செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

பலூனை உடையுங்கள்...

ஒரு
பலூனென
வந்துசேர்கிறது
பொய்.

ஊதலில்
பெருக்கும்..

வண்ணங்களில்
வசீகரம்.

ஒன்றிரண்டோடு
விட்டுவிடல்
முடிவதில்லை
பலருக்கு..

உடைவன
வரங்கள்..
உடையாதன
சாபங்கள்.

எல்லாக்கரங்களும்
பிடித்துக்
கொண்டிருக்கின்றன.
அவரவர்
பொய்களின்
கணக்கில்
பலூன்கள்.

வகைக்கொரு
பொய்க்கு
வந்து
நிறைகிறது
வண்ணங்களில்
பலூன்கள்.

உண்மை
ஒற்றைச்சிறகென
மிதக்கிறது..

பொய்பலூன்கள்
நம்மையும்
தூக்கிப் பறக்கிறது.

அரக்கனின்
உயிரென
அடைத்துக்கிடக்கிறது
அவரவர்
பலூன்களில்
வாழ்வு.

ஊதத்தொடங்கும்
முன்
தெரிவதில்லை..
உயிர்மூச்சை
உள்வைக்கும்
ரகசியம்.

உலகே
கீழென
பறப்பவை
ஒருபோதும்
கீழிறங்கப்
போவதில்லை.

பொய்களின்
பலூன்கள்
எப்போதும்
வெடிக்கலாம்.

உயரப்பறத்தலின்
மறுபக்கம்
கடவுளைப்போல
காணக்கிடைக்காது.

பொய்களின்
பலூன்களை
உடனுக்குடன்
உடைத்து
விடுங்கள்.

இது
உங்களுக்கு
மட்டுமென
சொல்லும் போதே..

என்
கையில்
இன்னொரு
பலூன்.

13 கருத்துகள்:

  1. நன்று!!!

    பொய்களின்
    பலூன்களை
    உடனுக்குடன்
    உடைத்து
    விடுங்கள்.

    ஒவ்வொருவரும்
    உடைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. அழகு! அருமையான கவிதை...
    ஊதத்தொடங்கும்
    முன்
    தெரிவதில்லை..
    உயிர்மூச்சை
    உள்வைக்கும்
    ரகசியம்.// ஆஹா!

    .பலூனை உடைத்திடலாம்தான் ..ஆனால் பாருங்கள் செல்வா "கவிதைக்குப் பொய் அழகு"!!! வைரமுத்துவின் வரிகள் சொல்லுகின்றது! பலூனை உடைத்துவிட்டால் கற்பனை உலகில் பறக்க முடியாதே!! கற்பனை இருந்தால்தானே கவிதையும்!!! இது எப்புடி!!!?

    எனவே இது போன்ற பலூங்கள் தேவையானவையே உடைத்திட வேண்டாம். தேவையற்றவையை உடைத்திடுவோம்...

    பதிலளிநீக்கு
  3. உடைந்தால்தான் பலூன், உடையலன்னா குண்டுல்ல? “பொய்களால் பொலிகிறது நம் வாழ்க்கை” என்பார் கவிஞர் பாலா. பொய்மையும் வாய்மையிடத்த - நம் வள்ளுவத்தாத்தன்.. எதற்கும் இடம் பொருள் ஏவலுண்டு. உ-ம்-கவிதைக்குப் பொய் அழகு என்ற வைரமுத்துவே, வேறோரிடத்தில் “கவிதைக்கு நிஜமே கம்பீரம்” என்கிறார். இதில் எது உண்மை? எது பொய்?

    பதிலளிநீக்கு
  4. அருமை கவிஞரே ரசித்தேன் வரிகளை.....
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
  5. அருமை ஐயா.பொய் என்ற பலூனை வாழ்க்கையோடு ஒப்பிட்டது..உண்மை தான் ஊதும்போது தெரியாது உள்சுவாசத்தை அடைக்கிறோம் என்று அருமை ஐயா..

    பதிலளிநீக்கு
  6. பொய்யும்,மெய்யும் கலந்தது தான் வாழ்க்கை!பொய்யே சொன்னதில்லை என்பதும் மெய்யே சொல்லுகின்றோம் என்பதுவும் பொய் தான் எனும் போது ...இது உங்களுக்கு மட்டுமென சொல்லிடும் பொய்கள்,,, பொய்யென தெரிந்தாலும் ரசிப்புக்குரியதாய் தான் இருக்கின்றது,

    பொய்யெனும் பலூன் உடைந்தால் நிஜங்கள் நம்மை காற்றாக்கி தூரமாய் விலக்கிக் செல்லும் எனில் பொய்யும் அழகுதான்.
    பலூன்கள் உடையாமல் இருந்தால் இன்னும் அழகு.

    பொய்ம்மையும் வாய்மை பயக்குமெனில்.. என சொல்லி பொய்களை மட்டுமே விதைக்காமல் மெய்களின் நடுவே கொஞ்சமாய் தூவினால் மெய்யெனும் விதை பொய்யொனும் களைகளை தாண்டியும் வளரும்.

    பதிலளிநீக்கு

  7. அனைத்து வரிகளும் ரசித்து சிந்திக்க வைக்கின்றன. தெளிவான நடையில் அழகிய கவிதை பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  8. அருமையான கருவை எடுத்தாண்டுள்ளீர்கள்
    மிக மிக நன்று.
    இனிய வாழ்த்துகள்
    (வேதாவின் வலை)

    பதிலளிநீக்கு

  9. எங்களுக்கு
    மட்டுமென
    சொல்லும் போதே..உங்கள் கையில்
    இன்னொரு
    பலூனா...!! த.ம்4

    பதிலளிநீக்கு
  10. உடைக்கவே வேண்டாம் ,எல்லா பலூனிலும் காற்று தானாய் இறங்கத்தானே போகிறது :)

    பதிலளிநீக்கு
  11. அருமை....
    இது உங்களுக்கென சொல்லும் போதே என் கையில் இன்னொரு பலூன் அருமை....

    பதிலளிநீக்கு