புதன், 25 ஏப்ரல், 2018

பஞ்சுமிட்டாய் வடிவில் கொஞ்சும் கவிதைகள்...

"சிலரின் கவிதைகள் படைப்பாளனின் பெயர் தெரியாவிட்டாலும் மனசோடு ஒட்டிக்கொள்ளும்..."

"வைகறைக்கான நிதி திரட்டல்  நேரத்தில் கடல்கடந்து வந்த நிதியொன்று எங்கள் நெஞ்சைத் தொட்டது.."

"முகநூலில் வாசித்துக்கொண்டே வரும் போது சில கவிதைகள் நம்மை நிறுத்தி கைகுலுக்கிவிட்டுப்போகும்"

"அயலகத்தில் இருந்தாலும் மனசு முழுவதும் தாய் மண்ணோடு ஒட்டி உறவாடிய உன்னத வேளைகளோடே இயங்கும் எழுத்துகள் வாய்ப்பது வரம்"

"மிக சமீபத்தில் தாயகம் வந்தவர் தன் கவிதைத்தொகுப்பொன்றை வெளியிட்டுள்ளார்"

"தோழன் நாணல் கலந்துகொண்ட அந்த நிகழ்வுக்கு ...நியாயமாய் நான் சென்றிருக்க வேண்டும்"

"கரம்பக்குடியில் 22ல் நடந்த த.மு.எ.ச.க  மாவட்ட மாநாட்டிற்கு நான் போகவேண்டிய அவசியம் இல்லை...ஆனால் போனேன்"

"நிலவன் அய்யா தயாரித்த அழைப்பிதழில் அன்பின் காரணமாய் என் பெயர் இருந்தாலும் சின்ன சின்ன கவிதைகளில் என்னால் வெல்லவும் சொல்லவும் முடியும் என்ற அவரின் நம்பிக்கை என்னை அழைத்துப்போனதும் கவிதை வாசித்ததும் மகிழ்ச்சி என்றால்..."

"யாரின் கவிதைகளோடு கைகுலுக்கிக்கொண்டிருந்தேனோ அவரை நேரில் பார்த்ததும் ..அவரின் சமீபத்திய நூலை அவர் என்னிடம் தந்ததும் மிகுந்த மகிழ்ச்சி"

ஆம்...அருமைக்கவிஞர் யாழிசை மணிவண்ணனின் "பஞ்சுமிட்டாய் பூக்கும் மரம்" என்ற தொகுப்பு பற்றிய என் வாசிப்பு அனுபவத்தை இத்தனை செய்திகளுடன் தான் தொடங்க வேண்டியதாகிவிட்டது....

வானத்தின் நீலத்தில் ஒரு அட்டை...கருவறை நிலையில் ஒரு மனிதன்...காய்த்து பூத்திருக்கும் பஞ்சு மிட்டாய் மரம்...

சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த நூலை என்னைப்போலவே நீங்களும் எதிர்பார்ப்போடே வாசிக்க ஆரம்பிக்கலாம்..

தோழர் கரிகாலனின் அணிந்துரை வரிகளை கடந்து கவிதைகளுக்குள் கண்கள் பதிந்ததும்..நாம்  நார்னியாவின் குழந்தைகளாக பஞ்சுமிட்டாய் கொட்டிக்கிடக்கும் ஒரு வனத்துக்குள் வந்து விடுகிறோம்...

90 பக்கங்களின் தொகுப்பு கவிதைத்தொன்மங்களை புரட்டிப்போடும் கற்பனைகள்..

வார்த்தையில் புதிது வேண்டுமென்ற அலைச்சல் இல்லை..
இருக்கும் வார்த்தைகளே விதைகளாகி இருக்கின்றன..

"அப்பா ஏரோட்டிய பின்
வரப்பில் செருகிய கம்பு
நாளடைவில் மரமாகிப்போனது.
மரமாயிருந்த அவர்தான்
கம்பு போலாகிவிட்டார்"

 இந்த கவிதையில் எந்த புதிய வார்த்தையை நீங்கள் கண்டுபிடிக்கமுடியும்?
ஆயினும் ஒரு வாழ்க்கையை கண்டுகொள்ள முடிவதே கவிதை..

தொகுப்பு முழுவதும் சின்னஞ்சிறிய மூன்று வரிக்கவிதைகள்...
ஆனாலும் நாம் அவ்வளவு எளிதாய் கடந்து போக முடியாமல் கட்டிப்போடும் காந்தப்பூட்டுகளாயிருகிறன.

இடைக்கண்..
நானொரு வாசிப்பாளன் மட்டுமே.தேர்ந்த விமர்சனமென்பது ஒப்பீட்டில் இல்லாமல் படைப்பு தனில் உள்ள உன்னதத்தையும்...ஓரளவு குறைகளையும் சொல்லிவிட்டு படைத்தவனை பாராட்டுவது மட்டுமே என்பது என் நிலை..

விமர்சனமென்ற வெறியில் தொகுப்பின் அத்தனை வரிகளையும் பிரித்து மேய்வதும்...ஆபத்தான உச்சியில் வைத்து போற்றிவிட்டுப்போவதும்..படைப்பாளனுக்கு செய்யும் பச்சை துரோகமன்றி வேறில்லை...
என்ற என் கொள்கைக்கு வேட்டு வைத்துவிடும் கொடும் கணங்களை கடந்து தான் நான் இந்த நூலை வாசித்துவிட்டு எழுதும் நிலையில் உணரத்தொடங்கினேன்..

பிரியங்களைப்பற்றி எழுதும் போது பறவையின் இறகுகளாய் விரிபவர்...சமூகம் பற்றி எழுதும் போதே எரிய ஆரம்பிக்கிறார்..

"ஆண்ட பரம்பரையின் பிணத்தில்
அடுக்கியிருந்த
சாண வரட்டிகளில்
ஆதிதிராவிடனின்
கைரேகைகள்."

"கச்சை மீறி சுரக்கிறாள்
கோபுரத்தில்
சிற்பமாகச் சமைந்தவள்
சற்றுமுன் பெய்த மழை"

"தன் நெடுவாழ்வினைத்
தோசைக்கல்லில்
எழுதிப்பார்க்கிறாள் அம்மா.
பூஜ்ஜியமாகக் கிடைக்கிறது விடை"

"எல்லாம் செய்தது
சலவை இயந்திரம்
கண்மாய் வற்றினாலும்
பெயர் மாறவில்லை
வண்ணாந்துறை"

"புத்தநிலை கூடுதல் தூரம்
திரும்பிச்செல்லுங்கள்
பக்கத்தில்தான் குழந்தைநிலை"

என்னையறியாமல் என் விரல்கள் தொட்ட சில வரிகளில் நான் என்னை இழந்த நிமிடங்கள்...

தொகுப்புக்காய் சில கவிதைகள் தொற்றிக்கொண்டாலும் அவை ஆறாம் விரல்களாய் அல்லாமல் அவசியமாய்த்தான் இருக்கிறன...
சில கவிதைகளில் மட்டும் வார்த்தைகள் சில கூடுதலாய் இருப்பது குற்றமாகாது எனினும் கூடுதல் சுமைதான்...

யாழிசை மணிவண்ணன் இளம்பிராயத்துக்காரர்..
இன்னும் எத்தனையோ எழுதப்போகிறவர்...
விமர்சனமாயில்லாமல் இதை வாழ்த்துரையாக எடுத்துக்கொள்ளும் மனோநிலை வாய்த்தவர்...
அடையப்போகும் அவரின் வெற்றியின் வெளிச்சம் எனக்கு தெரிகிறது...வாசிக்கும்  கண்களில் பழுதில்லை எனில் உங்கள் கண்களுக்கும் அது காணக்கிடைக்கலாம்...
யாழிசையின்   மற்றுமொரு கவிதையோடு இந்த அனுபவத்தை நிறைவு செய்யலாம்...

"சிரிக்கத் தெரிந்த
கனிகள் அனைத்தையும்
கடித்து வைத்திருந்தது அணில்""

ஆம்...என்னைப்போலவே!!!

வாழ்த்துகள்
யாழிசை மணிவண்ணன்..11 கருத்துகள்:

 1. எடுத்துச் சொன்ன வரிகள் அனைத்தும்
  நிச்சயம் படிக்க வேண்டும்
  என்கிறஆவலைத் தூண்டுகிறது
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 2. சொல்லி இருக்கும் வரிகள் யாவுமே சிறப்பு. நல்லதொரு அறிமுகம்.

  பதிலளிநீக்கு
 3. அற்புதமான பார்வை. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.

  பதிலளிநீக்கு
 4. வாசிக்க தூண்டும் அறிமுகம்...அருமை

  பதிலளிநீக்கு
 5. யாழிசை மணிவண்ணனின் "பஞ்சுமிட்டாய் பூக்கும் மரம்" சிறப்பான அறிமுகம்.

  பதிலளிநீக்கு
 6. Tamil Us உங்கள் செய்திகளை, பதிவுகளை உடனுக்குடன் எமது திரட்டியிலும் பகிர்ந்து கொள்ளுங்கள். பலரைச் சென்றடையும்.

  வணக்கம்,

  www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

  உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

  நன்றி..
  Tamil Us

  பதிலளிநீக்கு
 7. அறிமுகமும் கவிதைகளும் அருமை நண்பரே
  அந்த படைப்பாளிக்கும் வாழ்த்துகள்,
  விமர்சனம் தந்த நண்பரே உங்களுக்கும் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு