வெள்ளி, 27 ஜூலை, 2018

அப்பாவும்...தி.மு.க.வும்..

அந்த குடியிருப்பில் எங்கள் வீட்டில் மட்டும் ஒரு சிறப்பு இருந்தது.

நடுக்கூடத்தின் சுவர் முழுவதும் கிட்டத்தட்ட ஏழுவரிசைகளில் ரீப்பர் அடித்து போட்டோக்கள் மாட்டியிருக்கும்.

மேல் வரிசையில் கோட்டு அணிந்து தாத்தா ஒரு தேக்கு நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருப்பார்.
வரிசையாக முன்னோர்களின் படங்கள்.

அடுத்த வரிசையில் அம்மா அப்பாவின் திருமண சமயத்துப்படம்.
அப்பா மெல்லிதாக சிரித்துக்கொண்டிருக்க...
அம்மா யாரையோ முறைத்துக்கொண்டும் பயந்துகொண்டும் இருப்பதுபோல் இருப்பார்.

அடுத்த வரிசை அத்தைகளுக்கானது.

மற்றொரு வரிசையில் என் படம் இருக்கும்.
ஒரு வயது முடிந்திருந்த வேளையில் சாகப்போய்க்கிடந்த என்னை சற்று உயிர் வந்ததும்..
குடும்பத்துக்கே மூத்தவனாய்ப்பிறந்தவன் இருப்பானோ போய்டுவானோன்னு தெரியாது ,ஒரு படத்தை புடிச்சு வச்சா வெள்ளி செவ்வாய்ல விளக்கு போட ஆகும்னு....
துணில சுத்தி சிட்டி ஸ்டுடியோவில் ஒரு மரக்குதிரைமேல் உட்கார வைத்து எடுத்த படம்..

ஜட்டி கூட போடாத அடுத்த தம்பி,குப்புற படுத்திருக்கும் இன்னொருவன் என வரிசையாய் இருக்கும் படங்களின் வரிசையில் அடுத்தது தான் எங்கள் வீட்டிற்கு வரும் அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கும்.
எங்கள் வீட்டின் முன்பு இருக்கும் ஒரு பூங்கா பராமரிக்கப்பட்டுக்கொண்டிருந்த ஒரு காலத்தில் இளமைக்கால அப்பாவும்,லத்தீப் மாமாவும் பூங்காவின் நடுவிலிருந்த நீரூற்றொன்றில் மிக அட்டகாசமாக அமர்ந்திருக்கும் புகைப்படம்..
அந்த படத்தில் அப்பாவைவிட பூங்கா அழகாக இருக்கும்.எங்கள் காலத்தில் அலங்கோலமாக இருந்த பூங்காவின் ஜனன காலம் இப்படியா இருந்தது என அனைவரையும் பார்க்க வைக்கும்.

பெரிய படங்களாக இல்லாத சிறிய படங்கள் 4அல்லது 6 என ஒரே பிரேமில் ஒட்டி வைத்திருக்கும் படங்கள் தான் இன்றைய பதிவின் மையமாகிறது.

மாமா ஒருவர் திரைப்படத்துறையில் ஸ்டில் போட்டோகிராபராக இருந்தார்.
இளையதலைமுறை என்றொரு படத்தின் துவக்க விழாவுக்கு அப்பாவும் அன்றைய மெட்ராஸ் போய்விட்டு வந்த நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமொன்று..

ஒரு சோபாவில் அப்பா நடுவில் உட்கார்ந்திருப்பார்..
சோபாவின் ஒரு ஓரத்தில் கலைஞர் மற்றொரு ஓரத்தில் எம்.ஜி.ஆர்.
கருப்புக்கண்ணாடி அணிந்த கலைஞர் நடுவகிடு எடுத்து சீவி மெல்லிய புன்னகையுடன்...
தொப்பி வைக்காத குண்டான எம்.ஜி.ஆர் தலை நிறைய சுருள் முடியுடன் அதே மந்திரச்சிரிப்போடு.

வீட்டிற்கு வரும் எல்லாரிடமும் அந்தப்படத்தை பற்றிய பிரமிப்பை பார்த்திருக்கிறேன்.
அந்த நொடிகளை அப்பா எப்போதும் சிலாகித்துக்கொண்டிருப்பார்.

பிரியாத தி.மு.க.வின் கால கட்டங்களில் ஆயிரத்தில் ஒருவன் படத்தை காரைக்குடி வரை சைக்கிளில் சென்று வந்ததை சாதனையாக சொல்லிக்கொண்டிருப்பார்.

எம்.ஜி.ஆர் பிரிந்த போது அல்லோகலப்பட்ட அதன் தொண்டர்களின் மனோநிலையை அப்பா சொல்லும் போது ஆச்சர்யமாய் இருக்கும்.

ஆனால் அப்பா தன் இறப்புவரை கலைஞர் என்ற மந்திரச்சொல்லுக்குள் வசியப்பட்டிருந்தார்.

அரசியல் குறித்த தீவிரமான செய்கைகளோ,போராளியாகவோ இருக்கமுடியாத சூழ்நிலையில் இருந்த அப்பாவுக்குள் கலைஞர் என்னும் பிம்பம் மட்டும் மிகப்பிரகாசமாக இருந்தது.

என் பள்ளிக்கூட நாள்களின் ஏதேனும் ஒரு நிகழ்ச்சிக்கு எழுதித்தரச்சொன்னால்..
"அனார் அனார் என் மாசற்ற ஜோதி மலையே" என ஆரம்பித்து கலைஞரின் வசனம் எழுதித்தந்து விடுவார்..

அனார் யார் சலீம் யாரென தெரியாத குழந்தைப்பருவம் என்றாலும் எனக்கு அப்பா அதை வாசித்து சொல்லித்தரும் போது அவரின் மனசு முழுவதும் கலைஞர் தான் இருந்திருக்க வேண்டும்.

திருச்சியில் எப்போதேனும் தலைவர் பேச வருகிறார் என்றால்.பக்கத்துவீட்டில் எப்போதும் அப்பாவை உடன்பிறப்பே என அழைக்கும் முனுசாமி மாமாவோடு கிளம்பி விடுவார்.
அடுத்த நாள்களின் வீட்டில் தலைவரின் பேச்சுதான்.
ஒரு சித்திரை மாதத்து கூட்டத்துக்கு போய் வந்ததும்...
கலைஞர் பேச ஆரம்பித்த கதையை ஆரம்பிப்பார்.

"மாதமோ சித்திரை, நேரமோ பத்தரை..."
என அடுக்கிக்கொண்டு போகும் அப்பாவின் முகம் சாந்தமான சந்திரமுகியாகிக்கொண்டிருக்கும்.

தீவிரக்கிகிச்சைப்பிரிவில் இருந்த அப்பாவுக்கு நினைவு திரும்ப என்னவேனும் சொற்களை சொல்லலாமே என்ற போது நான் காதருகே சென்று கலைஞர் பற்றிய செய்திகளை வாசித்திருக்கிறேன்.

வருடம் தோறும் வாங்கும் காலண்டர்களில் கலைஞர் படம் தவிர அப்பா வேறொன்றும் வாங்கியதில்லை.
இளமைக்கால சுருள் முடியும், சால்வையை போர்த்திக்கொண்டிருக்கும்,
கருப்புக்கண்ணாடியை மீறி ஒளிரும் கண்களையும்,மிகத்தீவிரமாக நுணுக்கி ஆராய்ந்ததெல்லாம் வாட்ஸ் அப் வராத காலம்.

அப்பா அப்படி என்றால் நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஜீவா மன்றத்துக்குள் நுழைந்துவிட்டேன்.
உடன்பிறப்பே குடும்பத்தில் நான் தோழனான முதல் ஆள்.

ஆலைத்தோழர்கள் சூழ கழிந்த இளமைக்காலத்தில் கலைஞர் பற்றிய ஈர்ப்பு அதிகமாய் இருந்ததில்லை.

மெல்ல மெல்ல  பாடம் தாண்டி வாசிக்கும் போதுதான் அவரின் மொழி அறிவு குறித்தும், சமயோசிதம் குறித்தும்,ஓய்வே இல்லாமல் வாசித்தும் எழுதியும் தமிழ்நாட்டின் வரலாற்றை யார் எழுதினாலும் தவிர்க்கவே முடியாத ஆளுமைத்தன்மையின் ஆச்சர்யம் குறித்தும் கருத்தியல் தாண்டி படிக்கும் போதும்,மற்றவர்கள் பகிர்ந்த போதும் பிரமிப்பாய் இருக்கிறது.

ஒரு கட்சியின் கடைக்கோடி தலைவராய் இருந்து முன்னுக்கு வந்ததில் பகடிகள் இருந்தாலும்,அவரின் அரசியல் வாழ்வில் குறித்த மாச்சர்யங்கள் மண்டிக்கிடந்தாலும்,

அவரின் மொழி குறித்த
ஆழங்கால் பட்ட தன்மை,செய்திருக்கும் பல சீர்திருத்தங்கள்,
ஆட்சி நிர்வாகத்தில் காட்டிய அத்தனை கவனம்.
அரசியலில் எத்தனை போராட்டங்களை,கட்சியில் எத்தனை பிளவுகள் தோன்றினாலும் அசையாமல் இருந்து கட்சியையும் ,தன் உடன்பிறப்புகளையும் ஒருங்கிணைத்துக்கொண்டுபோன திறமை...

இப்படி அவரைப்பற்றிய ஆச்சர்யங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

நீண்ட நாள் ஆசையாக எனக்கும் ஒன்று இருக்கிறது.
என் அப்பாவைப்போலவே கலைஞரோடு ஒரு படம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று.
ஒருமுறை அதற்கான எல்லா ஏற்பாடும் முடியும் போது அவரின் உடல்நிலை சரியில்லாமல் போனது..

நேற்றும் இன்றும் வரும் வதந்திகளும்,அவரைப்பற்றிய நேர்மறை மற்றும் வக்கிரமான எதிர்மறைப்பகடிகளும் இந்த நாள் முழுவதும் அவரைப்பற்றிய சிந்தனைகளுக்கானதாக்கி விட்டது.

மிக எளிதாக அவரின் இறுதியைக்கொண்டாடச்
சொன்னவர்களின் நட்பை தொடர்புகளிலிருந்து அறுத்துக்கொண்டேன்.

அவர் பற்றிய நினைவுகளை,
வள்ளுவர் சிலையை,வள்ளுவர் கோட்டத்தை,
பூம்புகாரை,பராசக்தியை,
குடிசைமாற்று வாரிய கட்டடங்களை,
கரகரத்த குரலில் அழைக்கும் உடன்பிறப்பே என்ற ஓசையை...
சுழித்து ஓடும் அந்த கையெழுத்தை, விரல் கொண்ட கணையாழியை,
விழிகள் மறைந்திருக்கும் கண்ணாடியை..
இப்படி பல சாதனைகளை,

மறுக்க முடியாத மாமனிதரை எப்படி மறந்துவிட முடியும்.

காலத்தின் மேல் மிகுந்த நம்பிக்கை கொள்கிறேன்...
நானொரு புகைப்படம் எடுத்துக்கொள்ள அவர் வேண்டும்.5 கருத்துகள்:

  1. தங்களின் தகப்பனை மீண்டும் ஒரு முறை மெய் சிலிர்க்க வைத்துளீர்கள். !

    பதிலளிநீக்கு
  2. வாசித்தேன் அண்ணா பதிவை,
    உங்கள் அப்பாவின் கலைஞர் பக்தியை
    கண்டு வியந்து விட்டேன்!

    பதிலளிநீக்கு