திங்கள், 15 அக்டோபர், 2018

இருக்கிறது...
ஒரு சமூகம்
ஒரு நாகரீகம்
ஒரு மொழி
ஒரு நகரம்
ஒரு மனிதன்

எப்போதெல்லாம்
தன்னை
புதுப்பித்துக்கொள்கிறது...?

வியாழன், 4 அக்டோபர், 2018

மழையே...மழையே..

மழைக்கு விடுமுறைகள் இல்லாத இளமைதான் எப்படி இருந்தது..பேண்ட் அணிந்து எப்போதும் வரும் ஜெ.ஆர் சார்

சனி, 8 செப்டம்பர், 2018

பொன்னியின் செல்வன்...

உலகமே ஒரு நாடக மேடை..நாமெல்லாம் நடிகர்கள் தான்.ஆனாலும் அடுத்தவர் நடிப்பை காண்பதில் அத்தனை ஆவலாதி.

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

கந்தர்வகானம்...

ராகம்
********
இந்த சமூகம் பேச்சுகளை கேட்ட அளவில் எழுத்துகளை பார்த்ததில்லை.
ஒவ்வொரு மனிதனும் எத்தனை கதைகளை,அனுபவங்களை சுமந்து திரிகிறான்.

புதிதாய் எதுவும் சிந்திக்கக்கூட தேவையில்லை..சந்தித்த சக மனிதர்களைப்பற்றி கற்பனை இல்லாமல் எழுதினாலே போதும் காவியமாகிவிடும்.

எனக்கும் அதைப்போலவே சந்தித்த மனிதர்களைப்பற்றி எழுதிவிடவேண்டும் என்ற அவா அதிகம்.
பள்ளி நாள்களில் பாடங்களை படித்ததை விட மனிதர்களைப்பற்றி படித்ததே அதிகமாய் இருந்தது.

காலம் வளைந்து நெளிந்து ஓடி காட்டாற்று வெள்ளமாய் நெஞ்ச அணைகளை உடைத்துவிடுமளவுக்கு வந்து விடும்போது ஒன்றிரண்டு மனிதர்களின் முகங்களை நினைப்பதன் மூலம் வடிந்து போவதுண்டு.

அருவருக்கத்தக்க மனிதர்கள் அதிகமாய் தட்டுப்படும் நினைவின் குளத்தில் அபூர்வமாய் சில அற்புதமானவர்களும் இருக்கிறார்கள்..வாத்துகள் நிறைந்த தடாகத்தில் அன்னப்பறவைகளைப்போல..

காலம் இன்னும் எனக்கு புதுப்புது மனிதர்களை அதிமுகப்படுத்திக்கொண்டே இருப்பதால் அந்த மனிதர்களைப்பற்றிய என் எழுத்துகளை தள்ளி வைத்திருக்கிறேன்...ஆகவே என் இனியவர்களே,மற்றும் இன்னல் கொடுப்பவர்களே உங்கள் அனைவர் பற்றியும் எழுத்துகள் இதயத்துள் தயாராகிக்கொண்டுதான் இருக்கிறது.தாளம்
**********
நேற்றைய வீதி இலக்கியக்களத்தின் சிறப்புக்கூட்டத்தில் வட அமெரிக்க நண்பர் அகத்தியன் அவர்களின் வருகை நிகழ்ந்தது.
மிகச்சரியாக ஐந்து மணிக்கு ஆரம்பிக்க வேண்டியது... வழக்கம் போலவே ஆரம்பித்தாலும்..நேரடியாக நிகழ்ச்சிக்குப்போகாமல் கவிதைகள் வாசிப்பு,பாடல் என நடக்க ஆரம்பித்தது.
முப்பதுக்குள் இருக்கும் சொற்ப கூட்டமே என்றாலும் எனக்குப் பின் வரிசையில் அமர்ந்திருந்தவர்களை நான் கவனித்திருக்கவில்லை..

பல்லவி
********
உயர்நிலைப்பள்ளி நாள்களில் தான் எனக்கு தமிழின் மேல் ஈடுபாடு வந்தது.
அதற்கு பள்ளியின் தமிழாசிரியர்களாய் இருந்த திருநாவுக்கரசு அய்யா,கரு.சண்முகம் அய்யா போன்றவர்கள்.

கரு.சண்முகம் அய்யா அவர்களின் வகுப்புகள் அலாதியானதாய் இருக்கும். கட்டையும் அல்லாமல் மெல்லிதாயும் இல்லாத ஒரு ஸ்தாயி.

விழுந்து கொண்டிருக்கும் வழுக்கையை மிக லாவகமாக விழாத முடிகளைக்கொண்டே மூடியிருக்கும் சிரசு.
கம்பீரமான மீசை.
அது வகுப்பறையோ அல்லது பள்ளியின் ஏதோ ஒரு கூட்டமோ அவரின் பாடல் இல்லாமல் போனால் உப்பிலாமல் சமைத்தது போலிருக்கும்.

தமிழார்வம் கொண்ட ஒரு ஆசிரியர் பாடுவதென்பதெல்லாம் அப்போது ஆச்சர்யமில்லைதான் என்றாலும் அந்தப் பாட்டின் உணர்ச்சியை அப்படியே மனசுக்குள் கடத்திவிடும் கந்தர்வ கானம் அவருக்கு.

அரசுப்பள்ளியின் ஆசிரியர் என்பதைத்தாண்டி நாங்கள் இருந்த ஆலைக்குடியிருப்பின் காலனி வீடுகளில் ஒன்றிலேயே அவரும் அவரது மனைவியார் திருமதி  மல்லிகா அம்மா அவர்களும் குடியிருந்தார்கள்.

பள்ளி விட்டு வெளியே வந்ததும் அவர்து செயல்களே என்னை அவர்பால் கவரச்செய்தது.

வீட்டின் முன்னே இருக்கும் வேப்ப மரத்தின் ஒற்றை இலையையும் எவரையும் பறிக்க விட்டுவிட மாட்டார்...
இலைகள் மரத்தின் குழந்தைகள் என்பார்.

தீவிரமான இறை மறுப்பாளராய் இருந்தவர் உள்ளூர் ஆலய திருவிழாவுக்கு வரி மறுத்திருக்கிறார்.

தன் உடல் மேல் அத்தனை அக்கறை.. சைக்கிளை அவர் ஓட்டும் அழகு..கண்ணுக்குள் இருக்கும்.

பள்ளியின் மைதானத்தின் மாலைகளில் நடந்த தனியார் கராத்தே வகுப்புகளில் சின்ன பையன்களுடன் ஆ..ஊ...என பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பார்.

வகுப்புகளில் எனக்கும் அவருக்குமான ஒட்டுறவெல்லாம் அத்தனை கிடையாது.இன்ன பிற புத்திசாலி பிள்ளைகள் மேல் காட்டும் அக்கறையில் குறிப்பிட்ட சதவீதமும் என் மேல் காட்டியதுமில்லை.
ஆனால் நான் ஏகலைவனாய்  அவரை குருவாய் ஏற்றேன்.

என் இளமைக்கால கனவுகளின் லட்சியங்களில் அவரைப்போல்.பேசவும் பாடவும் வேண்டுமென்பதும் ஒன்று.

உயர் நிலைப்பள்ளி வகுப்புவரை எடுத்த அவர் மேல்நிலை வகுப்புகளுக்கு எடுக்கவில்லை.

துல்லியமாக அவர் எனக்குப் பாடமெடுத்து முப்பது வருடங்களைக்கடந்துவிட்டது.

எங்கேனும் யாரேனும் பட்டிமன்றங்களில் அல்லது விழாக்களில் பாடுவதைக்கேட்கும் போது நான் அவர்களின் குரலை கரு.சண்முகம் அய்யாவின் குரலோடு ஒப்பிட்டுப்பார்த்துக்கொண்டிருப்பேன்.


அனுபல்லவி
***************
ஒரு பாடல்,ஒரு கவிதை முடிந்து முத்துநிலவன் அய்யா எனக்குப்பின்னால் இருக்கும் ஒருவரை அழைத்து ஒரு பாடல் பாடுங்களேன் என்கிறார்.
ஜெயகாந்தனை நினைவூட்டும் மீசையுடன் மிகப்பணிவாக வந்து அனுமதியுடன் பாட ஆரம்பிக்கிறார்.

புரட்சிக்கவிஞரின் பாடல் ..
ஆ...இந்தக்குரல்...இந்த முகம்..
கரு.சண்முகம் அய்யாவுடையதாயிற்றே...
அடடா...அய்யாவே தான்.

குரலின் வழி என்னை இழுத்துக்கொண்டு பறந்த நினைவுகளை கீழிறக்க அத்தனை பாடு...
பாடி முடித்த பின்னே... அவரிடம் அய்யா நான் உங்கள் மாணவன் என என் பெயரைச்சொன்னேன்...
இறுகப்பற்றிய அவர் கரங்களில் நான் மீண்டும் சிறு பிள்ளையானேன்.

சரணம்
*********
மரத்தின் இலைகளை எல்லாம் பிள்ளைகள் என்பவருக்குத்தான் காலம் அத்தனை மாணவப்பிள்ளைகளை கொடுத்திருக்கிறது..
அவருக்குக்குழந்தைகள் இல்லை என்பது குறையே இல்லை.புதன், 1 ஆகஸ்ட், 2018

இணையவெளி அச்சங்கள்..

***************************************
எங்கோ இருந்து கிறுக்கிக்கொண்டிருந்த என்னை எழுதவைத்து அட்சரம் சொல்லிக்கொடுத்த அத்தனை ஆசான்களுக்கும்... வலைப்பூவில் எழுத ஆரம்பித்த இந்த மூன்று வருடங்களில் என்னை உள்ளார்ந்து நேசித்த அன்பு உள்ளங்களுக்கும்..
மிகச்சீராக 300 பதிவுகளை தொட உதவிய அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிப்பூக்கள்...
*************************************

செவ்வாய், 31 ஜூலை, 2018

வெள்ளி, 27 ஜூலை, 2018

வியாழன், 5 ஜூலை, 2018

அற்றைத்திங்கள்

வால்ட் டிஸ்னி தனது கனவு உலகத்தை செய்து முடித்து திறப்புவிழாவின் முன்னரே காலமாகிவிட்டார்.

புதன், 27 ஜூன், 2018

சாதித்த சங்கம்

இந்த பாண்டிச்சேரிக்கு அடிக்கடி வந்துபோயிருக்கிறேன்..
ஆங்கில ஆட்சியில் மட்டுமல்லாது இந்த காலத்திலும் பலருக்கு அடைக்கலம் கொடுக்கும் பூமியாகத்தான் இருக்கிறது.
கடற்கரையின் நடைபாதையில் அலைகொஞ்சும் கடல் ஒருபுறமெனில் மற்றொரு புறம் கட்டடங்களை ரசித்துக்கொண்டிருக்கும் பலரது முகங்களில் என்னைப்போலவே அடைக்கலமாய் வந்திருக்கும் உணர்வுகளை கண்டிருக்கிறேன்.

தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரத்தை கடந்து வளவனூர் தாண்டும் போதே ஒரு தனி உற்சாகம் மனசுக்குள் பூத்துவிடும்.
புதுச்சேரி வரவேற்கும் வளைவுக்குள் நுழைந்துவிட்டால் நீண்ட நாளுக்குப்பின் தாய்ப்பசுவை கண்ட கன்றுக்குட்டியாய் வண்டி பறக்கும்.

இடையில் கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கொண்ட பின் த.மு.எ.க.ச வின் 14ஆம் மாநில மாநாட்டுக்காய் தோழர்களோடு ஒரு பார்வையாளனாய் போய் வந்தேன்.

மாநாடு 21 ஆம் தேதியே தொடங்கி இருந்தாலும் நாங்கள் 22 தான் செல்ல முடிந்தது..

நாராயண சாமியின் முகத்தை பல்வேறு வடிவங்களில் வண்ணங்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களைத்தாண்டி மாநில மாநாட்டின் வித்தியாசமான பதாகைகள் பளிச்சென இருந்தது.

இந்திராவின் சிலையை தாண்டி ராஜிவ் சிலையை கடந்ததும் பாலாஜி தியேட்டரின் பின்புறமுள்ள ஒரு மண்டபத்தில் நடந்துகொண்டிருந்தது மாநாடு.

இந்த மாநாட்டின் எந்த ஒரு அங்கமாகவும் நானில்லை.
முழுக்க முழுக்க ஒரு பார்வையாளனாய் நான் அடைந்த பேறுகள் பல.

அரங்கின் வாசலில் அப்படி ஒரு வாய்ப்பூட்டின் படம்..
இன்னொரு புறம் படுகொலை செய்யப்பட்ட தபோல்கர்,கல்புர்க்கி,கௌரி லங்கேஷ் ..இவர்களை குறிபார்த்து நிற்கும் ஒரு துப்பாக்கியுடன் புடைப்புப்பதாகை.

அரங்கின் உள்ளே மேலாண்மை நினைவு அரங்கில் தூய வெள்ளைநிறப் பிண்ணனியில் அகன்ற மேடை..

உட்கார்ந்திருக்கும் தலைகளோ ஆகப்பெரியவர்கள்...
வாமனனாய் தெரியும் பேராசிரியர் அருணன் விஸ்வரூபம் எடுக்க அமர்ந்திருக்கிறார்.

வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதவியல் ஆராய்ச்சியாளரும் நான் மிகவும் ஆராதிக்கும் அமைதியான மனிதர் பக்தவக்சலபாரதி சாதியற்ற தமிழகத்தின் நிலையை அத்தனை வரலாற்று ஆதாரங்களுடன் சொல்லிமுடிக்கிறார்.

கூட்டம் பேசும் மனிதரின் எண்ணங்களுக்கு ஏற்றாற்போல் தொடர்கிறது.
பட்பட்டென பேசும் வார்த்தைகளை உடையவர்கள் பேசும்போது சிரிக்கிறது,சத்தமிடுகிறது,

ஆனால் பேசுபவர் மிக அமைதியாக கருத்துகளை சொல்லும் போது காதுகளை கூர்மையாக்கி வாங்கிமட்டும்
வைத்துக்கொள்கிறது.

அடுத்ததாய் அற்புத படைப்பாளி சுகுமாறனின் கவிதையில் தொடங்கிய உரை கட்டிப்போடுகிறது சபையை..
மெல்லிய சாரல் நம் ஜன்னலோரம் அடிக்கும் போது எப்படி அதை தவிர்க்காமல் ஈரம் நம் முகத்தை மோத கொடுத்துக்கொண்டிருப்போமோ அப்படி இதயம் அவர் வார்த்தைகளில் இளகிக்கொண்டிருக்கிறது.

இடை இடையே அறிவிப்புகளை அளிக்கும் தோழர் மதுக்கூர் ராமலிங்கம்,
ச.தமிழ்ச்செல்வன்,
சு.வெங்கடேசன் ஆகியோரின் குறுஞ்செய்தி போன்ற தகவல்கள் பாயாசத்தின் முந்திரிப்பருப்புகள்.

வாசலை ஒட்டி அமர்ந்திருக்கிறேன்.
கடந்து போகும் மனிதர்களின் முகங்கள் என்னை பரவசப்படுத்துகின்றன.
இத்தனை நாள் வாழ்வில் யாரையெல்லாம் நான் பார்க்காமல் இருந்திருக்கின்றேனோ அல்லது யாரை பார்க்க விரும்பியிருந்திருக்கின்றேனோ அத்தனை படைப்பாளிகளையும் பார்க்கிறேன்.
எத்தனை அபாரமான படைப்பாளிகளின் கூட்டம்..
ஆனால் அத்தனை எளிமையான கைகுலுக்கல்கள்.
எந்த தயக்கமும் இல்லாமல் அவர்களின் கரங்களை நோக்கி நீளும் என் கரங்களை கனிவுடன் வாங்கி பொத்திவைத்துக்கொள்கின்றன அவர்களின் கைகள்.

மேடையிலிருந்து இறங்கும் சுகுமாறனுடன் ஒரு புகைப்படமெடுக்க விழைகிறேன்...
ஒட்டிக்கொண்டிருக்கும் அவரின் புன்னகை இன்னும் கொஞ்சம் விரிகிறது பூவைப்போல..

குறுந்தாடியுடன் வலம்வரும் ஆதவன் தீட்சண்யா,சிரிப்பும் கேலியுமாய் நண்பர்களுடன் பூபாளம் பிரகதீஸ்வரன்,
ஒரு யானையாய் அசைந்து வரும் எஸ்.ஏ.பி,
இதோ என்னை கடந்து போகும் பெண் ஆவணப்பட இயக்குனர் திவ்யா, நடக்கிறாரா பறக்கிறாரா வெண்புறா, பிரமாண்டமான ஒரு திருமண வீட்டைப்போல் எந்நேரமும் பந்தி நடந்து கொண்டிருக்கும் உணவுக்கூடம்.
கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் அடையாள அட்டைகளை சுமந்து கொண்டிருப்பதில் எத்தனை கர்வம் இந்த தோழர்களுக்கு.

ஆயிரம் தலைகள் கண்ணுக்குத்தெரிந்தால் அதில் 99விழுக்காடு படைப்பாளிகள் ...
மேடையின் விவாதங்களுக்கிடையே பாடத்தொடங்கிவிடும் பாடகர்களின் குரல் அத்தனை வலிமையாய் இருக்கிறது.

"அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு
அத்தனை சொற்களும் வெறும் பசப்பு"

புதுச்சேரியின் தோழியர் உமா பாடுகையில் அத்தனை பாந்தமாயிருக்கிறது.

கரிசல் கருணாநிதி அவ்வப்போது பாடுகிறார்.
கருப்பு கருணா கண்ணாடி போட்டிருக்கும் ரகசியம் தெரிகிறது,
தெறிக்கவிடும் வெடிச்சொற்களில் மின்னும் மன்றத்தின் புன்னகையில் கூசாதா அவர் கண்கள்?

மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி நிரல். ஒவ்வொருவருக்கும் ஒரு பணி ஒதுக்கப்பட்டிருக்கிறது..
மேடையின் காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கிறது.
அத்தனை நிகழ்வுகளிலும் கூட்டம் மனப்பூர்வமாய் கலந்துகொள்கிறது.

எழுத மறந்தாலும் மறந்துவிடுவேன் என்பதால் இடையில் இந்த வார்த்தைகளை இப்போதே சொல்லிவிடுகிறேன்.

முன்னொரு நாளில் நான் புதுவை சென்றிருந்த போது ஒரு கட்சியின் மாநாடு நடந்துகொண்டிருந்தது.
நகரின் அத்தனை மதுக்கடைகளிலும் அந்த கட்சியின் தொண்டர்களைக்கண்டிருக்கிறேன்.
ஆனால்.
நண்பர்களே இந்த முறை மண்டபத்தின் எதிரிலேயே மதுக்கடை இருந்தாலும் ஒற்றைத்தோழர் கூட அதில் நுழைவதை நான் காணவில்லை.
அடையாள அட்டை தொங்கும் ஒரு தோழரைக்கூட நகரின் சுற்றுலாத்தளங்களில் நான் காணவில்லை.
மாநாட்டின் வெற்றியை அளக்க பல அளவுகோல்கள் இருந்தாலும் இது தலையாய அளவென்பேன்.

மண்டபத்தின் நிகழ்ச்சி முடிந்து கம்பன் அரங்கில் ஏற்பாடாகியிருக்கும் பொதுமக்களுக்கான கருந்தரங்குக்காய் நடக்க ஆரம்பிக்கிறார்கள் தோழர்கள்..

ஆயிரக்கணக்கான பேர்கள் அமரக்கூடிய அரங்கம்..
அணிந்து கொள்கிறது மனிதர்களை.

கருத்தரங்கம் பேராசிரியர் அருணனின் உரையில் ஆரம்பிக்கிறது..
தொகுத்துவழங்க குமரேசன் தோழர்.
மேடையில் கவிஞர் வைரமுத்து,
பெருமாள்முருகன்.
கருத்தரங்கின் மையப்பொருளாம் கருத்துரிமை பாதுகாப்புக்கு இவர்களை விடவா பொருத்தமானவர்கள் கிடைத்துவிடப்போகிறார்கள்.

அரங்கம் ஆர்ப்பரிக்க புதுவையின் முதல்வர் நுழைகிறார்...
மேடையில் ஏறாமல் மக்கள் சமுத்திரத்தின் ஊடே மோசேயாய் கரங்கள் கூப்பி வலம் வருகிறார்.
இருக்கைகள் நிரம்பி காலியிடங்களிலெல்லாம் கால்கள் நின்றுகொண்டிருக்கிறது.
பேச்சாளர்கள் பேசும் முன்னே முதலவரை நண்பர் நாராயணசாமி என விளித்து பேச அழைக்கிறார்.
ஒரு மாநிலத்தின் முதல்வரையும் நண்பராய் பார்க்கும் பக்குவத்தை என்ன சொல்வது?

மாதொருபாகனுக்காய் குரல்கொடுத்த நன்றிக்கடனை பெருமாள் முருகன் நெஞ்சார அடைக்கிறார்.
மார்க்சியம்,அம்பேத்காரியம்,பெரியாரியம் இணைய வேண்டிய கட்டாயத்தை எடுத்துவைத்து இருக்கை திரும்ப...
வைரமுத்து வசம் மேடை. வாசமடிக்க ஆரம்பிக்கிறது தமிழால்.
நாடோள்வோர் ஏடாள்வோரை கொண்டாட வேண்டியதில் தொடங்கி வந்து நிறைகிறது வார்த்தை நதி அணைகளின்றியும் மேலாண்மை வாரியமின்றியும்.

அரங்கம் காதுகளை திறந்து வைத்து வைரமுத்துவின் வார்த்தைகளை இதயத்தில் சேமிக்கிறது.
நன்றியுடன் முடியும் நாள்.

அடுத்த முழுநாளும் அவர்களின் விவாதங்கள் ஆலோசனைகள்..எதிர்கால முன்னெடுப்பின் யோசனைகள்.
நான் மண்டபத்தின் இறகுகளாய் முளைத்திருந்த புத்தகக்கடைகளில் மேய்கிறேன்.
கடைகள் சிறிதெனினும் கடல்களை அடைத்துவைத்திருக்கும் புத்தகங்கள்.

இன்னொரு அரங்கில் கீழடி குறித்த ஆவணங்கள்,மற்றொன்றில் புகைப்படக்கண்காட்சி..
நைநா கி.ரா வின் எதார்த்தமான புகைப்படங்கள்..
சுந்தரராமசாமி,
பேரழகன் பிரபஞ்சன்...
பார்ப்பது புகைப்படமா அல்லது ஹாரிபாட்டர் கதையில் வருவதுபோல் படங்களுக்குள்ளே இருந்து பார்த்துக்கொண்டிருக்கின்றார்களோ என சந்தேகம் வருகிறது.

அவர்களின் ஏதோ ஒரு பொறுப்புக்காய் தேர்தல் நடக்கிறது..
தேர்தல்.ஆணையர் இருக்கிறார்..
வாக்கெண்ணிக்கை முடிந்து அறிவிக்கிறார்கள்..
வென்றவர் கொஞ்சமாய் சிரிக்கிறார்.
தவறவிட்டவர் இன்னும் அதிகமாய் சிரித்து வென்றவரை தழுவிக்கொள்கிறார்.

மண்டபத்து ஒட்டியிருக்கும் மேடையின் பின் திரையாய் மூன்று புடைப்புச்சிலைகள் முளைத்திருக்கிறது.

அம்பேத்கார்,லெனின்,பெரியார் இவர்களின் முகங்களின் பிண்ணனியில் மாலை நிகழ்ச்சி தொடங்குகிறது.
இதனிடையில் படைப்பாளர்களின் நாற்பத்து இரண்டு படைப்புகள் வெளியிடப்படுகிறது.

மாலை நிகழ்ச்சியாய் கவியரங்கம்.
கவியரங்கின் ஊடே பின்புறமுள்ள சிலைகள் முழுமை பெற ஆரம்பிக்கிறது.


சமீபத்தில் தூத்துக்குடியில் துப்பாக்கிக்குண்டில் மாண்ட ஸ்னோலினின் எழுத்துகள் புத்தகமாக்கி வெளியிட வரும் ச.தமிழ்ச்செல்வன்..
ஒரு அமைப்பின் மாநிலத்தலைவர்...அந்த புத்தகத்தின் அட்டையை பார்த்து அழுகிறார்..
வார்த்தைகள் வராத நிலையில் ஸ்தம்பிக்கிறது கூட்டம்..
பெற்றுக்கொண்ட பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜனாகட்டும்,
வெளியிட்ட பத்திரிக்கையாளர் திருமாவேலனாகட்டும் உணர்ச்சிகளின் குவியலுக்குள் இருந்தனர்.

யவனிகா ஸ்ரீராம் ஆரம்பிக்கும் கவியரங்கை தொடரும் வல்லம் தாஜ்பால்,வெயில்,ஜீவி,
தனிக்கொடி,ஸ்டாலின் சரவணன் என கவிதை மழையில் நனைகிறது வெளி..

அறம் பட இயக்குனர் தோழர் கோபி நைனாரின் உரை அப்படி ஒரு எளிமை...

இரவு என்னும் பொழுது உச்சிக்கு வந்ததால் கலையும் அரங்கம்.
அடுத்த காலை மீண்டும் கூடுகிறது..

முக்கியப்பொருப்புகளுக்கான தேர்தல்,ஆலோசனை என அரங்கத்தை மூடி நடக்கும் சடங்குகள் முடிய,
மதியம் பேராசிரியர் அருணனின் தொகுப்புரை..

இறுதியாய் அறிவிக்கிறார்கள்..
புதிய கௌரவதலைவராகிறார் ச.தமிழ்ச்செல்வன்,
தலைவர் சு.வெங்கடேசன்,
பொதுச்செயலாளராக ஆதவன் தீட்சண்யா,
பொருளராக ராமச்சந்திரன்..மற்றும் துணைத்தலைவர்கள்,
துணைச்செயலர்கள்...
த.மு.எ.ச.க.வின் பொறுப்புகள் இவர்களின் தோள்களுக்கு மாறியிருந்தாலும் சேர்ந்து கடக்க ஆயிரமாயிரமாய் தோழர்கள் இருக்கையில் எல்லாம் சாதிக்கலாம்.

ஒரு அமைப்பின் கொள்கைகளை தீர்மானிக்கும் முன் அமைப்பின் சட்டதிட்டங்களை வரைவதோடு இல்லாமல் அதனை ராணுவக்கட்டுப்பாட்டுடன் செயல்படுத்தும் பாங்கு ..
இயங்கும் எல்லா அமைப்புகளும் படிக்கவேண்டிய பாடம்.

மாநாடு முடிந்த நள்ளிரவில் அந்த மண்டபத்தை கடக்கிறேன்..
ஒரு அஸ்வமேத யாகம் முடிந்த இடமென தெரிகிறது.

பேருந்து நிலையத்து உள்ளே நின்று கொண்டிருக்கும் தோழர்களின் முகத்தில் அத்தனை முதிர்வு...

யாரின் முகத்திலும் சோர்வென்பதே தெரியவில்லை..
எப்படி இருக்கும்..

அவர்கள் சுமந்து கொண்டிருப்பது
சாதியற்ற தமிழகம்,காவியற்ற தமிழகம் என்ற சமூகம் பற்றிய உயரிய நோக்கமல்லவா?

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் என் வாழ்த்துகள் தோழர்களே.

வெள்ளி, 22 ஜூன், 2018

ஊர் நீங்கல்இருட்டத்துவங்கும் மாலை
குட்டியானை வாகனத்தில்
இறுக்கிக் கட்டியிருக்கிறது
சுமைகள்..

செவ்வாய், 19 ஜூன், 2018

எட்டு..ராசியில்லை அரசே!இந்த பச்சை வயல்கள்
விளைந்து
கிடக்கிற
இடத்தில் தான்
உங்கள்
சாலைகள்
வரப்போகிறது.

சனி, 26 மே, 2018

அம்பின் அலறல்..

இன்றென்
மகளுக்குப்
பிறந்தநாள்..
நகரின்
நலனுக்கு நடந்த
போராட்டமொன்றை
அடக்கிவிட்டு
வந்திருக்கிறேன்..

நீளத்தடியை
சுழற்றும் போது
எங்கோ
தெறித்திருக்கிறது
சீருடையின் உலோகப்பொத்தானொன்று..
ஆண்டிறுதி
அறிக்கையில்
பதில் சொல்லவேண்டிய நினைவில்..
எவனோ எறிந்த
கல்லொன்றில்
கன்றியிருக்கிறது
தோள்கள்.

கேக்கின் துகளொன்று
ஒட்டிய வாயுடன் உறங்கிக்கொண்டிருக்கிறாள் மகள்..

தொலைகாட்சி
மௌனமாய் ஓடிக்கொண்டிருக்க மனைவி
உணவுக்கழைக்கிறாள்.
மீதமிருக்கும்
கேக்கின் துண்டொன்று...
இளவண்ண கேசரியென
இருக்கிறது
இரவுக்கான உணவு.

பசியை மீறி தின்கிறது
பகலின் இரைச்சல்கள்..

பத்தாம் வகுப்பு
முடிந்ததும்
ஆரம்பமான
தண்டால்களும்,
தாண்டுதல்களும்,
தேகப்பயிற்சிகளுமாய் கயிறேறிக்காட்டியும்,
வெயிலின் பொட்டலில்
வியர்க்க தேர்வெழுதியும்
கிடைத்த வேலை..

மீசைக்கனவும்
மிடுக்கான பார்வையும்
பயிற்சி காலங்களில்
புரட்டியெடுத்த மணலில்
பாதி தொலைந்தது.

பளபளக்கும்
காலணிகளணிந்து
பதவி கொண்டபோது
எண்கள் என் பெயரானது.

அய்யாக்களும்
அடிபணிதல்களும் அத்தியாவசியமென
பயிற்சியில்
ஏதும் சொல்லவில்லை.

கவாத்துகளும்,
அணிவகுப்பும்
வேடிக்கை பார்த்துப்போகும் உங்களுக்குத் தெரியாது உறக்கமில்லா இரவுகள்.

உயரத்துப்பாக்கி
கைகளில்
பிடித்து நின்று
வலிக்கும்
பாராவின் கால்கள்..

கடக்கும் கார்களில்
யாரிருப்பாரோ
கவனமாய்
வைக்கவேண்டும்
நேர்நின்று
வணக்கங்கள்.

நிலையங்கள் பணியில்
நித்தம் சோதனைகள்.

அடித்தவன்
அமர்ந்திருப்பான்
அய்யாவின் முன்..
வாங்கியவன்
அறைக்குள் இருப்பான்.

தேனீர் கொடுப்பவன் சுதந்திரமானவன்
தேவைகளின்றியும்
போகலாம் வரலாம்.

கடினமாய்த்தேடி
கூட்டிவருவோம் .
அவன்
காலையில்
கடைவீதி திரிவான்.

சட்டத்தின் எண்கள் ஏட்டுக்குத்தெரியும்..
அவர் உட்கார்ந்து
எழுதியே
உருவாகும் தொப்பை.

கோர்ட்டுக்கு பணியென்றால்
கோபம் கொல்லும் மனசு.
வக்கீல் வாதம் செய்வார்..
நீதிபதி கேள்வி எய்வார்.
குற்றவாளி நானில்லை
கூண்டேறி நிற்கவேண்டும்.

எத்தனையோ இடரெனினும் இறுக்கமாய் இருக்கவேண்டும்.

கம்பீரம் பார்த்தெம்மை கடக்கும் உலகோரே...
நான் கைகட்டி வாய்பொத்த கணக்கில்லா இடமுண்டு.

முன்னாள் ரவுடி
மந்திரியாவார்..
முன்னால்
நாங்கள் வழி சொல்ல
வேண்டும்.
இந்நாள் ரவுடிக்கும்
எதிர்காலம் உண்டு
எதிர்பார்ப்போடு
இயங்கவும் வேண்டும்.

கூட்டங்கள் நடந்தால்
குறிப்புகள் வேண்டும்.
ஆர்ப்பாட்டங்களில்
அமைதிக்கு வேண்டும்.

அனுமதி பெற்று
தோழர்கள் திட்டுவர்..
சிலர்
மாமாக்கள் என்றே
மட்டமும் தட்டுவர்.

உயரத்து தலைமையின்
ஓரங்கள் நாங்கள்.
உள்ளுக்குள் வேகும்
துயரங்கள் நாங்கள்.

குறைகள் ஆயிரம்
எமக்கும் இருந்தும்
வழிகளில்லா
துறை எங்கள் துறையே!

சமூகமென்பது
என் வீடும் சேர்ந்து தான்.
சட்டங்கள் சொல்வதும்
சமமென எம்மைத்தான்.
கடமையைச்செய்தும் கயவர்களானோம்.

வங்கிக்கடன்கள்
வாய்ப்பதே இல்லை.
ஓய்வுற்ற பொழுதும்
காப்பதே வேலை.

அடக்குதலென்பது
அவரிடும் பணிகள்.
எமக்கும் தெரியும்
சமுதாய பிணிகள்.

விரலிட்ட மைகளில்
விளைந்திட்ட சோகம்.
நீங்கள் குரலிட
அவருக்கோ
அடங்காத கோபம்.

கொடுக்கும்
வேலைதான்
யாம்
கொல்வதில்லை..
கொடுப்பவர் மீது
நீங்கள்
கோபம் கொள்வதே இல்லை.

எவர் வந்த போதும்
பாவம் எமை வந்து சேரும்.
திட்டுவதென்றால் அவர் திசை திட்டுங்கள்.
முட்டுவதென்றால்
அவர் வீடு முட்டுங்கள்.

விசையுறு அம்புகள் நாங்கள்..
வில்லை மாற்றுங்கள்..
வீடுண்டு,
பிள்ளையுண்டு
எங்களுக்கும்
வீணான
எண்ணங்கள்
மாற்றுங்கள்.திங்கள், 21 மே, 2018

மதமெனும் அபின்

அரசென்பதும் சட்டமென்பதும் யாவர்க்கும் பொதுவே.
நீங்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அதனினும் அதிகமான உச்சத்தில் சட்டமிருக்கும்.

சனி, 19 மே, 2018

ஆடைகளை அவிழுங்கள்

மனனம்
செய்யும்
அவனோ பாவம்,
அணாக்களின்
கணக்கில்
ஜனனம் திட்டாதீர்..

பந்தடிக்கும்
பிள்ளைகள்
ஆட்டத்தில்
ஓட்டங்கள்
கொள்ளுங்கள்..

பேனாக்கள்
இருக்கும்
பெருஞ்சட்டை
பையில்..
கொஞ்சம்
கோலிக்குண்டுகள்
சேர்த்து
தூக்குங்கள்..

சீமைச்செய்தி
பிறகு பார்க்கலாம்
சிந்துபாத்
ரசியுங்கள்.

செவிட்டு
இயந்திரம்
எப்போதும்
வேண்டாம்..
புளூடூத்
பாட்டுக்கு
கொஞ்சமாய்தலையாட்டுங்கள்.

உங்கள்
ரசனைகள்
உள்ளுக்குள்
எதற்கு..
பிள்ளைகளோடு
பிள்ளையாய்
மாறுங்கள்..

அவனைப்போல
ஆடைகள்
தையுங்கள்...
அவஸ்தை
என்றாலும்
அவன்
ஆசிரியர்
வைய்யுங்கள்..

அவனுக்கு
பிடித்த
கார்ட்டூன்
பாருங்கள்..
அவசியமென்றால்
டாட்டூவும்
போடுங்கள்.

அவன்
போடா
எனினும்
புன்னகை
செய்யுங்கள்...
தாத்தா 
என்பதை
தள்ளியே
வையுங்கள்..

பக்கத்தில்
இருந்து
பரவசம்
கொள்ளுங்கள்...
அவர்கள்
பார்த்தாலென்ன
பாட்டிக்கு
முத்தங்கள்
பார்சல்
செய்யுங்கள்..

ரயில்
வந்த கதைகளை
நகர்த்தி வையுங்கள்..
ஒரு
மெயில் ஐடி
கொண்டு
ஹாய்
சொல்லிப்
பாருங்கள்...

பேஸ்புக்
முகப்பில்
பெண் படம்
ஒட்டுங்கள்..
யாரெனக்கேட்டால்
உள்ளம்
கவர்ந்ததாய்
பொய்யேனும்
கொட்டுங்கள்.

அவர்கள்
வாட்ஸ் அப்
குரூப்பில்
வலியச்சேருங்கள்..
வரும்
எல்லா சேதிக்கும்
வாழ்த்துகள்
சொல்லுங்கள்..

பிள்ளைகள்
என்போர்
வளரும்
பெரியோர்...
பெரியோர்
யாவரும்
வளர்ந்த
பிள்ளைகள்..

உள்ளங்கள்
உமக்கு
உற்சாகம்
கொண்டால்
முதியோர்
இல்லங்கள்
முடியாது இங்கே..

பூமியின்
கோடே
கற்பனையென்றால்..
உருவங்கள்
என்பது
பருவத்தின்
ஒப்பனை..

ஒதுங்கிக்கிடப்பது
ஓய்வென்பதில்லை.
ஒட்டிக்கிடப்பதில்
குறையேதுமில்லை..

வயதென்ற
மாயத்தை
மனதோடும்
கொள்ளாதீர்...
அனுபவம்
அறிவென்று
யாரோடும்
சொல்லாதீர்..

மூப்பென்ற
முதுமையை
எப்போதும்
ஏற்காதீர்.
உமக்கான
நாள்களை
வாழாமல்
தீர்க்காதீர்..

அன்புக்குத்
தேவையோ
அலங்கார மேடைகள்..

இப்போதே
கழட்டுங்கள்
அகங்கார
ஆடைகள்..
வியாழன், 3 மே, 2018

நீ ராமனுமில்லை...நாங்கள் அகலிகையுமில்லை...


கூட்டமாய் பிழைக்க 
நாங்கள்
ஆடோட்டி 
வரவில்லை...
கூட்டிக்கொடுத்தலெனும் கொடுஞ்செயல்கள் 
கொண்டதில்லை.

குள்ளநரி 
மூளை கொண்டு
கொள்ளையராய்ப் 
போனதில்லை..
உள்ள 
பொருளெல்லாம்
உள்ளொதுக்கிக் 
கொண்டதில்லை..

உச்சிக்குடுமியில்லை..
ஊடோடும் 
நூலுமில்லை.

மண்ணோடு
வாழ்ந்திருந்தோம்.
மமதையேதும் 
மனதிலில்லை..
புண்பட்ட
ஓர்நிலையும் 
வந்ததிங்கு 
உங்களாலே.

நீ வந்து 
விருந்துண்ண 
நாங்கள் 
சமைக்கவில்லை..
தீ வெந்த 
குடிசையிலும் 
தீண்ட 
சில பொருளிருக்கும்.
நீ 
வந்து போனாலோ 
வெறும் சாம்பல் 
பறந்திருக்கும்..

ஓட்டுக்கும் 
நோட்டுக்கும் 
தீட்டோடா 
யாம் தந்தால்..?

நாட்டுக்கு 
மூத்தவர்கள்
சொந்தக்கால்
கொண்டு 
நடப்பவர்கள்..

ஊர்ப்பணத்தில் 
கொழுத்தவரே..
கொழுப்பேறி
பழுத்தவரே..

வீடேறி 
நீ வந்தால் 
புனிதம் 
உன்னைச்சேருமன்றி..
எமக்கெந்த 
மயிருமில்லை..

வாராதே 
எங்கள் பக்கம்..
வம்பிழுத்து 
இன்னும் பார்த்தால் 
தீராது 
உந்தன் துக்கம்...திங்கள், 30 ஏப்ரல், 2018

வரலாறு...சுற்றுமோர் தத்துவம்..

மத்திய ஆட்சிக்கான தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கும் சூழல்..

கடந்த நான்கு வருட காலங்களில் நாடு மக்களை தோசையாய் திருப்பி திருப்பி போட்டு சுட்டிருப்பது எல்லாரும் அனுபவித்த கதை தான்...

மானியங்களின் வெட்டில் ஆரம்பித்து வங்கிக்கணக்குகள் நிரம்பி வழிய...
ஒற்றை நொடியில் மக்கள் ரோட்டுக்கு வந்து நின்றதை அவ்வளவு எளிதில் மறக்க முடிந்தால் நீங்கள் என் வரிகளை வாசிக்காமல் வேறு வேலை பார்க்கலாம்..

பூமிப்பந்தின் எல்லா நாடுகளுக்கும் போய்வந்த ஒரு தலைமை..
லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஆடைகள்...அலட்சியமாய் பேசத்துணிந்த அமைச்சர்கள்..
இந்த ஆட்சி பற்றிய குறைகளை சொல்ல ஆரம்பித்தால் என் வலைப்பூ காய்த்து கனிந்துவிடும்..
நிற்க...

நான் எழுத வந்த விசயம் அதுவல்ல...
ஆட்சி என்னும் நாற்காலி கிடைத்தால் செருப்பு கூட கௌரவம் பெறும் தேசம் தான்..

இப்படி ஒரு ஆட்சி நடந்த ஆண்டுகளில் பொறுப்பான எதிர்கட்சிகள் உருப்படியாய் என்ன செய்தது என பூதக்கண்ணாடி வைத்துப்பார்த்தாலும் சிறுபுள்ளியும் எனக்கு தெரியவில்லை..

டிவிட்டரிலும்,முகப்புத்தகங்களிலும் வார்த்தைப்போர்கள் நடப்பது சாதாரண மக்களுக்கென்றால் மன்னிக்கலாம்...தலைமைகளே அப்படியெனில் தவறன்றி வேறில்லை..

பணமதிப்பிழப்பு நேரத்திலும்,
நாடே பதறிய மாட்டுக்கறி பிரச்சனையிலும் சொல்லிக்கொள்ளும்படி போராட்டங்கள் இல்லை..அல்லது இவர்கள் போராடி எதையும் மாற்றிவிடவில்லை..
இந்த காலங்களில் கம்யூனிசய இயக்கங்கள் சந்தித்த பகடிகள் சொல்லும்படி இல்லை..

எதிரி எடுத்த ஆயுதமே நம் போராட்டத்தின் வடிவத்தை
முடிவு செய்யும் என்ற தத்துவமெல்லாம் சரிதான் ஆனால் எதிரி என்ன ஆயுதம் எடுத்திருக்கிறான் என்பதேனும் தெரிந்தார்களா என்பதே கேள்வி?

அவர்களின் பொலிட்பீரோ மற்றும் தலைவர்களின் நிலைப்பாட்டிலெல்லாம் எங்களுக்கு கவலையில்லை..
மக்களின் கவலைகள் வெற்று கோஷங்களில் தீர்ந்துவிடும் என்ற அவர்களின் நம்பிக்கையின்பால் தான் எனக்கு நகைச்சுவை வரவில்லை...

ஆட்சியின் 90 சதவீத காலம் அனுபவித்துவிட்டு வெளியேறும் ஒரு மாநிலக்கட்சி..
புதிதாய் கிளம்பியிருக்கும் கூட்டணிக்கான ஆயத்தங்கள்..
அதை எடுத்துச்செல்லும் புதிய புதிய தலைவர்களென அவர்கள் எடுக்கும் முயற்சிகள் நல்லதாகக்கூட உங்களுக்கு தோன்றலாம்...ஆனால் எனக்கு பயமாய் இருக்கிறது..

தெரிந்தோ தெரியாமலோ இணையத்தின் வழியேயும்..இயங்குதலின் அடிப்படையிலும் எதிர்க்கவேண்டிய சக்தியின் பலம் தலைவர்களை விட மக்களுக்கு தெரிந்தே இருக்கிறது..
உதாரணமாய் காவிரி பிரச்சனையில் அவர்கள் செய்யும் சூழ்ச்சி கடைமடையின் எங்கள் படிப்பறிவில்லா ஒரு ஏழைப்பெண் அறிந்து கொண்டிருக்கிறாள்...

கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுகளாக திட்டமிட்டு அதன் இலக்கை நோக்கி நகர ஆரம்பித்தவர்கள்.
தன் ஆதரவாளர்களை அல்லது தங்கள் ஆட்களை உச்ச நீதிமன்றம் முதல் மிச்சமிருக்கும் எல்லா இடங்களிலும் நிரப்பியிருப்பதை உணர்கிறோம்.
நீங்கள் பேசிக்கொண்டிருந்த போது அவர்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
இப்போதும் கூட அப்படித்தான்..

செல்லாத ஓட்டுகள் கூட பெற முடியாத பூமி என உணர்ந்தாலும் அவர்களின் பகீரத முயற்சிகளை... எதிர்த்தரப்பு என்றாலும் பாராட்டுவேன்..

பெரியார் சிலைகளை நம்மை பாதுகாக்க வைத்துவிட்டு அவர்கள் பெரிய சாகர்மாலாத்திட்டங்களை நிறைவேற்ற ஆரம்பித்திருப்பது வெளிச்சமாய் தெரிகிறது...

வெங்காயம் பூண்டு கடலைமிட்டாய்,ஊறுகாய்க்கெல்ல்லம் Gst வரும்போது பெட்ரோலுக்கு ஏனில்லை என்ற ரகசியம் ஒன்றும் பெரிதில்லை.

இப்படி ஆயிரம் சொல்லிக்கொண்டு போக சமாச்சாரங்கள் இருந்தாலும் இப்போது எதிர்த்தரப்பை வீழ்த்த யூகம் செய்திருப்பதாய் நான் உணர்வது சொல்லிக்கொள்ளும் படியாய் இல்லை..

அரை நூற்றாண்டுகள் ஆண்ட ஒரு கட்சி தேசமறிந்த அமைப்பாய் இருக்கும் போது அதை தவிர்த்து மற்றுமொரு கூட்டணிக்கு முயற்சி செய்வது கூட ஆளும் அமைப்பின் செயலாய் இருக்குமோ என்ற சந்தேகத்தை துளிர்க்க வைக்கிறது.

இந்த தேசத்தின் கட்சிகள் ஒன்றும் கற்புக்கரசிகள் இல்லை..ஒற்றைக்கட்சியுடன் மட்டும் கூட்டணி வைத்த கட்சிகள் எதுவுமிருப்பதாய் தெரிவதில்லை...
அதிலும் இத்தனை நாள் இல்லாமல் போராட்டங்களில் ஆர்ப்பாட்டங்களில் தேனீர்சந்திப்புகளில் மனிதச் சங்கிலிப்போராட்டங்களில் கைகள் கோர்த்தும் உயர்த்தியும் இருந்துவிட்டு .இப்போது விட்டுவிட்டுப்போவது உங்கள் கொள்கை சார்ந்த கோட்பாடெனில் முதலில் அதற்கு கொள்ளி வையுங்கள்..

ஊர் ரெண்டுபட்டால் மட்டுமல்ல...எதிர்ப்புகள் ரெண்டு பட்டாலும் அவர்களுக்கு கொண்டாட்டம் தான்...
அத்தகைய உங்களின் முயற்சி அவர்களை மிக எளிதாக இன்னொரு ஆட்சி காலத்தில் இந்தியா முழுமையும் பாலைவனமாக்க நீங்களை ஆரம்பித்து வைப்பதாய்த்தான் அமையும்..
மண்ணாங்கட்டி கொள்கைகளையும்,
சித்தாந்தங்களையும் எதிர்கட்சிகள் யாவும் ஒதுக்கிவிட்டு குறைந்த பட்ச ஒற்றை இலக்கான மதவாதத்தை ஒழிப்பதற்காகவேணும் ஒன்றுசேருங்கள்..
ஏனெனில் இந்த நாட்டின் ஆகப்பெரிய தீங்கு ஊழலில்லை,
ஒழுக்கக்கேடில்லை..
வறுமை கூட இல்லை...
எல்லாவற்றையும் மிஞ்சும் மதவாதமே முதல் கேடு...

இந்த நாட்டையும் அரசியலையும் கொஞ்சமேனும் கவனித்து வரும் ஒரு சாதாரணக்குடிமகனாய் நான் வேண்டுவதும் இதுதான்.
இந்த மாநிலத்தில் ஏற்கனவே மக்கள் நலக்கூட்டணி என்ற வரலாற்றுப்பிழை ஏற்கனவே கசப்பான அனுபவத்தை எங்களுக்கு வழங்கிவிட்டது..
தேசிய அளவில் மீண்டும் அப்படி ஒன்று நிகழுமெனில் அது பேராபத்து..

மாநிலங்களில் இருக்கும் அத்தனை கட்சிகளை ஒருங்கிணைக்க துடிக்கும் உங்களால் காங்கிரஸ் என்னும் கட்சியை ஒருங்கிணைப்பது முடியாததல்ல..
காங்கிரஸும் இன்றைய நிலையில் நிபந்தனைகள் அதிகம் விதிக்கும் நிலையில் இருப்பதாகவும் தெரியவில்லை..

மாண்பமை எதிர்க்கட்சிகளே..
முதலில் கண்ணுக்குத்தெரியும் பிரச்சனையை தீர்க்கப்பாருங்கள்...
அதற்காகவேணும் பிரியாமல் ஒன்று சேருங்கள்..
அது உங்களின் பக்கம் மக்களைத்திருப்பும்..

மக்கள் மனங்களை படிக்காத அவர்களின் கவலைகளை புரிந்து கொள்ளாமல் நீங்கள் எத்தனை கூட்டணி வைத்தாலும் வெல்லுமென தெரியவில்லை..

மீண்டுமொரு வரலாற்றுப்பிழையை செய்துவிடாமல்...காலம் கடக்கவில்லை கை கோருங்கள்...

புதன், 25 ஏப்ரல், 2018

பஞ்சுமிட்டாய் வடிவில் கொஞ்சும் கவிதைகள்...

"சிலரின் கவிதைகள் படைப்பாளனின் பெயர் தெரியாவிட்டாலும் மனசோடு ஒட்டிக்கொள்ளும்..."

"வைகறைக்கான நிதி திரட்டல்  நேரத்தில் கடல்கடந்து வந்த நிதியொன்று எங்கள் நெஞ்சைத் தொட்டது.."

"முகநூலில் வாசித்துக்கொண்டே வரும் போது சில கவிதைகள் நம்மை நிறுத்தி கைகுலுக்கிவிட்டுப்போகும்"

"அயலகத்தில் இருந்தாலும் மனசு முழுவதும் தாய் மண்ணோடு ஒட்டி உறவாடிய உன்னத வேளைகளோடே இயங்கும் எழுத்துகள் வாய்ப்பது வரம்"

"மிக சமீபத்தில் தாயகம் வந்தவர் தன் கவிதைத்தொகுப்பொன்றை வெளியிட்டுள்ளார்"

"தோழன் நாணல் கலந்துகொண்ட அந்த நிகழ்வுக்கு ...நியாயமாய் நான் சென்றிருக்க வேண்டும்"

"கரம்பக்குடியில் 22ல் நடந்த த.மு.எ.ச.க  மாவட்ட மாநாட்டிற்கு நான் போகவேண்டிய அவசியம் இல்லை...ஆனால் போனேன்"

"நிலவன் அய்யா தயாரித்த அழைப்பிதழில் அன்பின் காரணமாய் என் பெயர் இருந்தாலும் சின்ன சின்ன கவிதைகளில் என்னால் வெல்லவும் சொல்லவும் முடியும் என்ற அவரின் நம்பிக்கை என்னை அழைத்துப்போனதும் கவிதை வாசித்ததும் மகிழ்ச்சி என்றால்..."

"யாரின் கவிதைகளோடு கைகுலுக்கிக்கொண்டிருந்தேனோ அவரை நேரில் பார்த்ததும் ..அவரின் சமீபத்திய நூலை அவர் என்னிடம் தந்ததும் மிகுந்த மகிழ்ச்சி"

ஆம்...அருமைக்கவிஞர் யாழிசை மணிவண்ணனின் "பஞ்சுமிட்டாய் பூக்கும் மரம்" என்ற தொகுப்பு பற்றிய என் வாசிப்பு அனுபவத்தை இத்தனை செய்திகளுடன் தான் தொடங்க வேண்டியதாகிவிட்டது....

வானத்தின் நீலத்தில் ஒரு அட்டை...கருவறை நிலையில் ஒரு மனிதன்...காய்த்து பூத்திருக்கும் பஞ்சு மிட்டாய் மரம்...

சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த நூலை என்னைப்போலவே நீங்களும் எதிர்பார்ப்போடே வாசிக்க ஆரம்பிக்கலாம்..

தோழர் கரிகாலனின் அணிந்துரை வரிகளை கடந்து கவிதைகளுக்குள் கண்கள் பதிந்ததும்..நாம்  நார்னியாவின் குழந்தைகளாக பஞ்சுமிட்டாய் கொட்டிக்கிடக்கும் ஒரு வனத்துக்குள் வந்து விடுகிறோம்...

90 பக்கங்களின் தொகுப்பு கவிதைத்தொன்மங்களை புரட்டிப்போடும் கற்பனைகள்..

வார்த்தையில் புதிது வேண்டுமென்ற அலைச்சல் இல்லை..
இருக்கும் வார்த்தைகளே விதைகளாகி இருக்கின்றன..

"அப்பா ஏரோட்டிய பின்
வரப்பில் செருகிய கம்பு
நாளடைவில் மரமாகிப்போனது.
மரமாயிருந்த அவர்தான்
கம்பு போலாகிவிட்டார்"

 இந்த கவிதையில் எந்த புதிய வார்த்தையை நீங்கள் கண்டுபிடிக்கமுடியும்?
ஆயினும் ஒரு வாழ்க்கையை கண்டுகொள்ள முடிவதே கவிதை..

தொகுப்பு முழுவதும் சின்னஞ்சிறிய மூன்று வரிக்கவிதைகள்...
ஆனாலும் நாம் அவ்வளவு எளிதாய் கடந்து போக முடியாமல் கட்டிப்போடும் காந்தப்பூட்டுகளாயிருகிறன.

இடைக்கண்..
நானொரு வாசிப்பாளன் மட்டுமே.தேர்ந்த விமர்சனமென்பது ஒப்பீட்டில் இல்லாமல் படைப்பு தனில் உள்ள உன்னதத்தையும்...ஓரளவு குறைகளையும் சொல்லிவிட்டு படைத்தவனை பாராட்டுவது மட்டுமே என்பது என் நிலை..

விமர்சனமென்ற வெறியில் தொகுப்பின் அத்தனை வரிகளையும் பிரித்து மேய்வதும்...ஆபத்தான உச்சியில் வைத்து போற்றிவிட்டுப்போவதும்..படைப்பாளனுக்கு செய்யும் பச்சை துரோகமன்றி வேறில்லை...
என்ற என் கொள்கைக்கு வேட்டு வைத்துவிடும் கொடும் கணங்களை கடந்து தான் நான் இந்த நூலை வாசித்துவிட்டு எழுதும் நிலையில் உணரத்தொடங்கினேன்..

பிரியங்களைப்பற்றி எழுதும் போது பறவையின் இறகுகளாய் விரிபவர்...சமூகம் பற்றி எழுதும் போதே எரிய ஆரம்பிக்கிறார்..

"ஆண்ட பரம்பரையின் பிணத்தில்
அடுக்கியிருந்த
சாண வரட்டிகளில்
ஆதிதிராவிடனின்
கைரேகைகள்."

"கச்சை மீறி சுரக்கிறாள்
கோபுரத்தில்
சிற்பமாகச் சமைந்தவள்
சற்றுமுன் பெய்த மழை"

"தன் நெடுவாழ்வினைத்
தோசைக்கல்லில்
எழுதிப்பார்க்கிறாள் அம்மா.
பூஜ்ஜியமாகக் கிடைக்கிறது விடை"

"எல்லாம் செய்தது
சலவை இயந்திரம்
கண்மாய் வற்றினாலும்
பெயர் மாறவில்லை
வண்ணாந்துறை"

"புத்தநிலை கூடுதல் தூரம்
திரும்பிச்செல்லுங்கள்
பக்கத்தில்தான் குழந்தைநிலை"

என்னையறியாமல் என் விரல்கள் தொட்ட சில வரிகளில் நான் என்னை இழந்த நிமிடங்கள்...

தொகுப்புக்காய் சில கவிதைகள் தொற்றிக்கொண்டாலும் அவை ஆறாம் விரல்களாய் அல்லாமல் அவசியமாய்த்தான் இருக்கிறன...
சில கவிதைகளில் மட்டும் வார்த்தைகள் சில கூடுதலாய் இருப்பது குற்றமாகாது எனினும் கூடுதல் சுமைதான்...

யாழிசை மணிவண்ணன் இளம்பிராயத்துக்காரர்..
இன்னும் எத்தனையோ எழுதப்போகிறவர்...
விமர்சனமாயில்லாமல் இதை வாழ்த்துரையாக எடுத்துக்கொள்ளும் மனோநிலை வாய்த்தவர்...
அடையப்போகும் அவரின் வெற்றியின் வெளிச்சம் எனக்கு தெரிகிறது...வாசிக்கும்  கண்களில் பழுதில்லை எனில் உங்கள் கண்களுக்கும் அது காணக்கிடைக்கலாம்...
யாழிசையின்   மற்றுமொரு கவிதையோடு இந்த அனுபவத்தை நிறைவு செய்யலாம்...

"சிரிக்கத் தெரிந்த
கனிகள் அனைத்தையும்
கடித்து வைத்திருந்தது அணில்""

ஆம்...என்னைப்போலவே!!!

வாழ்த்துகள்
யாழிசை மணிவண்ணன்..ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

கதம்பம்...

22.04.2018
த.மு.எ.ச.க
புதுக்கோட்டை மாவட்ட மாநாட்டில்
தோழமைக்கவிஞனாக வாசித்த சில நறுக்குகள்....

××××××××××××××××××

தமிழ்த்தாய் வாழ்த்து..
மட மனிதர்கள்
எழ
வேண்டியதில்லை...
#########

நிர்மலாக்களின்
தேசம்
ஆசிபாக்கள்
நாசம்
######

புதிய கல்விமுறையில்
புத்தாக்கப்பயிற்சிமுடித்த
பேராசிரியை
வகுப்பெடுத்தார்
வாட்ஸ் அப்பில்...
#######

பாஸ் போடுறேன்னு
சொன்னவளுக்கு
பெயிலும்
கிடைக்க வில்லை
##########

பட்டங்கள்..
நூல்களின்
கையில்
######

இரவுநேரக்கல்வி
ஆரம்பிக்கலாம்
பல்கலைக்கழகம்
#######
ஆடியோ ஆபத்தாகிறது...
சைகை மொழி
படிப்பார்கள்
######

கேட்டால் தான்
தெரிகிறது..
கெட்டால் தான்
மேன் மக்கள்
#######

காவேரி
வந்துவிடும்
கர்நாடகாவில்
மழை
பெய்தால்
######

அமோக விளைச்சல்
லாரிகளில்...
காவேரி...
#######

மாநிலம்
வாழ்ந்த
வாழ்க்கைக்கு..
எத்தனையோ
மந்திரிகள்
########

ஆட்சியின்
லட்சணத்தை
அளந்து
காட்டியது
தெர்மாகோல்
#######

ஆய்வுக்குப்போனவர்
குப்பையை
அள்ளி
கோட்டுக்குள்
போட்டுக்கொண்டார்
#########

கன்னம்
குழி விழும் இடம்
######

உலக அமைதிக்காய்
ரதம் வந்த நாளில்
ஊரடங்கு
உத்தரவு
அமலிலிருந்தது
#########

கேரள
கோமாதா
ஈன்ற
கன்று
காவிநிறம்
#######

நசுக்கிய
மட்டையில்
முக்கியும்
அடிக்கலாம்
காவி
###########

நம்
முன்னோர்
ஒன்றும்
முட்டாளில்லை
நம்பமுடியாத
வித்தையை
மோடி
என்றார்கள்.
#######

மகாபாரத
காலத்தில்
இணையம்
இருந்ததாம்..
வீடியோக்கள்
வெளிவந்த
விவரமில்லை
சிஸ்டம்
அப்பவே
பெய்லியராயிடுச்சுடா..
##########

மைய்யத்தில்
ஸ்ரீ கிருஸ்ண
குமாரனுக்கு
ஓரத்தில் தான்
ஓரிடம்.
######

நீதி மன்றங்கள்
விசாரிக்கப்படவேண்டிய
இடம்
நீதிபதிகளை...
#######

கர்நாடக
இசை
புரிவதில்லை...
தமிழிசை
பிடிக்கவில்லை.
######

மந்திரி கலந்துகொண்ட
மரம் நடுவிழாவில்
மைல் நீள
தடுப்புக்கட்டைகள்
######

பிடிக்கவே
முடியவேயில்லை
மந்திரி...
மாட்டை
#######
பரிணாம வளர்ச்சி...
மனிதனிலிருந்து
மாடு...
நூற்றாண்டு
விழாக்கள்
முடிந்து
ஜல்லிக்கட்டு
#########

சேரிகள்
நிறைந்த ஊர்...
விலகிப்போனது
புறவழிச்சாலை
######

ஆகா
பாலங்கள்
என்றோம்...
மலைகள்
பள்ளமானது
##########

உள்ளூர்
உண்டியல்
உடைத்தவன்
திருப்பதிக்கு
வேண்டிக்கொள்கிறான்..
##########

சிலை
கடத்தப்படும் போது
தெய்வத்தின்
மதிப்பு
தெரிந்து போகிறது
######

வேம்பில்
பால் வழிந்தது..
பிள்ளையார்
பால் குடித்தார்..
அய்யனார்
குதிரையில்
போனார்..
அம்மன்
மாராப்பை
இழுத்து
மூடிக்கொண்டாள்.
#########

சிலைகள்
உலகம்
சுற்றும்
போட்டியில்
இரண்டாமிடம்
பெற்றன.
############

உதைப்பது
போல
நிற்கிறார்
கடவுள்
அடுத்த
அறையில்
அம்மனுக்கு
அபிஷேகம் நடக்கிறது.
#########

கோவணத்துடன்
இருப்பதால்
அவன்
தமிழ்க்கடவுள்
###########

பொதுவெளியில்
கழிக்காதீர்கள்..
ஏற்கனவே
நாறிக்கிடக்கிறது..
###########

சோப்புபோட்டு
கை கழுவுங்கள்...
மைக் கறைகள்
######

தூய்மை
பாரதம்
வேண்டுமெனில்
துடைப்பம்
எடுக்க வேண்டும்
#######

அடுத்த தேர்தலில்
கவனமாய்
இருங்கள்
கள்ள நோட்டுகள்
########

புதுப்பாட்டி
கதை சொல்கிறாள்..
ஒரு ஊர்ல
ஒரு
ராஜா
இருந்தானாம்
அவனுக்கு
ஒரு
அட்மின்
இருந்தாராம்..
########

என்ன தொழில்
செய்யலாம்
என்ற
நண்பனுக்கு
செருப்புக்கடை
என்றேன்..
நடக்கவும்
உதவும்..
#########

மையாய் இருந்தாலும்
தவறுகளை
அடிக்கும்
..சிவப்பு..
############

கலை இரவுகள்
விடியும் வேளை
சிவப்பாய் இருக்கும்
#######

திங்கள், 16 ஏப்ரல், 2018

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

அவள் உறங்கட்டும்..

அவளை விட்டு விடுங்கள்..
அமைதிப்பள்ளத்தாக்கின்
புல் படுக்கையில்
அவள் ஆன்மாவேனும்
அமைதியாய் தூங்கட்டும்..

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

நீதிமன்றமே....நீதியில்லையா?

ஜனநாயக நாட்டின் வலிமையான தூண்களில் ஒன்று நீதித்துறை.. ஆட்சியாளர்கள் எத்தனை வருடத்திற்கு ஒருமுறை மாறினாலும் நீதித்துறை, மாறாத துறையாக இந்திய அரசியலமைப்புச்சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீதி மன்றங்களே நாட்டின் ஆகப்பெரிய வழிநடத்துவதாய் இருக்கும் நாட்டில் அந்த துறை இப்போது எப்படி இருக்கிறது என்பதை அடிப்படை அறிவு உள்ள யாவரும் அறிவார்கள்..

உள்ளூர் நீதி மன்றங்களில் கிடைக்கும் தீர்ப்புகளும்,மாநில அளவில் நடைபெறும் மாற்றங்களும்,உச்ச நீதிமன்றம் என்னும் அதன் தலைமைப்பீடம் பற்றிய செய்திகளும் அந்த தூண் பற்றிய நல்ல எண்ணத்தை யாருக்கும் தருவதாயில்லை.

அதிகாரங்களை கையில் வைத்திருக்கும் அமைப்பானது காவல்துறைகளை மட்டுமே இத்தனை நாள் வைத்திருந்தது போல, நீதித்துறையும் வந்துவிட்டதைப்போலவே நடக்கும் நிகழ்வுகள் அத்தனை உவப்பாய் இல்லை...

மிகச்சமீபமாய் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குள் உண்டான உரசல் நீதிமன்றத்தையே நம்பியிருக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களில் இடிபோலத்தான் விழுந்திருக்கிறது...

தன்னலம் கருதாத மிக உயர்ந்த நீதிபதிகள் பரிபாலனம் செய்த நீதிமன்றங்களில் அரசியல் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டியதே அதன் ஆக முதற் காரியமாக இருக்கவேண்டும்...

நம்மைப் பொறுத்த வரை..
முன்னாள் முதல்வர்க்கு தரப்பட்ட இரண்டு நீதிபதிகளின் முற்றிலும் மாறுபட்ட தீர்ப்பு அத்தனை பகடிகளை உருவாக்கியதென்றால்...
எப்போதோ முடிந்த ஒரு வழக்கின் தீர்ப்பு  மிகச்சரியான நேரத்தில் வெளியாகி தமிழகம் கேலிக்கூத்தாகிக்கொண்டிருக்கும் நிலை அறிவோம்...

ஆண்டாண்டு காலமாய் சுங்கச்சாவடியில் செத்துக்கொண்டிருக்கும் பலர் தொடுக்கும் வழக்குகள் இழுத்துக்கொண்டிருக்க..
ஒரு நீதிபதியின் வாகனம் தாமதப்படுத்தப்படும் போது வீறுகொண்டு எழுவதை என்ன சொல்வது?
காவேரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் செயல்படுத்த முடியாத மத்திய அரசுக்கு உற்ற தோழனாய் செயல்படுவது நீதிமன்றங்களன்றி வேறில்லை எனத்தான் தோன்றுகிறது.

மத்திய மாநில அரசுகள் தங்களுக்கு பிரச்சனை ஏற்படும்போதெல்லாம் ஓடிப்போய் பதுங்கிப்பாதுகாத்துக்கொள்ளும் இடமாகத்தான் நீதிமன்றங்கள் தெரிகிறது..
அரசு ஊழியர்களின் போராட்டங்கள் தீவிரமாய் இருந்த போது நீதிமன்றம் உதித்த முத்துகள் கல்லில் பொறித்து வைக்கவேண்டியவை...

நீதிமன்றங்களைப் பற்றியும்...தீர்ப்புகளைப்பற்றியும் எந்த ஒரு வார்த்தையும் பேச துணிவில்லாத ஒரு காலம் இருந்ததை மறுப்பதற்கில்லை...ஆனால் இன்று மீம்ஸ் உருவாக்குபவர்கள் மிக எளிதாக நீதிமன்றங்களை பகடிக்குள்ளாவதையும்,உச்ச நீதிமன்றத்தையே கலாய்ப்பதும் சமூகத்தின் குற்றமாய் நான் கருதவில்லை...
நீதியின் தரத்தின் மேல் தான் கேள்விக்குறிகள்?

அளவுக்கு மீறி வீங்கிக்கிடக்கும் வழக்குகளின் கோப்புகள்...
புதிது புதிதாய் வந்து குவியும் வழக்குகள்...
எப்படியோ நிகழும் இழுத்தடிப்புத்தாமதங்கள்...

சட்டம் பற்றிய பெருமிதங்களில்
"பல குற்றவாளிகள் தப்பிக்கலாம்..ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது"

என்பதும் ஒன்று..
எல்லாம் சரிதான்.. ஆனால் வழங்கப்படும் நீதியில் வழக்காடியவர்களின் மகிழ்ச்சி எந்த அளவில் உள்ளது என்பதை நீதிமன்றங்கள் எப்போதேனும் உணர்ந்திருக்குமா?

தாமதப்படுத்தப்படும் நீதி குற்றம் என்பதை நீதிமன்றத்திற்கு யார் உரத்துச்சொல்வது?

அரசையே காப்பதும் நேர்வழியில் வழிநடத்துமாக சொல்லும் நீதிமன்றம் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை என்ன செய்வதாக உத்தேசித்துள்ளது..

வேடிக்கையாய் கூட சொல்லலாம்..
நம் சமூகத்தில் ஒரு காலத்தில் கணவன் மனைவி சிரிப்புகள்,டாக்டர் சிரிப்புகள்,மன்னர் சிரிப்புகள்,நீதிமன்ற சிரிப்புகள் என பல வகைகள் உண்டு...
அவற்றில் நீதிமன்ற சிரிப்புகள் தவிர மற்ற எல்லா சிரிப்புகளும் அப்டேட் ஆகி உள்ளன...
நீதிமன்றம் போனால் வழக்கறிஞர் குடும்பம் பிழைப்பதும்,
வயலுக்கான சண்டையில் வரப்பும் மிஞ்சாது போவதும்...
இன்னும் மாறாமல் தொடரும் அவலச்சிரிப்புகள்..

நாட்டில் நடக்கும் எல்லாக்குழப்பங்களுக்கும்...நாளும் நடக்கும் போராட்டங்களுக்கும்,
வல்லரசுக்கான படிக்கல்லாக இல்லாமல் ஆகப்பெரிய தடைக்கல்லாக இருப்பதும் நீதித்துறை மட்டுமே என நான் நம்புகிறேன்.

நம் மக்கள்  மருத்துவரை தம் உயிருக்கு கடவுளாக கருதும் வேளையில் நாட்டுக்கான கடவுளாக நீதிமன்ற தேவன்களையே நம்புவது வாடிக்கை...

நீதிபதியானவர் கடவுளுக்கு ஒப்பானவராகவும்...தன் முன்னால் தொங்கிக்கொண்டிருக்கும் தராசின் நடுமுள்ளாய் துல்லியமான தீர்ப்பு வழங்குபவர்களாகவும்,
இடையிடையே வந்து போதும் அதிகார வர்க்கத்திற்கு மறைமுகமாகவேனும் ஆதராவாய் இல்லாதவராகவும், சட்டத்தின் படி நடப்பவராக இருந்துவிட்டால் எல்லாம் சரியாகும்...

அதிகாரத்தின் எந்த மிரட்டலுக்கும் பணியாத
நீதிமன்றமே நாட்டின் ஆகக்கடைசியான இந்தியாவின் நம்பிக்கை...

அந்த பொன்னான வேளை வந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான்
வாழ்ந்து தொலைக்கவேண்டும்..ம்ம்ம்
சனி, 31 மார்ச், 2018

நந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்?

மிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்..
சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு உண்மையான பிரச்சனைகளைப்பற்றிய பிரக்கினையை காலிசெய்துவிடுவதை உணர்கிறேன்...

அதிகார அமைப்பும் அப்படி ஒரு மனோநிலையிலேயே நம்மை வைத்திருக்க விரும்பிகிறது போலும்..

ஜல்லிக்கட்டுப்பிரச்சனையை கூட,அதிகாரம் அமைப்பானது போனால் போகிறது என கொடுத்துவிட்டு ரொம்பவும் எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதை அந்த போராட்டத்தை முடித்துவைத்த விதத்தில் அறிகிறோம்...

மற்றபடி எந்த போராட்டங்களும் அதிகாரத்திற்கெதிராய் வென்றிருப்பதை காணமுடியவில்லை..
1500 நாட்களுக்கு மேலாய் போராடிய கூடங்குளமாகட்டும்,கெயில் ,நெடுவாசல்,கதிராமங்களம்,காவேரி...இப்படி அத்தனை பிரச்சனைகளிலும் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை நோக்கியே பயணிக்கிறார்கள்..
நியூட்ரினோ போகும் பாதையும் அப்படியாகத்தான் இருக்கிறது...

போராட்ட விசயத்தில் எந்த கட்சியின் மீதும் நம்பிக்கை என்னைப்பொறுத்தவரை வரவே இல்லை...

ஊடகங்களைப் பற்றி நானொன்றும் புதிதாய் பேசப்போவதில்லை...

ஆனால், எதிர்க்கட்சிகளாய் செய்யும் போராட்டங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்காய்த் தெரியவில்லை.மாறாக அதன் கூரை மழுக்குவதாகவே தெரிகிறது..
வரலாறு காணாத அளவில் பேருந்து கட்டணம் உயர்ந்த போது ஆ...ஊ எனக்குதித்தார்கள்..சிறை நிறைப்புவோம் என்றார்கள்...
அதெல்லாம் சரி ..அவர்களின் போராட்டம் எத்தகைய வெற்றியை சமூகத்திற்கு கொடுத்தது..?

காவேரி பிரச்சனைக்கு இன்னும் பதினைந்து நாட்களுக்குப்பின் கருப்புக்கொடி காட்டி ...ம்ம்ம்.

கழுவத்தண்ணீர் இல்லை.. நூற்றுக்கு மேலான ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்து சாதனை..?

செத்து விழும் மனிதர்களின் போராட்டம் பெரிதாய் இருக்க 1500 மாடுகளுடன் ஜல்லிக்கட்டு..

ஆட்சியும் அதிகாரமும் செய்யும் காட்சிகள் பரமார்த்த குரு கதைகளின் அப்டேட் வெர்சன் தான்..

300 கிலோமீட்டர் நெடுஞ்சாலையில் செல்ல எத்தனை சுங்கச் சாவடிகள்?
எந்தப்பள்ளத்தில் நிறைகிறது இந்தப்பணங்கள்?
எத்தனை எதிர்க்கட்சிகள் எத்தனை போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்...
எந்த அரசியல்வாதியிடமும் சுங்கக்கட்டணம் வசூலிப்பதில்லை அவர்கள்...

வரிசையில் காத்திருந்து காசை அழுதுவிட்டுவரும் நம்மில் எத்தனைபேர் அதைப்பற்றி எழுதியிருக்கிறோம்..

1960/70 களில் கம்யூனிய இயக்கத்தலைவர்களின் போராட்ட வரலாறு அனல் பறப்பதாய் இருக்கும்..கூலி உயர்வுக்கும் அதிகாரத்திமிருக்கும் எதிராய் நெஞ்சை நிமிர்த்திய தோழர்கள் எங்கோ மறைந்து போனார்கள்...இப்போதெல்லாம் நெஞ்சை துண்டு வைத்து மூடிக்கொண்டிருக்கின்றார்கள்..
(அதெல்லாம் சரி...இந்த துண்டு போடும் சமாச்சாரத்தை எவன் கண்டுபிடித்தான்?)
இணைய ஊடகங்களில் நாளுக்கொரு பிரச்சனையை ஊதிப்பெருக்கி விளையாடிவிட்டு அடுத்த பிரச்சனைக்கு அலைகிறார்கள்...
ஊரே தீப்பற்றி எரியும் போது பிடில் வாசித்த நீரோவைப்பற்றி பேச  இனி எந்த அருகதையும் இருப்பதாய்த்தெரியவில்லை..பத்தாண்டு ,இருபதாண்டுக்கு முன் எடுத்த படம் போடும் நமக்கு...

நல்ல தலைவர்களை இனி நாமே தான் கண்டுபிடிக்கவேண்டும்..
காலைவணக்கம்,
மாலைவணக்கம்,என வணக்கங்களைப்போட்டு விட்டு விருப்பக்குறிகளுக்கு ஏங்குவதும்,சுயமிகளை பதிவேற்றிவிட்டு கருத்துக்களுக்கு பிச்சை எடுப்பதும்,தமிழனின் பெருமையென பிதற்றிக்கொண்டிருப்பதும் இன்னும் எத்தனை நாள்களுக்கு?

நேற்றைய, தோழர் ஒருவரின் ஆதங்கம்  அழிந்து வரும் தாய்மண்ணில் கொஞ்சம் சொகுசாய் வாழ்ந்த மனிதர்களாய் நாம் மட்டுமே கடைசியாய் இருக்குமோ என்று சொல்லும் போது நெஞ்சு முட்டுகிறது..
நம்மின் அடுத்தடுத்த சமூகம் தண்ணீருக்கும் காற்றுக்கும் வழியின்றி மருந்துகளில் வாழும் போது நமக்கு விடப்போகும் சாபங்களை நினைத்துப்பார்க்கவும் அச்சமாய் இருக்கிறது..
பஞ்சாங்கம் மட்டுமே இருந்த காலங்களில் நம் முன்னோர்கள் செய்த சில முயற்சிகளைக்கூட விஞ்ஞான காலத்தில் செய்யாமல் இருப்பது என்ன சாபக்கேடு?
நொடிக்குள் பரவும் இணைய வேகத்தில் ஐந்துதலைப்பாம்பின் படத்தையா பகிர்வது?

வாழ்ந்து கொண்டிருக்கும் நான் உள்பட்ட இந்த  சமுதாயத்தின் மீது மிகுந்த கவலையும் அருவருப்புமாய் இருக்கிறது...
மூச்சு முட்ட பதிந்துகொண்டிருக்கும் தகவல் மற்றும் பதிவுகளில் ஆயிரத்தில் ஒன்றாய் காணக்கிடைக்கும் அந்த ஒற்றை நம்பிக்கை வெளிச்சங்களையே விடிவெள்ளியாய் மனசு நம்பித்தொலைக்கிறது..

காலம் இன்னும் நம்மைக்கடந்து போய்விடவில்லை..
நல்ல தலைவர்களைத்தான் தேர்ந்தெடுக்க மறந்துவிட்டோம்...இப்போதேனும் நமக்கு அவசியமான நல்ல தகவல்களால் பிரச்சனைகளின் வேரறுக்க ஆராய்வோம்...
சமூகம், பண்பாடு பற்றிய செய்திகளை மட்டுமே இணைய ஊடகங்களில் பரப்புவோம்...
இடையில் சில புல்லுருவிகள் நம் பொறுமையை சோதிக்கத்தான் செய்வார்கள்..
கண்டும் காணாமல் கடந்துபோவோம்...
உங்களுக்குத்தெரியுமா? அவர்களும் அந்தப்பதிவுகளை போட்டுவிட்டு அடுத்தபதிவுக்கு போய்விடுகிறார்கள்...
அவர்களின் பதிவுகளுக்கு வந்து குவியும் ஆபாச பின்னூட்டங்களையும் ஒரு மனிதன் அநாயசமாக கடக்கிறான் எனில் ..புரிந்து கொள்ளுங்கள் எதிரி அவன் குறிக்கோளில் எவ்வளவு கவனமாய் இருக்கிறான்..?  நாம்???சனி, 17 மார்ச், 2018

முன்றிலாடும் பூக்கள்

தமிழைத்தாண்டியும் எனக்கொரு மொழி பிடிக்குமெனில் அது மலையாளமாய் இருக்கும்..
தட்டுத்தடுமாறி மலையாள மொழிபெயர்ப்புக்கதைகளை வாசிப்பதும்,கவிதைகளை தடவிக்கொண்டிருப்பதும் வாடிக்கை...

ஆனால், நாகர்கோவில் சுபா ரவீந்திரன் அக்கா மிகச்சிறந்த பல்கலை வித்தகி. சமையலாகட்டும்.
சமஸ்கிருதம்,பூ வேலை,சித்திரங்கள் என எது செய்தாலும் அற்புதமாய் அமைந்துவிடும் அவர்களின் இல்லமே கோவிலைப்போல் இருக்கும்...
அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை 50℅ மலையாளமும் 50℅ தமிழும் கலந்து சொன்னபோதே எனக்கும் அப்படியொன்று நடந்திருப்பதும்,படைப்புகளுக்கு மொழியும் இடமும் ஒரு பொருட்டல்ல என்பதும் தெரிந்தது..
எழுதி முடித்து வாசிக்கும் போது.. வரிகளில் பெரிய கவித்துவமோ,நாம் இதுவரை காணாத எந்த காட்சியும் புதிதாகவோ சொல்லிவிடவில்லை..
ஆனால் மெல்லிய பாரிஜாத வாசமும்,அதையும் தாண்டி மனசுக்குள் ஒருவிதமான உணர்வு அலைமோதியதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது...
இனி அந்த கவிதை...

வியாழன், 15 மார்ச், 2018

இடைத்தேர்தலில் மோடிக்கு வெற்றி...

அண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில்

மனக்குரங்கு பல சந்தேகங்களை கீறுகிறது...

நம்ப மறுத்தாலும் ஆளும் கட்சி இன்றைய இந்தியாவின் மற்ற கட்சிகளை விட கட்டமைப்பும்,
சரியோ தவறோ ஒரு இலக்கை நோக்கி சீரான செயல்களை செய்வதில் வல்லமை மிக்கது என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்...

ஒருமுறை ஆளூர் ஷாநவாஸ் சொன்னதுபோல் நாம் நமக்குள் விவாதங்கள் செய்துகொண்டிருந்த போது அவர்கள் சமூகத்துள் ஊடோடி விட்டார்கள்...
மக்களோடு மிக இயல்பாக கலந்துவிட முடிவு செய்துவிட்டார்கள்.

எடுத்துக்கொண்ட லட்சியத்துக்காக எந்தவித சமரசமும் செய்யாமல் எல்லாவித முயற்சிகளையும் செய்வதை நாம் பலமுறை பார்த்தும் இருக்கிறோம்.
மூன்றாமிடத்தில் இருக்கும் மாநிலங்களில் கூட ஆட்சி அமைப்பதை விடவா சாதுர்யம் இருக்கப்போகிறது?

பலவருடங்களில் வாக்கு சதவீதம் புள்ளிகளின் அளவே இல்லாத திரிபுராவையும் வென்றெடுக்க வெறும் அமைதியான ஜனநாயக முறையிலான தேர்தல் என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்கள் எனில் இந்த பதிவை இந்த இடத்திலேயே நீங்கள் மூடிவிடலாம்..

வாக்காளர்களின் மூளை நரம்புகளைக்கூட கணிக்கும் அளவிற்கு சாத்தியக்கூறுகள் அவர்களிடம் உண்டு.
எந்த பிரச்சனையை எதைக்கிளப்பி மறைக்கலாம் என்பதை நம்மிலும் அவர்கள் அறிவார்கள்...

ஒற்றை தேசம் ஒற்றை மதம் என்ற நெ(கொ)டுங்கனவில் இருக்கும் அவர்கள் மிக எளிதாக தோற்றுவிட மாட்டார்கள்.
மாநிலத்தேர்தல்களில் எப்படியேனும் வென்றுவிடும் அவர்கள் இடைத்தேர்தல்களில் தோற்பதிலும்..
நம்புங்கள்.. திட்டங்கள் இருக்கும்.
சில நாள்களின் முன் பார்த்த மோடி அத்வானி சம்பத்தப்பட்ட காணொளி ஒன்று போதாதா அவர்களின் அரசியல் புரிய?
ராணா அய்யூப் எழுதிய குஜராத் பற்றிய நூலிலேயே தொடங்கிவிடுகிறது அவர்களின் திட்டங்கள்.
ஏகப்பட்ட செலவுகளாலும் கனவுகளாலும் கட்டப்பட்டது அவரின் தலைமைத்திட்டங்கள்.
ஏற்றிய ஏணியை மறக்கும் அவர் எதிர்காலப்போட்டி என கருதும் அல்லது முன்னெடுக்கப்படும் இன்னொருவரை எப்படி வளரவிடுவார்.?
ராணா அய்யூப்பில் படித்த நினைவு..
என்றோ ஒருநாள் அவரிடம் நாட்டின் தலைமை வேண்டுமா அல்லது உங்கள் கொள்கை வேண்டுமா என்றால் மிக நேர்மையாக அவர் தலைமையை தேர்ந்தெடுப்பார்..

ஆக...இந்த தோல்வி பா.ஜ.க வின் தோல்வி என நாம் மகிழ்ந்தாலும் அது மோடியின் வெற்றி தான்..
சாதாரண இந்த இடைத்தேர்தலின் தோல்வி யோகிக்குதான் பாவம்..மாநிலம் தாண்டி முயற்சிக்க முடியாத அயற்சியை கொடுத்திருக்கும்..

என்னடா..இவன் நமது மகிழ்ச்சியை கெடுக்கின்றானே..
இவனுக்கு இதில் ஒரு சந்தோஷமும் இல்லையா எனக் கேட்டால் ..எனக்கும் இருக்கிறது..
எதிரும் புதிருமான மாநிலக்கட்சிகளை கொஞ்சமேனும் இணக்கமாய்ப் போக வைத்திருக்கிறது..
இங்கேயே பாருங்களேன் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது...
தொலைபேசியில் பேசிக்கொள்கிறார்கள்..
சந்தித்துக்கொள்கிறார்கள்..
பேருந்துக்கட்டண உயர்வுபற்றிய போராட்டத்தை மறந்திருக்கிறார்கள்..
இதற்காகவேணும் மகிழ்ச்சி அடையத்தான் வேண்டும்..ம்ம்ம்வெள்ளி, 9 மார்ச், 2018

ரசம்...


ஒற்றைத்தக்காளி
ஒரு சட்டி நிரம்பும்
ஆதி நாள்களில்
ரசமென்ற
பெயரில்..

குன்னிய
சேவலொன்று
கொதிக்கையில்
ரசமே
சூப்பென
உருக்கொள்ளும்..

சட்டியோ
பானையோ
நிரம்பாத
சமையல்
அம்மாவுக்கு
தெரியாது..

புழு நீக்கிய
கூறுகளின் காயோ...
பூச்சியடித்து ஒடித்த
மரத்தின் கீரையோ
எண்மரின்
வயிறுகள்
நிரம்பியாக கட்டாயம்.

அகப்பைகளில்
அமைந்த கண்கள்
கரண்டிகளில்
காணக்கிடைப்பதில்லை..

மேசைக்கரண்டிகள்..
சோற்றுக்கும்
கறிக்கும்
குடிமாறிய
குக்கர் யுகத்தில்,

சூடுசெய்த
சிறுகுவளை ரசத்தின்
ஆழத்தில்
தெரிகிறது...

வாழ்க்கைச் சக்கைகள்..

வியாழன், 8 மார்ச், 2018

நீ நதிபோல ஓடிக்கொண்டிரு...

விண்மீன்களின்
பள்ளிக்கூடத்தில்
இப்படித்தான்
சொல்லிக்கொடுப்பார்கள்..
பூமியின்
பரப்பில்
பகலிலும்
மின்னுவது
பெண்கள் ..

நதிகளின்
மாநாட்டில்
நன்றித்தீர்மானம்..
அவைகளுக்கு
பெண்களின்
பெயர்
சூட்டியமைக்கு..

கடவுள்கள்
கவலைப்படுவார்கள்
அம்மாக்களை
படைத்த
பின்னே
மனிதன்
கண்டுகொள்வதில்லை..

பூக்களின்
சபையில்
பெருத்த
சந்தேகம்...
வாசம்
வந்தது
பூவையர்
தொட்டதாலா..
பூஜையில்
வைப்பதாலா?

உலகின்
உன்னதம்
என்னென்ன
இருப்பினும்
பெண்ணுக்குப்
பின் தான்
வரிசையில்
நிற்கும்...

பெண்களின்
தினத்தில்
நான்
சொல்லும்
வாழ்த்துகள்
முன்னிலை
வகிக்கும்..
திங்கள், 5 மார்ச், 2018

கவிஞன் யானோர்...

இலக்கிய
அமைப்பொன்று
நடாத்தும்
கவிதைப்போட்டியின்
முதல்பரிசு
ஆயிரம்
உரூபாயாம்.

முகநூல்
குழுமமொன்று
முடிவுசொல்லுமுன்
போடக்கூடாதென
இறுபத்து ஐந்து
வரிகளில்
மரபோ
புதுசோ
கவிதையை
நள்ளிரவுக்குள்
அனுப்பி
தேர்வானால்...
போட்டோஷாப்பில்
புகைப்படத்துடன்
வாழ்த்துமாம்..

செத்துப்போன
படைப்பாளியின்
சீமையிலிருக்கும்
பிள்ளைகள்
கருமாதிச் செலவை
கவிதைப்போட்டி
நடத்தி
கழிப்பதுமுண்டு..

சித்திரை
தொடங்கி
பங்குனி
வரைக்கும்
தமிழாய்ந்த
அமைப்புகளின்
பெயர்கள்
இரண்டு
படிகளோடு
மார்பளவு
புகைப்படமும்
அனுப்பச்சொல்கிறது..

பி.டி.எப்
அமைப்பில்
எழுத்துருப்
பெயரோடு
போட்டிக்கழைப்பார்கள்
இணையம்
சார்ந்த
பாரிவள்ளல்கள்...

பணமும்
பதிவும்
போடும்
பத்திரிக்கைகளில்
எடிட்டரின்
சொந்த
மின்னஞ்சல்
முகவரி
எல்லோருக்கும்
கிடைப்பதில்லை..

சிற்றிதழ்
தொடங்கி
சிங்கை,
இலங்கை
மலேய
நாடுவரை
அறிவிக்கும்..
போட்டிகளை
அவதானிக்க
வேண்டும்..

தொகுப்பென்று
ஒன்றுபோட
கவிதையைக்காட்டிலும்
தலைப்பிற்குத்தான்
தகறாறுகள்.

செருப்புகள்
தேய்ந்தாலும்
தேறாது,
வாழ்த்துரைக்கென
வல்லிய
கவிஞனுக்கு
வைத்திட்ட
வந்தனங்கள்..

கண்ணீர் அஞ்சலி
மட்டும் போடும்
பத்திரிக்கை முதலாய்..
கையெழுத்தில் வரும்
ஈறாய்
இரண்டிரண்டு
அனுப்பினாலும்..
இதழின்
கடைசி
மூலையில்
வந்து சேர்ந்தது
என்ற
வார்த்தையும்
வருடம் தாண்டி
வந்தால் நிச்சயம்..

சிறப்புப்பரிசென்ற
பரிசு
வாங்க
சீக்கிரமே
கிளம்பிப்போனால்
கிடைப்பதெல்லாம்
முனை நீட்டிய
ஷீல்டொன்றும்
மினுமினுவென
சால்வையொன்றும்..

அச்சச்சோ
கவிஞனென
அச்சத்தால்
கடப்பார்கள்...

கவிதை எழுதி
தகுதியேதும்
உயரவில்லை
வீட்டுக்குள்..
வீதியன்றி
என்ன வழி...
விழி பிதுங்கித்
திரிகின்றோம்..
தெரியுமோ

எங்கள் வலி??