செவ்வாய், 12 ஏப்ரல், 2016

அழுகையா வருதுங்க...

ஒரு சிறிய இடைவெளி தேவைப்பட்டது..
வாசிப்பில் மூழ்கிவிட்டதாய் பொய் சொல்லி தப்பமுடியவில்லை.

அரசியல்,நடைமுறைச்
செய்திகள் மிகுந்த சோர்வினைத்தான் தந்து கொண்டிருக்கின்றன..

நகர்த்திக்கொண்டிருக்கும் நாட்களின் அழுத்தத்தில் பதிவுகள் என்னும் மிதவைகள் தான் சற்றேனும் நிம்மதி..

காதுகளுக்கும்,கண்களுக்கும் வந்துசேரும் செய்திகள் மன அழுத்தம் தவிர யாதொன்றும் தருவதாயில்லை..

உற்சாகமாய் இருப்பதாய் எல்லாரும் நடித்துக்கொண்டிருப்பதயே அறிகிறேன்..
அவரவர் சுமக்கும் அளவினைத் தாண்டியே சுமந்துகொண்டிருக்கிறார்கள் கவலை மூட்டைகளை..

செல்பி எடுப்பவர்கள் எல்லாம் சந்தோசமாய் இருப்பதாய் ஏமாந்து போகாதீர்கள்.

முகப்புத்தகங்களும்,
இணையமும் இல்லையெனில் பலர் பைத்தியமாகி இருப்பார்கள்.

காலை விடியாத வேளையில் ஊரே நடந்து கொண்டிருக்கிறது..

காய்கறிக்கடை என்றாலும்,கறிக்கடை என்றாலும் நீண்டே இருக்கிறது வரிசை..

பள்ளிக்கட்டடங்கள் வளர்வது போல் மருத்துவமனைகளும் பெருத்துக்கொண்டுதான் இருக்கிறது..

காத்திருப்பின்றி காணமுடிவதில்லை..கடவுளைக்கூட..

அத்தனை பேருந்துகளும் நிறைமாதக்கர்ப்பினியாகத்தான் விரைகின்றன...

முப்பதுவருடங்கள் குடிப்பவன் இன்னும் சாலையில் விழுந்து கிடக்கிறான்...

முப்பது வயது நிறையாதவன் மூச்சடைத்து சாகிறான்..

ஒற்றையாய் சாகும் மனிதனின் செய்திகளை ஊடகம் விரும்புவதில்லை...கொத்துக்கொத்தாய் சாகுமிடங்களில் கூடிவிடுகிறார்கள்..

பிழைக்கவைக்க வேண்டி கோவிலுக்குப்போனவர்கள் குவியலாய்ச்செத்தால் ,
கோவிலுக்குள் இருப்பதை என்ன பெயர் சொல்லி அழைப்பது?

எங்கே நடக்கிறது மாற்றம்?
ஆட்சியின் மாற்றம் புதிய தலைமுறையால் வந்துவிடலாம் என்கிறது புள்ளிவிவரங்கள்..

சுதந்திரம் கிடைத்த இத்தனை வருடங்களுக்கும் தேவைப்படுகிறது வாக்களிக்க கெஞ்சும் விழிப்புணர்வுகள்..

ஒரு மாய உலகில்,
எல்லாக்குற்றங்களும் கண்ணுக்குத்தெரிந்தே நடக்க கையாலாகாத வாழ்க்கை தான் வாய்த்திருக்கிறது என்னைப்போன்றோர்க்கு..

ஒரு மவுனமான வேளையில் மனசு தடதடக்கிறது..

ஒரு செல்போன் எத்தனை உயரிய பிராண்டாக இருந்தாலும் அதன் அடக்கம் 200 ரூபாயிலிருந்து 1000க்குள் தான் இருக்குமாம்...
சர்வ சாதாரணமாக 10000 ல் தொடங்கி 70000 வரை விற்றுத்தீர்க்கிறார்கள்..

மொத்தவிலையில் 15 ரூபாய்க்குள் வாங்கும் வீட்டுக்கான டைல்களின் விலையை 40க்கு குறையாமல் விற்கும் மனநிலையை என்ன சொல்லி அழுவது?

பணம்..பணம் என்னும் காகிதம் தேடி ஆன்மாவை கறையாக்கும் முயற்சிதான் நடந்துகொண்டிருக்கிறது..

சிகரெட் ஆபத்தென்றாலும்..
மக்களின் மனோநிலையை காசாக்கத்தான் நினைக்கிறார்கள் ஒருபோதும் ஏற்றிய விலையை இறக்குவதில்லை..

விடியலில் தொடங்கும் நாள் நள்ளிரவு தாண்டித்தான் முடிகிறது..

எழுத ஆயிரம் வந்து சேர்கிறது..
எழுத உட்கார்ந்தால் தான் அழுகை வருகிறது..


16 கருத்துகள்:

  1. உணர்வுப் பூர்வமான பதிவு. வாழ்க்கை ஒரு நாடகம் என்பதை அறி்ந்து அதில் நிகழும் நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளீர்கள். இதில் ஒன்று சொல்ல நினைக்கிறேன் , சிகரெட் விலை கூடிப் போனதை நினைத்து கவலைப்படும் நீங்கள் அதை நிறுத்து வதற்கான முயற்சியில் ஈடுபடலாமே. வாங்குபவர் எண்ணிக்கை அதிகரிக்கும் போதுதான் விற்பனை அதிகரிக்கிறது.அன

    பதிலளிநீக்கு
  2. அரசியல் நிகழ்வுகள் மிகவும் சோர்வையே தருகின்றன. தூரத்தில் இருந்து பார்க்கும் எனக்கே இந்த அளவு சோர்வினை தருகிறது என்றால் அதனால் பாதிக்கப்பட்ட உங்களைப் போன்றவர்களுக்கு எந்த அளவு சோர்வினை தரும் என்பதை நினைத்தால் மிக வேதனையாக இருக்கிறது

    பதிலளிநீக்கு

  3. ஒரு சிறிய பதிவுதான் ஆனால் மிக ஆழமாக சிந்தித்து தெளிவாக எளிமையாக எழுதி சென்ற உங்களை மிகவும் பாராட்டத்தான் வேண்டும்

    பதிலளிநீக்கு
  4. முகப்புத்தகங்களும்,
    இணையமும் இல்லையெனில் பலர் பைத்தியமாகி இருப்பார்கள்.

    இவைகளில் பைத்தியமானவர்களும் இருக்கிறார்கள்....
    அருமையான பதிவு நண்பரே
    ஆழ்ந்து யோசித்தால் அழுகை வந்துவிடும்...

    பதிலளிநீக்கு
  5. மிக மிக அற்புதமான கவிதை. இன்றைய நிகழ்வுகளை படம் பிடித்து காட்டிவிட்டது கவிதை.

    பதிலளிநீக்கு
  6. #காத்திருப்பின்றி காணமுடிவதில்லை..கடவுளைக்கூட..#
    கடவுள் சிலைகளைக் கூட என்று இருந்தால் பொருத்தமாய் இருக்கும் :)

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. மனதில் தோன்றுவதைத் தாங்கள் தங்கள் உணர்வுக் குவியலாய் வடித்துவிட்டீர்கள். நாங்கள் உள்ளுக்குள் வைத்துப் புகைந்து கொண்டிருக்கின்றோம்....எப்போது எரிமலை போல் வெடிக்குமோ இல்லை தீபாவளி புஸ்வானமாய் அடங்கிப் போகுமோ தெரியவில்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
  9. அழுகையா வருதுங்க...Vs சிரிப்பா வருதுங்க...http://avargal-unmaigal.blogspot.com/2016/04/vs-feel-like-crying.html

    பதிலளிநீக்கு
  10. காத்திருப்பின்றி காணமுடிவதில்லை..கடவுளைக்கூட..
    கவிதை கலந்த உரைநடை (சிலப்பதிகாரத்தை உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள் என்று பத்தாம்வகுப்புத் தமிழ்ப்பாடத்தில் படித்திருப்பீர்களே?) உங்களுக்கு நன்றாகவே வருகிறது. தொடருங்கள். தொடர்வேன்.

    பதிலளிநீக்கு
  11. முகத்தில் அறையும் உண்மைகள்.முதலில் கோபம், பின்பு வருத்தம்,அதன் பின் ஆதங்கம் இதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று போய்க்கொண்டிருப்பது வெட்கமாகத்தான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  12. மதுரை தமிழன் பதிவை பார்த்து இங்கே வந்தேன். அருமையாக சொல்லி உள்ளீர்கள். இதை எல்லாம் சொன்னால் நம்மை அல்லவா வித்தியாசமாய் பார்கின்றார்கள் ?

    பதிலளிநீக்கு