வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

அப்பாவின் கார்....

1975 களில் அப்பா லாட்டரிச்சீட்டுகள் வாங்குவார்.

நிலா வந்து திரியும்  ஏதோ ஒருநாளில் வாசலில் பாய்விரித்து  மடியில் ஒன்று,தோளில் ஒன்றென தொற்றிக்கொள்வதுண்டு
அவர் தோள்களில்.

உணவுப்பாத்திரங்கள் எல்லாம் வாசலுக்கு வர,அப்பா எல்லாவற்றையும் கலந்து அவர் கைகளின் அளவிற்கு உருண்டையாய் தரும் உணவின் ருசி..?
உருண்டையை முழுசாய் சாப்பிடவும் முடியாது..கீழே வைக்கவும் மனசு வராது.

நாளை லாட்டரியில் பரிசு விழுந்தால் என ஆரம்பித்துவிடும் ஒரு கற்பனை உலகம்.

அந்த வசீகர உலகம் அவரின் கவலைகளை மறக்க உதவியிருக்கக்கூடும் என்பதை இப்போது உணர்கிறேன்.

ஒவ்வொருவருக்கும் அம்மாவைப்பிடிப்பதற்கு பலகாரணங்கள் இருக்கும்..
ஆனால் அப்பாக்கள் பிடித்துப்போவதற்கு காரணங்கள் தேவையில்லை.

ஷேவிங் செய்த சில நாட்களில் முள்ளெனக்குத்தும் கன்னங்கள் வருடும் போது..அவர் இருக்கும் நிலை..கன்றொன்று தாய்ப்பசுவை உரசுவது போலிருக்கும்..

அப்பாவின் வாசம் பிடிப்பதில் அத்தனை அலாதி...

நள்ளிரவு ரயில் பயணத்தில்,தூரத்தில் தெரியும் ஒரு ஒளிப்புள்ளியைக்காட்டி,
விமானம் கிளம்புகிறது பார்..பார் என்னும் போது..அப்பாவே பறப்பதுபோல் இருக்கும்.

விரல்பிடித்து அழைத்துப்போய் பள்ளியில் சேர்த்துவிட்டு அவர்மட்டும் கிளம்பும்போது நான் அழுதிருக்கிறேன்.
அப்பா திரும்பிப்பார்க்காமலே போனார்..
கண்டிப்பாய் அவர் திரும்பியிருந்தால் அவரின் கலங்கிய விழிகளை நான் பார்த்திருக்கலாம்.

அப்பாவை ஒரு பதிவில் அடைத்துவிட முடியாது..

பதிவு பரிதவிக்கிறது..

அப்பா எப்போதேனும் எங்களை அழைத்துப்போகும் கற்பனை உலகில் எப்போதும் ஒரு
" செவர்லே" காரை வரவைத்துவிடுவார்..
சிவப்பு வண்ணத்தில்.

அப்பாவே கற்பனையாகி பதினாறு வருடங்கள் ஆகப்போகிறது.

நானும் அப்பாவானபோது கார்க்கனவு உண்மையானது...

உரிமம் பெறுவதற்காகமட்டுமே பழகிய உரிமையில் ஒரு பழைய காரை வாங்கி..ஓட்டத்தெரியாமல் தினமும் கழுவி,கை பிரேக்,கால் பிரேக் எல்லாம் அழுத்திக்கொண்டு ஸ்டார்ட் செய்து ஒரு நிமிடத்தில் அணைத்துவிடுவேன்.

பிள்ளைகள் தந்த உற்சாகத்தில் ஆறு மாதங்களில் கொஞ்சமாய் ஓட்டப்பழகிவிட்டேன்.
ஆனாலும் பதட்டம் இருந்துகொண்டே இருக்கும்.

மனிதன் மீது மோதியதில்லை...ஆனால் ஒருமுறை சப்பரத்தில் போன சாமியை நான் மோதியதில் அந்தரத்தில் சில நொடிகள் பறக்க வைத்திருக்கிறேன்.

அடுத்து  செவர்லே சிவப்பு வண்ணத்தில்..

அப்படி இப்படியென ஐந்து கார்கள் மாற்றிவிட்டேன்.

பணம் நம் தேவைகளை நிறைவேற்றுவதில்லை..
தேவைகளை அதிகரிக்கவே செய்கிறது என்பார்கள்...
கட்டாயம் எனக்கு கார் விசயத்தில் அது தான் நடந்தது..

கார் நின்றிருந்த இடத்தில் பூச்செடிகள் வந்துவிட்டது..

எனக்கும் ஒரு கற்பனை உலகம் வளர்ந்து விட்டது...

நள்ளிரவு..
நான் ஒரு சிவப்பு வண்ணக் காரை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.
பக்கத்து இருக்கையில் அப்பா என்னோடு..

பேசிக்கொண்டே வருகிறார்..

நீளமாகிறது சாலை.

8 கருத்துகள்:

  1. உணர்வுகளின் குவியலாய் ஒரு பதிவு.கண்கள்
    படித்து முடித்தபின்னும் மனது படித்துக்கொண்டிருக்கிறது. கற்பனைகள் கண்முன் நனவாகட்டும். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. அப்பாவின் நினைவுகளுடன் பயணித்து நீளமான சாலையில் நாங்களும்...

    அருமை அண்ணா.

    பதிலளிநீக்கு
  3. அப்பா..... நினைவுகளில் நீங்களும்....

    பதிவின் நினைவில் நாங்களும்!

    பதிலளிநீக்கு
  4. மனதை மயிலிறகால் வருடும் பதிவு நண்பரே

    பதிலளிநீக்கு
  5. செம பதிவு செல்வா...அப்பாவைப் பற்றிய பதிவு. என் அப்பாவின் நினைவலைகளை மிட்டுவிட்டது.

    கீதா: பலரும் கற்பனை உலகில் வாழ்வதையே விரும்புகின்றனர் என்பதுதான் உண்மை. நானுமே. அது ஒரு தனி உலகம். நம்மை மகிழ்விக்கும் உலகம். இவ்வுலக வாழ்க்கையிலிருந்து சற்று நேரமேனும் விலகி வாழ உதவும் ஓர் உலகம். ஏனென்றால் நிஜம் கசக்குமே!!! அழகான பதிவு.

    பதிலளிநீக்கு
  6. அருமை ஐயா..நான் இந்த பகிர்வை படிக்கும் போது என் தந்தை ஞாபகத்தில் வந்தார்.என் சிறுவயதில் என் அப்பா லாட்டரி சீட்டு வாங்குவதை பார்த்து இருக்கிறேன்.அது என் தந்தையின் கற்பனை உலகம்..

    வாழ்த்துக்கள் ஐயா..அருமை..

    பதிலளிநீக்கு