சனி, 27 பிப்ரவரி, 2016

பாதுஷா கான்..காந்தியின் காந்திகள் 3

அன்பின் சக்திக்கு,

ஒரு மனிதன் நாட்டின் விடுதலைக்காய் துடிப்புடன் போராடுகிறான்.
அவன் நினைத்த விடுதலை வருகிறது.
ஆனால் அவன் நினைக்காத பிரிவினையும் வருகிறது.

உணர்ச்சியற்ற மனிதனாய் பிரிந்த பகுதிக்கு சென்றேயாக
வேண்டியவனாய் இருக்கிறான்.

சுதந்திரத்திற்காய் போராடிய மாவீரன் விடுதலைபெற்ற பின் சிறையிருந்த நாள்கள்...
பதினைந்து வருடங்கள்....

பெஷாவரின் உத்மான்ஜாய் கிராமத்தில் பிறந்து குரானை முற்றும் படித்து முடித்த மிகச்சிறந்த கல்வியாளர்.

மென்பஞ்சென மனது.

கல்வி மட்டுமே கரைசேர்க்கும் கருவி என்ற வித்தை தெரிந்த மனிதர்.

1912 களில் பள்ளிகளை நிறுவி கல்விக்கண் திறந்தவர்.

தியாகங்களாலும்,தொண்டினாலும் மக்களால் முடிசூடா மன்னன் என அழைக்கப்பெற்றவர்.

சிறைகளின் காதலன்.
சிறைக்கூடங்கள் இவரை வாசிக்கவைத்தன..
கீதை,கிரந்தம்,பைபிளென...

"இறைவனின் தொண்டர்கள்" என தனி மக்கள் இயக்கம் நடத்தியவர்.

இன்றைய நாட்களில் தான் எத்தனை தளபதிகளை பார்க்கிறோம்..

1934 கொல்கத்தாவில் "எல்லை காந்தி" என இவரை அழைத்தபோது..படையின் ஒரே தளபதி காந்தி என ஏற்க மறுத்தவர்.

வடமேற்கு எல்லை மாகாணம் முழுவதும் சுதந்திரத்தீயை மூட்டிய வர்.

ஒருமுறையல்ல..
மூன்றுமுறை காங்கிரஸ் தலைமைப்பதவியை ஏற்க மறுத்தவர்.

காய்ச்சல் தனக்கிருந்த போதும் காந்தியின் கால்கள் பிடித்துவிடுவதே மருந்தென கண்ட மகான்.

சுதந்திர பாகிஸ்தானில் நரிகளிடம் சிக்கிய தனியாளாய் சிறைக்கொட்டடிகளில் வாழ்வின் முக்கால் வாசி வசித்தவர்...

கிகிச்சைக்காக பலத்த போராட்டங்களிடையில் ஆப்கானில் அனுமதிக்கப்படுகிறார்.

இந்தியா என்ன செய்தது?

எல்லைகாந்தி என புகழ்ந்தது..

கடிதங்களின் வழி கவலைப்பட்டுக்கொண்டது..

இது விளம்பரங்களின் தேசம் சக்தி!.

மதவெறியற்ற முஸ்லீம் சமயத்தவராகவும்,கொடூரமற்ற போர்வீரராகவும்,
காழ்ப்புணர்ச்சியற்ற பகைவராகவும்,
அணுவளவேனும் நம்பிக்கை துரோகமற்ற நண்பராகவும் விளங்கக்கூடிய ஒருவரை கற்பனை செய்தால் அவர் "கான் அப்துல் கபார் கான்" ஆக இருப்பார்.

காந்தி என்னும் ஒற்றைமனிதனின் மீது கொண்ட பக்தியால் தன்னை இழந்த பலர் இருக்கிறார்கள் வெளியில் தெரியாமல்...

ஒரு கோரிக்கைக்காக போராடி,வென்ற பின்னும் அந்த சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியாமல் போன அந்த மனிதரை நாமும் சரியாக கவனிக்கவில்லை என்ற வருத்தம் எனக்கும் உண்டுதான்...

விநோபா பாவே சொல்வது போலவே

"நம்முடைய சுதந்திரப்போராட்டத்தில் உங்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுவிட்டது.
நம்முடைய நண்பர்களால் நீங்கள் கை இடப்பட்டுவிட்டீர்கள் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும்"

நாமென்ன ஒப்புக்கொள்வது சக்தி..

வடமேற்கு எல்லை மாகாணத்தை தழுவும்  காற்றும்,
காலமும் ,என்றென்றும் எல்லைகாந்தியின் தியாகத்தை சொல்லிக்கொண்டேதான் இருக்கும்.

அன்புடன்.
செல்வக்குமார்.

5 கருத்துகள்:

  1. காந்தியின் காந்திகள் அருமையாய் தொடர்கின்றதே... பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. தன்னை இழந்த பலர் இருக்கிறார்கள்... 100% உண்மை...

    பதிலளிநீக்கு
  3. உண்மை தான் ஐயா, தனபாலன் ஐயா சொன்னக்கூற்று.இன்னும் நாம் எத்தனை வீரர்களின் தியாகத்தை மறந்து நினைவில்லாமல் இருக்கின்றோமோ..??

    எல்லைக் காந்தி பற்றி இன்று தெரிந்துக் கொண்டேன்.நன்றிகள் பல ஐயா.

    பதிலளிநீக்கு
  4. எல்லைக் காந்தியின் தியாகம் இந்திய எல்லைவரை ஒலிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  5. சுதந்திரப் போராட்ட வீரர்களில் பலர் கண்டு கொள்ளப்படவில்லை என்பதே உண்மை. அருமையான பதிவு

    பதிலளிநீக்கு