திங்கள், 27 நவம்பர், 2017

பொன்னால் ஒரு கூடு...

நாளிதழ்கள்
எனக்கு
அறிமுகமான
காலைகளில்
ஜீவா மன்ற
வாசலை
கொடுவாய் 
வழிந்த
வாயை 
துடைத்து
நின்றிருப்பேன்..

ஜோசப்
வாத்தியார் 
வருவதற்குள்
வாசித்துவிட
வேண்டும்...

வினையெச்சக்கேள்விக்கு
விடை தெரியாமல் 
நின்ற
ஒரு பாடவேளையில்
அடித்துப்பிரித்த
என்னிடம்
கண்டுபிடித்த
குற்றமெல்லாம்
காலையில்
நாளிதழ்
படிப்பதாய்த்தான்..

ஆலாசியம்
வீட்டில் வந்திருக்கும்
சோவியத் நாடு..
அய்யா..
புள்ளிகளை கூட 
படித்துவிட்டு
தரும்போது
போஸ்ட்மேன்
பொன்னுசாமி
அடுத்த
இதழோடு
சைக்கிளில்
வந்து விடுவார்..

செண்பகக்குழல்வாய்மொழி
என்ற
நிருபரின்
பெயரை
மனப்பாடம் 
செய்துவிட்ட
இத்தனை 
வருடங்களில்
இப்போதுதான்
எழுத முடிகிறது..

குமுதங்களுக்கும்
விகடனுக்கும்
போட்டியான
நாள்களில்
கல்கண்டும்
சில காலாண்டு
இதழ்களும்தான்
வாய்க்கும்.

கூலிக்குப்போன
பேருந்துநிலையத்தில்
பின்னிரவுகளில்
பின் பிரித்து
வாசித்த
மருதம் கொடுக்கும்
பெட்டிக்கடைக்கார
அண்ணனிடம்
கூச்சத்தோடு
வாங்கிபடித்து
திருப்பும் போது
வியர்த்திருக்கும்
அச்சத்தில்
சர்வமும்.

பிடித்தவள் வீடு
படித்ததாகையால்
வெட்டிவெட்டி
பைண்ட் செய்த
தொடர்கதைகளை
வாசிப்பதற்காகவே
காதலிக்கலுற்றேன்..

வாசிக்க வாங்க
யோசிக்காதவளால்
வந்துசேர்ந்த
புத்தகங்கள்
வீட்டின் சுவர்களாயின..

கிடைத்ததையெல்லாம்
படித்தவன்
கிடைப்பதை
படிக்கமுடியாத
சோகத்தை
புத்தகக்காட்சிகள்
புண்ணென
குத்தி
வலிக்க...
வாசிப்பைப்பற்றி
மேடையில்
எவரோ உருகிக்கொண்டிருக்கிறார்...

எழுதி
நான்
என்
பாவங்களை
கழுவிக்கொண்டிருக்கிறேன்.







1 கருத்து:

  1. வாசிக்க வாங்க
    யோசிக்காதவளால்
    வந்துசேர்ந்த
    புத்தகங்கள்
    வீட்டின் சுவர்களாயின.....



    ரசித்த வரிகள்....அருமை...

    பதிலளிநீக்கு