திங்கள், 15 பிப்ரவரி, 2016

வில்லன் வரவே இல்லை...

அன்பின் சக்திக்கு,

இறுக்கமான வாசிப்பின் அடர்த்தியை கொஞ்சம் குழைவாக்க ஒரு நாவலில் மூழ்கிப்போனேன்.

அது கொடுமை கொடுமை என கோவிலுக்கு போன கதையாகிப்போனது.

பொதுவாய் நம் கேரள சகோதரர்களின் படைப்புகள் இயற்கையோடு ஒன்றி கலைநேர்த்தியுடன் இருக்கும்.

எந்த விஷயத்திலும் சமரசம் செய்துகொள்ளாத பல எழுத்து அச்சன்கள்  ஜீவித்த சேரமான் நாட்டில் "தோப்பில் முகமது மீரான்" என்னும் படைப்பாளி காலத்தை வெல்லும் தன் படைப்புகளில் கதாப்பாத்திரங்களின் வழியே வாழ்ந்துகொண்டேயிருப்பார்.

சுதந்திரத்திற்கு முந்தைய அரபிக்கடலோரம் ஒரு இஸ்லாமியமக்கள் நிறைந்த கடற்கரை கிராமத்தின் கதையைச் சொல்கிறது.
"துறைமுகம்" என்னும் நாவல்.

சித்திரையில் வரப்போகும் வல்லிய மீன்பாட்டிற்காக தயாராகும் மீனவர்கள்,ஏலமெடுத்து சம்பைக்கட்டு ஏற்றி
பணம் செய்ய நினைக்கும் சில கதாப்பாத்திரங்கள்.

சேரமான் இஸ்லாத்தை தழுவியபின் ஒரே நாளில் எழுந்த பல பள்ளிகளில் உயர்ந்ததாய் யானைகொண்டு கல்லடுக்கிக்கட்டிய பள்ளிவாசலும் ஒரு பாத்திரமாய் இருக்கிறது.

மதமெனச்சொல்லி சதிசெய்யும் நேரங்களில் எல்லாம் " தோப்பில்" பலமுறை சொல்கிறார்..
ஆனை கொண்டு கல்லடுக்கிய பள்ளி...

அடக்கொடுமையே..
என்ற சொல்லுக்கு ஈடாக தன்னிச்சையாக சொல்லிவிடுகிறார்..

முன்பின் பார்த்திராத ஒரு பிரதேசம் தான் கதைக்களம்.

நாவலின் சில பக்கங்கள் போனதும் நம்மைப்பிடித்து அந்த கடற்கரைப்பெருவெளியில் உட்காரவைத்து காட்சிகளை கண்களுக்குள் திணித்துவிடுகிறார்.

கீழேவிழும் தென்னை ஓலைக்காய் காத்துக்கிடந்து சேர்த்து.. மழைவரும் முன்னே வீடு வேய்ந்துவிடத்துடிக்கும் ஒரு குடும்பம்.

முடியிருப்பவன் முசல்மான் அல்ல என ஒரு பரிதாபமான வயசாளியை கட்டிப்போட்டு மொட்டையடிக்கும் மதக்கும்பல்.

படிப்பது பாவமென பள்ளியைவிட்டு நிறுத்தி ஒரு இளைஞனை சபிக்கும் ஊர்மக்கள்.

மரச்சீனிக்கிழங்கு விற்கும் நாடார் பெண்களிலிருந்து.

சவரக்கத்தியுடன் அலையும் வாய்நாறிய ஒரு சவரத்தொழிலாளி.

வலையில் சிதறும் மீன் பொறுக்கும் ஒரு சிறிய இறுமியின் முதுகில் விழும் அடி..ஈசன் முதுகில் பட்ட பிரம்படிக்கு சற்றும் குறைந்ததல்ல..

ஆஜ்மீரில் தவமியற்றியதாய் சொல்லும் பழைய தேங்காய்த்திருடன் ஒரு ஏழைப்பெண்ணை மணந்து இரவல் நகைகளுடன் தலைமறைவானதையும் நம்ப மறுக்கும் சமூகம் மீது அப்படி ஒரு கோபம்..

இடைடையே வந்து போகும் திவானின் இடிவண்டி என்னும் காவலர் வண்டி..

தகவல் தரும் தேவ தூதனாய் ஒரு தபால்காரர்.

ஊசிபோடவந்த அதிகாரிக்கு கிடைக்கும் அனுபவங்கள்..

நாவலின் அடிநாதமாய்..

கண்ணுக்கே தெரியாத பெயர்மட்டும் அறியும் ஒரு வில்லன்..
படிப்பறிவே இல்லாத மக்கள் அனுப்பும் சரக்கெல்லாம் நட்டமெனச்சொல்லி இருக்கும் இடத்தையும் உருவும் நயவஞ்சகம்..

இலங்கையின் ஒரு மூலையில் நரியின் மூளையுடன் இருந்துகொண்டு இங்கே குடிக்கும் மனித உயிர்கள் ..

பணக்காரர்களுக்கு துணைபோகும் மதமும்...ஊரும்..

ஒரு நாவலென்று நம்பமறுத்து..
தாண்டிவிடமுடியவில்லை.

வாசித்துமுடித்து வைக்கும்போது ஒவ்வொரு மனிதனும் மனசோடே இருந்துபோகிறார்கள்.

பு ரியாத பல இடங்கள்..
புரியாத பல வார்த்தைகள்..
புரியாத பல சம்பவங்கள்..

மேலாய்...

ஒரு நாவலுக்கு உயிர் இருக்கமுடியுமா?

இருக்கிறது..
புரிகிறது..

வாசிக்கலாம் சக்தி..

அன்புடன்,
செல்வக்குமார்.

10 கருத்துகள்:

  1. அருமையான நூல் அறிமுகம் நண்பரே
    அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்

    பதிலளிநீக்கு
  2. அருமையான அறிமுகம். வாசிக்க முயல்கிறேன் செல்வா....

    பதிலளிநீக்கு
  3. நல்ல அறிமுகம். இவர் படைப்புகள் எதையும் இதுவரை முயற்சித்தது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃபிரான்ஸிஸ் இட்டிகோரா என்று ஒரு நாவல் - மலையாள மூலம் ட்டி டி ராமகிருஷ்ணன் எழுதி தமிழில் குறிஞ்சிவேலன் மொழிபெயர்த்தது - படிக்க வேண்டும் என்று குறித்து வைத்திருக்கிறேன்!
      தம +1

      நீக்கு
  4. அருமையான நூல் விமர்சனம் ஐயா.கட்டாயம் வாங்கி படிக்கிறேன் ஐயா.பணக்காரர்களுக்கு துணைபோகும் மதமும் ஊரும் உண்மை தான்..!!!

    நன்றி..

    பதிலளிநீக்கு
  5. பு ரியாத பல இடங்கள்..
    வார்த்தைகள்..
    சம்பவங்கள்..oh! eney way Thank you
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  6. முயற்சித்துப் பார்க்கிறேன் சார்.. அருமையான அறிமுகம்..

    பதிலளிநீக்கு
  7. #அது கொடுமை கொடுமை என கோவிலுக்கு போன கதையாகிப்போனது.#
    வாசிப்பு எதிர்மறையாகிபோனது போல் அர்த்தம் தருதே :)

    பதிலளிநீக்கு
  8. அருமையான விமர்சனம்...அதுவும் வித்தியாசமாய்...

    பதிலளிநீக்கு