வியாழன், 31 ஆகஸ்ட், 2017

விதை...

இன்றுவரை இது
என்னுடைய இடம்..
நாளை நான்
விருந்தாளியாக
கூட
மறுதலிக்கப்படலாம்..

குல்மொஹர் செடியொன்றை
தொட்டியில்
மரமாக்க
இந்தப் படிகளில் தான்
மண்சுமந்து
ஏறியிருக்கிறேன்..

மமதை பொங்க
முகவரி என
அட்டை அடித்துக்
கொடுத்திருக்கிறேன்.

மீன் வளர்ந்ததற்காய்
தொட்டியை
பெரிதாகி
தாயென சுரந்திருக்கிறேன்..

வாஸ்து புத்தனை
இந்த மாடத்தில்தான்
சிறைவைத்திருந்தேன்..

புகலிடமாக்கி
புதைந்து கிடந்தது
இந்த புத்தக
வரிசைகளுள் தான்.

சின்னதும்
பெருசுமாய்
சில கவிதைகள்
இங்குதான்
எழுதியிருக்கிறேன்...

உள்ளறையில்
அவள் கண்கள் விரிய
வேடிக்கை பார்த்திருக்கிறேன்....

இலக்கிய சர்ச்சைகளென்று
இந்த வராந்தாவில்
புகைத்து
குவித்திருக்கின்றேன்..

வரவு செலவு
கணக்குகளில் வதங்கி
இந்த வாசலில்
நிறைய நேரம்
நின்றிருக்கிறேன்..

நிகரக்கணக்கில்
நிறைய நண்பர்கள்..

மூன்றாம் மாடி
வானம் விட்டு
தரைத்தளம்
வருவதற்காய்
மகிழ்ந்து விடாதீர்கள்
இனிய எதிரிகளே...

நான்
தரைக்குள்ளே
புதைந்தாலும்
முளைத்து வருவேன்..


4 கருத்துகள்: