புதன், 24 பிப்ரவரி, 2016

மீரா பென்.. காந்தியின் காந்திகள் 2

அன்பின் சக்தி,

இதுவும் ஒரு அன்பின் சக்திதான்.

பருவம் மிளிரும் பாரிஸ் நகரத்துப்பெண் மெடலின்.
1892- பிறந்த யுவதி.

முத்தங்களின் பூமியில் கடற்படையில் பணிபுரியும் தந்தை,நிலச்சுவாந்தாராய் தாத்தா..

இயற்கையின் காதலியாய்,இசையின் ரசிகையாய் இறக்கையடித்துப்பறக்கும் நாட்களில்,இசை பற்றி மேலுமறிய ரோமென் ரோலண்ட்டை சந்திக்கிறார்.

ரோலண்ட் தானே எழுதிய "மகாத்மா காந்தி" என்னும் சிறுநூலை அளிக்கிறார்.
வாசிக்கிறாள்.
இன்னொரு ஏசுவாய் காந்தியை வரிக்கிறாள்.

இலக்கின்றி பறந்த பறவை இந்தியாவை நேசிக்க ஆரம்பித்துவிடுகிறாள்.

இந்த பறவை வருடமொருமுறை வந்துபோகவில்லை.
34 ஆண்டுகள் இந்தியாவிலேயே தவம் செய்த சாதகப்பறவை.

காந்தியின் உண்ணாவிரதங்களுக்கு அவள் மெலிகிறாள்.

ராட்டைகற்கிறாள்.
சைவத்துக்கு மாறுகிறாள்.
மதுபானம் மறுக்கிறாள்.
மொழி கற்கிறாள்.
சம்மணம் இட்டு அமர்ந்து பழகுகிறாள்.
வெறுந்தரை துயில் கொள்கிறாள்.

இசையின் ரசிகை தன் பியானோ விற்கிறாள்.

தாத்தா பரிசளித்த வைர ஊசி விலை செய்து காந்திக்கு காணிக்கை அனுப்புகிறாள்.

யங் இந்தியாவை சந்தா கட்டி படிக்கிறாள்.

காந்தியின் ஆணைக்காய் கப்பலேறக்காத்திருக்கிறாள்.

அந்த நாளும் வருகிறது.

பாரீஸிலிருந்து லண்டனுக்கு.

லண்டனிலிருந்து அவள் தேவதையாய் 1925 நவம்பர் 7  ஆசிரமத்தில் அடிவைக்கிறாள்.

மகாத்மாவின் மகளாகிறாள்.

நூற்றல்,சமைத்தல்,சுத்தம் செய்தல் என அந்த தேவதை தெய்வமாகிறாள்.

காந்தியின் கனவுகள் ஆசிரமத்திலிருந்து ஆரம்பமாவதை அறிகிறாள்.

அவளுக்கும் ஒரு காதல் வருகிறது..சர்தார் பிருத்வி சிங்கிடம்...

காலம் வெல்லும் கருணை தேவதையை காதலா வெல்லும்?

வெள்ளையாடை பூணுகிறாள்.
தலைமுடி குறைக்கிறாள்.
கன்னியாகவே வாழ்கிறாள்.

தந்தை இறந்ததாய் தந்தி வருகிறது..
தமக்கை மரிக்கிறாள்.
தாய் காலமாகிறாள்.
இவள் இந்தியத்தாயின் மடியில் காந்தியென்னும் ஞானத்தகப்பன் அரவணைப்பில் இருந்துகொள்கிறாள் போகாமலே.

மொழிகற்று மக்களோடு மக்களாய் வாழப்பழகுகிறாள்..

அண்ணலின் அத்தனை போராட்டங்களையும் காணும் கண்கள் பெறுகிறாள்.

சைமன் கமிஷன் எதிர்ப்பு,
தண்டி யாத்திரை,
காந்தி-இர்வின் ஒப்பந்தம்

1931 வட்டமேசை மாநாட்டுக்காய் அண்ணலுடன் லண்டன் செல்கிறாள்.
கார் இவள் இளமைக்கால வீட்டின் வழி செல்கிறது.
கண்களின் வழிமட்டும் நடந்துபோகிறாள் இறங்கவே இல்லை..

நூற்றல் மட்டுமல்ல.
நூற்றுக்கணக்கான கட்டுரைகள்.

ஆர்தர்ரோடு சிறை,
சபர்மதி சிறை என சட்டம் இவளை சிறை வைக்கிறது.
பீனிக்ஸ் பறவையாய் இவள் காந்தி நோக்கியே பறக்கிறாள்.

ஒரு தாயாய்,தாதியாய் காந்திக்கு மாறிப்போகிறாள்.

காந்தியின் சாந்தியை சுமந்துகொண்டு சமதானப்புறாவாய் பறக்கிறாள் பல இடங்களுக்கு.

தபஸ்வியாகிறாள்,
ஓராண்டு மவுனதவம் செய்கிறாள்.
ரிஷிகேஷில் இவள் இருந்த போது காந்தி கொல்லப்படுகிறார்.

இவள் காந்திக்கு மரணமில்லை என போகவில்லை அவர் உடல் பார்க்க.

கூடிழந்த பறவையாய்
மீண்டும் படிக்கிறாள்.

உள்ளம் விரும்பும் இசைக்கு இசைவாய்1959இந்தியாவை விட்டு வியன்னா செல்கிறாள்.

இசை மட்டும் அருந்தி அமைதியாய் வாழ்கிறாள்.

1968 இங்கிலாந்தில் நடந்த அண்ணலின் நூற்றாண்டு விழாவில் அரங்கம் நிறைந்த மேடையில் பேசுகிறாள்...கண்ணீர் நிறைகிறது..

பக்தமீரா கொண்ட காதல் இறைக்காதல் என்றால்..
மீரா பென் கொண்டது தந்தையாய் வரித்து தன்னையும் கரைத்த தனிக்காதல்..

தம் நாட்டிற்காக போராடுதல்,சிறைப்படல்,
சாகுதல் இயற்கை..

எங்கோ பிறந்து இங்கே வந்து தன்னை உருக்கி மெழுகாய் எரிந்துவிட்டுப்போன மீராவை எப்படி மறப்பது?

அன்புக்கும்,
தியாகத்துக்கும்மொழி,இன,இட பேதம் கிடையாது.

1982 ஜூலை 20 இல் அவள் மரணித்திருக்கலாம்..
காலம் அவளை மறக்காது.

அன்புடன்,
செல்வக்குமார்.

21 கருத்துகள்:

 1. எப்படி இப்படி ஒரு மனம் வாய்த்ததோ அவருக்கு!! பகிர்விற்கு நன்றி சகோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அம்மா...மறைக்கப்பட்டவர்களை கொஞ்சம் திரும்பிப்பார்க்கலாம்...

   நீக்கு
 2. நன்றாக கொண்டு செல்கிறீர்கள்... தொடர வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 3. அரிய மனுஷி. நினைவில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே...உண்மைதான்..வியப்பாய் இருக்கிறது

   நீக்கு
  2. நன்றி நண்பரே...உண்மைதான்..வியப்பாய் இருக்கிறது

   நீக்கு
 4. இப்படியும் ஒரு பெண்ணா
  போற்றுதலுக்கு உரியவர்
  போற்றுவோம்

  பதிலளிநீக்கு
 5. மீராபென் அழகான நடையில், கருத்தில், மனதை அள்ளிவிட்டார்!

  பதிலளிநீக்கு
 6. யாரு...? அந்த காந்திய தோள் ல சுமந்துகிட்டே திரிஞ்ச பொண்ணுதான? ரெண்டு பொண்ணுக தாங்கி நடக்க, நடுவுலதான காந்தி மெதுவா நடப்பாரு அந்தப் படம் புகழ்பெற்றது ல்ல..அது கிடைக்கலயா? கிடைச்சா அத வெளியிட்டிருக்கலாம் ல?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆச்சர்யமாகவும்..நெகிழ்வாகவும் இருந்தது ஐயா....கிடைத்த படத்தை போட்டேன்...

   நீக்கு
 7. நம் விடுதலைக்காக இவர் கொடுத்திருக்கும் விலை பெரிது. இவர்களையெல்லாம் மறந்தோம் பாருங்கள், அந்த வினைதான் இக்கால அரசியலாய் நமக்குப் பிற்பகலில் விளைகிறது போலும் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் திரு. சுந்தரவடிவேல் அவர்களின் கருத்தை வழி மொழிகிறேன்.

   நீக்கு
  2. வருகைக்கு நன்றி நண்பரே... கில்லர்ஜி ..உங்களுக்கும்.

   நீக்கு
 8. சுருக்கமான எனினும் மனதிற்கு
  மிக நெருக்கமாக...
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. நான் காந்தி ஜி அருகில் இரு பெண்களை பார்த்ததுண்டு ஐயா.ஆனால் இவர் தான் அவர் என்பதை இன்று அறிந்துக் கொண்டேன் தொடர்ந்து தங்களின் பதிவுகளோடு இணைந்திருப்பேன் ஐயா.நன்றி.தொடருங்கள் ஆவலோடு இருக்கிறேன் ஐயா.

  பதிலளிநீக்கு
 10. இதுவரை பெயரை மட்டுமே கேள்விபட்டிருந்தேன்,பாடப் புத்தகங்களில் கூட,இவரைப் பற்றி பேசப்படாதது அநியாயம் !

  பதிலளிநீக்கு