வியாழன், 2 ஆகஸ்ட், 2018

ஒற்றைவிரல் அவர்களைக் காட்டும்போது...

சமீபத்தில் கேட்ட ஒரு ஆடியோ துணுக்கு  ..
இப்படி தலைப்பிட வைக்கிறது.


ஒரு மாநிலத்தின் முதல்வர் அவர் சார்ந்த கட்சிக்கு மட்டுமல்லாது..அந்த மாநிலத்து மக்கள் அனைவருக்குமான முதல்வர் ஆவார்.

வாக்குகள் அவருக்கு போட்டோமோ இல்லையோ ஜனநாயகத்தின் உயிரிய கோட்பாட்டின் படி அவரே எதிர்ப்பாளருக்குமான தலைவர்.

மாநிலத்தின் அனைத்துத்துறை சம்பந்தப்பட்ட எல்லா ஊழியர்களும் அவருக்கு கீழே பணியாற்றுபவர்கள்.

அத்தகைய மேம்பட்ட பதவியில் இருக்கும் ஒருவர் பேசியதாக கேட்ட ஆடியோ எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தைக்கொடுத்தது.

ஒரு தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய மாணவர்களின் ஆசிரியர்களாக இருப்பவர்களின் ஊதியம்குறித்தும்,
அரசுப்பணியாளர்களின் சம்பளம் குறித்தும் இத்தனை வெளிப்படையாக பேசியிருப்பது...அவருக்கும் அவர் பதவிக்கும் அழகாய் இருப்பதாய் தெரியவில்லை.

82000 சம்பளம் வாங்கும் ஆசிரியர் என அண்ணார் ஆச்சர்யப்பட்டு பேசியிருப்பது வெளியே இருப்பவர்களுக்கு வேண்டுமானால் மிகக் குளிர்ச்சியாக இருக்கலாம்.
ஆனால் அந்த சம்பள பிரச்சனைகளுக்காக அவர்கள் பட்டிருக்கும் வலிகள் சாதாரணமல்ல. 
அரசு ஊழியர் என மிக எளிதாக கடந்து போகும் நாம் அவர்கள் அன்றாடம் படும் பாடுகளை ஆழ்ந்து கவனிப்பதில்லை.

அரைக்காசு சம்பளம் என்றாலும் அரசாங்க வேலை என்பதெல்லாம் மலையேறிப்போனது எப்போதோ.

பின்னர்ப் பணியிலமர்ந்த அத்தனை அரசு ஊழியர்களும் வரைமுறைப் படுத்தப்பட்ட ஊழியத்திற்கே பணி செய்வதும்,எதிர்காலத்துக்கேற்ற ஓய்வூதிய பலன்கள் இல்லாமல் போயிருப்பதும் அவருக்கு தெரியாதா?
எல்லாம் சரியென்றாலும் அவர்களுக்கான சம்பளத்தை எந்த ஒரு கணக்கீடும் இல்லாமலா கொடுக்கப்போகிறார்கள்.

இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இதைப்போன்றே ஊதிய வரைமுறைகள் தானே பின்பற்றப்படுகின்றன.

ஊதியப்பிரச்சனைகள் பற்றிப்பேசும் போதே அவர்களின் பணி குறித்த பல குறைகளையும் பட்டியலிட்டிருக்கும் ஒலிக்குறிப்பு.பல கேள்விகளை தூண்டுகிறது.

ஒரு அமைப்பில் பணியாற்றும் ஊழியரை வேலை வாங்க வேண்டிய கடமை அதன் தலைமைக்கே இருக்கிறது.
அப்படியும் அவர்களின் பணி சரியில்லை எனில் தண்டிக்கும் செங்கோல் உங்களிடமே இருக்கும் போது..
நீங்களே குறை சொன்னால்?

பாடம் நடத்த மட்டும் அமர்த்திவிட்டு ஒரு கிராமப்பஞ்சாயத்து செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் அவர்கள் தலையில் கட்டுவது,மக்கள் தொகை கணக்கீடு,தேர்தல் காலப் பணிகள்.இன்னும் பலப் பல.

அவரின் குரலில் எனக்கு ஒத்துப்போகும் வரிகளும் உண்டுதான்...
வாங்கும் ஊதியத்துக்கேற்ற பணிகளை பலர் செய்வதில்லை தான். 
ஆனால் அதை சரிசெய்ய வேண்டியது யார்?

மிக நேர்மையாகவும் உண்மையாகவும் கூறவேண்டுமெனில் நிலையில்லாத இந்த காலத்தில் அரசுச்சக்கரம் கொஞ்சமேனும் சுழன்று கொண்டிருப்பது அரசு ஊழியர்களின் பணியினால் தான்.

நேர்மையற்ற ஊழியர்களை உருவாக்குவதில் அதிக பங்கு அரசியல்வாதிகளுக்கு இல்லையா?

காவல் நிலையங்களுக்கு அரசியல்வாதிகள் சிபாரிசு செய்வதே இல்லையா?


நேர்மையற்ற கைக்கூலி வாங்கும் அதிகாரிகளிடம் தொடர்பு இல்லாத அரசியல்வாதிகள் இல்லையா?
இடமாற்றல்களுக்கும்,விதிமீறல்களுக்கும் இங்கே விலை யார் வைப்பது?

தங்களுடைய கோரிக்கைகளுக்காக நம்பிக்கையுடன் போராடும் ஒருவருக்கு இப்படிப்பட்ட குரல்கள் முன்கூட்டியே ஒலிக்குமானால் அது ஜனநாயகத்தின் பெரும் அவலம்.

முன்கூட்டியே முடிவெடுத்துவிட்டு அவர்களிடம் பேசுவதை எப்படி இனி நம்புவார்கள்.

உண்மையில் மிக துணிச்சலான தலைவராக இருப்பின் ..நீங்கள் அவர்களின் ஊதியத்தைக்குறையுங்கள்.
நேர்மையில்லாத ,பணி செய்யாத எந்த ஊழியரையும் வீட்டுக்கு அனுப்புங்கள்.
வார்த்தைகள் மட்டும் எப்போதும் தலைமைக்கு அழகல்ல.
தேவை செயல்.

வடமொழியில் ஒரு ஸ்லோகம் உண்டு..

"யதாதே ராஜா,அதாதே பிரஜா"

ஆசிரியர்களை வேலைவாங்கத்தெரியாத,
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத,
நிரப்பப்படாத பணியிடங்களுக்கும் இருப்பவர்களை வைத்தே பணி செய்யச்சொல்லும் அதீத சுமை தராமல் 
எத்தனையோ செயல்களை செய்யவேண்டிய தலைமையே அவர்களின் பால் இத்தனை அவதூறுகளை சொல்லுவது.

தலைப்பை மீண்டுமொருமுறை படித்துக்கொள்ளுங்கள்..


5 கருத்துகள்:

 1. நல்ல கட்டுரை. அரசு பணிகளில் நிறையவே பிரச்சனைகள் உண்டு என்ற புரிதல் நிறைய பேருக்கு இல்லை.

  பதிலளிநீக்கு
 2. உண்மையில் மிக துணிச்சலான தலைவராக இருப்பின் ..நீங்கள் அவர்களின் ஊதியத்தைக்குறையுங்கள்.
  நேர்மையில்லாத ,பணி செய்யாத எந்த ஊழியரையும் வீட்டுக்கு அனுப்புங்கள்.

  துணிவு யாருக்கு இருக்கிறது?
  பயம் மட்டுமே உள்ளது..

  பதிலளிநீக்கு