திங்கள், 16 நவம்பர், 2015

எழுத்துக்குள் ஒரு மனிதன்

அன்பின் சக்தி,
உனக்கான என் கடிதங்கள் உன்னை மட்டுமல்லாது,நம் நண்பர்களையும் வாசிக்கத் தூண்டுவதை,பின்னூட்டங்களில் உணர்கிறேன்.

அறிமுகப்படுத்துவதற்கென்று நான் பலரையும் வைத்திருக்கிறேன் உனக்காக.
சிலரை நன்றிகாட்டுவதன் மூலமும்,சிலரிடம் நீ கவனமாய் இருக்கவேண்டுமென்பதற்காகவும்.

சிலர் நம் வாழ்வில நேரடியாக நுழைந்திருக்க மாட்டார்கள் .ஆனால் நமது செயல்களில் ஊடுருவி இருப்பார்கள்.

அப்படி ஒரு மனிதரை
உனக்காக இன்று அழைத்து வந்திருக்கின்றேன்.

சிவந்த மேனி,சிரித்துக்கொண்டே இருக்கும் முகம்,எப்போதும் எளிமை.பார்க்கும் வேளைகளில் கைகளிரண்டையும் பிடித்துக்கொண்டு பார்க்கும் கனிந்த பார்வை.

இதனை நான் எழுதினேன்.
எப்படியிருக்கிறது?
அடடா அருமைய்யா...இன்னும் எழுதுய்யா...நல்லா இருகுய்யா...
உள்ளார்ந்த அன்போடு சொல்லும் போது மனசு பூரித்துப்போகும்.

என்னையும் பாராட்டுவதால் இவரை சாதரணமானவராய் நினைத்து விடாதே.

இந்திய துணைக்கண்டத்தின் தென் மூலைக் குமரியில் பூத்த மலர்,மானிட சமுத்திரத்தின் மேல் எழுதிக்குவித்தது ஒவ்வொன்றும் முத்திலும் மிளிர்பவை.

என்னையும்,உன் அம்மாவையும் கொஞ்சமேனும் எழுத்தூண்டிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைமை ஏற்று தன்னிகரில்லாப் பணி செய்தவர்.

அவரின் சிறுகதைகளாகட்டும்,கட்டுரைகளாகட்டும்,நாவல்களாகட்டும்.,.அத்தனை செறிவானவை.

ஒரு நாவல் பதினான்கு வருட உழைப்பை தின்றிருக்கிறது.
மற்றொன்றோ இருபத்தாறு வருடக்கனவாய் இருந்திருக்கிறது.

ஆச்சர்யம் சக்தி!
இருபது ஆண்டுகளுக்கு முன்னே கதையாகத்தெரிந்தது,இன்று கண்முன்னே நடக்கிறது.
இன்றைய மதவாதம் எந்த அளவுக்கெல்லாம் தன் விஷக்கிளைகளை பரப்பும் என்ற தீர்க்கதரிசனம் சொல்லி முடியாது.

மண்டைக்காட்டு கலவரத்தின் ஆணிவேர் எங்கே இருக்கிறது?

குலசாமிகளை ஒடுக்கி மறைக்க பிள்ளையார் நுழைந்த அரசியல்...

படிக்கும் ஒவ்வொரு வரியும் தகதக்கின்றன நெருப்பாய்.

நம் தமிழ்ச்சமூகத்தின் கேடாய் சினிமாவுக்கு போகும் எழுத்தாளனே அதிகம் அறியப்படும் அவலம்.இவரின் அமில எழுத்துகளுக்கு அங்கே வேலையில்லை.
ஒரு கதை படமாகி இருக்கிறதாம்..நான் பார்த்ததில்லை.

நம்மையும் அறியாமல்  ஊடுருவி விடுவார்கள் என எழுதியிருந்தேன்..ஆம் சக்தி.
என்னுடைய எழுத்துக்கள் அவரால் விளைந்தவை.
சமூகப்பார்வை அவராலும் கிடைத்தது.என்னிலிருந்து உனக்குக் கிடைக்குமாயின்
அது உன்னையறியாமல் உனக்குள் ஊடுருவியது தானே.?

உன் கல்வியின் ஊடே இவர் எழுத்துக்களையும் படி.
இந்த சமூகத்தை தெரிந்துகொள்ள உன் பாடத்திட்டங்கள் உதவாது.
பாடம் தாண்டி படி,
பணியை தாண்டி படி,

நான் சொல்ல வந்தவர்

பொன்னீலன்.

நாவல்கள் புதிய தரிசனங்கள்,மறுபக்கம்,
மகேந்திரன் இயக்கிய பூட்டாத பூட்டுகள் இவரின் உறவுகள் கதை.
இவரின் எழுத்துகளை தனிமையில் படி..
உள்ளத்தை திறந்து படி.காட்சிகள் வழி சமூகம் தொடும் இவர் தீர்க்க தர்சனங்கள் புரியும்.பின்னொரு நாளில் இன்னும் சொல்கிறேன்.

அன்புடன்,
செல்வக்குமார்

23 கருத்துகள்:

 1. காலத்தை வென்று சிரிக்கும் எழுத்தாளர் ...
  வாய்ப்பினை தவறவிட்டுவிட்டேன்

  பதிலளிநீக்கு
 2. பொன்னீலன் அவர்களின் எழுத்துக்களைப் படிக்கத் தூண்டும் பதிவு நண்பரே
  இனி அவசியம் படிப்பேன்
  நன்றி

  பதிலளிநீக்கு
 3. நான் அன்று வர இயலவில்லை....வருத்தப்பட்டேன்...எழுத்து ஆயுதமாகட்டும்...

  பதிலளிநீக்கு
 4. பொன்னீலன் அவர்கள் குறித்த பகிர்வுக்கு நன்றி! நாமும் அறிந்தோம்!

  பதிலளிநீக்கு
 5. // மண்டைக்காட்டு கலவரத்தின் ஆணிவேர் எங்கே இருக்கிறது? //

  கண்டுபிடித்தால்....?

  பதிலளிநீக்கு
 6. பொன்னீலன் பற்றிய சிறப்பான பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 7. காலத்தை வென்று சிரிக்கும் எழுத்தாளர் ...
  வாய்ப்பினை தவறவிட்டுவிட்டேன்

  பதிலளிநீக்கு
 8. 15அன்று மாலை வரஇயலாத நிலைக்கு வருந்துகிறேன் செல்வா. அண்ணாச்சி உணர்ச்சிகளின் வடிவம். எழுத்தில் பேச்சில் சாயலில் ஜேகே பொலத் தோன்றுபவர். என்னை எங்கே பார்த்தாலும் புருவம் உயர்த்தி, கண்ணை விரித்து “நிலவன்ன்ன்ன் எப்டி இருக்கீங்க?” எனும் அவரது கரகரக் குரலைக் கேட்டு மகிழ்வேன். பாப்பாவுக்கு பாரதி மட்டும்தான் எழுதணுமா? நானும் எழுதிட்டேன் நீங்களும் தொடர்ந்து எழுத வேண்டுகிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம்னு தமிழ்நாட்டு மக்கள் மாதிரி நீங்க சொல்லணும்! )

  பதிலளிநீக்கு
 9. பொன்னீலன் ஐயா தமிழகத்தின் பொக்கிஷம். அவரைப் போல் புதிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பவர்கள், மிகவும் குறைவு..ஆரம்பத்தில் கலை இலக்கிய பெருமன்றத்தில் என்னைப் பெரிதும் ஊக்குவித்தவர், அதன் பின்னும் தொடர்பவர்...அவருக்கு ஆயுள் இரட்டிப்பாக வேண்டும் என்று நினைப்பவர்களில் நானும் ஒருத்தி...

  பதிலளிநீக்கு
 10. பொன்னீலன் எங்கள் ஊர் என்பதும் இவரைப் பற்றி அறிந்திருந்தாலும் நூல்கள் வாசித்ததில்லை. வாசிக்கவேண்டும்....

  தங்களது விவரணம் அவரது நூல்களைப் பற்றி அறிவிக்கின்றது...பகிர்வுக்கு மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு