புதன், 31 ஆகஸ்ட், 2016

பெண்ணின் பெருந்தக்க... வெற்றுக்கூச்சல்...

அன்பின் சக்திக்கு,

கல்வி என்பது விலை அதிகமாகிப்போன சூழலில் நீ எப்படி படிக்கிறாய் என்பதை விட, என்ன பாதுகாப்பில் இருக்கிறாய் என்பதே இப்போது கவலையாய் இருக்கிறது.

என்ன நடக்கிறது இந்த தேசத்தில்?
உயிரென வளர்க்கும் மகள்கள் மயிரை இழந்து மொட்டையாக்கப்படுகிறார்கள்.
முடி போன வருத்தம் தீரும் முன் உயிர் போகும் செய்திகள் கொல்லாமல் கொல்கிறதே?

ஒரு மரக்கட்டையில் அடிவாங்கிச் சாகவோ..
சீவிச்சிங்காரித்து கனவுகள் வளர்த்து கல்லூரி அனுப்புகிறோம்?

காதலெனும் மயக்கத்தில் கத்தியெடுத்து வெட்டவும், அமிலங்களை வீசவும் எப்படி முடிகிறது..

வெட்டினார்களா தெரியாது.. செம்மரம் வெட்டியதாய் சுட்டுக்கொள்கிறார்கள்.

மகளே..
இந்த நாட்டில் மரங்களுக்கு உள்ள பாதுகாப்பு மகள்களுக்கு இல்லையா?

என்ன சட்டங்கள்..
இருப்பவனுக்கு ஒன்றும் இல்லாதவனுக்கு ஒன்றுமாய்?

மரண தண்டனை எனக்கு உடன்பாடில்லை என்றாலும்..
இவர்களைக் கொன்றாலும் தீராது ஆற்றாமை...

பூக்களையா பொசுக்குவது..?
காதலிக்க மறுத்ததாய்
கத்தி எடுப்பவன் எப்படி காதல் அறிவான்?

வார்த்தைகள் தேடிச்சலிக்கிறேன்..
வரவே இல்லை..
சிந்திக்கிடக்கும் ரத்தம் உறைகிறது நெஞ்சுக்குள்..
பென்சில் சீவும் போது வந்துவிடும் சில துளிரத்ததுக்கே பதறிவிடும் அப்பன்..
எப்படிப்பார்ப்பான் உயிர் ஓடிக்கிடக்கும் கோரத்தை?

பெண்ணின்
பெருந்தக்க யாவுள?
பெண்ணே கடவுள்..
அன்னை பூமி..
நதிகள் யாவும் பெண்ணின் பெயர்கள்..

நாசமாய்ப் போக...

இந்தப்பெருமைகளில் அணுவளவேனும் வந்து அணைத்துக்
கொண்டிருக்குமா அவள் கட்டைகளில் அடிவாங்கும் போது.?

பேராலயத்துக்குள் கொல்லப்படுகிறாள்.
ரயில் நிலையத்தில்..
கல்லூரி வளாகத்துள்..
அவள் நடக்கும் போது,
படுத்திருக்கும் போது,
கழிப்பறை போகும் போது?
இனி அவளை எங்கெல்லாம் கொல்லுவது?
செத்துப் புதைத்தாலும்
கல்லறை விடுவார்களா தெரியாது..?

மேசைகள் தட்டுவதும்,
வெளியே போய் உள்ளே வருவதும்,
வீதியின் முனைகளில் இருந்து வியட்னாம் வெற்றியை கொண்டாடுபவர்களும்,
தமிழன்,தெலுங்கன்,வந்தேறி என நீட்டி முழக்குவோரும் மூட்டைகட்டி வைய்யுங்கள்..

பெற்றபிள்ளைகள் பெட்டியில் வைத்து சவமாக்கிப் பார்த்து நிற்கையில் வெட்டியாய் இருந்து விட்டு...

நாடு என்ன?
அரசு என்ன?
நின்று என்ன?
முழங்கி என்ன?

ஒன்றுமில்லை..
ஒன்றுமில்லை..

அன்புடன்.
செல்வக்குமார்.

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

பற்றும் விரல் நீயெனக்கு...

ஒரு பட்ட மிளகாய்
உப்புச்சட்டி
கழுவிய தண்ணீர்.
ஒடிந்து விழுந்த
முருங்கையின் கீரை..
என் பட்டினி
கொன்றவளே...
எப்போதும்
பசியள்ளித்
தின்றவளே...
ஓரெழுத்தும்
அறியாத
என் தாயே!
உன் விரல்
பட்டு
படர்ந்ததுதான்
என்
தலையெழுத்து..
அழகழகாய்
ஆறு பெறும்
பேறு பெற்றாய்..
அழக்கூட
சூழலின்றி
அழகு கெட்டாய்.
அப்பாவோடு
புகைப்படத்தில்
நீ
சிரிப்பாய்..
அம்மாவே
அப்புறமாய்
எப்போ
நீ
புன்னகைத்தாய்.
கேஸ் அடுப்பு
கரண்ட் அடுப்பு..
காலமில்லை.
அம்மா
நீ வெந்ததெல்லாம்
முள்ளெரிந்த
மண் அடுப்பு..
முள்ளடுப்பு
புகைசூழும்...
உன்
ஊதாங்குழல்
மூச்சும்
ராகமிடும்..
காலனிக்
குடியிருப்பில்
கதவிடுக்கில்
குளிரடிக்கும்..
கந்தலான
உன் சேலை
எனை மூடும்.
ரேசன்
அரிசிகளில்
கல்பொறுக்கி
ஓய்ந்தவளே..
ரோசமொன்றே
உணர்வாகத்
ஈந்தவளே...
ஆண்டுக்கு
ஓர் தினத்தை
அன்னையர்க்கு
வைத்தவனை
வெகுகாலம்
தேடுகின்றேன்..
நள்ளிரவு
நான்
தூங்க
விழுந்தாலும்
சொல்லுவது
உன்னைத்தான்
விதியென
இருந்தாலும்..
வீதிக்கு
கவிதை
கேட்டால்..
விரல்
பற்றுவதும்
உன்னைத்தான்.
(வீதி கலை இலக்கிய களத்துக்காக)
வியாழன், 25 ஆகஸ்ட், 2016

காணாமல் போன (வி)மானம்..

அன்பின் சக்திக்கு,
நீர்மூழ்கி ரகசியங்கள் கசிந்ததாய் வதந்திகள்.
இந்த தேசத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது?
மாட்டுக்கு மகத்தான ஆதரவு அளிக்கும் அரசு
மனிதர்களை மறந்தே போனது.
2020ல் வல்லரசாகிவிடும் என்ற மயக்கத்தில் இருக்கிறோம்..
கடவுளே அழுத கதையொன்று தான் நினைவுக்கு வருகிறது.
தினம் ஒரு ஏவுகணை விண்ணில் பறக்கிறது..
நாளுக்கொரு தேசத்துக்கு தலைவர்கள் பறக்கிறார்கள்..
நிலவுதாண்டி அயல் கிரகங்களை ஆராயப்போகிறார்கள்.
இந்தியா வல்லரசாக போதுமா இவையெல்லாம்.?
மருத்துவர்களில் பாதி போலி.
மலையெனத் தேங்கிக்கிடக்கும் வழக்குகள்.
மதங்களின் பால் மயக்கங்கள்.
அரங்கேறும் ஆணவக்கொலைகள்.
எல்லாம் தள்ளிவைத்தாலும்....
இந்திய ராணுவத்தின் விமானமொன்று காணாமல் போய் மாதங்கள் கடந்துவிட்டது.
29 பேர்களுடன் கடல்மீது காணாமல் போனதன் சின்னத் துரும்பைக்கூட இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை.
காணாமல் போனவர்களின் குடும்பங்கள் என்ன பாடுபடும் சக்தி?
இருக்கிறார்களா என்பதே தெரியவில்லை..
21 ம் நூற்றாண்டின் அறிவியல் வளர்ச்சியின் உச்சத்தில் இருப்பதாய் சொல்லிக்கொள்கிறோம்..
கண்ணுக்கெதிரே காணாமல் போக்கிவிட்டு இன்னும் தேடிக்கொண்டிருப்பதுதான் அறிவியலின் வளர்ச்சியா?
அதிகாரவர்க்கத்தின் அலைபேசி தொலைந்ததற்கு போடும் முயற்சியும் காணாமல் போன உயிர்களுக்கு இல்லையா?
ஒரு துணைக்கண்டத்தின் ஒப்பற்ற ராணுவ விமானம் காணாமல் போயிருக்கிறது...
கண்டுபிடிக்கப்பட
வேண்டியது விமானமல்ல.
தேசத்தின் மானம்.
ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மையும் இங்கே கவனிக்கத்தக்கது.
கடந்த நாள்களில் பரபரப்பாய் எழுதிய ஊடகங்கள் ஒரு முன்னால் கதாநாயகியின் கள்ளக்காதலை ஆராயப்போய் விட்டன.
யார் செய்வது சக்தி?
இதற்கான தூண்டுதல்களை?
மேசைகள் தட்டுமிடமாகவும்,உள்ளும் வெளியும் நடக்குமிடமாகவும்,
பரஸ்பரம் குற்றங்கள் சொல்லுமிடமாகவும் மாறிவிட்ட மையங்கள் பேசவேண்டாமா இதை?
அறிவியலின் அத்தனை துணையும் கொண்டு கண்டுபிடித்திருக்க வேண்டாமா இத்தனை நாட்களில்?
எத்தனை கப்பல் கொண்டு தேடினால் என்ன ..
இன்னும் கண்டுபிடிக்க முடியாத அளவில்தான் இருக்கிறதா உங்கள் முன்னேற்றம்?
29 உயிர்கள் இருக்கட்டும்.
நாட்டைக்காக்கும் இன்னும் பல பணிகளில் இன்னும் எத்தனை விமானங்களை தொலைக்கப்போகிறீர்கள்?
அனுமன் சிந்திய சஞ்சீவி மூலிகையை தேடிப்போவதாய் சொல்லிக்கொள்கின்றீர்கள்.
அநாதையாகி நிற்கும் காணாமல் போனவர்களின் நிம்மதியை எங்கு தேடிக்கொடுப்பீர்கள்..
வல்லரசாகிவிடுவோம் என்பதெல்லாம் எனக்கு கனவாகத்தான் தெரிகிறது சக்தி...
ஒரு நாடு வல்லரசு ஆகும் முன்
மக்கள் நலம் பேணும் நல்லரசு ஆவது அவசியம்.
அன்புடன்.
செல்வக்குமார்.


செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

ஜக்கிக்கு....ஒரு விண்ணப்பம்...

அன்பின் சக்திக்கு,

சமீபத்தில் புதிதாய் சில விதிகள் வந்திருக்கிறதாம்.
அரசு நிர்ணயம் செய்த வயதைத் தாண்டியிருந்தாலும் இருவர் திருமணத்தை பதிவுசெய்ய வேண்டுமெனில் பெற்றோர்கள் ஒப்புதல் வேண்டுமாம்.

அறிவார்ந்த பெரியவர்கள் போடும் சட்டம்...
அதனை அப்புறம் பார்க்கலாம்.

ஆனால் திருமணத்திற்கு விதி செய்யும் அரசு..
துறவறம் எடுப்பதற்கு ஒரு விதியும் செய்யவில்லை என்பதுதான் தலைவிதி.

பங்குனி சித்திரைகளில் ஆலந்துறை தாண்டிய வெள்ளியங்கிரி மலைச்சாரலில் மனிதர்கள் பயணம் செய்யும் காலம்.
ஏழுமுறை அந்த மலைகளில் நான் நடந்திருக்கிறேன்.

வெள்ளை விநாயகர் கோயில்,பீமன் களியுருண்டை,
சீதா வனம்,திருநீற்று மலை,ஆண்டி சுனை ,இன்னுமென கடந்து உச்சியை அடையும்போது செத்து சொர்க்கம் வந்த உணர்விருக்கும்.

அடரிருள்சூழ் மலையில் ஒருபுறம் நட்சத்திரங்களென கொட்டிக்கிடக்கும் கோவையும்,
ஆங்காங்கே ஒன்றென கேரளாவும் காணக்கிடைக்கும்.

காட்டுநெல்லி,மருந்துகளென ஆதிவாசிகளின் சிறுகடைகள் அத்தனை அழகு.

1990 ஐ தாண்டிய நாள்களில் ஆசிரமம் ஒன்று முளைக்க ஆரம்பித்தது.

அதன் ஆரம்ப காலங்களிலிருந்து வதந்திகளோடே வளர்ந்தது.

ஜக்கி மனைவியின் திடீர் மரணம் அவ்வளவு பரபரப்பாய் இருந்தது.

சித்தர்களும்,யோகியரும் வளர்த்த தியானங்களும்,யோகங்களும் புதுவாழ்வு பெற்றதாய் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடினோம்.

இதழ்கள் எல்லாம் நிழல் எழுத்தாளர்கள் இவர்களின் பெயரில் எழுதிக்குவித்தார்கள்.

சக்தி!
யோகம்,தியானம் இவற்றில் நாம் உட்புக வேண்டாம்.

ஆனால் ,அண்மைகளில் ஆசிரமங்கள் பற்றி வரும் செய்திகள் ஆரோக்கியமானதாயில்லை.

படித்த,பணக்கார பெற்றோர்கள் பிரச்சனைகளுக்காக பிள்ளைகளுடன் ஆசிரமம் போக,
பிள்ளைகளைப் பறிகொடுக்கும் பிரச்சனைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

சிவன் திருவிளையாடல் காலத்திலேயே பிட்டுக்கு மண்சுமக்க வீட்டுக்கு ஒருவர் போதும் என்றிருக்கிறார்கள்.

பெற்ற இரு பெண்களையும் மொட்டையாய் பார்க்கும் அவலம் பெற்றோரால் தாங்கக்கூடியதல்ல.

மீண்டும் ஒற்றைப்பெண்ணைப் பெற்றவர்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

ஒரு பெற்றோராய் இதுவே என் வேண்டுகோள்.

அய்யா...ஜக்கி வாசுதேவ் அவர்களே.

உங்கள் தியானம்,யோகா பயிற்சிகளுக்குள் நான் வரவில்லை..

பெற்ற தாயும் தகப்பனும் வெளியே கதறியழ,
அதைத்தாண்டியுமா யோகமும்,தியானமும் செய்துவிட முடியும்.?

மூளைச்சலவை,மனமாற்றுதல்,போதை போன்ற பழக்கங்கள், எது பற்றியும் பேசவில்லை.

வாயையும் வயிற்றையும் கட்டி பெண்ணைப்பெற்று வளர்த்து படிக்க வைப்பதைக்காட்டிலுமா தியானம் பெரிது?

வனங்களை அழித்து கட்டடமாக்கினீர்கள் நல்லது...
குடும்பங்களை அழித்து வனமாக்காதீர்கள்..நல்லதல்ல.

கருவறை தாங்கி பாலூட்டி வளர்த்த தாயின் கண்ணீர் எல்லா ஆயுதங்களிலும் கூரானது.

சட்டங்களும்,அரசுகளும் உங்களுக்கு ஆதரவாய் இருக்கலாம்.

ஜக்கி அவர்களே...
சட்டங்கள் சிவன் செய்ததல்ல..
அரசுகளும் ஆண்டவனுடையதல்ல.

உங்கள் ஆசிரமத்தை எப்படிவேண்டுமானாலும் வளர்த்துவிட்டுப் போங்கள்.
வணங்க வரும் எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்.

இஞ்சினியரிங் சொல்லிக்கொடுத்த எங்கள் பிள்ளைகளின் லட்சணம் எப்படியிருந்தாலும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

தன்னிச்சையான முடிவெடுக்கும் சட்டப்படியான வயதுதான்..
ஒத்துக்கொள்கிறோம்.

ஜக்கி அவர்களே...
இது அமெரிக்கா அல்ல.
இந்தியா..

குடும்பம் என்னும் அமைப்பு இன்னும் சிதையாமலிருப்பது பிள்ளைகள் மேல்கொண்ட பாசத்தால் தான்.

பெற்றோர்களும்,பிள்ளைகளும் ஒப்புக்கொண்டால் மட்டும் உங்கள் சேவைக்கு அனுமதித்து எதை வேண்டுமானாலும் வளருங்கள்.

அன்பான , அறிவான,
ஐ.நா வரை போய் யோகக்கலை வளர்க்கும் ஜக்கி அவர்களே...

பெற்றோர்களின் கதறல் சத்தம் கேட்டுத்தான் இவையெல்லாம் நிகழுமெனில்

மன்னிக்கவும்...
எனக்கு உங்களின் எதிலும் உடன்பாடில்லை.

அன்புடன்.
செல்வக்குமார்.

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

ஜோக்கர்...சிரிக்கமுடியவில்லை

நீண்டநாள் புண்ணின் மேல் படரும் மென்தோலை  அரிப்புக்காய் சொரியும் போது அப்படி ஒரு சுகமும்...
முடிந்தபின் வரும் எரிச்சலும் எப்படியோ
அப்படித்தான் இருக்கிறது ஜோக்கர் படம் பார்த்த எனக்கு.

கன்னங்கள் பழுக்க பழுக்க பளார் பளார் என  வசனங்கள் விழும்போது உற்சாகம் குதியாட்டம் போடுகிறது... வெளியே வந்தால் அடப்பாவமே..
எல்லாமே நம் மீதே விழுந்த அடிகளாய் வலிக்கத்தொடங்குகிறது.

புரையோடிப்போய் சமூகத்தின் ஒரு அடையாளமாய் மாறிப்போன ஊழல்,சாதி,மதம்,அரசியல் பற்றிய கேலிகளை மிக இலாவகமாக கையாண்டிருக்கிறார் வசனங்களில்.

கண்களின் அருகே மெல்லிய சுருக்கங்கள் தெரியும் தர்மபுரி மாவட்டத்துக்கேயான முகம் நாயகனுக்கு நச்சென பொருத்தம்...

அழும் காட்சிகள் நிறைந்த படத்துக்கு ஜோக்கரென பெயர்,
வறண்ட பிரதேசத்தின் தண்ணீர் விற்கும் நிறுவனம், மணக்கா வாழ்வின் பெண்ணுக்கு  ரோஜாத்தோட்டமென அழகிய முரண்.

மக்கள் ஜனாதிபதியாய் மனசால் வாழும் நாயகன் பப்பிரெட்டி பவனாய் பேசுவது ராஜுமுருகனின் லூசுப்பையன் சாயல்.

திரைப்படம் நம் வாழ்வில் நாம் செய்ய முடியாததை யாரேனும் செய்வதாய்க்காட்டி சிறிதுநேர மயக்கமூட்டுவது.
ஒரு தனிமனிதன் 10 பேரை அடிப்பதும்...துப்பாக்கி குண்டின் சுழற்சியைக் காட்டுவதும்,
சுற்றிலும் ஆட காதல் செய்வதும் காலம் காலமாய் தொடர்வது இப்படித்தான்.

ஜோக்கரும் கூட அப்படித்தான் நம் கவனம் ஈர்க்கிறது.

குண்டும் குழியுமான சமீபத்திய சாலையில் நாம் பயணித்துக்கொண்டே மனசுக்குள் திட்டுவதை திரையில் காணும் போது அத்தனை மகிழ்ச்சி.

மருத்துவமனைகளின் அலட்சியம்,
விலங்குகளின் மேல்  செலுத்தப்படவேண்டிய கருணை,
போராட்டங்களுக்கான புதிய யுத்திகள் என விரிந்திருக்கிறது திரைப்பூ...

கழிப்பறை மட்டுமே முழுசுமாய் இயங்கியிருக்க வேண்டிய படம்..
கட்சிக்கூட்டம் தொடங்கி காந்திவேடப்போராட்டமென கதம்பாயிருக்கிறது.

உண்மைக்கதாநாயகனாய் சித்தரிக்கப்பட வேண்டிய பொன்னூஞ்சல் கதாப்பாத்திரம் உருவத்தில் ஏதோ ஒரு ஒற்றுமை தேடியிருப்பதால் முழக்கமிடுபவராகவும்,
கதையை முடித்துவைப்பவருமாக  இருந்துவிடுகிறார்.

மக்கள் ஜனாதிபதி முகநூலில் போராட்டம் அறிவிப்பது வரமா சாபமா தெரியவில்லை.

வசனங்களில் தெறிக்கும் தீ கதையினில் எரியவில்லை....
காட்சிப்படுத்தலில் இருந்த முனைப்பும் அழகும் கதைப்படுத்துதலில் இருந்திருந்தால் ஆட்டத்தின் சீட்டுகளில் 13ம் ஜோக்கராகவே இருந்திருக்கும்.

தர்மபுரியின் குக்கிராமத்திற்கு உண்மை ஜனாதிபதி வருவது உள்ளூர் அமைச்சர் வருவதினும் குறைந்த அளவில் காட்டப்படுவது,
நாயகனின் போராட்ட காலத்திற்கான பொருளாதாரப் பிண்ணனி,
நாயகனின் துணைக்கு வரும் ஒரு பெண்ணின் மற்றொரு முகம், காவல் துறையின் முகத்தை காட்டியதில் முரண்பாடு. (அவ்வளவு எளிதாகவா போராட விட்டுவிடுவார்கள் போலிஸ்காரர்கள்.?)

என்ன சொன்னாலும்

வசனங்கள் நம்மை வசப்படுத்திவிடுவது மறுக்க முடியாது..
சகல கட்சிகளையும் சகல காட்சிகளிலும் வறுத்தெடுப்பதும் புரிகிறது.

பாத்திரப்படைப்புகளில் நாயகனுக்கு அடுத்ததாய்
பவா வின் தேர்வு.
பொதுவாய் படைப்பாளிகள் திரைக்கு வரும்போது கோமாளிகள் போல் பார்த்துப்பழகிய கண்களுக்கு பவாவின் இயல்பான பேச்சு,உடல்மொழி அற்புதம்,
பொன்னுஞ்சலாய் வரும் ராமசாமியின் வசனங்கள் நெஞ்சுக்கு நெருக்கமாகிறது.

காட்சிப்படுத்தலில் செழியனின் கேமரா கண்களுக்குள்ளேயே காட்சிகளைக் கடத்துகிறது...

நோய்வாய்ப்பட்ட நாயகியின் பராமரிப்பு,நீதிபதியின் ராசி பற்றிய விசாரிப்பு,
கதையின் முடிப்பில் மட்டும் வலிந்து வரும்  தோழர் என ஒட்டாததாய் நிறைய..

குக்கூ என்னும் மெல்லிய உணர்வைத்தூண்டிய படமெடுத்த ராஜுமுருகன் நீண்ட ஆலோசனைகளுக்கும்,
ஆவலோடும் படமாக்கியிருக்கும் இந்த ஜோக்கர் வசனங்களுக்காகவும்,
காட்சிப்படுத்தலுக்காகவும் பார்க்கலாம்.

பொதுவாய் நான் இசை,.மற்றும் பாடல்களை கூர்ந்து கவனிப்பதில்லை..
வழக்கமான விமர்சகர்கள் போல அதைப்பற்றி எழுதவும் தெரியவில்லை..

என் விமர்சனங்கள் உங்களில் யாரையேனும் வருத்தப்பட வைக்குமெனில் மன்னிக்கவும்...

நான்.
செல்வக்குமார்.
திங்கள், 15 ஆகஸ்ட், 2016

போடா ...நானொன்றும் அழவில்லை.

போடா..
நானொன்றும்
அழவில்லை...

பொல்லாக்கவிஞர்கள்
பொசுக்கென்று
போவது
புதிதல்ல..

போடா
நானொன்றும்
அழவில்லை..

அருந்துவதால்
கவி
வருமென்றால்
வருந்துவதால்
ஒன்றும்
வருவதில்லை

போடா
நானொன்றும்
அழவில்லை

சுதந்திரமாவதிலும்
அவசரம் தான்...
தனக்கே
விடுதலை
கொடுத்துக்கொண்டாய்.

போடா
நானொன்றும்
அழவில்லை

வார்த்தைக்கு
உயிரெல்லாம்
தந்துவிட்டு
காற்றோடு
கலந்தவனே..

போடா
நானொன்றும்
அழவில்லை

ஆயிரமாய்
பாயிரங்கள்
அத்தனையும்
காவியங்கள்.
ஈரமில்லை
எந்தன்
கண்ணில்...

போடா
நானொன்றும்
அழவில்லை

இத்தனை
பேர்
அழுதோமே
எழுந்துவர
இரக்கமில்லை

போடா
நானொன்றும்
அழவில்லை

வரிகளிலே
சிலை செய்தாய்..
தமிழ் கெஞ்ச
கவி செய்தாய்..
வாழ்க்கையில்
தான்
வஞ்சம் செய்தாய்...

போடா
நானொன்றும்
அழவில்லை

புல்லுக்கும்
கல்லுக்கும்
யாழுக்கும்
எழுதியென்ன
பால் மறக்கா
உன்
பிள்ளை
தேடுமடா
உன் வாசம்..

போடா
நானொன்றும்
அழவில்லை

பேனாவோ
மைசிந்தி
கவி சொல்லும்..
போனாயே
அந்தப் பாட்டெல்லாம்
என்ன செய்யும்..

போடா
நானொன்றும்
அழவில்லை

காயம்பட்டு
இறந்திருந்தால்
கண்ணீர்க்கடல்
ஒன்று
பிறந்திருக்கும்.

காணாமல்
போயிருந்தால்
தேடி
அந்த
தெய்வம் வந்திருக்கும்...

காலம் உன்னை
அழைக்கவில்லை..
காலன் வந்து
சாகவில்லை..
நாடித்தான்
போய்த்தொலைந்தாய்..

நல்லதமிழ்ப் பாட்டு..
உலகம்
உள்ளவரை
கேட்டிருக்கும்..

குமரா!!
உன்
கவிதை
எப்போதும்
வாழ்ந்திருக்கும்...

தண்ணீரின்
சுழல்
வீழ்ந்த
என்
தோழா...

உன் பெண்டு
உன்
பிள்ளை
நீயின்றி
வாழ்வாரே...

அதற்கெனவே
அழுகின்றேன்...

போய்வா..

போடா
நானொன்றும்
உனக்காக
அழவில்லை...

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

மண்ணில் இந்த....
பொல்லாத
பேரழகி..
அழகென்றேன்
பொய்யென்றாள்..
கவிதை
சொன்னேன்
யாருக்கென்றாள்..
நிலவென்றேன்
தேயவோ
என்கிறாள்..
சிலையே
என்கிறேன்
திருடவோ
என்கிறாள்..
முத்தே
என்கிறேன்...
நீ
மூச்சடைக்க
பாரேன்
என்கிறாள்..
நிழல்
நீ
என்றால்
சுடும் கால்கள்
படுவதற்கோ
நானென்றாள்.
குயிலென்றேன்
நிறம்
ஒப்பிட்டு
கரைகிறாள்.
வானமென்றேன்
தூரத்தில்
வைப்பதாய்
தூற்றுகிறாள்..
புயலாய்
இருக்கும்
உன்
மொழியென்றேன்
கயல்விழி
கசிய
பேரழிவோ
என்னால்
என்றாள்.
இதயம்
இருக்குமிடம்
நானென்றேன்
மற்றதெல்லாம்
யாருக்கென
போருக்கு
கிளம்புகிறாள்..
விடிவிளக்கே
வாயென்றேன்
ஊதி
அணைக்கவோ
என
எரிந்து
விழுகிறாள்.
நட்சத்திரம்
நீ யென்கிறேன்
எண்ணிக்கை
தெரியாததில்
நானுமொன்றோ
அழுகிறாள்.
வெட்கம்
அழகென்றேன்..

மற்றவற்றில்
பேயாவென
பதறுகிறாள்.
என்ன
சொல்லினும்
இப்படிச்சொன்னால்
என்ன
செய்வேன் நான்
போடி
என்றேன்...
ஓடிவந்து
ஒட்டிக்கொண்டாள்..

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

ஒலிம்பிக்....

அன்பின் சக்திக்கு,

ஆற்றின் வழியெல்லாம் மணற்கொள்ளை நடத்திவிட்டு ஆகாயத்தாமரைகளும் ,
சீமைக்கருவேல் மரங்களும் அடைந்திருக்க ஆற்றுநீர் வரவில்லை என புலம்புவதற்கும்
ஒலிம்பிக்கில் பதக்கம் கிடைக்கவில்லை என்பதற்கும் வேறுபாடில்லை.

கிரிக்கெட்டின் தாய்வீடு இங்கிலாந்தென்றால் பாட்டி வீடு நம் பாரதம்.
சதுரங்கம்,சடுகுடு என பல விளையாட்டுகளின் விதை இங்கே விளைந்தது தான்..

120 கோடி தாண்டிய மக்கள் பேறு..
அத்தனை மொழிகள்.
வெவ்வேறு கலாச்ச்சாரங்கள்..
வேற்றுமையில் ஒற்றுமை..

நான்காண்டுக்கு ஒரு முறை நடக்கும் ஒலிம்பிக்கில் பதக்கங்கள் பெறவில்லை என்பதற்காக படும் பரிகாசங்கள் பதைக்க வைக்கிறது.

இத்தனை மனிதர்களில் வீரர்களில்லையா?
ஊழல் நிறைந்ததாய் போய்விட்டது விளையாட்டுத்துறை?

சின்னச்சின்ன நாடெல்லாம் பதக்கப்பட்டியலில் இருக்கும் போது வெங்கலத்திற்கும் விளங்காமல் போனேமே என்னும் போது வலிக்கத்தான் செய்கிறது..

சரி சக்தி...
நோயெல்லாம் முற்ற விட்டுவிட்டு மருத்துவமனையினை திட்டுவதால் என்ன பயன்.

பதக்கங்கள் பெறாமல் திரும்புவது நமக்குப் புதிதல்லவே..

புரிதல் இன்னும் இல்லாமல் இருப்பதே ஆதங்கம்.

விளையாட்டென்பது தொடர் பயிற்சியால் விளைவது.. பதக்கக்கனவுகள் இளமையிலேயே ஊட்டப்படவேண்டும்.

மண்ணில் புரண்டு விளையாடவேண்டிய வயதில் புத்தகமூட்டை சுமக்கவைத்து வேன்களுக்குள் அடைத்துவிட்டு பதக்கங்கள் வேண்டுமெனில் பறித்துக்கொண்டா வரமுடியும்.

வல்லரசு நாடுகளின் கல்விமுறையில் விளையாட்டுக்கென செய்யப்படும் வசதிகளை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்.

சந்து பொந்துகளில் பள்ளிகளை கட்டிவிட்டு..
பள்ளியின் ஆரம்பக்காலங்களில் விளையாட்டு மைதானமாய் இருக்கும் திடல்களில் முளைத்துவிடுகிறது கட்டடங்கள்..

பள்ளிகளை விட்டுவிடலாம்..

வீட்டுமனைப்பிரிவுகளுக்கான ஒப்புதல் பெறும்போது விளையாட்டு மைதானம் ,
வழிபாட்டிற்கான இடமென விட்டால் தான் கிடைக்கும்..

மனசாட்சியுடன் சொல்லுங்கள்  வழிபாட்டு இடத்தில் ஆலயம் கட்டிய நாம் விளையாட்டு மைதானங்களை விட்டுவைத்தோமா?

பதக்கங்கள் ஒன்றும் நம்மை நிமிர்த்திவிடப்போவதில்லை.

அவர்கள் பதக்கம் பெறக்கூடாதென்பதும் என் தனிப்பட்ட ஆசைகூட.

உலகமெங்கும் பறந்து முகம்காட்டும் தலைமைக்கு இதைவிட பரிசளித்துவிட முடியும்.?

சஞ்சீவி மூலிகை தேடுவதும், ராமர் பாலத்தை போற்றுவதும் இருக்கட்டும். விளையாட்டுக்கும் கொஞ்சம் மனம் திரும்பட்டும்.

கணக்கற்ற மக்கள் கூட்டத்தில் ஊழல் நடப்பதும்,பரிந்துரைகள் நடப்பதும்,குழிபறிப்பதும் நினைத்தாலும் தவிர்க்க முடியாததாய் இருக்கிறது...

ஏமாற்றம் தவிர்க்க என்ன செய்யலாம்.?

மேற்படிப்புக்கு செல்லவேண்டுமெனில் கட்டாயமாய் ஒரு விளையாட்டில் சிறப்படைந்திருக்க
வேண்டுமென்ற விதிவைக்கலாம்.
சர்வதேச விதிகளை பின்பற்றலாம்.

நான்காண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் சென்று தலையை தொங்கப்போட்டு வரும் முன்பே ..

அந்தப்பிரிவுகளில் மற்ற தேசத்து வீரர்களின் தரம் ,மற்றும் கால அளவுகளின் பக்கத்திலேனும் வருபவர்களை மட்டுமே அனுப்பலாம்.

பத்துபேர் கலந்துகொள்ளும் போட்டியில் பத்தாவதாய் வரும் தகுதிமட்டுமே கொண்டவர்களை இங்கேயே இருந்து தொலைகாட்சியில் ஒலிம்பிக் பார்க்க சொல்லலாம்..

ஆகச்சிறந்த மாற்று யோசனையாய்..

அடுத்தமுறை ஒலிம்பிக்கிற்கு வீரர்களை அனுப்புவதற்குப் பதிலாய் நம் அரசியல்வாதிகளையும், விளையாட்டுத்துறை பெரியவர்களையும் மட்டும் அனுப்பலாம்...
கண்டிப்பாய் பலன் இருக்கும்..

ஒன்று விளையாட்டை மேம்படுத்த ஒருவழி...
அல்லது வேறெப்படி பயனடயலாம் என...

விடு சக்தி...

ஒலிம்பிக் சென்ற நம் வீரர்கள் பிரேசிலின் அழகினை கண்களில் நிரப்பி பத்திரமாக ஊர்வந்து சேரட்டும்...

அன்புடன்.
செல்வக்குமார்.

பால்....

பால்கார
வீடென அறியப்படும்..

மத்துகள் சுழல
மாடுகள்
உரச
குழலூதும்
கண்ணன்
பானையுருட்டி
படத்திலிருப்பான்
ஊதுபத்தி புகையில்.

சீம்பால்
கிடைக்குமென
சிறுவர்கள்
கூட்டமே
காத்திருக்கும்.

எப்போதும்
நெய்யுருக்கும்
முறுகலில்
காற்றும்
கனிந்திருக்கும்..

தலைமுறைகள்
மாற்றத்தில்
மாடுகளும்
மனிதர்களும்
வெளியேறிப்போனார்கள்.

இழுத்துக்கிடந்த
கிழவி
புதைத்து
இரண்டாம் நாள்..
பத்திரமாய்
எடுத்து
வைக்கிறார்கள்
பாக்கெட் பால்.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

பட்டிமன்ற தேவதைகள்..

நீங்கள்
பட்டிமன்றம்
முடிந்ததும்
கிளம்பிவிடுவீர்கள்..
அல்லது
பாதியில்
கிளம்பவும்
வாய்ப்பிருக்கிறது..

நேற்றைய
வடமாவட்ட
குக்கிராமமொன்றின்
கூழூற்றும்
நாளின்
இரவில்
பழையபாடலா?
புதியபாடலா?
தலைப்பில்
பேசிவிட்டு..

மோட்டலின்
ஒற்றைதோசையுடன்..
என்
வீட்டுவழி
கடந்த
பேருந்தில்...

வாசல்கொடியில்
காயவைத்த
உள்பாவாடை
சுருண்டு காய்கிறது..

இரவு
ஏழுமணிக்குள்
தூத்துக்குடி
அருகில்
கொடைவிழா...

வீட்டின்
முன்னேற்றம்
ஆண்களாலா?
பெண்களாலா?
பேசித்
தீர்க்கவேண்டும்
நேரத்தை...

தூக்கம் மறைத்து
உட்கார வேண்டும்
பிளாஸ்டிக்
சேரில்
தீர்ப்பு வரும்வரை..

ஆணெனப்படுபவர்
மூன்று முறை
தம்மடித்து
தாகம்
தீர்த்து வருவர்..

வாய்பிளக்கும்
கொட்டாவி
அடக்கி..

மாலையில்
வைத்த
மல்லிகை
சிதறாமல்
எதிரணி
கவனித்து..

சேலை
பறக்காமல்..

சீட்டியடிக்கும்
குடிமகன்
சிரிக்கவைத்து..

புரியாத
பாடல் சிலவும்,

புளித்துப்போன
நகைச்சுவையும் சொல்லி...

நடுவரைக்
கெஞ்சி,
நடத்துனரை
வாழ்த்தி

நள்ளிரவு நகர...
கைவரும்
கவர்பிரித்து
பேருந்துக்கென
பிரித்தது போக
பத்திரப்படுத்தி...

கூட்டமாய்
பஸ்ஸுக்கு
நிற்கையில்
கோழி
எழுந்துவிடும்...

பிள்ளையின்
படிப்பு
எப்படியிருக்கிறது?
அவர்
என்ன உண்டார்?

அரிசியுண்டா?
காயிருக்கிறதா?
பிள்ளை கேட்ட
பிரியாணி
இன்றேனும்
வாய்க்குமா?
மருத்துவர்
பார்க்கலாமா?

தூக்கம்
தொலைத்த
பரிசெனக்கிடைத்த
கண்களின்
கருப்புக்கு
என்ன செய்ய?

அலைபேசி
வழியே நடக்கும்
வாழ்க்கை..

அத்தியாய்
பூக்கும்
நட்புக்கள்..

கோடிகள்
புழங்கும்
நட்சத்திர
வாழ்க்கையில்லை...

முந்நூறில்
தொடங்கி
மூவாயிரம் செல்லும்
வாழ்வில்..
கிசுகிசுக்கள்
கொஞ்சமில்லை...

ஆள் அழகில்லை...
பாடும்போது
ஆடவில்லை...
சரியாவே
பேசவில்லை.
அவனோடு மட்டும்
பேசுகிறாய்...
இலக்கிய செறிவில்லை..
இன்னும்
எத்தனையோ..

சொல்லிவிட்டுப்
போங்கள்...
எங்கள்
கவலை
எங்களுக்கு..

பட்டிமன்ற
கலாரசிகப்
பெருமக்களே..

தலைப்புகள்,
நடுவர்கள்
மேடைகள்
மாறி
என்னவாகிப்
போகிறது..

மாறாதிருக்கும்
எங்கள்
வாழ்க்கை
வரமா?
சாபமா?

தீர்ப்பு சொல்லுங்கள்
தூக்கம் வருகிறது.
புதன், 3 ஆகஸ்ட், 2016

தடம் புரள்கிறதா தடம்?

அன்பின் சக்திக்கு,

எப்படியேனும் தமிழ்ச்சமூகத்தை நிமிர்த்திவிட விகடன் ஆரம்பித்திருக்கும் தடம் என்னும் இதழை நானும் தொடர்ந்து வாசிக்கிறேன்.

ஒவ்வொரு இதழிலும் வாசகனை சூடாக்கும் ஒரு காரியத்தை செய்துவிடுகின்றனர்.

ஒருவேளை இது அவர்களின் வியாபார உத்தியாகக்கூட இருக்கலாம்.

கடந்த இதழில் மனுசபுத்திரன் என்பவரை தேசியகவி ஆக்கக்கூறி அழுதிருந்தார் ஒரு  அறிவாளி.

அவர்களின் பேட்டிதான்..

ஆனால் அவர்கள் சொன்ன எல்லாவற்றையும் அப்படியே அச்சிடும் விகடனின் பார்வை புரியவில்லை.

மறுப்புகளும்,வெறுப்புகளும்,அதிகமாக தேடிப்போய் வாங்க வைத்துவிடும் விளம்பர தந்திரமாக இருக்குமோ என்ற ஐயம் வருகிறது.

இந்த இதழிலும் வழக்கம் போல ஜெயமோகனின் நேர்காணல்...

சக எழுத்தாளர்களை தன்னை நக்கீரனாய் நினைத்து...நனைத்து காயப்போட்டிருக்கிறார்.

அவர்களில் சிலர் எழுதுவது  எழுத்தே அல்லவாம்..
தமிழ்ச்செல்வன்,ஆதவன் தீட்சண்யா என சீண்டியிருக்கிறார்...

ஒரு எழுத்தாளனின் எழுத்து பிடிக்கவில்லை எனில் வார்த்தைகளில் வதைப்பது வன்முறை..

உங்கள் அளவுக்கு அவர்கள் எழுத்தாலும், திரையுலகாலும் சம்பாதித்திருக்க மாட்டார்கள் தான்...

அதுசரி...
ஜெயமோகன் அவர்களே

எழுத்தின் எண்ணிக்கையா எழுத்தாளனை கவுரவிக்கிறது?

ஒற்றை வரியில் எழுதிய

' இரவில்
வாங்கினோம்.
விடியவே இல்லை'

என
நின்று கொண்ட
அரங்கநாதனின் வேறு எந்த கவிதை நமக்குத்தெரியும்?

வெயிலோடு போய் என்ற கதை கவர்ச்சியில்லாதது தான்....கவுச்சியும் இல்லாதது அல்லவா?

ஆயிரம் மயிர்கள் காணக்கிடைத்தாலும் ஆதவன் தீட்சண்யாவின் மயிர்கள் மனசுக்குள் வளர்ந்து விட்டதே என்ன செய்ய?

நாலு பேருக்குள் கூட பேசக்கூடாத விசயமல்லவா ...நீங்கள் தடத்திற்கு அருளியது?

இந்த ஈரோட்டுக்கிழவனை இன்னும் எப்படியெல்லாம் சீரழிக்கப்போகிறார்களோ என்ற பச்சாதாபம் பிறக்கிறது.

90 தாண்டிய வயதிலும் மூத்திரப்பையோடு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பேசித்திரிந்த அந்த பெரியாரால் தான் இவ்வளவுக்கேனும் சுதந்திரம் வந்ததை மறந்துவிட்டா பேசுவது?

அவரின் நடத்தைகளில், வாழ்க்கையில் குறைகளை கண்டுபிடிக்கும் அறிவாளிகளே..கருத்துகளில் என்ன குறை கண்டீர்கள்?

வைக்கம் போராட்டம் பற்றிய வரலாற்று அறிவை ஊட்டுகிறார்.
எங்கோ ஒரு மாநிலத்தில் தானே என நில்லாமல் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு யார் போகச்சொன்னது பெரியாரை?

நீங்கள் சொல்வது போல அவர் பெரிய வீரரல்ல என்பது பாவம் காந்திக்கு புரிந்திருக்கவி்லையா?

ஈழப்போராட்டத்தை ஏதோ சிறிய கலவரம் போல் எளிதாக கடந்துபோகும் அவரின் வார்த்தைகள் வலிக்கிறது.

இலங்கையின் போராட்டம் அவர் சொல்வதுபோலவே என்றால் பதுங்கு குழிகளுக்குள் மறைந்தே போன குழந்தைகளை...மார்பகம் அறுபட்டு உயிர்க்குழிக்குள் சொருகிய துவக்குக்கட்டைகளை என்ன சொல்வது...இசைப்பிரியா என்ன செய்தார்?
பாலச்சந்திரன் செய்த பாவம் என்ன...

வேண்டாம் அவர்களைப் புதைத்த இடங்களிலும் பாஸ்பரஸ் குண்டுகள் வீசாதீர்கள்?

பிராமண எதிர்ப்பிற்கு நீங்கள் காணும் புதிய கோணம் ...ஆச்சர்யம்..

ஆனாலும்
அறமெழுதிய மதிப்பிற்குரிய எழுத்தாளர்...

தன் மதிப்பான நேரத்தை மகாபாரதக்கதைகள் எழுதி மக்களுக்கு ஞானம் சேர்க்கலாம்..
திரைப்படங்களுக்கு அறிவான வசனம் தீட்டலாம்...
அவர் விருப்பம் போலவே நாள் கணக்கில் இசை பருகலாம்..

ஆம் சக்தி...
அவர் பேசுவதை விட எழுதுவதில் நன்மை அதிகம்....

நல்ல எழுத்தாளரின் எழுத்து மட்டும் பேசினால் போதாதா?

அன்புடன்.
செல்வக்குமார்.