வியாழன், 5 ஜூலை, 2018

அற்றைத்திங்கள்

வால்ட் டிஸ்னி தனது கனவு உலகத்தை செய்து முடித்து திறப்புவிழாவின் முன்னரே காலமாகிவிட்டார்.
அதன் திறப்புவிழாவில் பேசிய அனைவரும் ஆஹா..ஓஹோ...அற்புதமான இந்த படைப்பை பார்க்க டிஸ்னி இல்லையே என வருத்தப்பட்டு பேசினர்.
இறுதியில் பேசிய திருமதி டிஸ்னி   நீங்கள் இப்போது காணும் இந்த அற்புதத்தை டிஸ்னி எப்போதோ மனசுக்குள் பார்த்ததைதான் நீங்கள் காண்கின்றீர்கள் என்றார்.

ஒரு நாவலைப்பற்றி எழுதவந்த நான் இந்த கதையை சொல்லத்தான் வேண்டியிருக்கிறது.

ஆம்...படைப்பாளர்கள் மட்டும்தான் சமூகத்தின் எதிர்காலத்திலும் வாழ்வார்கள்.அவர்களின் தீட்சண்யமான கண்களுக்கு மட்டுமே அது வாய்க்கும்.

இன்று எட்டு வழிச்சாலைக்காக அரசு 10000 கோடிகளை ஒதுக்கியிருக்கிறது என்பது நமக்கு இப்போது தானே தெரியும்..
இந்த நாவலின் ஆசிரியர் கலைச்செல்வி அவர்களுக்கு எப்போதோ தெரிந்துவிட்டது.
இயற்கையை வளைக்கத்துடிக்கும் பன்னாட்டு அமைப்பொன்றுக்காய் சாலையை அமைக்க ஒதுக்கப்படும் தொகை பிசிறே இல்லாமல் 10000 கோடிகளாக இருப்பது படிக்கும் நமக்கு ஆச்சர்யத்தை அள்ளி வைக்கிறது.

"அற்றைத்திங்கள்" என்னும் நாவல் சமீபத்தில் அதன் ஆசிரியரே என்னிடம் வழங்கிய இரண்டு இரவுகளில் வாசித்து முடித்தும் பிரமிப்பிலிருந்து மீளமுடியாத அனுபவத்தை தந்தது.

தனியார் தொலைகாட்சியின் நிகழ்ச்சி படைப்பாளராக இருக்கும் பரணி என்னும் பெண்ணின் பார்வையில் விரிகிறது நாவல்.சக பணியாளனாய் தொடரும் குணா என்னும் பாத்திரம்.

பரணிக்கும் குணாவுக்குமான அன்பில் கதைசொல்லியான ஆசிரியர் கத்தியின் மேல் நடந்திருக்கும் ஆச்சர்யம்.
நட்பு முற்றி நேசமாகி விடும் அற்புத தருணத்தை வாசிக்கும் எல்லோர்க்கும் நகர்த்தும் லாவகம்.

காய்ச்சலா என வலதுகை கொண்டு பரணியின் இடது கையை தொட்டுப்பார்க்கும் பிரியம்,
என்னப்பா என இயல்பாய் வழியும் அன்பு,
மலையின் பயணத்தில் விரல்கள் பிடிக்கும் காட்சி என இருவரின் பாத்திரங்களின் மேல் நாவல் முழுவதும் கதாசிரியர் சின்ன கறையும் படாமல் காத்திருக்கும் கண்ணியம்..ஆஹா..

கதையின் கரு என்னவோ காலம்காலமாக அழித்துக்கொண்டிருப்பவர்களின் கதை என்றாலும்..
அழிந்துகொண்டிருப்பது அந்த மண்ணின் ஆதிமனிதர்கள் என்பதால் கழிவிரக்கம் ஊறும் படைப்பாகிறதும்.

ஊருக்கு இப்படி ஒரு குடும்பம் இருக்காதா என ஏங்க வைக்கும் செரா சாரும் ..கோமதி அம்மாவும்.

பெற்ற மகளுக்கு ஒரு கல்யாணத்தை நடத்திவிட்டு கண்மூட மாட்டோமா என தவிக்கும் ஒரு அப்பா,
மகளுக்கும் தந்தைக்கும் இடையே அல்லாடும் மருமகளைப்பற்றி அங்கலாய்க்கும் வழக்கமான ஒரு அம்மா என கதாப்பாத்திரங்களைப்போலவே காட்சிகளை அறிமுகப்படுத்துமிடங்களில் ஆசிரியர் மனசுக்குள் நிறுத்திவிடுகிறார்...

கிராதிகளின் இடைவெளியில் நழுவும் நிலவொளியாகட்டும்,
காட்டுச்சாலையில் நடக்கும் போது குத்தும் சிறு புற்களின் ஸ்பரிசமாகட்டும் நம்மை கைபிடித்து நலம் விசாரிக்கிறது.
கனிம வளங்களை தன்னுள் புதைத்துவைத்திருக்கும் மலைக்கானகங்களை அழித்துவிடத்துடிக்கும் கார்ப்பரேட்களின் கீழ்த்தரமான உத்திகளின் பத்திகளை வாசிக்கும் போது பற்றியெரிகிறது.

புலிகளைக்காப்பதாக பலியாக்கத்துடிக்கும் ஆதி காட்டின் மைந்தர்களை மலையை விட்டு விரட்ட எத்தனிக்கும் அவர்களின் சாம,
பேத ,தண்ட முறைகளை மிக எளிதாக புரிய வைத்திருக்கும் கதையோட்டம் வாசிக்க தோதாக இருந்தாலும் இதற்காக இவர் எடுத்துக்கொண்டிருக்கும் கள ஆய்வுகளின் வேலை பிரமிக்க வைக்கிறது.

கிழங்கும் தேனும் கலந்து கொடுக்கும் இலையை கையில் எடுத்துக்கொள்ளும் பரணி,
ஆதி மூப்பனின் மகள் பருவமெய்திய பொழுது நடக்கும் சடங்குகள்,
மலையின் சங்கிலித்தொடர் நிகழ்வை மலையின் மனிதர்கள் குலைப்பதாக நடத்தப்படும் நாடகத்தில் கானகத்தை அழிப்பதாக இருந்தால் இத்தனை நாட்களில் செய்து முடித்திருக்கமாட்டார்களா என்னும் கூரிய அம்பாக கேள்விகள்!

கானக தர்மத்தை சொல்லுமொரு இடத்தில் கையிலே வந்து விழுந்தாலும் கர்ப்பமாய் இருக்கும் மானை காட்டுவாசிகள் கொல்லமாட்டார்கள்..
யானைகள் அவர்களின் பிள்ளைகளுக்கு சமமாய் நினைத்து இறுதிக்கடன் செய்வது போன்ற செய்திகள்..
ஒரு நாவலுக்குள் எத்தனை ஆச்சர்யங்களையெல்லாம் புகுத்திவிட முடிகிறது.

அன்றாடம் நாம் தவிர்க்க முடியாத ஊடகத்தொழில் முறை, தினம் ஒரு கரண்டியேனும் தின்றுசெரிக்கும் சர்க்கரைக்காய் எத்தனையோ இன்னல்களை சந்திக்கும் விவசாயிகள்,அவர்களின் உழைப்பை சட்டத்தின் சந்துபொந்துகளில் புகுந்து திருடும் முதலாளித்துவ ஈனப்பிறவிகள்,நடிகனென்ற ஜபர்தஸ்தில் சொல்வதையெல்லாம் கேட்கும் ஒரு கும்பலை வளர்த்தெடுக்கும் அநாகரீகம்,காடும் மலையும் தாலாட்டும் பசுமையை காக்கும் உண்மையான மனிதர்கள்,அவர்களே நாடோடிகளாய் பிச்சையெடுத்தும் ,ஆலையில் மூட்டை பிடித்தும் கீற்றுக்குடிசைக்குள் வாழும் வாழ்க்கை,
மலைகளின் நலனுக்காய் முயற்சியெடுக்கும் செரா போன்ற மனிதரும் அவரின் முன்னோடி தாத்தாவும்,
தாதுமணலின் ரகசியம்,அதன் கொள்ளையில் நடக்கும் சுகபோகம்,எல்லாம் தாண்டி இந்திய வளங்களை கொள்ளைகொள்ள துடிக்கும் பன்னாட்டு சதிகள்,அதற்கு துணைபோகும் உள்நாட்டு நரிகள்..

ஒற்றை இரவில் முடித்துவிடுவதாகத்தான் ஆரம்பித்த அற்றைத்திங்கள்...
இத்தனை ஆச்சர்யங்களைத்தந்தால் எப்படி முடிக்க?

நாவலை படித்து முடிந்த பின் மீண்டும் மீண்டும் அசைபோடும் நாவலின் நினைவுகளோடே சில நாட்கள் திரிந்து விட்டே எழுத வாய்த்திருக்கிறது.

எத்தனை தளங்களில் பயணிக்கும் மொழி செம்புலப்பெயல் நீராய் களங்களின் வன்மையை சொல்லும் பாங்கு நேர்த்தி...
ஒரு மகளுக்கும் தாய்க்குமான உரையாடலில் தெறிக்கும்..."வாடீ" என்பதில் உணரமுடியும் வாத்சல்யம்,
மருமகளுக்கும் மாமியார்க்கும் நடப்பதில் தெரியும் கோபம்,மருமகளின் ஆதங்கம்,டிக்லெஸியா என்னும் பாதிப்புக்குண்டான குழந்தையை வளர்க்கும் மனோதத்துவ முறையை எவ்வளவு எளிதாக படங்களாக காட்டிவிடுவதும்,
மலைகளின் கதையை நாடகமாக விரிக்கையில் படரும் வார்த்தைகளின் வாசனை,மலை மக்களின் கள்ளம் கபடமில்லாத பேச்சு,கணினித்தமிழில் பாயும் கட்டளைகள்,கார்ப்பரேட் மொழிகள் என வானவில்லாய் கவிகிறது.

ஒவ்வொரு களமும் ஒவ்வொரு கனத்த நாவலாய் உருவாகியிருக்கவேண்டிய விசயத்தை ஒற்றை நாவலில் அடக்கியிருப்பதால் அற்றைத்திங்கள் ஒளியில் உலவும் போது கூட்டுக்கலவையான உணர்வுகள் ஏற்படும் அயற்சி மட்டுமே சிறு குறையாய் என் வாசிப்புக்கு தெரிந்தாலும்...
அதையும் ரசிக்கத்தூண்டும் எழுத்துக்கு என் வந்தனங்கள்.

சமீபத்தின் நாவல் வாசிப்பில் என்னை பிரமிக்க வைத்த ஆசிரியர் கலைச்செல்வி அவர்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும்..

5 கருத்துகள்:

 1. நல்ல அறிமுகம். நல்ல பகிர்வு. நாவலுக்கு தலைப்பு தேர்வு அபாரம்.

  பதிலளிநீக்கு
 2. அறிமுகம் வாசிக்கத் தூண்டுகிறது.

  பதிலளிநீக்கு
 3. நல்லதோர் அறிமுகம்
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 4. ஒருகவிஞரின் விமர்சனம் என்பது புரிகிறது. நூல் விமர்சனம் எழுதும்போது, பதிப்பக முகவரி, நூல்விலை, பக்க விவரங்களை, தெளிவான அட்டைப்படத்துடன் வெளியிட வேண்டும் செல்வா! விமர்சனம் நன்றாக இருப்பதால் தொடர்ந்து விமர்சகராகிவிடாமல், கவிஞராக, எழுத்தாளராகவே தொடர வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு