செவ்வாய், 31 ஜூலை, 2018

துளிர்க்குமோர் பனித்துளி.



காலப்பெருநதியின்
கரையோரம்
காத்துக்கிடக்கிறேன்
வாழ்க்கை முழுதும்.


நூலாம்படைக்குள்

சிக்கிய
சின்னப்பூச்சியாய்
சீரழியும்
வேளைகளில்
வந்துபோகிறது
உன் நினைவுகள்.

பருவம் கடந்த

பின்னே
வந்த பெருமழை நீ.
இரவுப் போர்வைக்குள்
நுழைந்து விட்ட
சிறு பாடல்..

குல்மொஹர்

பூக்கள் சிந்திய
வீதிகளில்
நீ கடந்து போகிறாய்..
பூக்கள் சிவந்து
போகிறது..

காற்றினில்

வரும் உன்
வார்த்தைச்
சங்கீதத்தை
சுரம் பிரித்தே
என் ஈரம் உலர்த்துகிறேன்.

விட்டில் நான் 

விளக்கு நீ
விலகும் போதெல்லாம்
கருகிப்போகிறேன்.

விடியும்

காலையெல்லாம்
முகம் தேடும்
கண்ணாடி நீ..
பார்க்கும்
போது
படரநினைக்கும்
பாதரசம் நான்.

வார்த்தைகள்

பொறுக்கி நான்
வரிகள்
சமைக்கிறேன்..
பொங்கிவிடுகிறது
உனக்கான கவிதை..

மேகக்கூட்டங்களில்

உன் சாயல்
இருப்பதாய்
என் வானவியல்
கணக்கன்
பரிகசிக்கிறான்...
நான்
நட்சத்திரங்களில்
உன்னை தேடுவது
தெரிந்தால்
திகைப்பானா
தெரியாது...

உணவு தேடும்

சின்னக் குருவி நான்..
உவமை தேடியே
பறந்து திரிகிறேன்..

வருவாய்

எப்போதேனும்
என் வாசல்வழி
என்பதால்
நான்
கதவுகள்
கழட்டி
காத்திருப்பேன்..

நிலவாய் 

உன் தாரைகள்
என் கூரைவழி
ஒழுக
நான் வான்பார்த்து
துயில்கிறேன்.

பார்க்கும் பூக்கள்..

பறக்கும்
பட்டாம் பூச்சி..
மிதக்கும் ஓர் சருகு..
துளிர்க்குமோர்
பனித்துளி..
அசையும் சிறுகொடி.
அசையா சிற்பம்..
விசையுறு
காற்று..
வின்மேவும் வானவில்..
தூரத்து குயிலோசை.
துடிக்கும் எந்தன்
உயிரோசை..
விரித்த மயில்தோகை.
சிரித்த சிறுமழலை பொக்கை..

தேரோடும்

ஓர் வீதி..
தென்னைமரம் ஈயும் தென்றல்..
கூன் விழுந்த முதிர் கிழவி.
தேன் அமிழ்ந்த வேரின் பலா.

காணும் அத்தனையும்

நீயே இருக்கின்றாய்..

போடி

நீயொரு நாள்
உணரும்போது
உதிராமல் நானிருந்தால்
சிரித்துப்போ..
மற்றொரு பிறவியும்
வேண்டிக்கொள்வேன்.

4 கருத்துகள்:

  1. பிரிவு உங்களை இப்படி அருமையாக எழுத வைத்திருக்கிறதா?

    பதிலளிநீக்கு
  2. //விட்டில் நான்
    விளக்கு நீ
    விலகும் போதெல்லாம்
    கருகிப்போகிறேன்.//

    ஆஹா....

    அருமை நண்பரே.

    பதிலளிநீக்கு
  3. போடி
    நீயொரு நாள்
    உணரும்போது
    உதிராமல் நானிருந்தால்
    சிரித்துப்போ..
    மற்றொரு பிறவியும்
    வேண்டிக்கொள்வேன்.

    அருமை அண்ணா ,
    அழகான படைப்பாளிக்கு அன்பான வாழ்த்துகள் ...

    பதிலளிநீக்கு