திங்கள், 30 ஏப்ரல், 2018

வரலாறு...சுற்றுமோர் தத்துவம்..

மத்திய ஆட்சிக்கான தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கும் சூழல்..

கடந்த நான்கு வருட காலங்களில் நாடு மக்களை தோசையாய் திருப்பி திருப்பி போட்டு சுட்டிருப்பது எல்லாரும் அனுபவித்த கதை தான்...

மானியங்களின் வெட்டில் ஆரம்பித்து வங்கிக்கணக்குகள் நிரம்பி வழிய...
ஒற்றை நொடியில் மக்கள் ரோட்டுக்கு வந்து நின்றதை அவ்வளவு எளிதில் மறக்க முடிந்தால் நீங்கள் என் வரிகளை வாசிக்காமல் வேறு வேலை பார்க்கலாம்..

பூமிப்பந்தின் எல்லா நாடுகளுக்கும் போய்வந்த ஒரு தலைமை..
லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஆடைகள்...அலட்சியமாய் பேசத்துணிந்த அமைச்சர்கள்..
இந்த ஆட்சி பற்றிய குறைகளை சொல்ல ஆரம்பித்தால் என் வலைப்பூ காய்த்து கனிந்துவிடும்..
நிற்க...

நான் எழுத வந்த விசயம் அதுவல்ல...
ஆட்சி என்னும் நாற்காலி கிடைத்தால் செருப்பு கூட கௌரவம் பெறும் தேசம் தான்..

இப்படி ஒரு ஆட்சி நடந்த ஆண்டுகளில் பொறுப்பான எதிர்கட்சிகள் உருப்படியாய் என்ன செய்தது என பூதக்கண்ணாடி வைத்துப்பார்த்தாலும் சிறுபுள்ளியும் எனக்கு தெரியவில்லை..

டிவிட்டரிலும்,முகப்புத்தகங்களிலும் வார்த்தைப்போர்கள் நடப்பது சாதாரண மக்களுக்கென்றால் மன்னிக்கலாம்...தலைமைகளே அப்படியெனில் தவறன்றி வேறில்லை..

பணமதிப்பிழப்பு நேரத்திலும்,
நாடே பதறிய மாட்டுக்கறி பிரச்சனையிலும் சொல்லிக்கொள்ளும்படி போராட்டங்கள் இல்லை..அல்லது இவர்கள் போராடி எதையும் மாற்றிவிடவில்லை..
இந்த காலங்களில் கம்யூனிசய இயக்கங்கள் சந்தித்த பகடிகள் சொல்லும்படி இல்லை..

எதிரி எடுத்த ஆயுதமே நம் போராட்டத்தின் வடிவத்தை
முடிவு செய்யும் என்ற தத்துவமெல்லாம் சரிதான் ஆனால் எதிரி என்ன ஆயுதம் எடுத்திருக்கிறான் என்பதேனும் தெரிந்தார்களா என்பதே கேள்வி?

அவர்களின் பொலிட்பீரோ மற்றும் தலைவர்களின் நிலைப்பாட்டிலெல்லாம் எங்களுக்கு கவலையில்லை..
மக்களின் கவலைகள் வெற்று கோஷங்களில் தீர்ந்துவிடும் என்ற அவர்களின் நம்பிக்கையின்பால் தான் எனக்கு நகைச்சுவை வரவில்லை...

ஆட்சியின் 90 சதவீத காலம் அனுபவித்துவிட்டு வெளியேறும் ஒரு மாநிலக்கட்சி..
புதிதாய் கிளம்பியிருக்கும் கூட்டணிக்கான ஆயத்தங்கள்..
அதை எடுத்துச்செல்லும் புதிய புதிய தலைவர்களென அவர்கள் எடுக்கும் முயற்சிகள் நல்லதாகக்கூட உங்களுக்கு தோன்றலாம்...ஆனால் எனக்கு பயமாய் இருக்கிறது..

தெரிந்தோ தெரியாமலோ இணையத்தின் வழியேயும்..இயங்குதலின் அடிப்படையிலும் எதிர்க்கவேண்டிய சக்தியின் பலம் தலைவர்களை விட மக்களுக்கு தெரிந்தே இருக்கிறது..
உதாரணமாய் காவிரி பிரச்சனையில் அவர்கள் செய்யும் சூழ்ச்சி கடைமடையின் எங்கள் படிப்பறிவில்லா ஒரு ஏழைப்பெண் அறிந்து கொண்டிருக்கிறாள்...

கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுகளாக திட்டமிட்டு அதன் இலக்கை நோக்கி நகர ஆரம்பித்தவர்கள்.
தன் ஆதரவாளர்களை அல்லது தங்கள் ஆட்களை உச்ச நீதிமன்றம் முதல் மிச்சமிருக்கும் எல்லா இடங்களிலும் நிரப்பியிருப்பதை உணர்கிறோம்.
நீங்கள் பேசிக்கொண்டிருந்த போது அவர்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
இப்போதும் கூட அப்படித்தான்..

செல்லாத ஓட்டுகள் கூட பெற முடியாத பூமி என உணர்ந்தாலும் அவர்களின் பகீரத முயற்சிகளை... எதிர்த்தரப்பு என்றாலும் பாராட்டுவேன்..

பெரியார் சிலைகளை நம்மை பாதுகாக்க வைத்துவிட்டு அவர்கள் பெரிய சாகர்மாலாத்திட்டங்களை நிறைவேற்ற ஆரம்பித்திருப்பது வெளிச்சமாய் தெரிகிறது...

வெங்காயம் பூண்டு கடலைமிட்டாய்,ஊறுகாய்க்கெல்ல்லம் Gst வரும்போது பெட்ரோலுக்கு ஏனில்லை என்ற ரகசியம் ஒன்றும் பெரிதில்லை.

இப்படி ஆயிரம் சொல்லிக்கொண்டு போக சமாச்சாரங்கள் இருந்தாலும் இப்போது எதிர்த்தரப்பை வீழ்த்த யூகம் செய்திருப்பதாய் நான் உணர்வது சொல்லிக்கொள்ளும் படியாய் இல்லை..

அரை நூற்றாண்டுகள் ஆண்ட ஒரு கட்சி தேசமறிந்த அமைப்பாய் இருக்கும் போது அதை தவிர்த்து மற்றுமொரு கூட்டணிக்கு முயற்சி செய்வது கூட ஆளும் அமைப்பின் செயலாய் இருக்குமோ என்ற சந்தேகத்தை துளிர்க்க வைக்கிறது.

இந்த தேசத்தின் கட்சிகள் ஒன்றும் கற்புக்கரசிகள் இல்லை..ஒற்றைக்கட்சியுடன் மட்டும் கூட்டணி வைத்த கட்சிகள் எதுவுமிருப்பதாய் தெரிவதில்லை...
அதிலும் இத்தனை நாள் இல்லாமல் போராட்டங்களில் ஆர்ப்பாட்டங்களில் தேனீர்சந்திப்புகளில் மனிதச் சங்கிலிப்போராட்டங்களில் கைகள் கோர்த்தும் உயர்த்தியும் இருந்துவிட்டு .இப்போது விட்டுவிட்டுப்போவது உங்கள் கொள்கை சார்ந்த கோட்பாடெனில் முதலில் அதற்கு கொள்ளி வையுங்கள்..

ஊர் ரெண்டுபட்டால் மட்டுமல்ல...எதிர்ப்புகள் ரெண்டு பட்டாலும் அவர்களுக்கு கொண்டாட்டம் தான்...
அத்தகைய உங்களின் முயற்சி அவர்களை மிக எளிதாக இன்னொரு ஆட்சி காலத்தில் இந்தியா முழுமையும் பாலைவனமாக்க நீங்களை ஆரம்பித்து வைப்பதாய்த்தான் அமையும்..
மண்ணாங்கட்டி கொள்கைகளையும்,
சித்தாந்தங்களையும் எதிர்கட்சிகள் யாவும் ஒதுக்கிவிட்டு குறைந்த பட்ச ஒற்றை இலக்கான மதவாதத்தை ஒழிப்பதற்காகவேணும் ஒன்றுசேருங்கள்..
ஏனெனில் இந்த நாட்டின் ஆகப்பெரிய தீங்கு ஊழலில்லை,
ஒழுக்கக்கேடில்லை..
வறுமை கூட இல்லை...
எல்லாவற்றையும் மிஞ்சும் மதவாதமே முதல் கேடு...

இந்த நாட்டையும் அரசியலையும் கொஞ்சமேனும் கவனித்து வரும் ஒரு சாதாரணக்குடிமகனாய் நான் வேண்டுவதும் இதுதான்.
இந்த மாநிலத்தில் ஏற்கனவே மக்கள் நலக்கூட்டணி என்ற வரலாற்றுப்பிழை ஏற்கனவே கசப்பான அனுபவத்தை எங்களுக்கு வழங்கிவிட்டது..
தேசிய அளவில் மீண்டும் அப்படி ஒன்று நிகழுமெனில் அது பேராபத்து..

மாநிலங்களில் இருக்கும் அத்தனை கட்சிகளை ஒருங்கிணைக்க துடிக்கும் உங்களால் காங்கிரஸ் என்னும் கட்சியை ஒருங்கிணைப்பது முடியாததல்ல..
காங்கிரஸும் இன்றைய நிலையில் நிபந்தனைகள் அதிகம் விதிக்கும் நிலையில் இருப்பதாகவும் தெரியவில்லை..

மாண்பமை எதிர்க்கட்சிகளே..
முதலில் கண்ணுக்குத்தெரியும் பிரச்சனையை தீர்க்கப்பாருங்கள்...
அதற்காகவேணும் பிரியாமல் ஒன்று சேருங்கள்..
அது உங்களின் பக்கம் மக்களைத்திருப்பும்..

மக்கள் மனங்களை படிக்காத அவர்களின் கவலைகளை புரிந்து கொள்ளாமல் நீங்கள் எத்தனை கூட்டணி வைத்தாலும் வெல்லுமென தெரியவில்லை..

மீண்டுமொரு வரலாற்றுப்பிழையை செய்துவிடாமல்...காலம் கடக்கவில்லை கை கோருங்கள்...













புதன், 25 ஏப்ரல், 2018

பஞ்சுமிட்டாய் வடிவில் கொஞ்சும் கவிதைகள்...

"சிலரின் கவிதைகள் படைப்பாளனின் பெயர் தெரியாவிட்டாலும் மனசோடு ஒட்டிக்கொள்ளும்..."

"வைகறைக்கான நிதி திரட்டல்  நேரத்தில் கடல்கடந்து வந்த நிதியொன்று எங்கள் நெஞ்சைத் தொட்டது.."

"முகநூலில் வாசித்துக்கொண்டே வரும் போது சில கவிதைகள் நம்மை நிறுத்தி கைகுலுக்கிவிட்டுப்போகும்"

"அயலகத்தில் இருந்தாலும் மனசு முழுவதும் தாய் மண்ணோடு ஒட்டி உறவாடிய உன்னத வேளைகளோடே இயங்கும் எழுத்துகள் வாய்ப்பது வரம்"

"மிக சமீபத்தில் தாயகம் வந்தவர் தன் கவிதைத்தொகுப்பொன்றை வெளியிட்டுள்ளார்"

"தோழன் நாணல் கலந்துகொண்ட அந்த நிகழ்வுக்கு ...நியாயமாய் நான் சென்றிருக்க வேண்டும்"

"கரம்பக்குடியில் 22ல் நடந்த த.மு.எ.ச.க  மாவட்ட மாநாட்டிற்கு நான் போகவேண்டிய அவசியம் இல்லை...ஆனால் போனேன்"

"நிலவன் அய்யா தயாரித்த அழைப்பிதழில் அன்பின் காரணமாய் என் பெயர் இருந்தாலும் சின்ன சின்ன கவிதைகளில் என்னால் வெல்லவும் சொல்லவும் முடியும் என்ற அவரின் நம்பிக்கை என்னை அழைத்துப்போனதும் கவிதை வாசித்ததும் மகிழ்ச்சி என்றால்..."

"யாரின் கவிதைகளோடு கைகுலுக்கிக்கொண்டிருந்தேனோ அவரை நேரில் பார்த்ததும் ..அவரின் சமீபத்திய நூலை அவர் என்னிடம் தந்ததும் மிகுந்த மகிழ்ச்சி"

ஆம்...அருமைக்கவிஞர் யாழிசை மணிவண்ணனின் "பஞ்சுமிட்டாய் பூக்கும் மரம்" என்ற தொகுப்பு பற்றிய என் வாசிப்பு அனுபவத்தை இத்தனை செய்திகளுடன் தான் தொடங்க வேண்டியதாகிவிட்டது....

வானத்தின் நீலத்தில் ஒரு அட்டை...கருவறை நிலையில் ஒரு மனிதன்...காய்த்து பூத்திருக்கும் பஞ்சு மிட்டாய் மரம்...

சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த நூலை என்னைப்போலவே நீங்களும் எதிர்பார்ப்போடே வாசிக்க ஆரம்பிக்கலாம்..

தோழர் கரிகாலனின் அணிந்துரை வரிகளை கடந்து கவிதைகளுக்குள் கண்கள் பதிந்ததும்..நாம்  நார்னியாவின் குழந்தைகளாக பஞ்சுமிட்டாய் கொட்டிக்கிடக்கும் ஒரு வனத்துக்குள் வந்து விடுகிறோம்...

90 பக்கங்களின் தொகுப்பு கவிதைத்தொன்மங்களை புரட்டிப்போடும் கற்பனைகள்..

வார்த்தையில் புதிது வேண்டுமென்ற அலைச்சல் இல்லை..
இருக்கும் வார்த்தைகளே விதைகளாகி இருக்கின்றன..

"அப்பா ஏரோட்டிய பின்
வரப்பில் செருகிய கம்பு
நாளடைவில் மரமாகிப்போனது.
மரமாயிருந்த அவர்தான்
கம்பு போலாகிவிட்டார்"

 இந்த கவிதையில் எந்த புதிய வார்த்தையை நீங்கள் கண்டுபிடிக்கமுடியும்?
ஆயினும் ஒரு வாழ்க்கையை கண்டுகொள்ள முடிவதே கவிதை..

தொகுப்பு முழுவதும் சின்னஞ்சிறிய மூன்று வரிக்கவிதைகள்...
ஆனாலும் நாம் அவ்வளவு எளிதாய் கடந்து போக முடியாமல் கட்டிப்போடும் காந்தப்பூட்டுகளாயிருகிறன.

இடைக்கண்..
நானொரு வாசிப்பாளன் மட்டுமே.தேர்ந்த விமர்சனமென்பது ஒப்பீட்டில் இல்லாமல் படைப்பு தனில் உள்ள உன்னதத்தையும்...ஓரளவு குறைகளையும் சொல்லிவிட்டு படைத்தவனை பாராட்டுவது மட்டுமே என்பது என் நிலை..

விமர்சனமென்ற வெறியில் தொகுப்பின் அத்தனை வரிகளையும் பிரித்து மேய்வதும்...ஆபத்தான உச்சியில் வைத்து போற்றிவிட்டுப்போவதும்..படைப்பாளனுக்கு செய்யும் பச்சை துரோகமன்றி வேறில்லை...
என்ற என் கொள்கைக்கு வேட்டு வைத்துவிடும் கொடும் கணங்களை கடந்து தான் நான் இந்த நூலை வாசித்துவிட்டு எழுதும் நிலையில் உணரத்தொடங்கினேன்..

பிரியங்களைப்பற்றி எழுதும் போது பறவையின் இறகுகளாய் விரிபவர்...சமூகம் பற்றி எழுதும் போதே எரிய ஆரம்பிக்கிறார்..

"ஆண்ட பரம்பரையின் பிணத்தில்
அடுக்கியிருந்த
சாண வரட்டிகளில்
ஆதிதிராவிடனின்
கைரேகைகள்."

"கச்சை மீறி சுரக்கிறாள்
கோபுரத்தில்
சிற்பமாகச் சமைந்தவள்
சற்றுமுன் பெய்த மழை"

"தன் நெடுவாழ்வினைத்
தோசைக்கல்லில்
எழுதிப்பார்க்கிறாள் அம்மா.
பூஜ்ஜியமாகக் கிடைக்கிறது விடை"

"எல்லாம் செய்தது
சலவை இயந்திரம்
கண்மாய் வற்றினாலும்
பெயர் மாறவில்லை
வண்ணாந்துறை"

"புத்தநிலை கூடுதல் தூரம்
திரும்பிச்செல்லுங்கள்
பக்கத்தில்தான் குழந்தைநிலை"

என்னையறியாமல் என் விரல்கள் தொட்ட சில வரிகளில் நான் என்னை இழந்த நிமிடங்கள்...

தொகுப்புக்காய் சில கவிதைகள் தொற்றிக்கொண்டாலும் அவை ஆறாம் விரல்களாய் அல்லாமல் அவசியமாய்த்தான் இருக்கிறன...
சில கவிதைகளில் மட்டும் வார்த்தைகள் சில கூடுதலாய் இருப்பது குற்றமாகாது எனினும் கூடுதல் சுமைதான்...

யாழிசை மணிவண்ணன் இளம்பிராயத்துக்காரர்..
இன்னும் எத்தனையோ எழுதப்போகிறவர்...
விமர்சனமாயில்லாமல் இதை வாழ்த்துரையாக எடுத்துக்கொள்ளும் மனோநிலை வாய்த்தவர்...
அடையப்போகும் அவரின் வெற்றியின் வெளிச்சம் எனக்கு தெரிகிறது...வாசிக்கும்  கண்களில் பழுதில்லை எனில் உங்கள் கண்களுக்கும் அது காணக்கிடைக்கலாம்...
யாழிசையின்   மற்றுமொரு கவிதையோடு இந்த அனுபவத்தை நிறைவு செய்யலாம்...

"சிரிக்கத் தெரிந்த
கனிகள் அனைத்தையும்
கடித்து வைத்திருந்தது அணில்""

ஆம்...என்னைப்போலவே!!!

வாழ்த்துகள்
யாழிசை மணிவண்ணன்..



















ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

கதம்பம்...

22.04.2018
த.மு.எ.ச.க
புதுக்கோட்டை மாவட்ட மாநாட்டில்
தோழமைக்கவிஞனாக வாசித்த சில நறுக்குகள்....

××××××××××××××××××

தமிழ்த்தாய் வாழ்த்து..
மட மனிதர்கள்
எழ
வேண்டியதில்லை...
#########

நிர்மலாக்களின்
தேசம்
ஆசிபாக்கள்
நாசம்
######

புதிய கல்விமுறையில்
புத்தாக்கப்பயிற்சிமுடித்த
பேராசிரியை
வகுப்பெடுத்தார்
வாட்ஸ் அப்பில்...
#######

பாஸ் போடுறேன்னு
சொன்னவளுக்கு
பெயிலும்
கிடைக்க வில்லை
##########

பட்டங்கள்..
நூல்களின்
கையில்
######

இரவுநேரக்கல்வி
ஆரம்பிக்கலாம்
பல்கலைக்கழகம்
#######
ஆடியோ ஆபத்தாகிறது...
சைகை மொழி
படிப்பார்கள்
######

கேட்டால் தான்
தெரிகிறது..
கெட்டால் தான்
மேன் மக்கள்
#######

காவேரி
வந்துவிடும்
கர்நாடகாவில்
மழை
பெய்தால்
######

அமோக விளைச்சல்
லாரிகளில்...
காவேரி...
#######

மாநிலம்
வாழ்ந்த
வாழ்க்கைக்கு..
எத்தனையோ
மந்திரிகள்
########

ஆட்சியின்
லட்சணத்தை
அளந்து
காட்டியது
தெர்மாகோல்
#######

ஆய்வுக்குப்போனவர்
குப்பையை
அள்ளி
கோட்டுக்குள்
போட்டுக்கொண்டார்
#########

கன்னம்
குழி விழும் இடம்
######

உலக அமைதிக்காய்
ரதம் வந்த நாளில்
ஊரடங்கு
உத்தரவு
அமலிலிருந்தது
#########

கேரள
கோமாதா
ஈன்ற
கன்று
காவிநிறம்
#######

நசுக்கிய
மட்டையில்
முக்கியும்
அடிக்கலாம்
காவி
###########

நம்
முன்னோர்
ஒன்றும்
முட்டாளில்லை
நம்பமுடியாத
வித்தையை
மோடி
என்றார்கள்.
#######

மகாபாரத
காலத்தில்
இணையம்
இருந்ததாம்..
வீடியோக்கள்
வெளிவந்த
விவரமில்லை
சிஸ்டம்
அப்பவே
பெய்லியராயிடுச்சுடா..
##########

மைய்யத்தில்
ஸ்ரீ கிருஸ்ண
குமாரனுக்கு
ஓரத்தில் தான்
ஓரிடம்.
######

நீதி மன்றங்கள்
விசாரிக்கப்படவேண்டிய
இடம்
நீதிபதிகளை...
#######

கர்நாடக
இசை
புரிவதில்லை...
தமிழிசை
பிடிக்கவில்லை.
######

மந்திரி கலந்துகொண்ட
மரம் நடுவிழாவில்
மைல் நீள
தடுப்புக்கட்டைகள்
######

பிடிக்கவே
முடியவேயில்லை
மந்திரி...
மாட்டை
#######
பரிணாம வளர்ச்சி...
மனிதனிலிருந்து
மாடு...
நூற்றாண்டு
விழாக்கள்
முடிந்து
ஜல்லிக்கட்டு
#########

சேரிகள்
நிறைந்த ஊர்...
விலகிப்போனது
புறவழிச்சாலை
######

ஆகா
பாலங்கள்
என்றோம்...
மலைகள்
பள்ளமானது
##########

உள்ளூர்
உண்டியல்
உடைத்தவன்
திருப்பதிக்கு
வேண்டிக்கொள்கிறான்..
##########

சிலை
கடத்தப்படும் போது
தெய்வத்தின்
மதிப்பு
தெரிந்து போகிறது
######

வேம்பில்
பால் வழிந்தது..
பிள்ளையார்
பால் குடித்தார்..
அய்யனார்
குதிரையில்
போனார்..
அம்மன்
மாராப்பை
இழுத்து
மூடிக்கொண்டாள்.
#########

சிலைகள்
உலகம்
சுற்றும்
போட்டியில்
இரண்டாமிடம்
பெற்றன.
############

உதைப்பது
போல
நிற்கிறார்
கடவுள்
அடுத்த
அறையில்
அம்மனுக்கு
அபிஷேகம் நடக்கிறது.
#########

கோவணத்துடன்
இருப்பதால்
அவன்
தமிழ்க்கடவுள்
###########

பொதுவெளியில்
கழிக்காதீர்கள்..
ஏற்கனவே
நாறிக்கிடக்கிறது..
###########

சோப்புபோட்டு
கை கழுவுங்கள்...
மைக் கறைகள்
######

தூய்மை
பாரதம்
வேண்டுமெனில்
துடைப்பம்
எடுக்க வேண்டும்
#######

அடுத்த தேர்தலில்
கவனமாய்
இருங்கள்
கள்ள நோட்டுகள்
########

புதுப்பாட்டி
கதை சொல்கிறாள்..
ஒரு ஊர்ல
ஒரு
ராஜா
இருந்தானாம்
அவனுக்கு
ஒரு
அட்மின்
இருந்தாராம்..
########

என்ன தொழில்
செய்யலாம்
என்ற
நண்பனுக்கு
செருப்புக்கடை
என்றேன்..
நடக்கவும்
உதவும்..
#########

மையாய் இருந்தாலும்
தவறுகளை
அடிக்கும்
..சிவப்பு..
############

கலை இரவுகள்
விடியும் வேளை
சிவப்பாய் இருக்கும்
#######

















திங்கள், 16 ஏப்ரல், 2018

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

அவள் உறங்கட்டும்..

அவளை விட்டு விடுங்கள்..
அமைதிப்பள்ளத்தாக்கின்
புல் படுக்கையில்
அவள் ஆன்மாவேனும்
அமைதியாய் தூங்கட்டும்..

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

நீதிமன்றமே....நீதியில்லையா?

ஜனநாயக நாட்டின் வலிமையான தூண்களில் ஒன்று நீதித்துறை.. ஆட்சியாளர்கள் எத்தனை வருடத்திற்கு ஒருமுறை மாறினாலும் நீதித்துறை, மாறாத துறையாக இந்திய அரசியலமைப்புச்சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீதி மன்றங்களே நாட்டின் ஆகப்பெரிய வழிநடத்துவதாய் இருக்கும் நாட்டில் அந்த துறை இப்போது எப்படி இருக்கிறது என்பதை அடிப்படை அறிவு உள்ள யாவரும் அறிவார்கள்..

உள்ளூர் நீதி மன்றங்களில் கிடைக்கும் தீர்ப்புகளும்,மாநில அளவில் நடைபெறும் மாற்றங்களும்,உச்ச நீதிமன்றம் என்னும் அதன் தலைமைப்பீடம் பற்றிய செய்திகளும் அந்த தூண் பற்றிய நல்ல எண்ணத்தை யாருக்கும் தருவதாயில்லை.

அதிகாரங்களை கையில் வைத்திருக்கும் அமைப்பானது காவல்துறைகளை மட்டுமே இத்தனை நாள் வைத்திருந்தது போல, நீதித்துறையும் வந்துவிட்டதைப்போலவே நடக்கும் நிகழ்வுகள் அத்தனை உவப்பாய் இல்லை...

மிகச்சமீபமாய் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குள் உண்டான உரசல் நீதிமன்றத்தையே நம்பியிருக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களில் இடிபோலத்தான் விழுந்திருக்கிறது...

தன்னலம் கருதாத மிக உயர்ந்த நீதிபதிகள் பரிபாலனம் செய்த நீதிமன்றங்களில் அரசியல் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டியதே அதன் ஆக முதற் காரியமாக இருக்கவேண்டும்...

நம்மைப் பொறுத்த வரை..
முன்னாள் முதல்வர்க்கு தரப்பட்ட இரண்டு நீதிபதிகளின் முற்றிலும் மாறுபட்ட தீர்ப்பு அத்தனை பகடிகளை உருவாக்கியதென்றால்...
எப்போதோ முடிந்த ஒரு வழக்கின் தீர்ப்பு  மிகச்சரியான நேரத்தில் வெளியாகி தமிழகம் கேலிக்கூத்தாகிக்கொண்டிருக்கும் நிலை அறிவோம்...

ஆண்டாண்டு காலமாய் சுங்கச்சாவடியில் செத்துக்கொண்டிருக்கும் பலர் தொடுக்கும் வழக்குகள் இழுத்துக்கொண்டிருக்க..
ஒரு நீதிபதியின் வாகனம் தாமதப்படுத்தப்படும் போது வீறுகொண்டு எழுவதை என்ன சொல்வது?
காவேரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் செயல்படுத்த முடியாத மத்திய அரசுக்கு உற்ற தோழனாய் செயல்படுவது நீதிமன்றங்களன்றி வேறில்லை எனத்தான் தோன்றுகிறது.

மத்திய மாநில அரசுகள் தங்களுக்கு பிரச்சனை ஏற்படும்போதெல்லாம் ஓடிப்போய் பதுங்கிப்பாதுகாத்துக்கொள்ளும் இடமாகத்தான் நீதிமன்றங்கள் தெரிகிறது..
அரசு ஊழியர்களின் போராட்டங்கள் தீவிரமாய் இருந்த போது நீதிமன்றம் உதித்த முத்துகள் கல்லில் பொறித்து வைக்கவேண்டியவை...

நீதிமன்றங்களைப் பற்றியும்...தீர்ப்புகளைப்பற்றியும் எந்த ஒரு வார்த்தையும் பேச துணிவில்லாத ஒரு காலம் இருந்ததை மறுப்பதற்கில்லை...ஆனால் இன்று மீம்ஸ் உருவாக்குபவர்கள் மிக எளிதாக நீதிமன்றங்களை பகடிக்குள்ளாவதையும்,உச்ச நீதிமன்றத்தையே கலாய்ப்பதும் சமூகத்தின் குற்றமாய் நான் கருதவில்லை...
நீதியின் தரத்தின் மேல் தான் கேள்விக்குறிகள்?

அளவுக்கு மீறி வீங்கிக்கிடக்கும் வழக்குகளின் கோப்புகள்...
புதிது புதிதாய் வந்து குவியும் வழக்குகள்...
எப்படியோ நிகழும் இழுத்தடிப்புத்தாமதங்கள்...

சட்டம் பற்றிய பெருமிதங்களில்
"பல குற்றவாளிகள் தப்பிக்கலாம்..ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது"

என்பதும் ஒன்று..
எல்லாம் சரிதான்.. ஆனால் வழங்கப்படும் நீதியில் வழக்காடியவர்களின் மகிழ்ச்சி எந்த அளவில் உள்ளது என்பதை நீதிமன்றங்கள் எப்போதேனும் உணர்ந்திருக்குமா?

தாமதப்படுத்தப்படும் நீதி குற்றம் என்பதை நீதிமன்றத்திற்கு யார் உரத்துச்சொல்வது?

அரசையே காப்பதும் நேர்வழியில் வழிநடத்துமாக சொல்லும் நீதிமன்றம் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை என்ன செய்வதாக உத்தேசித்துள்ளது..

வேடிக்கையாய் கூட சொல்லலாம்..
நம் சமூகத்தில் ஒரு காலத்தில் கணவன் மனைவி சிரிப்புகள்,டாக்டர் சிரிப்புகள்,மன்னர் சிரிப்புகள்,நீதிமன்ற சிரிப்புகள் என பல வகைகள் உண்டு...
அவற்றில் நீதிமன்ற சிரிப்புகள் தவிர மற்ற எல்லா சிரிப்புகளும் அப்டேட் ஆகி உள்ளன...
நீதிமன்றம் போனால் வழக்கறிஞர் குடும்பம் பிழைப்பதும்,
வயலுக்கான சண்டையில் வரப்பும் மிஞ்சாது போவதும்...
இன்னும் மாறாமல் தொடரும் அவலச்சிரிப்புகள்..

நாட்டில் நடக்கும் எல்லாக்குழப்பங்களுக்கும்...நாளும் நடக்கும் போராட்டங்களுக்கும்,
வல்லரசுக்கான படிக்கல்லாக இல்லாமல் ஆகப்பெரிய தடைக்கல்லாக இருப்பதும் நீதித்துறை மட்டுமே என நான் நம்புகிறேன்.

நம் மக்கள்  மருத்துவரை தம் உயிருக்கு கடவுளாக கருதும் வேளையில் நாட்டுக்கான கடவுளாக நீதிமன்ற தேவன்களையே நம்புவது வாடிக்கை...

நீதிபதியானவர் கடவுளுக்கு ஒப்பானவராகவும்...தன் முன்னால் தொங்கிக்கொண்டிருக்கும் தராசின் நடுமுள்ளாய் துல்லியமான தீர்ப்பு வழங்குபவர்களாகவும்,
இடையிடையே வந்து போதும் அதிகார வர்க்கத்திற்கு மறைமுகமாகவேனும் ஆதராவாய் இல்லாதவராகவும், சட்டத்தின் படி நடப்பவராக இருந்துவிட்டால் எல்லாம் சரியாகும்...

அதிகாரத்தின் எந்த மிரட்டலுக்கும் பணியாத
நீதிமன்றமே நாட்டின் ஆகக்கடைசியான இந்தியாவின் நம்பிக்கை...

அந்த பொன்னான வேளை வந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான்
வாழ்ந்து தொலைக்கவேண்டும்..ம்ம்ம்