வியாழன், 18 பிப்ரவரி, 2016

மக்களுக்காகவும் போராடுங்க ..ஆபீஸர்ஸ்...

அன்பின் சக்திக்கு,

கடந்த சில நாட்களாக நகரமெங்கும் போராட்டங்களின் அணிவகுப்பைப்பார்க்கிறோம்.

15 அம்ச கோரிக்கை என்று ஆசிரிய சங்கங்கள் போராட்டம் ஒன்றை நடத்தி ஒரு நாள் பள்ளிகளையும் அடைத்தார்கள்.

இப்போது அரசு ஊழியர்களின் சங்கங்கள் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறது..

சரி சக்தி...
ஏனிந்த போராட்டங்கள்?
தகவல் தொடர்பு சரிவர இல்லாத காலங்களில் நடந்த போராட்டங்களின் வடிவத்திற்கும் இந்த காலப்போராட்டத்திற்கும் எத்தனை வித்தியாசங்கள்?

1980 களில் நடந்த ஆசிரியப்போராட்டங்களின் எழுச்சியும் உணர்ச்சியும் ஏன் இந்த போராட்ட காலத்தில் காணப்படவில்லை.

மிகச்சரியான காரணமாக நான் கருதுவது..
மக்களிடம் தங்கள் கோரிக்கைகளைப்பற்றி விளக்காமல் போனதுதான் என்பேன்.

இந்த நாட்டின் ஆசிரியர்களும், அரசு உழியர்களும் மக்களுக்கான பணி செய்பவர்கள் என்பதை ஏன் மறந்து போனார்கள்?

மக்களின் ஆதரவே இல்லாமல் ஜெயித்துவிடலாம் என்பது அதீத நம்பிக்கையின் விளைவு..

சரி!
உங்கள் போராட்டங்களுக்கான காலம் இதுதான் என்பதை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்?

ஆட்சி முடியும் நேரம்..புதிய ஆட்சி வரப்போகும் நேரம்..
உங்கள் போராட்டங்களை அரசு கவனித்தே தீரும்  என்ற கணக்கு தான்,
 நீங்கள் அறிவாளிகள் என்பதை உணர்த்துகிறது.

தினம்தோறும் உயரும், கைதாகி விடுதலையாவோரின் கணக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது.

தனக்கெனப்போராடும் ஆசிரிய, அரசு ஊழியர்களே உங்கள் ஒற்றுமை உணர்வுக்கு சபாஷ்.

ஆனால்.
எத்தனை பொதுப்பிரச்சனைகளுக்காக கூடியிருக்கிறீர்கள்?

மீத்தேன் பிரச்சனைக்கு உங்கள் சங்கங்களின் கருத்து என்ன?

கெயில் குழாய் பதிக்கப்போகிறதே..தெரியுமா உங்களுக்கு?

இதே ஒற்றுமையுடன் போராடியிருந்தீர்கள் என்றால் தனியார் பள்ளிகள் வளர்ந்திருக்காதே...

இந்திய தேசத்தின் மாணவர்களின் கல்வித்தகுதியில் தமிழ் மாணவர்களின் கல்வித்தகுதி தரைமட்டத்திற்கு போனதே ..தெரியுமா உங்களுக்கு...

லஞ்சமில்லா ஒரு அரசு அலுவலகம் காட்டமுடியுமா உங்களால்?

ஆர்ப்பாட்டமென்று கூறி கோஷமிட்டு போலிஸ்வண்டியிலேறி புன்னகைத்துப்பயணித்து மாலையில் விடுதலையாகும் உங்கள் போராட்டங்களால் அரசாங்கங்கள் வேண்டுமானால் கொஞ்சம் அசையலாம்..

மக்கள் மனதில் எதுவுமில்லை..

உங்கள் கோரிக்கைகள் மீது நமக்கு எந்த சந்தேகமும் இல்லை..அவை பெறப்படவேண்டியவை...
ஆயினும் உங்களின் கோரிக்கைகளை பொதுமக்களின் பார்வைக்கு சரிவர வைக்காமல்,
மக்களின் ஆதரவு சிறிதுமின்றி எப்படி வெல்வீர்கள்?
உங்கள் சங்கங்களுமா கார்ப்பரேட் கம்பெனிகளாய் மாறிப்போனது?

மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்லுங்கள்...

உங்கள் போராட்டங்கள் முடிந்ததும்  மக்களுக்காகவும் போராடுங்கள்..

மக்களும் உங்களுக்காக போராடுவார்கள்.

தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்பார்கள்....

ஆசிரியர்கள் தனியே...அரசு ஊழியர்கள் தனியே...

வேண்டாமே...
ஒற்றுமையுடன் போராடுங்கள்..

வாழ்த்தலாம் சக்தி.

அன்புடன்

செல்வக்குமார்.


9 கருத்துகள்:

  1. மிக அருமையாக உங்களின் கருத்துக்களை கேள்விகளை ஆதங்கமாக வெளியிட்டு உள்ளீர்கள்... அத்தனையும் மிக சரியே !

    கூடவே மாணவர்களுக்களின் நலனுக்காகவும் இவர்களின் போராட்டம் இருந்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு..ஒற்றுமையே பலம் அல்லவா..??நம் நாட்டில் எங்கு பார்த்தாலும் ஊழல்,இலஞ்சம் என்ன செய்வது ஐயா..??

    தங்களின் ஆதங்கம் புரிகிறது ஐயா.

    பதிலளிநீக்கு

  3. இவர்கள் போராடுவது இவர்களின் நலனுக்காக என்பதால் ஒற்றுமையாக போராடுகிறார்கள் ஆனால் பொதுமக்கள் பிரச்சனைக்காக் போராடும் போது அதில் அரசியல் நுழைந்து என் கட்சி உன் கட்சி என்று வந்துவிடுவதால் இதே ஒற்றுமை அங்கு வாராது போய்விடுமல்லவா? அப்படி இருக்கும் போது இவர்களால் எப்படி பொதுமக்கள் பிரச்சனைகளுக்கு போராட முடியும்

    பதிலளிநீக்கு
  4. தங்களின் கோரிக்கைக்காகவாவது ஒற்றுமையுடன் இருக்கிறார்களே என்று சந்தோஷப்படணும்,ஏனென்றால் ,இந்த ஒற்றுமையைச் சீர்குலைக்க அரசும் ,அரசியல்வாதிகளும் என்னென்ன சதி செய்வார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா ?
    அழுத பிள்ளைப் பால் குடிக்கும் என்பதே சரி :)

    பதிலளிநீக்கு
  5. மக்களின் ஆதரவே இல்லாமல் ஜெயித்துவிடலாம் என்பது அதீத நம்பிக்கையின் விளைவு..

    உண்மை.

    நல்ல கட்டுரை செல்வா அண்ணா..

    பதிலளிநீக்கு
  6. இந்த ஆபீஸர்ஸ்.கள் என்றைக்கு மக்களுக்காக போராடி இருக்காங்க...???.

    பதிலளிநீக்கு
  7. நல்லதொரு கருத்தை முன்வைத்துள்ளீர்கள். நம் போராட்டங்கள் எல்லாமே தனிப்பட்டவையே. பொதுப் போராட்டங்கள் இல்லை. செய்யலாம்தான். ஆனால் அப்படிச் செய்தால் அங்கும் அரசியல் புகுந்து விடுகின்றதே. அதைச் சமாளிக்கத் தெரிந்துவிட்டால் இவர்கள் பொதுப் பிரச்சனைகளுக்காகவும் போராட வேண்டும். அதிலும் ஆசிரியர்கள் மாணவர்களின் சார்பில் போராடலாம் அவர்களின் நலனிற்காக....செய்வார்களா? அதில் அரசியல் நுழைய வாய்ப்பில்லை ஆசிரியர்கள் உறுதியாக இருந்தால்

    பதிலளிநீக்கு