ஞாயிறு, 1 நவம்பர், 2015

தலைப்பிடுங்கள்......

அவனைப்
பாடாதிருக்கச்
சொல்லுங்கள்,
முடிந்தால்
பேசாமலும்
இருக்கச்
சொல்லுங்கள்.

கடும்பசியில்
இருக்கின்றானா?
கண்களை மூடி
கனவுகாணச்
சொல்லுங்கள்.

வகுப்பாசிரியர்கள்
வரலாற்றை
போன
நூற்றாண்டோடு
நிறுத்தச்சொல்லுங்கள்

கவிஞர்களே
காதல்
பாட்டெழுதி மட்டுமே
கர்வப்பட்டுக்
கொள்ளுங்கள்.

மழை பாடுங்கள்.
இலை பாடுங்கள்
அம்மாவைப்பாடுங்கள்

அரிப்பு அதிகமாயின்,
சொரிந்து கொள்ளுங்கள்.

கூன்வளைந்த
கூட்டமிடை
வான்நிமிர்ந்து
பார்க்கவும்
அச்சம்

கள்ளுண்ணாமை
சொன்ன
வள்ளுவன் சிலையும்
சிறைப்படலாம்.

தின்பதற்கும்,
சொல்வதற்கும்
கொல்வதும்,
உள் தள்ளுவதும்
பரிசான நாட்களில்
படுப்பதற்கு
ஏதேனும் தடைவருமோ?
வரலாம்.

முன்னத்தி ஏர்களே...
என்ன செய்வது
எழுத்தென்னும்
ஆயுதத்தை?

பெருமாள் முருகன்,
கல்புர்கி,
சிவகாசிக்கு வைக்கும் வெடி.
திரைக்கு வெளியேயும்
நடித்த நடிகர் கூட்டம்.
ஆக்டோபஸாய்
விழுங்கும்
அந்நிய சக்திகள்...
முடிவெடுங்கள்..
இது ஞாயிறின்
ஜெபக்கூட்டமல்ல.

செய்வோம்.,.
மேக் இன் இந்தியா
பார்க்கும்
அளவிற்கு
மேட் இன் இந்தியா
முடிவதில்லை...

அது
நமக்காய்
காத்திருக்கிறது.

-இன்றைய ஒரு அமர்விற்காக.....




8 கருத்துகள்:

  1. கோவனை கைது செய்தமைக்காக கொந்தளித்த பாடலில்....காரம் அதிகம் தான்...கூடவே உப்பின் படத்தையும் போட்டால் தமிழகத்தில் உப்பு சாப்பிடுவோரின் நிலையும் தெரியலாம்...வாழ்க....வளர்க....சினிமாவிற்கு பாடல்கள் எழுத முயற்சி செய்யுங்கள்...கட்டாயம் கைகூடும்...வார்த்தை வளம் அருமை...அன்புடன் நண்பன்..( எனக்குச் டீச்சரைத் தெரியும். இப்போது சென்னை...ஆமாசாமி)எனக்கு வ்லைதளம் இல்லை.

    பதிலளிநீக்கு
  2. படமே தேவையில்லை
    ஒவ்வொரு எழுத்தும்
    ஒவ்வொரு சொல்லும்
    காரத்தைத் தூவுகிறது - தங்களின்
    மனப் பாரத்தைப் பறைசாற்றுகிறது

    பதிலளிநீக்கு
  3. சோற்றில் உப்பு போட்டு சாப்பிடும் சூடு சுரணையுள்ள மனிதனின் உணர்வு வெளிப்பாட்டை உங்களின் வரிகளில் பார்க்கிறேன். அருமை பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  4. மிளாகாய் சாப்பிட்டால் மட்டும்மல்ல உங்கள் கவிதைகளின் வரிகளை படித்தாலே காரம் ஏறுகிறது நாவில்

    பதிலளிநீக்கு
  5. காரம் சரிதான். ஆனால் இன்னும் செதுக்கியிருக்கலாம். நீங்களே முயற்சி செய்து. எல்லார்க்கும் தெரிந்த செய்தி என்பதால் சொல்முறையில் இன்னும் கனமாகவே சொல்லியிருக்க வேண்டும்.
    பெருமாள் முருகன்,
    கல்புர்கி அடுத்தடுத்து வைக்கலாமா? (வகைகள் வேறல்லவோ?)
    அடுத்து
    “திரைக்கு வெளியேயும்
    நடித்த நடிகர் கூட்டம்.“ என்பதை “வெளியிலும் நடிப்பவர்கள்“ என்பதாகச் சுண்டக் காய்ச்சியிருக்கலாமோ?
    தலைப்பையே காரமாக்கி மிளகாயை நறுக்கியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  6. அட! நல்ல காட்டமான ஸ்பைசியான கவி வரிகள்!!!
    வகுப்பாசிரியர்கள்
    வரலாற்றை
    போன
    நூற்றாண்டோடு
    நிறுத்தச்சொல்லுங்கள்// சரியாகச் சொன்னீர்கள்...வரலாறு வகுப்பில் பசங்க ரொம்ப தூங்குறாங்களாமே..ஹஹஹ்

    பெருமாள் முருகன்,
    கல்புர்கி,
    சிவகாசிக்கு வைக்கும் வெடி.
    திரைக்கு வெளியேயும்
    நடித்த நடிகர் கூட்டம்.
    ஆக்டோபஸாய்
    விழுங்கும்
    அந்நிய சக்திகள்...
    முடிவெடுங்கள்..// இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை...இறுதிவரிகள் உட்பட...அருமை..

    பதிலளிநீக்கு