சனி, 2 டிசம்பர், 2017

குறிகள்...


உளைச்சல் மண்டியதோர்
இரவில்
வாட்ஸ் அப் ஒன்றின்

அவள்
நிலைத்தகவலுக்காய்
கட்டைவிரலுயர்த்துக்குறி
அனுப்பிய
கடனை
சிரிப்புக்குறியுடன்
கழித்தாள்..

வட்டச் சிறுமுகத்துக்குள்
வகை வகையாய்
அழுவதாய்
சிரிப்பதாய்
வாய் கிழிவதாய்
நாக்கு வழிவதாய்..
குறிகளே
மொழிகளாயின...

நிலைத்தகவலைத் தாண்டி
பேசிவிட
யாதுமில்லா
கையறு நிலையில்
சந்தித்த
சில வேளைகளில்
சண்டைக்கோழிகளாகவே
திரும்பி நின்று கொண்டோம்.

வலியோ
சுகமோ
வார்த்தைகளே
ஔடதமான
மருத்துவப்பிரிவின்
என்
மருந்துகள்
காலாவதியானதை
சொல்ல
குறிகள்
இல்லை..

இணையம்
உயிர்ப்பெறும்
போதெல்லாம்
அவளிருப்பு
சரிபார்க்கும்
எனக்கு
இதயத்தின்
குறியொன்றை
தொட்டு அனுப்பிவிட
இயல்வதில்லை
எப்போதும்..

பிரியத்தின் அதீதம்
தானெனினும்
வந்துசேரும்
வருத்தக்குறிக்கேனும்
வம்பு வந்துவிடும்
அபாயம் உத்தேசித்து
அம்பிட்ட இதயம் உள்ளிட்ட
குறிகள்
அடைக்கப்பட்டிருக்கின்றன..

பருவமோ..
பொறுப்போ..
தட்டிக்கழிக்கும்
பிரியங்கள்
புள்ளிகளை
மட்டுமனுப்பி
பூர்த்தியாகின்றன.

அவளோ
அந்த போனோ..
அழிந்துவிடுமுன்னே
அறியக்கூடும்
புள்ளிகளின்
உள்ளே
புதைந்திருக்கும்
இதயத்தின் குறிகளை..


6 கருத்துகள்:

 1. அப்பப்பா. மனதின் தாக்கங்களை எழுத்தின்மூலமாக, வாசகனும் உணரும் வகையில் வெளிப்படுத்திய விதம் அருமை.

  பதிலளிநீக்கு
 2. சிறந்த கருத்துகள்
  சிந்திக்கவைக்கின்றன.

  பதிலளிநீக்கு
 3. அருமையாக உள்ளத்து உணர்வுகளை வார்த்தைகளாய்!!!

  என்ன சொல்ல என்று தெரியவில்லை..செல்வா...

  //நிலைத்தகவலைத் தாண்டி
  பேசிவிட
  யாதுமில்லா
  கையறு நிலையில்
  சந்தித்த
  சில வேளைகளில்
  சண்டைக்கோழிகளாகவே
  திரும்பி நின்று கொண்டோம்.//

  இது பலருக்கும் ஒரு காலகட்டத்தில் தோன்றுவதுதானோ?!! என்றும் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு