திங்கள், 30 நவம்பர், 2015

சப்பாத்தி என் உணவல்ல...

சின்னவளும்
நானும்
திரும்பிய சாலையில்..

சிதறிய
குல்மொஹர் மரத்தின்
பச்சைக்காய்களை
ஊதித்தின்கிறேன்.

நுழைந்ததும்
பரபரக்கிறாள்..
விஷமாயிருக்குமோ
என
விழிகள் நனைக்க

பற்பசை நீட்டி
தாதியாகிறாள்.

சொல்லவே
போவதில்லை..

சப்பாத்திக்கள்ளிப்
பழங்களும்
என்
சாப்பாடான
இளமையை...

சீப்பில் சிக்கிய வரிகள்...

அவள்
அன்னை
இல்லா
ஓர்
நாளில்
பின்னச்சொன்னாள்
என்னை.

எண்ணெய் தடவி
இழைகளாய் பிரித்து
சீப்புக்கும் வலிக்காமல்
சீவி..
ரிப்பனில்
ஓர்
பூ
முடித்து..

சின்னவள்
சிரித்தாள்.

நான் சீப்பில்
சிக்கிய
முடிகள் பொறுக்கியும்

ஒரு
கவிதை
நெய்திருந்தேன்.

சனி, 28 நவம்பர், 2015

கண்ணதாசன்


அனுபவம்
கடவுள்
என்றான்.
அழிந்த கதை
துணிந்து
சொன்னான்.

இடை அதிகம்
பற்றியதால்
எடை ஏதும்
குறைந்ததில்லை
அவன்
கவிதை.

மயக்கும்
மதுக்கோப்பை
குடியிருந்தான்.
மங்காத
தமிழன்னை
மடியிருந்தான்.

ஆற்றில்
கொட்டினாலும்
அளந்துகொட்டும்.
கூட்டமிடை
இவன்
கொட்டிய
பாட்டளக்க
படிகள் என்று
ஏதுமில்லை.

தத்துப்போன பிள்ளை
தத்துவங்கள்
சொல்லிவிட
இவனிலும்
யாருமில்லை.

இதயத்தால்
பேசியதால்
இரக்கமற்ற
அரசியலில்
இடமின்றிப்போன
மகன்.

இடறி
விழுந்தாலும்
இனிய தமிழ்
பாடல் சொன்னான்.

பட்டுச்சட்டை
மூடும்மேனி
பாட்டைக்கொண்டு
வாழ்ந்த ஞானி.

வனவாசம்
அவனுக்கு..
புதுத்தமிழ்வாசம்
அவனிக்கு.

அர்த்தமில்லாப்
பாட்டெழுதி
வாழவில்லை.
அர்த்தமுள்ள
இந்துமதம்
அவனே சொன்னான்.

காற்றுக்கும்
கால்முளைக்கும்
அவன் திரைக்கானம்.

இங்கே
இயந்திரங்கள்
சத்தமுண்டு
வரிகள் காணோம்.

காலம்
மறைத்த
அவன் சிரிப்பு..
காற்றில் வாழும்
அவன் படைப்பு.

காலக்கணிதன்..
அவன்
கவிப்படு பொருளை
உருப்பட வைத்தவன்.

பாட்டெழுதி
பெயரெடுக்க
யார்வரினும்
அவன் தமிழை
உருப்போட
வைத்தவன்.

செத்தாலும்
அவன் பாட்டு.
வாழ்ந்தாலும்
அவன் பாட்டு
நட்புக்கும்
அவன் பாட்டு
பிரிவிற்கும்
அவன் பாட்டு..

பாட்டாலே வாழ்ந்திருப்பான்
ஒர்
மரணம்
அவனுக்கு
இல்லை.

நாட்டுக்கு
எல்லையுண்டு
அவன்
பாட்டுக்கு
எதுவுமில்லை.

வார்த்தைக்கும்,
வாழ்க்கைக்கும்
நானெடுத்தேன்
அவன் சொல்லை...

கோபமேதும்
கொள்ளமாட்டான்
நான்
அவன்
தமிழ்
பேசும்
பிள்ளை.

கண்ணதாசனுக்கு நடந்த இன்றைய விழாவில் என் கவிதை...

விடைகொடம்மா....

கதவிடுக்கில்
தெரிகிறது
சோகமுகம்...

விடைகொடுக்க
மறுக்கிறாள்.

கெஞ்சுகிறேன்.
சிறு புன்னகையும்
இல்லை...

பேருந்து
சுமக்கும்
என்னை...
இதோ
இப்போது
இறக்கிவிடும்.

எப்படி
இறக்கிவைக்கப்
போகிறேன்?
அந்த இறுக்கத்தை..

வயிற்றின்
பசிக்கு
பணம்தேடி..

வாழ்தலின்
நிமித்தம்.
சின்னவள்
வேண்டும்.

சிரித்துக்கொண்டே...

வெள்ளி, 27 நவம்பர், 2015

ஓடாக் குதிரைகள்...

சென்னையின் என் நாட்கள் மிகவும் சோம்பேறிப்பட்ட நிலையில் ஊர்சுற்ற கிளம்பிவிட்டேன்.

எத்தனை மனிதர்கள்..எத்தனை வேலைகள்...வண்டிகளில் பறக்கிறார்கள்..உரசிக்கொள்ளும் இரு வண்டிக்காரர்கள் உடனடியாக அடிக்கத்தொடங்கும் வேகம்.பாவம் அவர்களைப்பெற்ற அம்மாக்கள்..அத்தனை கேவலப்படுகிறார்கள்..

மின்சார ரயிலில் எப்போதும் கும்பல் நகர்ந்து கொண்டே இருக்கும் நகரம்.

உணவக பணியாளர்களுக்கு தான் பல மொழிகள் பேசும் வாய்ப்பிருக்கும்...இங்கே பேருந்தின் நடத்துனர்கள் பேசுகிறார்கள்.

காதுகளில் ஒட்டிப்பிறந்து இருக்கிறது காதொலிப்பான்கள். கார்கள்,வண்டிகள்,ஆண்கள்,பெண்கள்...

இந்த சென்னையின் மறுபக்கமாய் இருக்கிறது குதிரைப்பந்தய மைதானம்.

பந்தயம் நடக்கும் நாட்களில் கூடிவிடுகிறது கூட்டம்.
எங்கிருந்து எப்படி வருகிறார்கள் என தெரியாது...ஆனால் வந்து விடுகிறார்கள்.
50 தை தாண்டியவர்கள் அதிகமாய்.எல்லா வயதினரும் கலந்துதான் இருக்கிறார்கள்.

வாசலிலேயே கடைகள் முளைத்துவிடுகின்றன.
சாணித்தாளில் ஒரு A4 அளவு பேப்பர் 5 ரூபாய் விற்கிறது. கட்டாயம் வாங்கிவிடுகிறார்கள்..அதில் ஓசி கொடுப்பதெல்லாம் கிடையாது.ஆளுக்கொரு பேனா...

ஆரம்பித்து விடுகிறார்கள் கணக்கை...இன்னும் சிலர் புத்தகம் போல் இருக்கும் ஒன்றை வாங்கி வாசிக்கிறார்கள்.

வாழ்வில் படிக்கும் போது இவர்கள் இப்படி கவனமாக இருந்திருந்தால் இங்கு வந்திருக்க மாட்டார்கள்.
எண்கள்..எண்கள்...எண்கள் வேறொன்றுமில்லை..

கூட்டி,கழித்து,பல பக்கங்கள் புரட்டி கணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

குதிரையின் பெயர்கள் ,அதை ஓட்டுபவன் சாகசம்,அந்த குதிரையின் முதலாளி,
இதில் முக்கியமான சங்கதி ஒன்றுண்டு...இந்த பெயர்கள் வாயில் நுழையுமளவிற்கு எளிதாய் இருப்பதில்லை...ஆனால் படபடக்கிறார்கள்..

எங்கோ மும்பையிலும்,மைசூரிலும் நடக்கும் குதிரைப்பந்தயத்திற்கு இவர்கள் முடிவெழுதுகிறார்கள்.

ஓய்வுபெற்ற அதிகாரிகளாய் இருப்பவர்கள்,,ஆங்கில இந்து வாசிப்பவர்கள்,மூக்குக்கீழ் எந்தநேரமும் கண்ணாடி அவிழத்தயாராய் இருக்கும் மோன நிலைக்காரர்கள்,,
பேப்பரை கண்ணோடு ஒட்டிக்கொண்டு படிப்பவர்கள்,,குதிரையாகவே மாறிப்போய், தலைநரைத்தவர்கள்,
மைதானம் முழுவதும் தரைகளிலும்,சிறு கற்களிலும் அமர்ந்துகொண்டு நேற்றைய முடிவுகளை அலசிக்கொண்டு...

இன்றைய முடிவுகளை அவர்களே தீர்மானிப்பது..
யாருக்கும் தெரியாமல் மறைத்து எழுதிக்கொண்டு ஓடி சீட்டை வாங்கி கால்ச்சட்டைக்குள் பதுக்கிவைப்பது..குடை,ஹெல்மெட்,மஞ்சள் பை,தண்ணீர்பாட்டில் என ஒரு யாத்திரைக்கு கிளம்பிவருவதுபோல் வரும் கூட்டம்..

சாமிகளுக்கே பணக்காரபேதங்கள் இருக்கும் போது குதிரைகளுக்கு இருக்காதா என்ன?
அவர்களுக்கென்று ஒரு வாசலும் இருக்கிறது..அவர்கள் உள்ளே போய்விடுகிறார்கள்..அங்கே அவர்களுக்கு தேவையான எல்லாம் இருக்கிறது...
முக்கியமாய் வாசலில் ATM இருக்கிறது.

பந்தயங்கள் கட்டுகிறார்கள்..பரிதவிப்போடு காத்திருக்கிறார்கள்..முடிவு தெரிந்தவுடன் சிலர் சிரிக்கிறார்கள்..பலர் குதிரையின் அம்மாவையும் திட்டுகிறார்கள்..பீடி குடிக்கிறார்கள்.
எளிதில் களைவதில்லை இவர்கள்..மறுநாளைக்கான போட்டிகளில் கவனம் செலுத்துகிறார்கள்.

ஓடிக்கொண்டிருக்கும் சென்னையில் ,
இவர்கள் குதிரைகள் ஓட ....சும்மா இருக்கிறார்கள்.

எத்தனை மனித உழைப்புநாட்கள் .
இங்கே நேரம் தின்றுகொண்டிருக்கிறார்கள்..
சென்னையின் மிகப்பிரதான இடத்தில் விலங்கினைப்படுத்தி நடக்கும் இந்த விலங்குச் சூதாட்டத்தில் எத்தனை விரயங்கள்...

எல்லாப்பாதுகாப்பும் செய்தாலும் விலங்கு வதை என ஜல்லிக்கட்டுக்கு தடைபோடும் அங்கீகாரங்களின் கண்களுக்கு இது தெரியவே தெரியாதா?

குதிரைகளின் மீதேறி ஓடி சூதாடும் இந்த பிழைப்பில் யாருக்கு லாபம்...நிச்சயமாய் சிலருக்குத்தான்..
எல்லாருக்கும் தெரிந்தே இருக்கிறது இந்த சூதாட்டம் குதிரைகளின் திறமையினால் இல்லை.
சில மனிதர்களால் தீர்மானிக்கப்படுகிறது என்பது...இருந்தும் கட்டுகிறார்கள்...

ஒருவேளை குதிரைப்பந்தயமைதானம் இருப்பது தான் ஒருநகருக்கு பெருமையெனில் அது சகித்துக்கொள்ளக்கூடியது இல்லை...

பணக்கார நாடுகளுக்கு சரி...ஒரு மழையும் தாங்கமுடியாமல் தவிக்கும் நமக்கு இது தேவைப்படாதுநான் லூசாம்ங்க....

சின்னவள் 
பிறந்த
சில மாதங்களுக்கு
பின்னாலும் 
அவள்
பேசுவதற்கான 
அறிகுறிகள்
ஏதும் இல்லை.

வீட்டில் 
கோவில்களைச் சுற்றத் தொடங்கினாள்..

நான் மனசுக்குள் மருகிக்கிடந்தேன்..

நேற்றைய
மொட்டைமாடி இரவில்  கதைகளுக்கூடே 
இதை
அவளுக்கு
சொன்னேன்..

உம்ம்..
என்றிருந்தவள்.. 
உதைத்துவிட்டு
சொன்னாள்

போடா லூசு....

வியாழன், 26 நவம்பர், 2015

உன்னோடு நானிருப்பேன்....

சின்னவள் 
ஒரு நாள்
சைக்கிள் கேட்டாள்..

முடியாதென்றேன்.

அழுது அடம்பிடித்து
இள ரோஜா 
நிறத்திலொன்று 

வாங்கிக்கொண்டாள்

ஓய்வான
ஒரு நாளில்
கற்றுக்கொடு
என்றாள்

நான்
கற்ற நாட்களில்
விழுந்த
நினைவு
வந்தது..

கற்றுக்கொடுத்தால்
என்னை தவிர்த்து 
தனியே 
பள்ளிக்கு
செல்வாளோ?

கற்றுக்கொடுக்காமலே  வந்துவிட்டேன்..

சைக்கிள் 
வாசல் படியோடு 
நின்று விட்டது..

சின்னவள் 
எப்போதும் 
என்னோடு
இருக்கிறாள்

புதன், 25 நவம்பர், 2015

உயிரோவியம்.....

சின்னவள்
சிறு காகிதம்
எடுத்தாள்

தளிர் கரம் கொண்டு
சிறு
மாற்றங்கள்
செய்தாள்.

ஒழுங்கற்ற
ஒரு வடிவமாய்
மாறியிருந்தது
காகிதம்.

எழுந்து நில்
என்றாள்
சிரி என்றாள்.

“டப்” என்ற
ஓசையுடன்
உன்னைப்
போட்டோ
எடுத்துவிட்டேன்
என்றாள்.

அழகாய் இருக்குமா
என் முகம் என்றேன்...

ம்ம்ம்... என்றாள்.

மறக்கவே முடியாத
அழகாய் இருந்தது

அவள் முகம்

செவ்வாய், 24 நவம்பர், 2015

வீட்ல தக்காளி ரசம்?

என்ன பண்ண?எதைச் சொல்ல நினைத்தாலும்,நினைப்பு முதலில் சின்னவயசுக்குள் ஓடிவிடுகிறது.
எல்லாவற்றிற்கும் அங்கிருந்தே பாதாளக்கரண்டியில் மாட்டிய வாளியாய் செய்திகள் எடுத்து வருகிறது.

பெஞ்சா பெஞ்சுட்டு போகணும்,இல்ல பொட்டுன்னு வெறிக்கனும்.

துணிய எடுத்துட்டு மாடிக்குப்போனா மழை வருது...உருவிட்டு கீழ வந்தா வெயிலடிக்குது..

வானத்துக்குமா எழவெடுத்த நீரிழிவுச்சீக்கு?

எல்லாரும் மழையை எழுதுறாங்களேன்னு  அதையும் செஞ்சாச்சு...
இப்ப என்னத்த எழுத?

விடு கழுத...நமக்கு எதுவும் கிடைக்காமலா போயிடும்...

வீட்டுக்குப்பின்னால கொஞ்சம் காலியிடம்.குளிக்கிற...கழுவுற தண்ணியெல்லாம் சேர்ந்து எப்பவும் கொஞ்சம் ஈரமாய்த்தான் இருக்கும்.
எல்லாச்செடியும் முளைச்சுக்கிடக்கும்.
சுயம்புகள்.நடுவதுமில்லை...
தண்ணீர் நாங்கள் மெனெக்கெட்டு விடுவதுமில்லை.அதுவா வளரும்...காயும்..

ஒருநாள் அதுல ஒரு செடி மஞ்சளா ஒரு பூ பூத்திருந்தது.
அப்பத்தா பார்த்திட்டு..."அடே..அது தக்காளி கண்ணுடான்னு "சொல்ல எல்லார் கண்ணும் அதன் மேல தான்.
சின்னதா பச்சையா ஒரு காய்.மற்றொரு பூ.

உற்றுப்பார்க்கக்கூடாது,விரல் நீட்டக்கூடாது,பக்கத்தில் போகவே கூடாது.

நான்கு காய்கள்..ஆளுக்கொன்றாய் பாகம் பிரித்தாயிற்று.
செடிக்குப்பக்கத்தில் போய் குளித்தோம்.ராத்திரிப் போர்வை மூடிய ரகசியப்பேச்சுகளில் அந்த செடியும் தவறாமல் இடம் பிடித்தது.

பள்ளிசென்று திரும்பிய ஒரு நாளில் வாசலில் அப்பத்தா அப்படி ஒரு அழுகையும் ஆங்காரமுமாக நின்று கொண்டிருந்தது..
எங்களைப்பார்த்ததும் இன்னும் அதிகம் ஆனது..
வீட்டின் பின் பாதிசெடிகள் காணவில்லை.

பக்கத்துவீட்டு ஆடு..அறுவடை செய்துவிட்டு போயிருந்தது தக்காளிச்செடி உட்பட..

எப்போதும் மாலையில் சந்தைக்குப்போகும் அப்பத்தா உடைந்த தக்காளிகளை பல நேரங்களில் இலவசமாய் வாங்கிவரும்.
"உடஞ்சிருந்தா என்னடா...அப்படியேவா எல்லாரும் தின்றாங்க..."

இலவசமாய் டியூசன் சொல்லித்தந்த ஆசிரியை ஒருவர்,தக்காளியை நாலாய் வெட்டி ஜீனி போட்டுத்தருவார்...இனிப்பும் புளிப்புமாய் ஒரு ருசி..

அசிங்கம்பிடித்த மூஞ்சிகளில் அடிக்கப்படுவதைப் பார்க்கும் போது  பாவமாயிருக்கும்...

வரத்து அதிகமாயிருக்கும் நாள்களில் பத்து ரூபாய்க்கு ஐந்து கிலோ எனக்கூவி விற்பார்கள்..ஆசையாய் இருக்கும் ..வாங்கி என்ன செய்ய ஊறுகாய்கூட போட முடியாது .

தக்காளி செடியுடன் இருக்கும்போது பிடுங்கி நுகர்ந்து பார்க்கும்போது ஒரு வாசம்வருமே....
அடடா....அது நுகர்வுகலாச்சாரம் மிகுந்த நாட்கள்...

சின்னவள்...ரசம் வைப்பேன்..தக்காளி வாங்கி வா என்றாள்.
குளிர்ப்பெட்டி இல்லாததால் வீணாகிவிடுமென்று காய்களோடு ஒரு தக்காளி எடுத்துவைத்தேன்.
கடைக்காரர் சிட்டை தந்தார்

தக்காளி=8 ரூபாய்.

ரசம் வைக்க?

பேசும் கவிதை...

படித்த பள்ளி,
படிக்கும் புத்தகங்கள்.
பெய்யும் மழை
பொய்யான
மனிதர்கள்.

பேசித்
தீரவில்லை
எனக்கும்
சின்னவளுக்கும்..

மிஞ்சிய மழலையில்
கண்கள் விரிய
கனவுகள்
சொல்கிறாள்.

என்
கவிதையின்
காகிதங்களை
நகர்த்தி
வைக்கிறேன்.

திங்கள், 23 நவம்பர், 2015

மழையே வா!!!

சின்னவளை
பார்க்க
அதிகாலையில்
வந்துவிட்டேன்.

தூங்கிக்
கொண்டிருக்கிறாள்.

புத்தகங்கள்
சிதறிக்கிடக்கிறது
படுக்கையில்.

பக்கத்தில்
அமர்ந்து
மெல்ல
எழுப்புகிறேன்.

முணங்கித்
திரும்பிப்
படுக்கிறாள்.

நிறைய கதைகள்
இருக்கிறது
பேச..

மழையே..
இன்றும் வா.

ஞாயிறு, 22 நவம்பர், 2015

நீ.. சொல்லிக்கொடுத்து?

அன்பின் சக்திக்கு,
மழை பற்றிய சஞ்சலங்களிலிருந்து கொஞ்சம் விடுபட்டு,முடிக்க வேண்டிய பாடங்களுக்காக உன் கல்லூரியும்,படித்தே ஆக வேண்டிய பாடங்களுக்காக நீயும் விடுமுறைகளையும்  வெறுக்க ஆரம்பித்திருக்கும் மனோநிலையிலிருப்பாய்.

கவலைப்படாதே,
நம் கல்வி நிறுவனங்கள் எல்லாவற்றுக்கும் தயாராய் இருப்பார்கள்.அடுத்த வருட சேர்க்கைக்காக ..இப்போதே சரிசெய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

பல்கலைக்கழகம் என்றதும் உனக்கு சில உண்மையான பல்கலைக்கழகங்களை சொல்லலாம் என நினைக்கிறேன்.

உனக்குத்தெரியுமா...உலகின் முதல் பல்கலைக்கழகம் நம் பண்டைய இந்தியாவின் தஷிலா என்பதே...கி.மு 600இல் இருந்து கி.பி 500 வரை இயங்கியதாம்.. 68 பாடங்கள்,
ஆசிரியர்கள் மிகவும் அறியப்படும் சாணக்கியர்,பனினி, இப்படி...

சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் இங்கே இயற்றப்பட்டிருக்கிறது.

அடுத்தது நாலந்தா...
கி.பி 5ம் நூற்றாண்டிலே தொடங்கப்பெற்றது. 3700 துறவிகள் உட்பட பத்தாயிரம் மாணவர்கள்..

அத்தனை கட்டடங்கள்..
ஆச்சர்யம் சக்தி ,
அதிலொன்று ஒன்பது மாடிக்கட்டடம்...

பக்கத்திலே நம் காஞ்சியிலே அதற்கு நிகராக ஒரு பல்கலைக்கழகம் இயங்கியிருக்கிறது.
பன்னாட்டு மாணவர்கள் படித்திருக்கிறார்கள்.அந்தக்காஞ்சிக்கடிகையை சீனத்து அறிஞன் யுவான் சுவாங் பதிவு செய்திருக்கிறான்.

அடடா நம் பல்கலைக்கழகங்கள் எப்படியெல்லாம் இருந்திருக்கின்றன.
வான சாஸ்திரங்கள்,கணிதங்கள்,
மருத்துவம்,போர்க்கலை,
என எத்தனை துறைகளில் கொடிகட்டிப்பறந்திருக்கின்றன...

பெருமூச்சு வருகிறது சக்தி...
நூற்றாண்டுகளில் வாழ்ந்திருக்கின்றன.

நேற்று பெய்த மழையிலே நம் மழையில் நம் பல்கலைக்கழகங்களில் படங்கள் பார்க்கும் போது
கசப்பாயிருக்கிறது.

உங்கள் கட்டிடங்கள் கட்டியிருக்கும் அழகு இப்படி இருக்கும் போது நீங்கள் எப்படி தரமான கட்டட கலைஞனை உருவாக்க?

வந்த மழையை காப்பாற்றாமல்  காணாமல் போன உங்கள் அடித்தளங்களா மாணவச்செல்வங்களுக்கு நல்ல அடித்தளங்கள் ஆகப்போகிறது?

ஏரிளுக்குள் முளைத்த உங்கள்  கட்டடங்களுக்குள்ளா நீர் மேலாண்மை பயில்கிறார்கள் எங்கள் பிள்ளைகள்?
சேறுகள் படிந்த குளங்கள்
தூர்த்த உங்கள் கைகளிலா எங்கள் குலக்கொழுந்துகள்?

இன்னும் எத்தனை வெளிச்சங்களை காட்டிப்போயிருக்கிறது இந்த பெருமழை?

சக்தி!
இந்த மழை நல்லது செய்தது..
நம் எல்லாரையும்
யோசிக்க சொல்லி அழுதுதான் போயிருக்கிறது
முடியில்லா காலம்.....

சின்னவள்
எப்போதும்
என்
சிரம் பற்றி
ஆட்டுவாள்

என்
உச்சி முடி
அவளுக்கே
என்பதனால்
அதை
கணிசமாய்
நான் குறைப்பதில்லை.....

மொட்டையடித்த
ஒரு நாளில்
தட்டிப்பார்த்து
தள்ளி
நகர்ந்து விட்டாள்

உண்மையில் 
அந்த நாட்கள்
ஒரு மயிரும்
இல்லா நாட்கள்.......

சனி, 21 நவம்பர், 2015

என்னப்பெத்த ஆத்தா.....

எழுத்துக்கும்
எனக்குமான
இடைவெளி
அதிகமாயிருந்தது...

கண்மூடித்
தூங்கும் வேளை
கும்மாளம் போடும் கவிதைக்குரங்குகள்,
விடியும்
வேளைகளில்
விலகிப்போகும்
விரக்தியில்....

ஏதோ உந்துதலில்
எழுத
ஆரம்பிக்கின்றேன்.

சின்னவள் பற்றி
எழுதுவது
இயல்பாய்
இருக்கிறது.
எனக்கும் பிடிக்கிறது.

நான் பெற்றவளே -
என்
எழுத்தை மீட்டியதால்-

எனக்கே
தாயானாள்..

அடி...என்னப் பெத்தவளே...

வியாழன், 19 நவம்பர், 2015

கூகுள் மாயக்கண்ணாடியல்ல....

அன்பின் சக்திக்கு,
நம் போன்றோர்கள் எந்தத் தேடலுக்கும் மிக எளிதாய் கூகுள் என்னும் பொறியில் மிக வேகமாக மாட்டிக்கொள்கிறோம்.

நீ சொன்னா....

காட்டாற்று வெள்ளமென
கரை 
புரண்டு வருகிறது 
கவிதை அலைகள்.

செவ்வாய், 17 நவம்பர், 2015

பேசக்கூடாது......

அன்பின் சக்திக்கு,
விளையாட்டாய் ஒருநாள் உன்னிடம் சொன்ன நினைவு
ஒரு செல் உயிரினம் ஒன்று கூறென்றால் தைரியமாக மனிதனைச் சொல்லலாமென.

இந்த அலைபேசிதான் மனிதனை என்ன பாடுபடுத்துகிறது....

நேற்றைய ஒரு கட்டுரை படித்தபின் அலைபேசி தொடுவதற்கும் பயமாய் இருக்கிறது.

வீட்டின் மின் அடுப்பில் ஒரு லிட்டர் நீரை ஒரு டிகிரி சூடு பண்ண 500 வினாடிகளாகுமாம்.அதற்கு ஈடாய் அலைபேசியின் கதிர்வீச்சு இருக்குமாம்.

1956ல் எஸ்.ஆர்.ஏ. எனும் ஸ்வீடன் தயாரித்த அலைபேசியின் வாடிக்கையாளர்கள் 125 பேர்களாம்.1983,1989 இல் மோட்டராலா,1994 ல் நோக்கியா ,2002இல் பிளாக்பெர்ரி,2002இல் ஆப்பிள் என விரிந்த அலைபேசிகளின் வரிசை பிரமாண்டமாய் இருக்கிறது.

அலைபேசிகளின் வரலாறு சொல்வதல்ல என் நோக்கம்.

மனிதனின் ஓர் உறுப்பென மாறிவிட்ட ஒரு சாதனம் எத்தனை ஆபத்துகளை தனக்குள் ஒளித்துக்கொண்டிருக்கிறது என்பதை யாவரும்,நாம் உட்பட அறிந்து கொண்டோமா என்பது தான் புரியவில்லை.

மேல்சட்டைப் பைகளில் அலைபேசி வைத்துக்கொள்வது...இதய நோயை விலைகொடுத்து வாங்குவதற்கு சற்றும் குறைவில்லையாம்.

சரியான அலைவரிசை இல்லாமலும்,அலைபேசியில் சார்ஜ் மிகக்குறைவாக இருக்கும் போது நீ பேசுவது ..யாருடன் என்றாலும் ...உன் உடல்நலம் கெடுக்கும் கதிவீச்சுகள் சூழத்தான்.

பேச்சினைக்குறைக்க வேண்டும் சக்தி.
அவசியமானால் பேசு.
குறுஞ்செய்தி போதும்.
அது ஆண்டவனே என்றாலும் 20 நிமிடங்களுக்கு மேலெனில் அமர்த்திவிடு.
இரவுகளில் அலைபேசியை தூரப்போடு. விளையாட்டு ஏதேனுமிருந்தால் அழித்தெறி.

20 முதல் 60 சதவீத மூளை சம்மந்தப்பட்ட நோய்களின் மூலகாரணம் அலைபேசியாம்.

பார்த்தாயா, சிட்டுக்குருவிகளுக்காக பரிதாபப்படுகிறோம்..நமக்கான சவக்குழிகளைக் கண்டுகொள்ளாமல்.

முக்கியமாய் காதலர்களுக்கு சொல்லவேண்டும் சக்தி..

இனி காதல் சொல்ல கடிதங்களே கட்டாயம் என்று..
எத்தனை நன்மைகள் விளையும் பார்,,
ரீசார்ஜ் தொல்லை இருக்காது.
காதல் கைகூடாவிட்டாலும்
கையெழுத்து கொஞ்சம் அழகாகலாம்.

உன் வெற்றிக்கென ஒரு அலைபேசி கேட்டிருந்தாய்.
கண்டிப்பாய் வாங்கித்தர மாட்டேன்.காசும்,நீ பேசுவதும் பொருட்டல்ல...

நீ என் ஜீவன்...

அன்புடன்.
செல்வக்குமார்.

திங்கள், 16 நவம்பர், 2015

மாமழை போற்றுதும்...

அன்பின் சக்திக்கு,
சென்னையில் உங்களை விட்டுவிட்டு,இங்கே நான் கவலைகளில் மிதக்கிறேன்.
சமீபத்து பதிவு ஒன்றில் அலைபேசி இல்லா ஓர்நாள் கேட்டிருந்தேன். ஆனால் இன்று முழுவதும் உனக்கான தொடர்புகள் முடக்கப்பட்டதில் திணறிப்போனேன்.

என்ன நடக்கிறது சக்தி?

பேருந்துகள் செல்லவேண்டிய சாலையில் படகுகள் மிதக்கின்றன.சாலைக்கு மேல் ஓட வேண்டிய பேருந்து கழுத்துவரை மூழ்கிக்கிடக்கிறது?
வீட்டுக்குள்ளிருந்து வாளிகளில் எடுத்து வெளியில் கொட்டுகிறார்கள் மழைநீருடன் கழிவுநீரையும்.
சின்னஞ்சிறு பிள்ளைகள் குறுகிக்கிடக்கிறார்கள் குளிருக்குள்.

ஒரு பல்கலைக்கழகமே பரிசலில் சென்று பார்வையிடும் பரிதாபம்.

இது இயற்கையின் சீற்றமென எளிதில் விலகிப்போய் விட முடியாது.

இது வருமுன் காவாததன் பரிசா?
வந்தபின் பார்த்துக்கொள்ளலாம் என்பதற்கு தண்டனையா?

ஒரு மாநிலத்தின் தலைநகருக்கு இந்த நிலையெனில்,மற்ற எல்லா இடங்களிலும் இப்படி ஒரு மழை பெய்திருந்தால் என்னவாகியிருக்கும்.?

மழையும் புயலும் சென்னைக்கும் கடலூருக்கும் யுகங்களுக்கு ஒருமுறை வந்து போவதல்ல.

பலா மரங்களை வேரோடு சாய்த்தும்,பல மரணங்களையும் தந்து போன தானே புயல் நம் தாத்தாக்கள் காலத்தில் நடந்ததல்ல.

இருபத்தோராம் நூற்றாண்டில் இருக்கிறோம்.புயலுக்கல்ல,மழைக்கே நாம் போராடிக்கொண்டிருந்தால் எப்போது முன்னெற.?

கட்டடங்களும்,புள்ளிவிவரக்கணக்குகளை விளம்பரமாய் தருவதும் தான் நாட்டின் முன்னேற்றமெனில்?

பேரிடர் மீட்புத்துறையின் பணி பாராட்டத்தக்கது.
பிட்டுக்கு மண் சுமந்த கடவுளின் முதுகையே பதம் பார்க்கும் அளவுக்கு அவசியமானது நீர் மேலாண்மை.
அப்படி ஒரு துறை இருக்கிறதா?இருக்குமெனின் இயங்குகிறதா?

ஒரு நாளில் மூன்றுமுறை மழை பெய்யும் சிங்கப்பூரின் சாலைகள் இப்படி நீர் கண்டதில்லை.

சக்தி இது அரசியலில்லை..

ஒரு குடிமகனாய்,
உன்னை சென்னைக்கு அனுப்பிவிட்டு பரிதவிக்கும் ஒரு அப்பனாய் என் ஆதங்கம்.

பொதுக்கூட்டங்களுக்காகவும்,மாநாடுகளுக்காகவும் சரிசெய்யப்பட்ட திடல்களின் அளவுக்கு ,மழைநீர் கொள்ளும் பரப்புகளை சீர் செய்திருந்தால் இந்த பரிதவிப்பு இருந்திருக்காது தான்.

மக்களை குறை சொல்லக்கூடாது சக்தி.
மன்னன் எவ்வழி,மக்கள் அவ்வழி.

மடைகளையும்,குளங்களையும்,வாரிகளையும்,ஏரிகளையும் புதைத்துவிட்டு...
மழைநீர் உயிர் நீரென்றால்.....?

தாங்கிக்கொள்ள முடியாத எதையும் இயற்கை தருவதில்லை.
அது அமுதாய்த்தான் கொட்டுகிறது..
நாம் தான் அசிங்கப்படுத்தி விடுகிறோம்.

அன்புடன்,
செல்வக்குமார்.

எழுத்துக்குள் ஒரு மனிதன்

அன்பின் சக்தி,
உனக்கான என் கடிதங்கள் உன்னை மட்டுமல்லாது,நம் நண்பர்களையும் வாசிக்கத் தூண்டுவதை,பின்னூட்டங்களில் உணர்கிறேன்.

அறிமுகப்படுத்துவதற்கென்று நான் பலரையும் வைத்திருக்கிறேன் உனக்காக.
சிலரை நன்றிகாட்டுவதன் மூலமும்,சிலரிடம் நீ கவனமாய் இருக்கவேண்டுமென்பதற்காகவும்.

சிலர் நம் வாழ்வில நேரடியாக நுழைந்திருக்க மாட்டார்கள் .ஆனால் நமது செயல்களில் ஊடுருவி இருப்பார்கள்.

அப்படி ஒரு மனிதரை
உனக்காக இன்று அழைத்து வந்திருக்கின்றேன்.

சிவந்த மேனி,சிரித்துக்கொண்டே இருக்கும் முகம்,எப்போதும் எளிமை.பார்க்கும் வேளைகளில் கைகளிரண்டையும் பிடித்துக்கொண்டு பார்க்கும் கனிந்த பார்வை.

இதனை நான் எழுதினேன்.
எப்படியிருக்கிறது?
அடடா அருமைய்யா...இன்னும் எழுதுய்யா...நல்லா இருகுய்யா...
உள்ளார்ந்த அன்போடு சொல்லும் போது மனசு பூரித்துப்போகும்.

என்னையும் பாராட்டுவதால் இவரை சாதரணமானவராய் நினைத்து விடாதே.

இந்திய துணைக்கண்டத்தின் தென் மூலைக் குமரியில் பூத்த மலர்,மானிட சமுத்திரத்தின் மேல் எழுதிக்குவித்தது ஒவ்வொன்றும் முத்திலும் மிளிர்பவை.

என்னையும்,உன் அம்மாவையும் கொஞ்சமேனும் எழுத்தூண்டிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைமை ஏற்று தன்னிகரில்லாப் பணி செய்தவர்.

அவரின் சிறுகதைகளாகட்டும்,கட்டுரைகளாகட்டும்,நாவல்களாகட்டும்.,.அத்தனை செறிவானவை.

ஒரு நாவல் பதினான்கு வருட உழைப்பை தின்றிருக்கிறது.
மற்றொன்றோ இருபத்தாறு வருடக்கனவாய் இருந்திருக்கிறது.

ஆச்சர்யம் சக்தி!
இருபது ஆண்டுகளுக்கு முன்னே கதையாகத்தெரிந்தது,இன்று கண்முன்னே நடக்கிறது.
இன்றைய மதவாதம் எந்த அளவுக்கெல்லாம் தன் விஷக்கிளைகளை பரப்பும் என்ற தீர்க்கதரிசனம் சொல்லி முடியாது.

மண்டைக்காட்டு கலவரத்தின் ஆணிவேர் எங்கே இருக்கிறது?

குலசாமிகளை ஒடுக்கி மறைக்க பிள்ளையார் நுழைந்த அரசியல்...

படிக்கும் ஒவ்வொரு வரியும் தகதக்கின்றன நெருப்பாய்.

நம் தமிழ்ச்சமூகத்தின் கேடாய் சினிமாவுக்கு போகும் எழுத்தாளனே அதிகம் அறியப்படும் அவலம்.இவரின் அமில எழுத்துகளுக்கு அங்கே வேலையில்லை.
ஒரு கதை படமாகி இருக்கிறதாம்..நான் பார்த்ததில்லை.

நம்மையும் அறியாமல்  ஊடுருவி விடுவார்கள் என எழுதியிருந்தேன்..ஆம் சக்தி.
என்னுடைய எழுத்துக்கள் அவரால் விளைந்தவை.
சமூகப்பார்வை அவராலும் கிடைத்தது.என்னிலிருந்து உனக்குக் கிடைக்குமாயின்
அது உன்னையறியாமல் உனக்குள் ஊடுருவியது தானே.?

உன் கல்வியின் ஊடே இவர் எழுத்துக்களையும் படி.
இந்த சமூகத்தை தெரிந்துகொள்ள உன் பாடத்திட்டங்கள் உதவாது.
பாடம் தாண்டி படி,
பணியை தாண்டி படி,

நான் சொல்ல வந்தவர்

பொன்னீலன்.

நாவல்கள் புதிய தரிசனங்கள்,மறுபக்கம்,
மகேந்திரன் இயக்கிய பூட்டாத பூட்டுகள் இவரின் உறவுகள் கதை.
இவரின் எழுத்துகளை தனிமையில் படி..
உள்ளத்தை திறந்து படி.காட்சிகள் வழி சமூகம் தொடும் இவர் தீர்க்க தர்சனங்கள் புரியும்.பின்னொரு நாளில் இன்னும் சொல்கிறேன்.

அன்புடன்,
செல்வக்குமார்

ஞாயிறு, 15 நவம்பர், 2015

இலையில் சோறு போட்டு...

அன்பின் சக்திக்கு,

சின்ன வயதில் கேட்டதும்,பார்த்ததுமான சம்பவங்களுடன் தொடங்குகிறேன்.
செட்டிநாட்டுப்பக்க திருமணங்களில் தங்கள் செல்வாக்கை காட்டுவதற்காக திருமண விருந்துகளில் இலையின் ஓரத்தில் தங்கபஸ்பம் வைத்து ஒரு வாழைப்பழமும் வைப்பார்களாம்..வரும் விருந்தினர்கள் பழத்தினை உரித்து கொஞ்சமாய் பஸ்பத்தை சாப்பிட்டுவிட்டு மிச்சம் வைத்துவிடுவார்களாம்...அந்த எச்சில் இலைகளை அள்ள போட்டி நடக்குமாம்.இப்போது அப்படி நடக்கிறதா எனத் தெரியவில்லை.
ஆனால் என் அம்மாச்சி எங்களுக்கு வாழைப்பழம் வாங்கித்தரும் நாங்கள் பழத்தை தின்றபிறகு அதன் தோல்களை முன்னம்பல்லில் வைத்து "சர் "என்று ஒரு இழுப்பில் உள்தோலை உரித்து சாப்பிடும்..எங்களுக்கு சிரிப்பாகவும் பாவமாகவும் இருக்கும்.
எவ்வளவு முரண் பார்த்தாயா?

நாம் சேர்ந்து உண்ணும் சிலவேளைகளில் கவனிக்கிறேன்,எனக்கான இலையில் எதையும் மிச்சம் வைக்காத போது நீங்கள் என்னை இளக்காரமாகப் பார்ப்பதை.

உங்கள் இலைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும் நீ விரும்பாத காய்,கறிவேப்பிலை,வெங்காயம்,பூண்டென.

தெரிந்துகொள் சக்தி!
இயற்கை எந்த பொருளையும் காரணமில்லாமல் படைத்துவிடுவதில்லை.

மனிதன் தான் ஆறாம் அறிவால்(?)அதனை மறந்து தவிக்கிறான்.
உண்ணும் உணவே மருந்தெனும் மாயம் அறியாமல்,தவிர்க்ககூடாததை தவிர்த்து,தவிர்க்கக்கூடியதை புசித்து நோய் கொள்கிறான்.

நான் சொல்லவந்ததை விட்டு திசை மாறுகிறேன்.

பிடித்தது பிடிக்காதது போகட்டும் அது அவரவர் பாடு.
ஆனால் வைத்ததை தின்பதிலும்,மிச்சம் வைத்து கொட்டுவதிலும் எத்தனை பரிதாபங்கள் இறைந்து கிடக்கிறது தெரியுமா?

விளையும் பொருட்களில் வீணாகும் அளவு தெரியுமா பயனுக்கு வாராமல்.

அமெரிக்காவில் 25℅பொருட்கள் வருடந்தோறும் குப்பைக்குப் போகிறதாம்.
ஐரோப்பாவிலே ஒரு மனிதன் வருடத்திற்கு 300கிலோ உணவை வீணடிக்கிறானாம்.
உலகம் முழுவதும் வருடத்தில் 130கோடி டன்கள் உணவுப்பொருட்கள் எறியப்படுகின்றனவாம்.

அடடா உனக்கு நான் உலக அறிவை ஊட்டத்தொடங்கியதாய் ஓடத்தொடங்காதே...
வா ..நமது நாட்டுக்குள் வந்து விடுவோம்.

இந்தியாவில் ஒரு மனிதன் வருடத்தில் 170கிலோ உணவை வயிற்றில் கொட்டுவதில்லையாம்.
இங்கே வீணாகும் உணவின் சதவீதம் 40....
அதன் மதிப்பாய் 750கோடி டாலரில் சொல்கிறார்கள்.

இன்னும் கொஞ்சம் பக்கத்தில் வருவோமா?
பெங்களூருவில் வருடந்தோரும் 943 டன்கள் வீணாகிறதாம் உண்ணவேண்டிய பொருட்கள்.அது மட்டும் 340கோடி இருக்குமாம்.

என்ன சக்தி மலைப்பாய் இருக்கிறதா?

உணவை வீணாக்கும் போதெல்லாம் இதையும் நினைவில் வை.
பட்டினியால் வாடும் மூன்று உலகக்குழந்தைகளில் ஒன்று இந்தியக்குழந்தை.

உன்னால் முடியவில்லை என்றால் வாங்காதே....
குப்பைக்கல்ல உணவுப்பொருள்.

இனி நான் இலையை காலிசெய்யும் போது சிரிக்காதே...
உன்னைச்சுற்றிலும் இதைச் சொல்.

செய்வாயா சக்தி?

அன்புடன்,
செல்வக்குமார்.

வெள்ளி, 13 நவம்பர், 2015

இந்த மழை நமக்கல்ல...

அன்பின் சக்தி,
வான்மழை உனக்கு விடுப்பு தந்ததென்று சிரிக்காதே. அது மேகங்களின் அழுகை.சென்னையின் தீபாவளி என்னை இப்படியெல்லாம் எழுதச்சொல்கிறது.
உலகில் நாளை என்பதே மறந்துபோனது போல கடைவீதிகளில் கொள்முதல் கூட்டங்கள்.
யாதொரு உடையுமின்றி இருந்தார்களோ இதுவரை என்பதுபோல் உடைகளை உரிமையாக்குவதில் ஒரு உற்சாகம்.
இந்தியா ஏழைகளின் நாடென்று இனி சொல்லக்கூடாது..ஏழைகளாய் நம்மை நாமே மாற்றிக்கொள்ளும் நாடு.

மாலை ஆறு மணிக்கு தொடங்கிய வெடிகளின் ஓசை இரவு 11மணிவரை காதுகளுக்குள்.
எப்போதும் நான் புகைக்கையில் காதுகளில் புகைவரும் உன் அம்மாவுக்கு,அன்று நான் புகைத்ததே தெரியவில்லை.
இயற்கையும் எவ்வளவோ மன்றாடி கண்ணீர் விட்டுத்தான் பார்த்தது.
மனுசப்பயல்....என்னமாய் ஆடிவிட்டான்.

ஒரு சந்தேகம் சக்தி.. எனக்கு.

சமீப காலமாய் வந்துபோகும் அட்சய திதியின் வரலாறு நமக்குத்தெரியும்...முதலாளிகளின் கைவண்ணம் என்று..அதைப்போலவே தீபாவளி என்ற ஒன்றும் தந்திரமாகவே புகுத்தப்பட்டிருக்கவேண்டும்.
எத்தனை பணங்கள் காகிதங்களாய் சிதறிக்கிடக்கின்றன.?
எத்தனை மனிதர்களை புலம்ப வைத்து...புலம்பெயர வைத்திருக்கிறது.
சாலைகள் தோறும் மிதிபடும் குப்பைகள்..
வேதாளங்களாய் மாறிப்போன இளைஞர் கூட்டம்...

எவன் சொல்லிப்போனது..
இப்படி தீபாவளி கொண்டாடச்சொல்லி?
நடையோர மனிதர்களுக்கு,ஓர் உடையுமில்லா என் மக்களுக்கு யார் கேட்டது இந்த தீபாவளி?
அசுரனைக்கொன்றதால் கடவுள் தந்த வரமெனில்,
பட்டினியிலும்,ஏக்கங்களிலும் தினம் செத்துக்கொண்டிருக்கும் இந்த மக்களுக்கு கடவுள் எத்தனை தீபாவளிகள் வரமளிக்க...?

வேதங்கள்,இதிகாசங்கள் இன்னும் எத்தனையோ காரணங்களை அடுக்கிக்கொண்டிருப்பவர்கள் நினைத்தது, இப்படி ஒரு தீபாவளியைத்தான் என்றால், வெடிக்க வேண்டியது வெடிகள் அல்ல....வீணான நம்பிக்கைகளை.

பட்டாசுப்புகையில் சிட்டுக்குருவிகளைக் கொன்றுவிட்டு,என்ன சொல்கிறது உங்கள் வேதங்கள் ஜீவகாருண்யம் பற்றி?
தீபாவளி கடந்த நாளில் கிடக்கும் குப்பைகள்... குப்பைகள் அல்ல....மனங்கள்.

என்ன செய்யலாம் சக்தி?
பட்டாசுகள் தவிர்த்து,
ஆடம்பரங்கள் மறந்து,
பட்டிமன்றங்கள் மூடி,
எந்த வனத்திலும்
வேதாளமாய் ஆடாமல்..
முடிந்தவரை சொந்தங்களோடு,
குறந்தபட்சம் குடும்பத்தோடு...
கொண்டாடுவோமா
இனிவரும்
தீபாவளி.?

அன்புடன்.
செல்வக்குமார்