சனி, 26 மே, 2018

அம்பின் அலறல்..

இன்றென்
மகளுக்குப்
பிறந்தநாள்..
நகரின்
நலனுக்கு நடந்த
போராட்டமொன்றை
அடக்கிவிட்டு
வந்திருக்கிறேன்..

நீளத்தடியை
சுழற்றும் போது
எங்கோ
தெறித்திருக்கிறது
சீருடையின் உலோகப்பொத்தானொன்று..
ஆண்டிறுதி
அறிக்கையில்
பதில் சொல்லவேண்டிய நினைவில்..
எவனோ எறிந்த
கல்லொன்றில்
கன்றியிருக்கிறது
தோள்கள்.

கேக்கின் துகளொன்று
ஒட்டிய வாயுடன் உறங்கிக்கொண்டிருக்கிறாள் மகள்..

தொலைகாட்சி
மௌனமாய் ஓடிக்கொண்டிருக்க மனைவி
உணவுக்கழைக்கிறாள்.
மீதமிருக்கும்
கேக்கின் துண்டொன்று...
இளவண்ண கேசரியென
இருக்கிறது
இரவுக்கான உணவு.

பசியை மீறி தின்கிறது
பகலின் இரைச்சல்கள்..

பத்தாம் வகுப்பு
முடிந்ததும்
ஆரம்பமான
தண்டால்களும்,
தாண்டுதல்களும்,
தேகப்பயிற்சிகளுமாய் கயிறேறிக்காட்டியும்,
வெயிலின் பொட்டலில்
வியர்க்க தேர்வெழுதியும்
கிடைத்த வேலை..

மீசைக்கனவும்
மிடுக்கான பார்வையும்
பயிற்சி காலங்களில்
புரட்டியெடுத்த மணலில்
பாதி தொலைந்தது.

பளபளக்கும்
காலணிகளணிந்து
பதவி கொண்டபோது
எண்கள் என் பெயரானது.

அய்யாக்களும்
அடிபணிதல்களும் அத்தியாவசியமென
பயிற்சியில்
ஏதும் சொல்லவில்லை.

கவாத்துகளும்,
அணிவகுப்பும்
வேடிக்கை பார்த்துப்போகும் உங்களுக்குத் தெரியாது உறக்கமில்லா இரவுகள்.

உயரத்துப்பாக்கி
கைகளில்
பிடித்து நின்று
வலிக்கும்
பாராவின் கால்கள்..

கடக்கும் கார்களில்
யாரிருப்பாரோ
கவனமாய்
வைக்கவேண்டும்
நேர்நின்று
வணக்கங்கள்.

நிலையங்கள் பணியில்
நித்தம் சோதனைகள்.

அடித்தவன்
அமர்ந்திருப்பான்
அய்யாவின் முன்..
வாங்கியவன்
அறைக்குள் இருப்பான்.

தேனீர் கொடுப்பவன் சுதந்திரமானவன்
தேவைகளின்றியும்
போகலாம் வரலாம்.

கடினமாய்த்தேடி
கூட்டிவருவோம் .
அவன்
காலையில்
கடைவீதி திரிவான்.

சட்டத்தின் எண்கள் ஏட்டுக்குத்தெரியும்..
அவர் உட்கார்ந்து
எழுதியே
உருவாகும் தொப்பை.

கோர்ட்டுக்கு பணியென்றால்
கோபம் கொல்லும் மனசு.
வக்கீல் வாதம் செய்வார்..
நீதிபதி கேள்வி எய்வார்.
குற்றவாளி நானில்லை
கூண்டேறி நிற்கவேண்டும்.

எத்தனையோ இடரெனினும் இறுக்கமாய் இருக்கவேண்டும்.

கம்பீரம் பார்த்தெம்மை கடக்கும் உலகோரே...
நான் கைகட்டி வாய்பொத்த கணக்கில்லா இடமுண்டு.

முன்னாள் ரவுடி
மந்திரியாவார்..
முன்னால்
நாங்கள் வழி சொல்ல
வேண்டும்.
இந்நாள் ரவுடிக்கும்
எதிர்காலம் உண்டு
எதிர்பார்ப்போடு
இயங்கவும் வேண்டும்.

கூட்டங்கள் நடந்தால்
குறிப்புகள் வேண்டும்.
ஆர்ப்பாட்டங்களில்
அமைதிக்கு வேண்டும்.

அனுமதி பெற்று
தோழர்கள் திட்டுவர்..
சிலர்
மாமாக்கள் என்றே
மட்டமும் தட்டுவர்.

உயரத்து தலைமையின்
ஓரங்கள் நாங்கள்.
உள்ளுக்குள் வேகும்
துயரங்கள் நாங்கள்.

குறைகள் ஆயிரம்
எமக்கும் இருந்தும்
வழிகளில்லா
துறை எங்கள் துறையே!

சமூகமென்பது
என் வீடும் சேர்ந்து தான்.
சட்டங்கள் சொல்வதும்
சமமென எம்மைத்தான்.
கடமையைச்செய்தும் கயவர்களானோம்.

வங்கிக்கடன்கள்
வாய்ப்பதே இல்லை.
ஓய்வுற்ற பொழுதும்
காப்பதே வேலை.

அடக்குதலென்பது
அவரிடும் பணிகள்.
எமக்கும் தெரியும்
சமுதாய பிணிகள்.

விரலிட்ட மைகளில்
விளைந்திட்ட சோகம்.
நீங்கள் குரலிட
அவருக்கோ
அடங்காத கோபம்.

கொடுக்கும்
வேலைதான்
யாம்
கொல்வதில்லை..
கொடுப்பவர் மீது
நீங்கள்
கோபம் கொள்வதே இல்லை.

எவர் வந்த போதும்
பாவம் எமை வந்து சேரும்.
திட்டுவதென்றால் அவர் திசை திட்டுங்கள்.
முட்டுவதென்றால்
அவர் வீடு முட்டுங்கள்.

விசையுறு அம்புகள் நாங்கள்..
வில்லை மாற்றுங்கள்..
வீடுண்டு,
பிள்ளையுண்டு
எங்களுக்கும்
வீணான
எண்ணங்கள்
மாற்றுங்கள்.திங்கள், 21 மே, 2018

மதமெனும் அபின்

அரசென்பதும் சட்டமென்பதும் யாவர்க்கும் பொதுவே.
நீங்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அதனினும் அதிகமான உச்சத்தில் சட்டமிருக்கும்.

சனி, 19 மே, 2018

ஆடைகளை அவிழுங்கள்

மனனம்
செய்யும்
அவனோ பாவம்,
அணாக்களின்
கணக்கில்
ஜனனம் திட்டாதீர்..

பந்தடிக்கும்
பிள்ளைகள்
ஆட்டத்தில்
ஓட்டங்கள்
கொள்ளுங்கள்..

பேனாக்கள்
இருக்கும்
பெருஞ்சட்டை
பையில்..
கொஞ்சம்
கோலிக்குண்டுகள்
சேர்த்து
தூக்குங்கள்..

சீமைச்செய்தி
பிறகு பார்க்கலாம்
சிந்துபாத்
ரசியுங்கள்.

செவிட்டு
இயந்திரம்
எப்போதும்
வேண்டாம்..
புளூடூத்
பாட்டுக்கு
கொஞ்சமாய்தலையாட்டுங்கள்.

உங்கள்
ரசனைகள்
உள்ளுக்குள்
எதற்கு..
பிள்ளைகளோடு
பிள்ளையாய்
மாறுங்கள்..

அவனைப்போல
ஆடைகள்
தையுங்கள்...
அவஸ்தை
என்றாலும்
அவன்
ஆசிரியர்
வைய்யுங்கள்..

அவனுக்கு
பிடித்த
கார்ட்டூன்
பாருங்கள்..
அவசியமென்றால்
டாட்டூவும்
போடுங்கள்.

அவன்
போடா
எனினும்
புன்னகை
செய்யுங்கள்...
தாத்தா 
என்பதை
தள்ளியே
வையுங்கள்..

பக்கத்தில்
இருந்து
பரவசம்
கொள்ளுங்கள்...
அவர்கள்
பார்த்தாலென்ன
பாட்டிக்கு
முத்தங்கள்
பார்சல்
செய்யுங்கள்..

ரயில்
வந்த கதைகளை
நகர்த்தி வையுங்கள்..
ஒரு
மெயில் ஐடி
கொண்டு
ஹாய்
சொல்லிப்
பாருங்கள்...

பேஸ்புக்
முகப்பில்
பெண் படம்
ஒட்டுங்கள்..
யாரெனக்கேட்டால்
உள்ளம்
கவர்ந்ததாய்
பொய்யேனும்
கொட்டுங்கள்.

அவர்கள்
வாட்ஸ் அப்
குரூப்பில்
வலியச்சேருங்கள்..
வரும்
எல்லா சேதிக்கும்
வாழ்த்துகள்
சொல்லுங்கள்..

பிள்ளைகள்
என்போர்
வளரும்
பெரியோர்...
பெரியோர்
யாவரும்
வளர்ந்த
பிள்ளைகள்..

உள்ளங்கள்
உமக்கு
உற்சாகம்
கொண்டால்
முதியோர்
இல்லங்கள்
முடியாது இங்கே..

பூமியின்
கோடே
கற்பனையென்றால்..
உருவங்கள்
என்பது
பருவத்தின்
ஒப்பனை..

ஒதுங்கிக்கிடப்பது
ஓய்வென்பதில்லை.
ஒட்டிக்கிடப்பதில்
குறையேதுமில்லை..

வயதென்ற
மாயத்தை
மனதோடும்
கொள்ளாதீர்...
அனுபவம்
அறிவென்று
யாரோடும்
சொல்லாதீர்..

மூப்பென்ற
முதுமையை
எப்போதும்
ஏற்காதீர்.
உமக்கான
நாள்களை
வாழாமல்
தீர்க்காதீர்..

அன்புக்குத்
தேவையோ
அலங்கார மேடைகள்..

இப்போதே
கழட்டுங்கள்
அகங்கார
ஆடைகள்..
வியாழன், 3 மே, 2018

நீ ராமனுமில்லை...நாங்கள் அகலிகையுமில்லை...


கூட்டமாய் பிழைக்க 
நாங்கள்
ஆடோட்டி 
வரவில்லை...
கூட்டிக்கொடுத்தலெனும் கொடுஞ்செயல்கள் 
கொண்டதில்லை.

குள்ளநரி 
மூளை கொண்டு
கொள்ளையராய்ப் 
போனதில்லை..
உள்ள 
பொருளெல்லாம்
உள்ளொதுக்கிக் 
கொண்டதில்லை..

உச்சிக்குடுமியில்லை..
ஊடோடும் 
நூலுமில்லை.

மண்ணோடு
வாழ்ந்திருந்தோம்.
மமதையேதும் 
மனதிலில்லை..
புண்பட்ட
ஓர்நிலையும் 
வந்ததிங்கு 
உங்களாலே.

நீ வந்து 
விருந்துண்ண 
நாங்கள் 
சமைக்கவில்லை..
தீ வெந்த 
குடிசையிலும் 
தீண்ட 
சில பொருளிருக்கும்.
நீ 
வந்து போனாலோ 
வெறும் சாம்பல் 
பறந்திருக்கும்..

ஓட்டுக்கும் 
நோட்டுக்கும் 
தீட்டோடா 
யாம் தந்தால்..?

நாட்டுக்கு 
மூத்தவர்கள்
சொந்தக்கால்
கொண்டு 
நடப்பவர்கள்..

ஊர்ப்பணத்தில் 
கொழுத்தவரே..
கொழுப்பேறி
பழுத்தவரே..

வீடேறி 
நீ வந்தால் 
புனிதம் 
உன்னைச்சேருமன்றி..
எமக்கெந்த 
மயிருமில்லை..

வாராதே 
எங்கள் பக்கம்..
வம்பிழுத்து 
இன்னும் பார்த்தால் 
தீராது 
உந்தன் துக்கம்...