ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

புதிதாய் பிறந்தேன்....

”மனுசங்க...என்னமா எழுதியிருக்காங்க...எத்தனை பக்கங்கள்..எவ்வளவு தகவல்கள்... என்ன நடை...விறுவிறுப்பு...
சனியன் ...தூங்க விட மாட்டேங்குதே....

சென்னையில் என்னை மோதின......!

எத்தனை கண்டங்கள் என டீச்சர் கேட்ட பொழுது ஏழு என்று  ஈஸியாக சொல்லிவிட்டேன் பள்ளி நாட்களில். நாஸா குறைந்தது வருடத்திற்கு ஒரு கண்டமேனும் கண்டுபிடிப்பதாக அறிந்து கொள்கிறேன்........
          அவையெல்லாம் தயவுசெய்து சாதனைகளின் பட்டியலில் சேர்க்காதீர்கள்.....
         எனக்கெல்லாம் வாழ்நாள் முழுவதும் கண்டங்கள் தாண்டுவதே நித்யானுபவம்......
         ஏழு கடல்,ஏழுமலை,ஏழு கண்டங்கள் தாண்டியிருக்கும் ஒரு பூவைப்பறிக்க என்னிடம் நீங்கள் என்னிடம் கூறினால் நானெல்லாம் அப்படிப்பட்ட பூக்களால் ஒரு மாலையே செய்து தினந்தோறும் உங்கள் பாதாரவிந்தங்களில் சம்ர்ப்பிப்பேன்.

சிறிதுமில்லாத, பெரிதுமில்லாத ஒரு சாலையின் மேல் தான் வீடு இருக்கிறது.
எப்போதும் சாலையை எளிதாய் கடக்க முடிவதில்லை.
இந்த மனிதர்கள் ஏன் இப்படிப் பறக்கிறார்கள்?
காலை ஏழுமணிக்கும் இப்படித்தான் இருக்கிறது..
இரவு இரண்டு மணிக்கும் இப்படித்தான் இடம்பெயர்கிறார்கள்.
இவர்களின் வேகத்தில் பயணித்தால் முருகனெல்லாம் உலகத்தை சுற்றும் போட்டியில் மூன்றாமிடம் கூட பிடிக்க முடியாது.

இவர்கள் சாலையை கடக்கும் லாவகமும், கிடைக்கும் சந்துகளில் சீறிப்பாயும் வேகமும்,
இந்தியா முன்னேற 2020 எல்லாம் தேவைப்படாது.

நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வையுள்ள நாய்களைக்கூட(எந்த பூடகமுமில்லை)இங்கே தான் பார்க்கிறேன்.

தாயின் நினைவிலேயே நாளெல்லாம் வாழும் மாந்தர்.
எந்த வார்த்தை பேசும் முன்பும் தாயின் மறுபெயர் சொல்லியே ஆரம்பிக்கின்றனர்.

ஒரு மொழி விளங்காத தேசத்தில் பாஸ்போர்ட் தொலைத்தவனாய் நடந்து கொண்டிருக்கின்றேன் சாலையில்..
விரையும் கார்கள்..
ஆணும் பெண்ணுமாய் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் சாகசம் செய்யும் மோட்டார் வாகனங்கள்..
சரிக்குசரி மல்லுகட்டும் மாநகரப்பேருந்துகள்...

ஒருவேளை இங்கு வந்துதான் நான் ஓட்டுனர் உரிமம் எடுக்க வேண்டி இருந்திருக்குமெனில்.
எனக்கு வாழ்நாள் முழுவதும் வாகனப்பிராப்தம் வாய்த்திருக்காது.

மிகக்கவனமாகத்தான் நடக்கிறேன்.
சர்க்கஸ் காட்சிகளில் வலையிலிருந்து மேழெலும் சாகசக்காரியென உச்சந்தலையில் கால்களை அழுத்தி பறந்து போகிறது ஒரு காகம்.
மேலே பார்க்கிறேன்.
சாந்தமாய் மின்கம்பியில் அமர்ந்து என்னைப்பார்த்து சிரிக்கிறது.

அட..அற்பப் பறவையே.. உனக்கு அவ்வளவு திமிரா?
மனிதனென்றும் பாராமல் இது என்ன விளையாட்டு?

நான் பாரதியுமில்லை..
நீ என் ஜாதியுமில்லை...

இன்னொரு முறை இப்படி செய்தால்.. தொலைத்துவிடுவேன் ஜாக்கிரதை..

பத்தடி நடந்திருப்பேன்...

இந்தமுறை மிக அழுத்தமாக கால்களை அழுத்திவிட்டு பறந்து போகிறது அதே காகம்.

ஒன்னும் புடுங்க முடியாது... இது சென்னையின் காகம்..


சரி வாங்க  பார்ப்போம்..

இனி சாலைகளில் நடக்கும் போது சனியின் வாகனத்தையும் கவனித்து நடக்க வேண்டியிருக்கும்..

ஆக... சென்னையில் என் மீதான முதல் மோதல்.....

சனி, 15 ஆகஸ்ட், 2015

சுதந்திர தின வாழ்த்துகள்....எனக்கு.

லொட லொட பேருந்தில் இ்ந்தமுறை போகக்கூடாது.பயணம் முழுவதும் தூங்கவேண்டும்.
அப்பத்தான் நாளை முகம் கொஞ்சமேனும்(?)பார்க்கும்படி இருக்கும்.மூத்திரசந்தில் மூன்றாகவதாக நின்ற பேருந்து வாய்த்தது.இருக்கை அளவுக்குமீறி சாய்ந்து கொடுத்தது.சிவகார்த்திகேயன் மிகத்தீவிரமாய் போலிஸ்வேலை பார்த்த படம் ஓடிக்கொண்டிருந்தது.
மூச்சை அவ்வப்போது நிறுத்தி நிறுத்தி பயிற்சி எடுத்த முக்கால் மணி நேரத்திற்கு பிறகு முணங்கத்தொடங்கியது பேருந்து.
வழக்கமாய் ஊர் எல்லை தாண்டி ,அருவாள் வைத்திருக்கும் கருப்பருக்கு ஒரு காற்று முத்தம் கொடுத்து, பிறந்த ஊர் தாண்டும் போது எங்கோ ஒரு இடத்தில் தெரியும் ஒற்றை வெளிச்சம் கிளறிவிட்டுப்போகும் பால்யத்தை ,வலிய அணைத்து உறங்கத்தொடங்கும் நேரம் அடுத்த ஊர் வந்துவிடும்.
இந்தமுறை காற்றுமுத்தம் கருப்பருக்கு வாய்க்கவில்லை.
கண்களை இறுக்க மூடி உறங்கிவிட்டேன். ஐந்து மனிக்கெல்லாம் போய்விடலாம் என்று பயணத்தை தொடங்கும் போது சொன்னவன் ,ஒரு தேர்ந்த அரசியல்வாதி ஆவதற்கு அனைத்துத்தகுதிகளும் உடையவன்.
காலை எட்டுமணிக்கு நகர எல்லையை தொடும்போது,சில இடங்களில் "ஜனகன மன" கேட்கத்தொடங்கியது.
இரண்டு நாட்களாய் தொடர்ந்த வேலைகள்..
அநேகமாய் உலகின் எல்லா சிறை பற்றிய குறிப்புகளும் தேடிவிட்டேன்.
இருபது சுகி.சிவம் ஒலி நாடாக்கள்.
கோப்மேயர் தொடங்கி கோபிநாத் வரை புத்த்கங்கள்.
என் வீட்டு கண்ணாடிக்குமட்டும் வாய்ப்புயிருக்குமாயின் பலமுறை தற்கொலை செய்துகொள்ளுமளவிற்கு அதன் முன்னே உரை நிகழ்த்தியிருக்கிறேன்.
எப்படித்தொடங்குவது?பாரதியா...பாரதி தாசனா...?
ஒரு இரவு முழுவதும் தொடர்ந்த வழக்காடுமன்றத்தின் தீர்ப்புக்கு மேல் நீதிமன்றம் போகுமளவுக்கு காதறு நிலை.
கண்ணன் சிறையில் பிறந்த கதை,வ.உ.சி. செக்கிழுத்த கொடுமை,கொஞ்சமாய் நெப்போலியன் ஹில்லின் தன்னம்பிக்கை மற்றும் தேவையான அளவு உப்பு,புளி,காரம்,.மன்னிக்கவும் ....வரலாறு,வெள்ளையர் கொடுமை,சிறையின் சிறப்புகள் சேர்த்து ஒரு காகித்தில் இரண்டுற,மூன்றுற,...பலமுற அரைத்து ,கடந்த நாளில் காலை வெறும் வயிற்றில் மனப்பாலாய் பலமுறை அருந்தி,பீதியாகும் கோட்டுக்கு கொஞ்சம் கீழே திரும்பினேன்.
அடுத்த கவலை உடை என்னும் கொடுமையாய் வந்து நின்றது.
எப்போதோ ஒருமுறை அவள் நல்லாயிருக்கு(உண்மையென்று இன்னும் நம்புறேனே)
என்ற ஜிப்பாவை உதறியெடுத்து,அதற்கான பேண்ட்டை பெரும்பாடுபட்டு துணிப்பொருள் ஆராய்ச்சி செய்து அயர்ன் பண்ணி...மடித்து...ஷ்ஷ்..அப்பா...
உண்மையில் கொலைசெய்துவிட்டு சிறைக்குப் போனவன்கூட இப்படி ஒரு ஏற்பாடுகள் செய்திருக்கமாட்டான்.
ஷேவிங் செய்யவேண்டும்...
முடி பறக்காத அளவிலும்,முகத்தில் வழியாத அளவிலும் எண்ணெய் பூச வேண்டும்.
செருப்புக்கும் கொஞ்சம் பாலிஸ் போட வேண்டும்..
வீட்டுக்குப்போனதும் இத்தனை வேலைகள் இருக்கு....
வீட்டுக்கு வந்துவிட்டேன்.
எத்தனை மணிக்கு தயாராகனும்?
வேற யார் யார் பேசுறாங்க?அழைப்பிதழ் பார்க்கலாமா?...
பார்க்கிறேன்.....
என் பெயர் இல்லை....
நேரம் அதிகம் இல்லை என்பதால் என் பெயரைக்குறைத்திருக்கிறார்கள்.
என் முன்னோர்கள் ஒரு பாவமும் செய்திருக்க மாட்டார்கள்.
மாயாண்டி சாமியும்,ஆத்தா உடையநாச்சியும் அவுங்க புள்ளய சிறைக்குள்ள விடுவாங்களா?..
இந்த முறை குலசாமி கும்பிட போயே ஆகணும்.காசு முடிந்து போடுகிறேன்.
பள்ளியில் சுதந்திரதின விழா முடிந்து சின்னவள் வந்துவிட்டாள்.
இப்போதுதான் தொடங்குகிறது சுதந்திரதினம் ....
எனக்கு....

புதன், 12 ஆகஸ்ட், 2015

நுணலும் தன் கையாலும்.......

நுணலும் தன் கையாலும்.......
ஊழ்வினை வந்தல்ல.....
எனக்கெல்லாம் இருந்தே உறுத்தும்.
ஆறப்போகும் புண்ணைக்கிளறும் போது  கிடைக்கும் ஒரு இன்பம் நீங்கள் அறிவீர்களா?
அப்படியெனில் அதன் பின் வரும் வலியையும் தாங்கள் அறியாமல் இருக்க மாட்டீர்கள்.
எதோ ஊருக்கு வந்தமா நாலு இடத்தைப்பார்த்தமான்னு
இல்லாம போனதால வந்த வினைதான் எழுதத்தூண்டியது...
எப்பவுமே அழுது தொலைக்கிறமே.,...கொஞ்சம் மாற்றித்தான் பார்க்கலாம் என யோசித்தேன்.
சரி சனியனைத்தொட்டாச்சு...
நாலு கண்ணு பார்க்கிறதுக்குள்ள விட்டமான்னும் இல்ல....
முன்னல்லாம் பிள்ளைகளுக்கும் விவரம் பத்தாது ,சும்மா நெஞ்ச நிமிர்த்தி வைரமுத்து மாதிரி வாசிப்பேன்..அவள்களும் ஏதோ சந்தோசத்துல கையெல்லாம் தட்டுவார்கள். இப்பல்லாம் நான் காகித்தை எடுத்தாலே சின்னவள் பாடபுத்தகத்தை எடுத்து விடுகிறாள்.அப்படித்தான் நேற்றும் ஆனது..வாசிக்கத்தொடங்கும் முன்பே அவர்கள் காணாமல் போனார்கள்.எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்குமல்லவா..அது எனக்கு நேற்றுதான் தெரிந்தது.அவர்கள் போனால் என்ன எப்பவுமே பேஸ்புக்,வாட்ஸப்புன்னு எத்தனையோ மகராசன் இதே வேலையா இருக்காக.....பொம்பளப்புள்ள குட்மார்னிங் சொன்னாலே ஆயிரம் லைக் விழுற இடத்துல நமக்கு ரெண்டு விழாமலா போயிருன்னு நம்பித்தாங்க ...அதைச் செஞ்சுட்டேன்..நம்ப நண்பர் ஒருத்தர் போன் பண்ணியே பேசிட்டார்...நல்லா இருக்குங்க ...எப்படிங்க உங்களுக்கு மட்டும் கிடைக்குது...அந்த குரூப்ப சொல்லுங்கன்னு ...வெந்த புண்ணில்...

ஊருக்கு போன ஊட்டம்மா ...அதிகாலை விஜயம்...
நேற்று காணாமல் போன பிள்ளைகள் ..எழுதிய காகிதங்களை காட்டியதோடல்லாமல் ,பின்னூட்டங்களையும் ஊட்டிவிட்டார்கள்.  அப்பவே(எப்பவேன்னு தான் தெரியல)சொன்னேன்.எழுதுனா யாருக்கிட்டயும் காட்டாதே..என்கிட்ட கொடு புத்தகமா போடுறேனு...எதைக்கேட்ட இதைக் கேட்க? ஏதாச்சும் எழுதுறது....ரெண்டே நாளுல  மறந்துடறது...இப்பவாச்சும் கேளு...தினம்தினம் எழுதி என் கிட்ட கொடு ... நான் பார்த்துக்கொல்கிறேன்...மன்னிக்கவும் பார்த்துக்கொள்கிறேன்.
பார்க்கலாம்.. எத்தனை நாள் எழுதுறன்னு?
இப்ப நான் என்னங்க பன்னுவது? இந்த நாள் இனிய நாளாக என்ன எழுதுவது?
நாளக்குத்தான் போகலாமுன்னு நினைத்துக்கொண்டிருந்தேன்....
இப்ப சாயக்கூட முடியாத ஒரு அரசுப்பேருந்தில் மூவர் அமரும் இருக்கைப்பிரிவில் நடுவில் இருக்கிறேன்....இதுவெல்லாம் கஸ்டமே இல்லங்க....கிளம்பும்போது சின்னவள் பழமொழி விளையாட்டுக்கு அழைத்தாள். பழமொழியின் பாதி அவள் சொல்வாள் மீதியை நான் சொல்லவேண்டும். என்ன கொடுமை சார்... முதல் பாதியைப்பாருங்களேன்
"நுணலும் தன்...…...   --அவள்
" கையாலும் கெடும்----நானே தான்.

ஏய் பார்த்துக்கோ. பார்த்துக்கோ...


.
உங்களோட (எழுத்துலக மரியாதை என்னால் கேவலப்பட்டு விடக்கூடாதே என்ற சிறிய நல்லெண்ணத்தால் உங்கள்,நீங்கள் என எழுதுகிறேன்...இந்த மாதிரியான இடங்களில் நீங்கள் விரும்பும் எவ்வளவு மோசமான வார்த்தைகளையும் நினைத்துக்கொள்ளளாம்...)17 வருசமா வாழ்ந்ததுல வெட்டிப்பேச்சு தான்...(நல்ல வேளை அதற்கு முந்தைய வருடங்களை மறந்து விட்டாள்).என்கிட்டத்தான் பேச்செல்லாம் வெளியில ஒரு மண்ணும் இல்ல...நாலுபேருக்கு முன்னால ஊமையா நிக்கத்தான் தெரியும்...இவ்வளவு படிக்கிறீங்களே,எங்கயாவது பேசலாம்ல...(யார்யாரோ பேசுறாஙன்னு சிலபல பேரும் சொன்னாள்.அதை நான் சொன்னால் நான் வாழ்நாள் முழுவதும் பேசமுடியாமல் ஆகும் வாய்ப்பு இருக்கிறது)ஆனாலும் அது உண்மை தான்.
நமக்கு மேடைப்பேச்சில் அவ்வளவு பிரியம்..லேசா தொடை நடுங்கும்,கொஞ்சம் குரல் கம்மும் ...வேறொரு தொந்தரவும் இல்லை.மன்னிக்கனும் இந்த இடத்துல இன்னொரு அடைப்புக்குறி போட்டே ஆகணும்(வேற ஒன்னும் இல்லங்க இப்பவெல்லாம் வீட்ல பேசும் போதே அப்படி ஆகுதுங்க)
சின்ன வயசுல இருந்தே நமக்கு அது ஆகலங்க..அதனால் தான் கவிதைகள் பக்கம் திரும்பினேன்.கடவுளே எதிரில் இருந்தாலும் காகிதத்தை பார்த்தமா வாசித்துவிட்டு வந்தமான்னு வந்துவிடலாம்.வீம்புக்கு பேசப்போய் மாட்டிய (வீர) வரலாறு எனக்கும் உண்டு...எட்டாம் வகுப்பு படிக்கும் போது நடந்த மாற்றுடைப்போட்டியில் மரியாதையாக ராஜா வேடம் போட்டதோடு இருந்திருக்கலாம்..என் அப்பாவின் ஆசையை நிறைவேற்றும் ஆவலில் "அனார்..அனார்..என் மாசற்ற ஜோதிமலையே" என சலீமின் வசனம் பேச   ,,,ராஜாவேடத்திற்காய் போட்டிருந்த அத்தை பெண்ணின் பாவாடை கழன்று விழுந்தது..நல்ல வேளை அந்த நாட்களில் பேஸ்புக்கும் வாட்ஸப்பும் இல்ல.
ஆதலால் சுற்றி வளைத்து நான் சொல்ல வருவது யாதெனின் நமக்கும் மேடைக்கும் வெகு தூரம்.
மேடை போலவே பிடிக்காத இன்னொரு விசயம் காவல் நிலையங்களும்..சிறைச்சாலை வளாக முகப்புகளும்.....அத்தையை கட்டின (அல்லது )அத்தை கட்டிய மாமா எவ்வளவோ முயற்சி பண்ணிப்பார்த்தார் என்னை கன்னியமிக்க காவலர் ஆக்கலாமென..,..முயற்சி உடையாராய் இருந்தும் பாவம் இகழ்ச்சியடைந்தார்.இன்னொரு மாமா சிறைத்துறை...கொஞ்சநாள் அந்த வளாகத்திலேயே குடியிருந்தார்....எப்போது போனாலும் பயமாகவே இருக்கும்...ஆக இதுதான் நம்ம முன்னணி,பின்னணி எல்லாம்...
நேற்று திடீரென ஒரு குண்டு வீசியிருக்கிறாள்.நான் பேச வேண்டுமாம்...பாருங்கள் ஒரு மனிதனின் வெற்றிக்கு ஒரு பெண் எப்படிப் பின்னிருக்கிறாளென....?
சூப்பர்ம்மா....என்ன தலைப்பு?  சொன்னா ரெடி பண்ணுவனே. ..என்றைக்கு?  எங்கே?  யாரெல்லாம் வருவாங்க?   
ம்ம்ம்...யாரும் வரமாட்டாங்க...
அங்கதான் இருப்பாங்க...
ஓ எதோ கல்லூரி போல
(கவுன்சிலிங்ல ரொம்பாம ..கொஞ்சம் நொடிச்சிருக்கும் போல
..இல்லன்னா நம்மலப்போய்?,)
நம்ம கார்லயே போயிடலாமா? வேணாம் ..ஜீப் வரும்....
என்னவோ இடிக்குதே?
சொல்லும்மா ...
சிறையில போய் பேசணுமாம்.
எப்போ? 
சுதந்திர தினத்துல....
இப்ப தெரியுதா ஏன் வார்த்தைகள் அதிகமாய் அடைப்புக்குறிச்சிறைகளுக்குள் மாத்திய விதம்.
சரி எப்படி முடிக்கலாம்.
ஏய்.. பார்த்துக்கோ...பார்த்துக்கோ...
நானும்_________தான்.
நானும்__________தான்
இது நல்லா இல்லையே....
இப்படி முடிக்கலாம்.
"சுதந்திர தினம்
சிறையில் பேசுவேன்
சூழ்நிலைக்கைதி".

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

சென்னையில் ஒரு நாள்

சென்னையில் எனக்கு நேர்முகத்தேர்வு
கெட்டும் பட்டணம் போகச்சொன்னதால் ஒருவழியாக வந்தாகிவிட்டது...வேலை என்ற ஒன்று இல்லையெனில் புருஸலட்சணம் பறிபோகும் பரிதாபமான சூழல்.தனியொருவனுக்கு வேலையில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என பாரதி பாடாத தீட்சண்யம் ...ஆஹா..அவனே மஹா கவி.   எனக்கு வேலை இல்லையென்றால் இந்த சென்னையெ ஒழிந்து படாதோ என்ற என் நம்பிக்கையால் ...சூழுரைத்து விட்டு(வேறு யாரிடம்.. எனக்குள்ளே தான்) எந்த காகிதமும் இல்லாமல் கிளம்பிவிட்டேன். அத்தனை விளம்பரங்களில் மிக கவனமாக படிக்கிறேன்.ஆகா இந்த சென்னையில் இத்தனை வேலைகளா?முழு நேரம் 30000,பகுதிநேரம் 15000. தகுதி என்பதை படிக்கிறேன்.ஏதேனும் டிகிரி,+2 பாஸ்/பெயில்,எட்டாம் வகுப்பு போதும்..அய்யோ...வயது 18 முதல் இறக்கும் தறுவாயில் உள்ளவர்கள் வரை.மனதில் பதியும் அலைபேசி எண்.மனசுக்குள் மத்தாப்பு...கித்தாப்பு எல்லாம் டமால் டுமீல் என வெடித்து கிளம்புகிறது.அழைக்கிறேன்...ஏகப்பட்ட பிஸிகளுக்குப் பிறகு..மிக சாந்தமாக அப்படி ஒரு வணக்கம்.சார் வேலை விசயமாக அழைக்கிறேன்.."ரொம்ப சந்தோஷம் சார்,எந்த இடத்தில் இருந்து பேசுறீங்க சார்.". சார் நான் பில்லர்கிட்ட இருந்து பேசுறேன் சார்(அசோக் பில்லர்னு முழுசா சொன்னா மரியாதை இல்ல) "சரி சார் தி.நகர் போற ஷேர் ஆட்டோ எடுத்து MGR நகர் மார்கெட் எறங்கிட்டு கூப்பிடுங்க. சீக்கிரம் வாங்க இப்ப முக்கியமான இண்டர்வியூ இருக்கு.. போட்டோ இருக்கா?  இல்லயா .நோ ப்ராப்ளம் சார் சீக்கிரம் வாங்க...பார்த்தாலே பயப்படும் அந்த வெள்ளை வண்டியை இந்திரனின் ஐராவதமாய் நினைத்து உள்ளிருந்த தசாவதாரங்களூடே தி.நகர் போகுமா என கவனமாக கேட்டு ஏறுகிறேன்.போய்க்கொண்டே இருந்த வண்டியில் தசாவதாரங்களும் இறங்கியாயிற்று.ஒற்றை அவதாரமாய் இருந்த என்னை நரசிம்மவதாரமாய் முறைக்கிறார் ஓட்டுனர்..எந்த இடம்.....MGRநகர் மார்கெட்..அதுக்கு ஆப்போசிட் போற வண்டியிலல போகணும்.அப்படியே அந்த பக்கம் போனா வண்டி வரும். 10ருபாயோடு வண்டி போனது..இதற்கு இடையே 4அழைப்புகள்...சார் வந்தாச்சா?எந்த இடத்தில் இருக்கீங்க? மறுபடி ஐராவதம்...இந்த முறை பின்னால் ஒரு பிளாஸ்டிக் இருக்கை.மேலே பிடிக்க வழியில்லை.இருக்கையை பிடித்தால் முன்னால் இருக்கும் பேரிளம்பெண் அசைந்து கொடுக்கிறார்(அவர் இருக்கிறாராம்)முன்னால் ஏறிய இடம் தாண்டி சரியாக இரண்டு நிமிடத்தில் இறக்கிவிட்டார்.சார் (நொ)வந்துட்டேன்.ஓகே சார்..அப்படியே நேரா வந்தா ஒரு கல்யாண மண்டபம் இருக்கும்..சார் வந்தாச்சு..  இன்னும் கொஞ்ச தூரம் ஒரு எலக்ட்ரிகல் கடை வரும்.  சார் வந்தாச்சு.எதுத்தாப்புல பாருங்க..வாங்க சார்...தரைத்தளம் முழுவதும் ஆண்கள்...பெண்கள்...கோப்புகள்...அழகான சீருடை அணிந்த நடுத்தர வயது மனிதர் கரங்களை இறுக்க்க்கி குழுக்குகிறார்...வாங்க சார்..மாடியிலதான் இண்டர்வியூ.. மிகக் குறுகலான படிகளில் ஏறுகிறேன்.அங்கே ஒரு சீருடை மனிதன்.  பேருந்தின் நடத்துனர் போலவே பணத்தினை கைகளில் வைத்திருக்கிறார்.சார் ஒரு 20ரூபாய் கொடுங்க...ரெஜிஸ்டர் பண்ணனும்..மறக்காம இண்டர்வியூ சமயம் போனை சைலண்ட்ல போடுங்க...கதவு திறக்கிறது...இவ்வளவு பெறிய கதவுக்கு கண்டிப்பாக CEO.CHARMAN,எல்லாம் இருக்கப்போறாங்க..அய்யோ...கேள்வியெல்லாம் எப்படி இருக்குமொ... மூணு மணி மேட்னி காட்சிக்கு திரையரங்கத்திற்கு படம் போட்டவுடன் நுழையும் பாவப்பட்ட ஜீவனாய் நுழைகிறேன்..கிட்டத்தட்ட 200இருக்கைகள்.முக்கால் வாசி நிரம்பியிருக்கிறது.எதிரே ஒரு திரை..வட்டங்கள் வரைந்திருக்கிறது...அய்யய்யோ....இந்த வட்டமா?நடுவில் ஒரு மனிதன் கருநீல கோட் .கையில் ஒரு மைக். ...ஹாய் வணக்கம்..எப்டி இருக்கீங்க.....முதல் மூன்று வரிசையும் சேர்ந்து சொல்கிறார்கள்...நல்லா இருக்கோம்..  கண்கள் இருட்டுகிறது.....தடுமாறி எழுந்து வெளியே வருகிறேன்.வாசல் படி மனிதனை நோக்கி கையை நீட்டுகிறேன்.20 ரூபாயை கொடுங்கள்.கொடுத்தார்...நடந்து கொண்டிருக்கிறேன்...வீட்டிலிருந்து அழைப்பு......ம்ம்ம்...இண்டர்வியூ நல்லபடியா முடிஞ்சிருச்சு.....அவுங்களே கூப்பிடுவாங்களாம்......(சத்தியமா கூப்பிடாங்க சார்....அடுத்த வாரம் இதே நேரத்துக்கு வாங்கன்னாங்க)