சனி, 6 பிப்ரவரி, 2016

தோழர்களுக்கு...

தோழர்களுக்கு,
உங்கள் மீது மிகுந்த மரியாதையும்,அபிமானமும் கொண்ட ஒரு நண்பனின் மடல்.

உங்கள் கூட்டணி மற்றும் கூட்டாட்சிக்கனவுகளின் பரபரப்பில் இது ஒரு மெல்லிய அதிர்வைக்கூட தரப்போவதில்லை என எனக்கும் தெரியும்.ஆனால் எனக்குள் தடதடத்துக்கொண்டிருக்கும் உணர்ச்சிக்கொப்பளங்கள் கொஞ்சமேனும் அடங்கும்  என்ற ஆசையில் தான்...

இந்திய சுதந்திரப்போராட்டத்தில் மறக்கமுடியாத இடத்தில் இருந்தவர்கள் தாங்கள்.
நாங்கள் தோழர்கள் என சொல்லிக்கொள்ளும் போதே நெஞ்சை நிமிர்த்தும் கர்வம் வரச்செய்தவை தங்கள் போராட்டங்கள்.

இந்த நாட்டின் வரலாற்றில் கரைபடியாத நீண்ட பாரம்பரியம் தங்களைத்தவிர யாருக்கும் இருக்கமுடியாது.

எத்தனை தோழர்கள்!
குப்தாவிலிருந்து தற்போது மறைந்த பரதன் வரை இந்த தேசம் கண்ட தோழமைத்தலைவர்களின் தியாக வாழ்க்கை ஒப்பில்லாதது.

தமிழ அரசியலில் 1960 களில் ஆளும்கட்சியாகவே வந்திருக்கவேண்டிய அமைப்பு.
பாலதண்டாயுதபாணி,பேராசான் ஜீவா,தோழர் நல்லகண்ணு,சங்கரய்யா,என எத்தனை தோழர்கள்?

சாதித்த எத்தனை போராட்டங்கள்?
வெண்மணித்தீயில் சுடர்விட்டது தோழர்களின் போராட்டத்தீ தான்..

மற்ற அமைப்புகள் ஆள்தேடிக்கொண்டிருக்க...
ஆராய்ந்துபார்த்து அமைப்புக்குள் அனுமதிக்கும் கட்டுப்பாடு உங்களுடையது.

தவறென்று தெரியுமெனில் தூக்கியெறியும் தன்மை.எவ்வளவு பெரிய இடமாய் இருந்தாலும் எதிர்த்துப்போராடும் ஆண்மை..

என் இளமைக்காலக்கனவுகளில் நல்ல தோழனாக மாறவேண்டும் என்ற லட்சியத்தை விதைத்த பஞ்சாலைத்தோழர்கள்..
அந்தோன் செகாவும்,பரீஸ் வஷீலியேவும் வாசித்த நாட்களின் நினைவு அழியாமல் இருக்கிறது.

அன்பின் தோழர்களே,
ஊருக்கு பத்துப்பேர்,நகரச்சாலையில் தனித்துப்பேசிக்
கொண்டிருக்கும் சில தோழர்கள்,கூட்டத்தில் உண்டியல் ஏந்தும் அமைப்பு,எந்நேரமும் கத்திக்கொண்டிருப்போர் என தற்போது அறியப்படுவது சரியா?

எந்த அமைப்புக்கும் இல்லாத வரலாறு,மார்க்ஸ் என்னும் மாமேதை வகுத்துக்கொடுத்த மகாசாசனங்கள் எவருக்கு உண்டு?

தேர்தல் என்னும் மாய உலகில்,கிடைக்கப்போகிறது என நம்பும் சில தொகுதிகளுக்காக உங்கள் போராட்டவடிவங்களை ஏன் சிதைத்தீர்கள்?

மரியாதைக்குரிய தோழர்களே!

மக்களோடு மக்களாய் இறங்கி செய்யாத எதுவொன்றும் வெல்லப்போவதில்லை என்னும் வரலாற்றை உங்களுக்கு அர்ஜெண்டினாத்தோழன் எர்னஸ்டோ சே குவேரா சொல்லித்தரவில்லையா?

வெற்று அறிக்கைகளில் வீரம் விளைந்துவிடுமென யார் சொல்லித்தந்தது? யேங்கல்ஸா?

தலைமறைவுகால வாழ்க்கையில் பெயர்மாறி,உருவம் மாற்றி காடுமேடு சுற்றி அமைப்பை வளர்த்த உங்கள் முன்னத்தி ஏர்களுக்கு இதுதான் நீங்கள் செலுத்தும் வீரவணக்கமா?

வர்க்கபேதம் ஒழியும் என்று நம்பிக்கை வளர்க்கவேண்டிய நீங்கள் சாதிசார்ந்த அமைப்புகளுடன் கூட்டணி வைத்துத்தான் அதை சாதிக்கப்போகிறீர்களா?

மக்கள் உங்கள் மீது கொண்ட நம்பிக்கை கழுதை தேய்ந்து கட்டெரும்ப்பான கதையை உங்கள் பொலிட்பீரோ கூட்டங்களில் பேசமாட்டீர்களா?

அருமைத்தோழர்களே!
தெரிந்தோ தெரியாமலோ நல்ல தோழர்கள் சிந்திய உழைப்பின் வாடையிலும்,இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலராலும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது அமைப்பு.

இது நல்லதல்ல..
கிடைக்கும் சில தொகுதிகளுக்காக அமைப்பை,கொள்கைகளை மறந்து போகாதீர்கள்.

தேர்தல் அடிக்கடி வரத்தான் செய்கிறது.

மக்களோடு மக்களாய் கலக்காத புரட்சி,மக்களின் ஆதர இல்லாத அமைப்பு வென்றாலும் அது வெற்றியல்ல.

அறிக்கைகளில்,மேடைகளில் கைகளை உயத்தி போடும் கோஷங்களில்,அனல்பறக்கும் வார்த்தைகளில் வெற்றிவந்துவிடும் என நினைத்தால்...

தோழர்களே நீங்களுமா?

என் ஆசைகளும்,கனவுகளும் வேண்டுகோள்களும் சிறுபிள்ளைத்தனமாகவும்,
உங்களால் மிக எளிதாக மறுத்துவிடக்கூடியதாகவும்,
ஏன் ..என்னை வெறுக்கக்கூடியதாகவும் இருக்கலாம்.
ஆனால் என் வேண்டுகோள் இதுதான்.

தேர்தல் அரசியலைவிட்டு வெளியே
வாருங்கள்.மக்களோடு மக்களாய் களத்தில் இறங்குங்கள்.

மண்சாலையிலிருந்து மண்ணெண்ணெய் வரை மக்களோடு இருங்கள்.

போராட்ட வடிவத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்.

உண்மையுடனும்,
நேர்மையுடனும் ஆளும் அமைப்புகள் அசரும் அளவிற்கு ஆதாரங்களுடன் அறப்போராட்டம் நடத்துங்கள் வீதியில்.

ஈடற்ற இளைஞர் பட்டாளம் நடிகர்கள் பின்னே பாலூற்றப்போயிருக்கிறார்கள்.
எடுத்துக்கூறி இயக்கம்பால் திருப்புங்கள்.நாளை உலகம் அவர்கள் கைகளில்.

பத்துவருடங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.
அதுவரை தேர்தலின் பக்கம் திரும்பாதீர்கள்.

ஒரு ஒற்றைமனிதன் அரசுப்பணியில் நேர்மையாய் இருந்ததற்காக சமூகம் வரச்சொல்லி கொண்டாடுகிறது.

நீங்கள் ஒற்றைமனிதன் போல பலர்கொண்ட அமைப்பு..
உ க்கள் பணிகள்,போராட்டங்கள் மக்களுக்காய்,இந்த சமூகத்துக்காய் உண்மையில் இருக்குமெனில்..
எந்தக்கூட்டணிக்காகவும் அலையவேண்டியிருக்காது..
பதவிகள் உங்கள் சங்கக்கட்டடங்கள் தேடி வரும்.

உங்கள் கூட்டணிக்காக பல குழப்பங்களில் நீங்கள் இருக்கும்வேளையில்,இந்த கடிதம் உங்களுக்கு தேவையில்லாதது என நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் நீங்களே தேவையில்லாமல் போய்விடுவீர்களோ என பயந்துகொண்டிருக்கும் என் போன்றோர்க்கு இது தேவைதான்..

அன்புடன்,
ஓர் நண்பன்.

9 கருத்துகள்:

  1. நியாயமான வேண்டுகோள்.
    தோழர்கள் காதில் விழட்டும்.

    பதிலளிநீக்கு
  2. நிறைவேறட்டும் உங்கள் கோரிக்கை..

    பதிலளிநீக்கு
  3. ஐயா உண்மையான ஒரு வேண்டுகோள் தான் தாங்கள் என்னை போன்றோர் மத்தியில் வைத்துள்ளீர்..நானும் இது போன்ற வேண்டுகோளை பரப்பிக் கொண்டு இருக்கிறேன்.நமது மக்கள் அரசியலை நம்பி வாழ்க்கையை வீண்ணாக்குகிறார்கள் அது தான் வேதனையாக உள்ளது ஐயா..மாறும் நம் எண்ணங்கள் ஒன்றுப்பட்டால் நாளைய விடியல் நமக்காக விடியும் ஐயா.மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உண்மை.

    பதிலளிநீக்கு
  4. என்ன ஒரு ஆதங்கம், துடிப்பு, கெஞ்சல் நிறைந்த நியாயமான கோரிக்கை! அருமை! உங்கள் கோரிக்கை நிறைவேறட்டும்

    பதிலளிநீக்கு
  5. வாக்கு பொறுக்கவேண்டும் என்பதற்காக ,தலையில் குல்லா அணிவது ..தோழருக்கு கண்ணியமா ?
    உங்களின் ஆதங்கமே என்னுடையதும் !

    பதிலளிநீக்கு
  6. உங்களின் நியாயமான வேண்டுதல்கள் வெற்றி பெறட்டும்...

    பதிலளிநீக்கு
  7. இதை நான் ஒப்பவில்லை தோழரே!
    50ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாக -மழுங்கிப்போன- திராவிடக் கட்சிகளான திமுக அதிமுக வை எதிர்த்து இடதுஜனநாயக அணி ஒன்றைக் கட்டியிருக்கிறார்கள் தோழர்கள். அவர்களை ஆதரிக்க வேண்டிய நேரத்தில் நீங்களும் காற்றைப் பிடுங்கும் வேலையைச் செய்ய வேண்டாம் என்பதே என் கருத்து

    பதிலளிநீக்கு