சனி, 23 டிசம்பர், 2017

நதியே..நதியே..


வீறுகொண்டும்..சலசலத்தும்.
மணலெடுத்த பள்ளங்களில்
மனம்பதைத்து தடுமாறி..

வெள்ளி, 22 டிசம்பர், 2017

கோடிகள்...

அப்பாவுக்கு   அடையாளமே
சலவை வெள்ளைச்சட்டையும்
கோபுரமென சீவிய தலைமுடியும்தான்..

நரைக்கத்தொடங்கிய வயதில்
தரைப்பலகை மட்டும்
வைத்திருந்த  நடேசனுக்கு
தினமும். சவர வேலை
வந்துவிட்டது.

மின்சார  தடைப்படும்
முன்னிரவுகளின் வாசலில்
கதை சொல்ல ஆரம்பிப்பார்..

"ஒரு ஊர்ல ஒரு ராசா" கதை
அப்பா எப்போதும்
சொன்னதில்லை..

வெள்ளைமட்டுமே
போடும்
அப்பாவின் கதையில்
நாயகன்
பிஸ்கட் நிறத்திலொரு
சட்டை போடுவான்..
அவன் வாங்கும்
லாட்டரிச்சீட்டொன்று
பரிசுபெறும்
சம்பவத்தில் தான்
கதை விரியும்..

அவரின் கனவுகள் மட்டுமே
கதைகளாய் இருக்கும்..

நாயகன்
செவர்லெட் காரில்
வருவான்...

அரிச்சந்திர
மயான காண்டத்தில்
சுடுகாட்டில் பாடுவான்...
"சாதியிலும்
அடிமையில்லை
ஆதியிலும்
அடிமையில்லை
பாதியிலே
அடிமையானேனே"

மக்களும் அவரோடு
அழுவார்கள்..

முருகன் வேடத்தில்
வந்தால்
அவருக்கு
உயிருள்ள மயிலிருக்கும்..
வள்ளி வாதிடாமல்
மாலையிடுவாள்..

அவரின் நாயகன்
தினமும்
அயிரைமீன்
உண்ணுவான்..

மாம்பழத்துண்டொன்று
இல்லாமல்
அவன்
உண்பதில்லை.

அவரின்
முழுக்கதையையும்
ஒருநாளும்
நாங்கள்
கேட்டதேயில்லை....

***

அப்பா மரணமடைந்த
நாளில்
போர்த்திய
துணிகளின்  மூட்டையில்
பிஸ்கட் நிறத்தொரு
துணியும்
பல வேட்டிகளுமிருந்தன..

வேட்டியணிவது
விலக்கப்பட்ட
நாள்களில்..

உடுத்தலும்
கொடுத்தலுமின்றி
உறுத்தலுடன்

பதுக்கி வைத்திருக்கிறேன்..

அலமாரியின்
கீழடுக்கில்
அப்பாவின்
கோடிகள்..




















சனி, 9 டிசம்பர், 2017

உயிர்த்தீ...

அந்த நாள் விடிந்திருக்கக்கூடாது சம்பந்தப்பட்டவர்களுக்கும்..
கேள்விப்பட்டவர்களுக்கும்.

மரங்களைக் கொன்றுவிட்டு சாலைகள் அகலமான பின் கேள்விப்படும் சாவுகள் யாவும் ஒன்றோ இரண்டோ மரணங்களாய் இல்லை..
ஊடகங்களும் ஒற்றை மரணத்தை எளிதில் தாண்டி விடுகிறார்கள்.

தொலைகாட்சியில் ஒரு விபத்தை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
மற்றொரு மரணங்களென கடந்துபோய் விடுகிறேன்...

அந்த கருப்புவெள்ளியின் காலை விடிகிறது.
நேற்றைய விபத்து நெருங்கிய ஒருவரின் குடும்பத்தை வேரோடு சாய்த்திருக்கிறது.

மாவட்டக் கல்வி அதிகாரியாய் அலுவலகத்தோடு இருந்துபோகாமல் இலக்கிய தாகமெடுத்தும்,ஆராய்ச்சி வேகத்திலும் சமூகத்தில் தன்னை கலந்துகொண்ட அதிகாரி திரு.அருள்முருகன் அவர்களின் துணைவியரோடு சொந்தங்கள் மூவரை பலியெடுத்திருக்கிறது அந்த பாதை..

வார்த்தைகளை எண்ணி எண்ணிப் பேசும் அந்த மனிதர் கண்ணீரை கணக்கின்றி சிந்திக்கொண்டிருக்கிறார்..

நிலைமையின் தீவிரம் முழுசாய் தெரியாத மகனும்,மகளும் வார்த்தைகளை வெளிப்படுத்த முடியாமல் தேம்பி தேம்பி அழுவதை ஆறுதல் சொல்லப்போனவர்கள் அழுத கண்களால் அரைகுறையாகத்தான் காண முடிந்தது.

கொடூர சாலை விபத்து...

கொஞ்ச நொடிகளை மிச்சப்படுத்த நினைத்த வேகம் ..
ஒரு குடும்பத்தின் வேரை வெட்டியிருக்கிறது.

இன்னும் பத்துக்கு குறைவான கிலோமீட்டரில் சொந்த கிராமம் இருக்க.. மரித்துப்போன அவர்களை எரிக்கும் இடத்தில் தான் பார்க்க முடிந்தது.

கோவையின் அரசு இல்லத்தில் கொங்குதமிழ் பேசி வரவேற்ற சகோதரி..
திருச்சியின் திருமண வீடொன்றில் சிரித்துக்கொண்டிருந்த அந்த கிராமத்து வெள்ளந்தி மகள் நெடுகிப் படுக்கவைக்கப்பட்டிருக்கும் தகன மேடை எரியூட்ட வரிசையில் இருக்கிறது.

முன்னம் அங்கே அவர்
அண்ணனும் ,தாயும்,இன்னொரு சொந்தமும் எரிந்து முடித்திருக்கிறது..

ஒட்டன்சத்திரத்து மின் தகன மேடை அன்று போல் ஒரு சோகத்தின் கூட்டத்தை சந்தித்து இருக்காது.

அத்தனை சொந்தங்கள் இருந்தும் காக்கவைக்க முடியாது..

அவருக்கென பூத்த மாலைகள் விலக்கி எடுத்து பட்டுபுடவை மட்டும் போர்த்திய உடல்..
எரியும் தகன மேடையின் விளிம்பில் இருத்தப்படுகிறது..
இதயத்தில் கட்டிச்சூடங்கள் வைத்து கிழிக்கப்படும் தீக்குச்சி நடுக்கமெடுக்கிறது..
பற்றிய சின்னத்தீயே கதறவைக்கிறது...

கதவுகள் திறக்க கனன்று கொண்டிருக்கும் அந்த வெப்ப அறைக்குள் அடங்கிப்போகிறது எத்தனை யுகங்களாய் கனிந்துகொண்டிருந்த கனவுகள்...
நல்லமனைவியாய், அம்மாவாய்,மகளாய்,
சகோதரியாய், "ஜோதி மாதிரி அவுக வீட்ல யாருமேயில்லை" என்று தலையிலடித்துக்கொண்டு அழுதிருந்த கிராமத்தின் பெண்ணாய்.. அத்தனை கதாப்பாத்திரங்களை சுமந்து கொண்டிருந்த மகள்..
எல்லாச் சுமைகளையும் இறக்கி வைத்துவிட்டு பயணப்பட்டுவிட்டார்..

காலம் பொல்லாதது..
சின்ன சின்ன மகிழ்ச்சிகளை கொடுத்துவிட்டு எத்தனை பெரிய சோகங்களை  சொல்லாமலே கொடுத்துவிடுகிறது.

உள்ளே இயற்கையோடு கலந்துகொண்டிருக்கும் ஆன்மா...
வெளியே நினைவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் ஆன்மாக்கள்..

அழுது அழுது வறண்டு போயிருக்கும் அந்த மனிதர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது.?

நேற்றைய நிஜங்கள் ..நிழலாய்கூட அல்லாமல் காற்றாய்ப்போன சோகத்தை அவர்களால் எப்படிப் போக்கிக்கொள்ள முடியும்?

எல்லாம் போல காலம்தான் அதனை ஆற்றவேண்டும் எனக் கடந்துபோக இயலவில்லை..

தீவிரப் பணியின் ஈடுபாடும், அவர்கள் செய்யவேண்டிய கடமையின் சுமைகளே இந்த சோகத்தை கொஞ்சம் மறக்கவைக்கக்கூடும்..

தகன அரங்கைக் கடந்து வெளியேறும் நிமிடங்களில் மீண்டும் மீண்டும் மனசு அழுது அறற்றுகிறது.

எல்லாரும்  மீண்டுமொருமுறை வரவேண்டிய இடம் தான்..
எனினும்..
அய்யோ ...
சாமிகளே...
இப்படியொரு சம்பவத்துக்காய் இங்கே யாரும் வரக்கூடாது..

குறுகிய அந்தச்சாலை அன்று அழுது அழுது ஈரமாய் இருக்கிறது...

யாரோ ஒரு நெருங்கிய சொந்தத்தை இழந்து திரும்பும் சோகம் அழுத்த நிமிர்ந்து திரும்புகிறேன்..

தூரத்தில் தகன மேடையின் புகைபோக்கி வழியே..
காற்றோடு இணைந்து வழியனுப்பிக்கொண்டிருக்கிறார்..

போய் வாருங்கள் அம்மா...