ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

பற்றும் விரல் நீயெனக்கு...

ஒரு பட்ட மிளகாய்
உப்புச்சட்டி
கழுவிய தண்ணீர்.
ஒடிந்து விழுந்த
முருங்கையின் கீரை..
என் பட்டினி
கொன்றவளே...
எப்போதும்
பசியள்ளித்
தின்றவளே...
ஓரெழுத்தும்
அறியாத
என் தாயே!
உன் விரல்
பட்டு
படர்ந்ததுதான்
என்
தலையெழுத்து..
அழகழகாய்
ஆறு பெறும்
பேறு பெற்றாய்..
அழக்கூட
சூழலின்றி
அழகு கெட்டாய்.
அப்பாவோடு
புகைப்படத்தில்
நீ
சிரிப்பாய்..
அம்மாவே
அப்புறமாய்
எப்போ
நீ
புன்னகைத்தாய்.
கேஸ் அடுப்பு
கரண்ட் அடுப்பு..
காலமில்லை.
அம்மா
நீ வெந்ததெல்லாம்
முள்ளெரிந்த
மண் அடுப்பு..
முள்ளடுப்பு
புகைசூழும்...
உன்
ஊதாங்குழல்
மூச்சும்
ராகமிடும்..
காலனிக்
குடியிருப்பில்
கதவிடுக்கில்
குளிரடிக்கும்..
கந்தலான
உன் சேலை
எனை மூடும்.
ரேசன்
அரிசிகளில்
கல்பொறுக்கி
ஓய்ந்தவளே..
ரோசமொன்றே
உணர்வாகத்
ஈந்தவளே...
ஆண்டுக்கு
ஓர் தினத்தை
அன்னையர்க்கு
வைத்தவனை
வெகுகாலம்
தேடுகின்றேன்..
நள்ளிரவு
நான்
தூங்க
விழுந்தாலும்
சொல்லுவது
உன்னைத்தான்
விதியென
இருந்தாலும்..
வீதிக்கு
கவிதை
கேட்டால்..
விரல்
பற்றுவதும்
உன்னைத்தான்.
(வீதி கலை இலக்கிய களத்துக்காக)
10 கருத்துகள்:

 1. வீதிக்காக எழுதியதை வலைப்பூவில் பகிர்ந்ததறிந்து மகிழ்ச்சி. நன்றி.

  பதிலளிநீக்கு
 2. எப்போதும்
  பசியள்ளித்
  தின்றவளே... சூப்பர்

  பதிலளிநீக்கு
 3. உன் விரல்
  பட்டு
  படர்ந்ததுதான்
  என்
  தலையெழுத்து..
  அழகழகாய்

  உணர்வு வரிகள் அருமை நண்பரே

  பதிலளிநீக்கு

 4. அழகிய கவிதையை படித்து ரசித்த பின் மனதில் ஒரு உணர்வை ஊன்றி செல்கிறது உங்கள் கவிதை. உங்கள் கவிதைகளை படித்த பின் மனதில் ஏதோ ஒன்றை இழந்தது போன்ற ஒரு உணர்வு தோன்றுகிறது

  பதிலளிநீக்கு