில் தொடங்கும் நாள் நள்ளிரவு தாண்டித்தான் முடிகிறது..

எழுத ஆயிரம் வந்து சேர்கிறது..
எழுத உட்கார்ந்தால் தான் அழுகை வருகிறது..


புதன், 6 ஏப்ரல், 2016

பேசிட்டுதான் இருக்கோம்..

பஞ்சு தின்ற
பொம்மையொன்றின்
நூல்
பிரிந்து
பறக்கிறது.

பிடுங்கிப்
படிக்கும்
வார
இதழொன்று
வளர்கிறது
வாசிக்காமலே..

தரவிரக்கிய
விளையாட்டொன்று
அவள்
வென்ற
புள்ளிகளோடு
நின்றுபோனது..

சீனக்களி
உருவமொன்று
தலைசிதைந்து
படுத்திருக்கிறது.

டேய்
எனும்
எதிரொலி
இப்போதும்
கேட்கிறது.

ஒலிம்பிக்கின்
பதக்கமென
காற்றாடிக்
கொண்டிருக்கின்றன..
அவள்
பள்ளிகளின்
அடையாள
அட்டைகள்.

தெர்மாகோல்
சித்திரங்கள்..

பிதுக்கிக்
கோடிழுத்த
பற்பசை
ரேகைகள்..

ஒருநாள்
ஓட்டிய
மிதிவண்டி.

ஒற்றை ரொட்டி
மீதம் வைத்த
நீல உறை..

நள்ளிரவு
விளக்கெரித்து
ஓடவிடுகின்றேன்
ஞாபகப்படங்களை..

எல்லாம்
படித்தவள்
எங்கிருந்து
சினம்
கற்றாள்?

பொல்லாக்
கோபம்
என் மேல்...

குரல்
மறைத்து
ஓடுகிறாள்..

அடுத்தடுத்த
அலைபேசி
மணியடித்தும்
எடுத்தாளில்லை..

நாங்கள்
பேசிக்கொள்வதில்லை
என
சட்டென
முடிவெடுக்காதீர்கள்..

அலைபேசி
வழிதான்
பேசவேண்டும்
என்பதில்லை..

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

கனம் சமூகத்துக்கு,

இந்த நாட்டில் அப்படி ஒரு மாற்றம் எப்படி வந்தது?

நீதி வளைந்ததாய் மக்கள் முணுமுணுக்க தொடங்கியவுடன் பதறிதுடித்து எழுகிறது..

இடை நீக்கம்..இன்ன பிற....

மக்கள் மனதில் பெருமூச்சு..
ஆஹா நீதிவென்றுவிட்டது..
தர்மம் நிலைத்துவிட்டது.!

அப்படி நடந்திருந்தால் ஒரு பெருமழையை எதிர்பார்க்கலாம்.

ஒவ்வொரு செய்திக்கும் பின்னிருக்கும் அரசியல் ,என்னை அப்படிப்பார்க்க வைக்க மறுக்கிறது..

பல மாதங்கள் ராத்திரி பகலாய் சுடுகாடுகளிலும் உறங்கி ஆயிரக்கணக்கான பக்கங்களில் தரும் அறிக்கைகள் குற்றவாளிகளுக்கு தண்டனை தரும் என்று எதிர்பார்க்க,,
சில பக்கங்களில் தீர்ப்பளித்து திகில் தருபவர் பின்விளைவுகள் தெரியாமலா கொடுத்திருப்பார்...?

தெள்ளத்தெளிவாய் குற்றங்கள் பார்வையில் பட,
வழக்குத்தொடுத்த அதிகாரிக்கு ஆட்சேபம் என்றால்,
இனி யார் அவற்றை கையில் எடுப்பார்.?

மாண்பமை நீதியின் தலைவர்களின் இந்த வேகம் கு.சாமிகளுக்கு எதிராய் ஏன் இல்லை?

"படித்தவன் சூதும் வாதும் செய்தால்
போவான் போவான்
அய்யோவென
போவான்"

இடைநீக்கம் என்பது என்ன அரைச்சம்பள ஓய்வுதானே?

தீர்ப்பளித்த நாட்டாமை மீது ஒரு சந்தேகமும் இல்லை..
அவர் மென்ற வெற்றிலைக்கு வேலை செய்துவிட்டார்...

யாரை திசைமாற்ற இந்த யோசனை?
தீர்ப்பு தவறெனில் விடுதலை ரத்து எப்போது?

அடிப்பவர்களே..மருந்து பூசுகிறார்கள்..

அய்யா..கனம் சமூகமே!

"வரப்புப் பிரச்சனைக்காக
வழக்குமன்றம்
போனார்கள்.
தீர்ப்பு வரும் போது
வயல்
காணாமல்
போயிருந்தது"

நகைச்சுவையாய் தெரிந்தாலும்,
மன்றங்களைப்பற்றிய அவலச்சுவை இப்படித்தான் இருக்கிறது மக்களிடம்.

ஓட்டையான சட்டங்களில் திமிங்கிலங்கள் தப்பிக்க,
சிறுபறவைகள் சிக்கிக்கொள்கின்றன.

உங்கள் வாதங்களில் உங்களுக்கு பெருமையிருக்கலாம்..
மக்கள் மத்தியில்  இல்லை தெரியுமா?

மானம், அவமானங்களும்,
கேலிகளுக்கும் மனதை அடகுவைத்து எப்படியும் வாழலாம் எனில் ஏனிந்த நாட்டில் இத்தனை சட்டங்கள்?

பதவிகளை மறந்து ஒருநிமிடம்,
இந்த மண்ணின் குழந்தையாய் கண்ணில் நிறுத்திப்பாருங்கள்..

குற்றங்களும்,விளைவுகளும் விளங்கிக்கொள்ள முடியாததா?

ஊடகங்களின் காலம்...

கேடுகெட்ட அரசியல்வாதிகளை,
மனசாட்சி கொன்ற மருத்துவர்களை, நடிகர்களை,
சமூக கேடுகளை,
இணையத்திரைகளில்
துகிலுரித்து,தோலுரித்து, தொங்கவிடும் மக்கள், இப்போதெல்லாம் உங்களையும் அந்த வரிசையில் சேர்க்கிறார்கள்
என்பது உங்களுக்கு வேண்டுமானால் ஒன்றுமில்லாததாய் இருக்கலாம்..
எனக்கு வலிக்கிறது...
,