வெள்ளி, 25 நவம்பர், 2016

கணக்கில் வராதது...

எந்தக்காவலரோ
கொடுத்த
காக்கிச்சீருடை...
அறியாப்பள்ளிச்
சிறுவனென
இருப்பில்
சுருக்கி
அரைஞாண் கயிற்றில்
கட்டப்பட்ட கால்சட்டை


குளிருக்காய்
கழுத்துபட்டனும்
இடப்பட்ட
மேலாடை..

பைகளின் ஒன்றில்
துருத்தியிருக்கிறது
பீடிக்கட்டொன்று..

இரவுப்பணியில்
எப்போதும்
தூங்கிவிடும்
ஏ.டி.எம் இன்
இரவுக்காவலாளி..

அலைந்து திரிந்து
தேடுகையில்
விழித்திருந்து
பணமில்லை
என்கிறார்..

என் இருப்பை
சரிபார்க்கிறேன்..

அவர்
தூக்கம் கெடுத்த
பாவம்
சேர்ந்திருக்கிறது..

3 கருத்துகள்: