வெள்ளி, 7 ஜூலை, 2017

அழியுமோர் சமூகம்..

திரையரங்கங்கள் மூடல் என்றவுடன் பொங்கி எழுகிறார்கள்.



அவசரகால நடவடிக்கையாய் சந்தித்து விட முடிகிறது யாரையும்.
ஊடக விவாதங்களில் கொப்பளிக்கிறார்கள்.

GST என்னும் வரிக்குழப்பத்தை வறுத்தெடுக்கும் இணைய உலகம்.
ஊடகம் யாவும் புளி வைத்து விளக்கிக்கொடிருக்கின்றார்கள்.

அணிகள் இணைவதைக் குறித்தே அரிப்பெடுக்கிறது செய்திகளின் விரல்களுக்கு.

கொடுமையின் கொடுமையென அந்தரங்கங்களை அடைத்த வீட்டுக்குள் வைத்து வெளிச்சமிடுகிறது முப்பது கேமெராக்கள்.

வீதிக்கு வந்த நம் பெண்கள் மீது விபச்சார வழக்குகள் வலைவீசக் காத்திருக்கின்றன.
கதிர்வேய்ந்த மங்கலம்
கதிராமங்கலமாகி உதிராமங்கலமாகிடாமல் துடிக்கிறது தஞ்சைத்தரணி.

தினம் ஒரு தினுசில் போராடும் நெடுவாசல்.

எல்லாம் தாண்டி..
சத்தமில்லாமல் ஒரு இனம் ஜலசமாதி ஆகிக்கொண்டிருக்கிறது.

மீனவப்பாடு என்பது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஒழிந்துகொண்டிருக்கிறது.

"கட்டுமரம்
திரும்பும்
பொழுதெல்லாம்
கவலைப்படுகிறது
கரை..
மீன்கள்
குறைவதால் அல்ல..
ஆண்கள்
குறைவதால்"

பத்து வருடமாகிறது இதை நான் எழுதி.

இந்த நாட்டில் விவசாயத்தைக் காட்டிலும் விரைந்து எடுக்க வேண்டியது மீனவன் படும் பாடு.

தரையில் மழை பெய்தாலும் காட்டுப்பயிரேனும் முளைத்துவிடும்...

கட்டுமரக்காரன் இறங்காமல் ஒரு சின்ன மீனும் கிடைக்கப் போவதில்லை.

வலைகளைப் பிடுங்கி,படகுகளைப் பிடுங்கி,உயிர்களைப் பிடுங்கிக் கொண்டிருக்கின்றான்.
இவர்கள் தான் எதைப் பிடுங்கிக் கொண்டிருக்கின்றார்கள் எனத் தெரியவில்லை.

கத்தும் கடல்வெளியில் ,கட்டுமரத் தள்ளாட்டத்தில்,மழையில்,குளிரில் இவர்களில் எவனேனும் ஒருவனை ஒற்றை இரவு அனுப்பிவைத்து எல்லை பார்த்துச் சொல்லவைக்க வேண்டும்.

காலமெல்லாம்தேசமென்றும்,
ஒற்றுமையென்றும்,
இறையாண்மையென்றும் சுதந்திர வேள்வியில் பலியான இனத்தின் எச்சங்களை தோட்டாக்களாலும்,பூட்ஸ் கால்களிலும் எத்தனை நாள் கொல்லப்போகிறார்கள்?

வட்டியிலும் ,வலையிலும், வறுமையிலும் பின்னிக் கிடக்கும் அவன் வாழ்க்கையை மொத்தமாய் அழிப்பதில் அப்படி என்ன கொடூர மனம் உங்களுக்கு?

நித்தம் செத்துப் பிழைக்கும் மீனவனைக் காக்காமல்

கடிதங்கள் எழுதி எப்போது முடிக்கப் போகிறீர்கள்?

அவர்கள் கடலின் பிள்ளைகள்..கலங்க விடாதீர்கள்.

உங்கள் சபைகளில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதற்குப் பதில் வேறு ஏதேனும் உருப்படியாகச் செய்யுங்கள்.
ஏராளமாய் செய்ததாய் மார்தட்டிக் கொள்ளாதீர்கள்...
மாரில் அடித்து அழும் ஒரு நெய்தல் பெண்ணின்
அழுகைக்கு முன் தூசினும் கீழானவை அவைகள்.

உடைந்து திரும்பும் படகுகள் உங்கள் நிர்வாகத்தின் இலட்சணம்.
கிழிந்து வரும் வலைகள் உங்கள் அலட்சியம்.

மண்ணைத்தோண்டி
விதையிட்டு நீர் வார்த்தால் எதுவும் வளரும்.

மிச்சம் மீதி மீனவனும்
கடலுக்குள் புதைந்து போனால் நாளை வரலாறு காரித்துப்பும்.

ஊடகமே!
உழைப்பாளருக்கு மார்தட்டும் கட்சிகளே!!
கொஞ்சமேனும் மனசாட்சி இருக்கும் இடம் மனிதர்களே!!!

ஈழத்தில் அழித்தது வெளிச்சத்தில் என்றால்...
கடலின் இருளில் கரைகிறது மீனவப்பேரினம்...
நிலங்களின் வலியினும்..நீரில் கவனம் செலுத்துங்கள்..

அய்யோ...
நாளை நாம் சப்பித்தின்னும் மீன்களில் அவன் சதைகளும் இருக்கலாம்...


7 கருத்துகள்:

  1. உருக்கமான உண்மை அப்பா.கடைசி வரி மிகவும் சிந்திக்க வைத்தது.

    அய்யோ...
    நாளை நாம் சப்பித்தின்னும் மீன்களில் அவன் சதைகளும் இருக்கலாம்.. அருமை அப்பா.

    பதிலளிநீக்கு
  2. தரை மேல் பிறக்க வைத்தான் -
    எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
    கரை மேல் இருக்க வைத்தான் -
    பெண்களைக்கண்ணீரில் துடிக்க வைத்தான்
    தரை மேல் பிறக்க வைத்தான்

    கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
    உறவைக் கொடுத்தவர் அங்கே
    அலை கடல் மேலே அலையாய் அலைந்து
    உயிரைக் கொடுப்பவர் இங்கே
    வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
    கடல்தான் எங்கள் வீடு (2)
    முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
    இதுதான் எங்கள் வாழ்க்கை
    இதுதான் எங்கள் வாழ்க்கை

    கடல் நீர் நடுவே பயணம் போனால்
    குடினீர் தருபவர் யாரோ
    தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
    துணையாய் வருபவர் யாரோ
    ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்
    ஒவ்வொரு நாளும் துயரம் (2)
    அரைஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
    ஊரார் நினைப்பது சுலபம்
    ஊரார் நினைப்பது சுலபம்

    பதிலளிநீக்கு

  3. தங்கள் பிழைப்பை மட்டுமே பார்க்கும் அரசியல் வியாதிகளிடம் மற்றவர்களின் உழைப்பையும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் இழப்பையும் பார்க்க இதயம் ஏது? நேரம்தான் ஏது?

    பதிலளிநீக்கு
  4. அரசியல் வியாதிகள்..... எல்லாவற்றிலும் TRP Rating பார்க்கும் ஊடகங்கள்..... என்னத்த சொல்ல...

    கடைசி வரி சாட்டையடி!

    பதிலளிநீக்கு