வியாழன், 13 ஜூலை, 2017

சன்னல் நகரங்கள்....

அந்தப் பெருநகரை
இரவில்
கடக்கும்போதெல்லாம்அடுக்கிய கட்டங்களின்
சன்னலில் தெரியும்
வெளிச்சங்கள்
தேர்ந்த இயக்குனரின்
திரைப்படமென
விரிகிறது..

வரிசையாய்
அடுக்கப்பட்டிருக்கும்
பாத்திர வரிசை..

அகலத்
தொலைகாட்சியில்
பாதி தெரியும் முகம்.

படித்துக்
கொண்டிருக்கிறார்கள் சின்னஞ்சிறுமிகள்..

கணினியில்
புதைந்திருக்கிறது
சில முகங்கள்..

ஆவிபறக்கும்
சமையற்கூட
சன்னல்களில்
சில பெண்கள்..

சன்னல்
விளிம்புகளில்
சாய்ந்து அலைபேசிக்
கொண்டிருக்கிறார்கள் இளைஞர்கள் சிலர்

முன்னிரவிலும்
இரவின்
மென் விளக்கு எரியத்
தொடங்கியிருக்கும்
சில
சன்னல்கள்..

பணிமுடிந்தோ
பணிக்கு கிளம்பியோ
சில சன்னல்கள்
பரபரத்துக் கிடக்கின்றன..

சன்னல் திரைகள்
காட்டிவிடுகின்றன
சில வீட்டின்
மறைவுகளை.

வலைகளின்
சட்டைகளிட்ட
சன்னல்
மங்கிய
ஓவியமாயிருக்கிறது.

இந்த நகரம்
சன்னல்களால் ஆனது...

குக்கூவென
ஒரு இயந்திர
ராட்ஷசன்
அதிர்ந்து
நகர்வதில்
அச்சமோ
ஆச்சர்யமோ
கொள்வதே இல்லை
சன்னல்கள்.

கண்ணாடிகளிட்ட
அலுவலக
கட்டடமொன்றின்
ஏழாம் மாடியின்
ஒற்றை சன்னலில்
வெளிச்சமிருக்கிறது..
விடிந்திருக்கும்
எந்த நாட்டிற்கோ
அடிமைகளாய்
விழிக்கத்
தொடங்கியிருக்கும்
ஒரு இரவு..

உல்லாச விடுதி
அறையொன்றின்
சாண்ட்லியர்  விளக்கு
இன்று எதற்கு
சாட்சியாவோமென
தொங்கிக்
கொண்டிருக்கிறது.

திறந்து
குப்பை கொட்டி
மூடிக்கொள்கிறது
ஒரு சன்னல்..

புகைத்துக்
கொண்டிருக்கிறது
ஒரு சன்னல்..

நைட்டியும்
லுங்கியுமாய்
முகம் தெரிய
பேசிக்
கொண்டிருக்கிறது
ஒரு சன்னல்.

நகரத்தின்
சன்னல்கள் அனைத்தும்
ஒருபோதும்
திறந்திருப்பதில்லை..

வாசல்கள் அடைபட்ட
நகரத்தில்
சன்னல்களே
வழியாகின்றன..

எந்த சன்னலேனும்
கவனித்ததாய்
தெரியவில்லை
நகரும்
சன்னல்வழி
ஒரு
கவிதை
பிறந்து கொண்டிருப்பதை..5 கருத்துகள்:

  1. துளசி: அருமை.....ஜன்னல்கள் அழகுதான்

    கீதா: பெருநகரம் தன் ஜன்னல் வழி அழகாய் கவி பேசுகிறது.. உல்லாச விடுதிகளின் சான்டலியர் விளக்குகள் எதற்கோ சாட்சியம் சொல்லக் காத்திருந்தாலும், ஏதோ ஒரு ஒற்றை ஜன்னல் இரவில் விடியும் ஏதோ ஒரு நாட்டிற்கு அடிமையாய் விழித்திருந்தாலும் ஜன்னல்கள் பாடும் இக்கவியும் அழகியல்தானோ....

    பதிலளிநீக்கு