ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

விமர்சனக்கோடரிகள்...

அன்பின் சக்திக்கு,

உலகப்புத்தக தினம் கடந்து எழுதுகிறேன். உனக்கு வாசிப்பைப்பற்றி எதுவும் சொல்லவேண்டியது இல்லை தான்.

ஆனால் எழுதுவதைப்பற்றி பல்வேறு விமர்சனங்கள் ஒரு மனிதனை எப்படியெல்லாம் பாதித்துவிடுகிறது என்பதை கேள்விப்படும் போது மனசு கனத்துப்போகிறது.

ஒவ்வொருவருக்கும் தன் அனுபவங்களை,ஆசைகளை பதிவு செய்துவிட வேண்டும் என்ற ஆசையிருக்கும்.

சிலர் வாய்மொழியாக பதிவு
செய்துவிடுவார்கள்.
சிலருக்கு மட்டுமே எழுத்தில் செய்ய இயலும்.

நாட்குறிப்புகளிலும்,நோட்டுகளிலும் எழுதிவைத்துவிட்டு செத்துப்போனவர்களோடு சேர்த்து எரித்ததையும் பார்த்திருக்கிறேன்.

வெகு சிலரிலும் சிலருக்கே தன் எழுத்துகளை பலரின் பார்வைக்கு கொண்டுசெல்லும் வாய்ப்பு அமைகிறது.

கட்டுரைகளாக,படங்களாக,
கவிதைகளாக வடிக்கிறார்கள்.

தன்னுடைய பதிவுகளை பலரும் படிக்கிறார்கள் என்ற உணர்வு எல்லாருக்கும்
இருக்கத்தான் செய்யும்.
எல்லாருக்கும் பிடித்தது போல எழுத நினைப்பதும் சகஜம் தான்.
ஆனால் அது அமைவது வரம்.

பதிவுகளில்  கட்டுரைகளை விட்டுவிடலாம்.
கவிதை எழுதுவோர் படும்பாடு ரொம்பசிரமம்.

அவர்களுக்கு தெரிந்த வார்த்தைகளில் தான் எழுதமுடியும்.
வாசிப்புக்கும்,
உள்வாங்கியதற்கும் உள்ள தொடர்பே கவிதையின் கனம்..

மரபுக்கவிதையில் எழுதுவார்களெனில்,
புதுக்கவிதை எழுதுவோர் புருவமுயர்த்தி பரிகசிப்பதும்,
புதுக்கவிதையெனில் நவீனத்துவம் இல்லையென நகைப்பதும்....

வார்த்தகளின் கால்களை உடைத்து அடுக்கிவைத்திருப்பது கவியா என கண்டனங்கள்...

வரிகளை கொண்டாடும் சிலரின் ரசனை குறித்தும் எள்ளல்..

குழுவாய் தாக்கும் கொடூரம்.

பரிதாபம் சக்தி.

நான் கவிதைகளை பிரித்துப்பார்ப்பதில்லை.
மரபுக்குள் அமைந்து மனசைக்கொள்ளை கொண்ட கவிதைகள் உண்டு.
ஆயிரம் முறை படித்தாலும் விளங்காத நவீன கவிதைகளும் உண்டு.

எழுதுவது கவிஞனின் உரிமை எனில்,வாசிப்பதும் ரசிப்பதும் சுவைப்பவனின் உரிமை.

அன்பின் கவிஞர்களே..
நீங்கள் இமயமாய் வளர்ந்தவர்கள் தான்.
எழுதும் எல்லாரையும் உங்களோடு ஒப்பிட்டு,எழுத ஆரம்பிக்கும் விரல்களை உடைத்து விடாதீர்கள்.
உங்களின் விமர்சன கூரிய நகங்களால் புதிதாய் வருபவர்கள் காயப்பட்டுப்போகிறார்கள்.
சில கோழை மனங்கள் உயிர் உருகியதையும் அறிகிறோம்.

காமுறும் இந்த இதயத்தை வைத்துக்கொண்டா கவிதைகள் எழுதிக்
கொண்டிருக்கின்றீர்கள்?

பாமரனும் புரிந்து கொள்ளும் வரிகள்!
என்ன நினைக்கின்றோமோ
அதன் சூடு குறையாமல் சொல்லிவிடும் வார்த்தைகள்!
வாசிப்புக்கு வெறுப்பு வந்துவிடாத நீளம்!
கடைசிவரை காணும் கண்களுக்கு முடிவில் கொஞ்சம் ஆச்சர்யம்!

அது காதலானாலும்,கருமாதியானாலும்
சமூகத்தைப்பற்றிய சிறிய சிந்தனையேனும்..!!!

என் வரிகளின் இலக்கணமாய் இதைத்தான் கொண்டிருக்கிறேன்.

வாசித்து சிலாகிக்கும் சில நட்புகள் இருக்கின்றன சக்தி...

கவிதையோ இல்லையோ..
ஆனால் ,கண்டிப்பாய் அது நான்...

எழுதுவேன்.

அன்புடன்,
செல்வக்குமார்.

9 கருத்துகள்:

  1. சரியான பதிவு.
    அவரவர் கவிதை அவரவர் உரிமை.
    யாரும் ஒரே நாளில் கவிஞராகியிருக்க மாட்டார்கள். வளர்ந்து கவிஞராவதற்க்குள் எவ்வளவோ விமர்சனங்களை கடக்க வேண்டியிருக்கிறது.இதெல்லாம் கவிதையா என நகைப்பவர்கள் மனது கொடூரமாகத்தான் இருக்கும்.அவரவர் கவிதை அவரவர்களுக்கு குழந்தை என நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். குழர்தைகளைக் கொண்டாடுபவர்களே கவிஞர்களாக இருக்க முடியும். மற்றவர்களெல்லாம்...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் நண்பரே.....
    இத்த பதிவில் உண்மைகளை
    சொல்லி உள்ளீர்....
    நான் ஏதோ எழுதுகிறேன் ....
    ஆனால் இது கவிதையா என்று
    நானே என்னை கேட்டிருக்கிறேன்....
    எனக்கு மரபுக் கவிதைகள்
    புரியவும் செய்யாது...
    எழுதவும் வராது...
    ஆனால் ஏதோ எழுதுகிறேன்...
    மரபு கவிதைகளை புரிந்து
    கொள்ள முயல்வேன்....
    நான் எழுதுவது என் உரிமை
    யார் என்ன சொன்னாலும்
    கவலை இல்லை....

    பதிலளிநீக்கு
  3. நண்பரே.... பிறரின் விமர்சனம் நமது எழுத்துப்பணியை தடுத்து விடமுடியுமா என்ன ? எழுத்து என் உரிமை விமர்சிப்பது அவர்களின் உரிமை
    இதைப்பற்றி எனக்கு கவலை இல்லை எனது எழுத்தும் ஒருநாள் சிறக்கும் வானில் பறக்கும் நம்பிக்கையுடன் நான்....

    பதிலளிநீக்கு
  4. எழுதுவது கவிஞனின் உரிமை எனில்,வாசிப்பதும் ரசிப்பதும் சுவைப்பவனின் உரிமை.//

    அதே அதே!!! நீங்கள் பரிமாறுங்கள் செல்வா..சுவைக்க நாங்கள் இருக்கின்றோமே....

    பதிலளிநீக்கு
  5. தங்களின் எழுத்துகளுக்கு நானும் இரசிகை ஐயா.தங்களின் எழுத்துகளை இரசிக்கவும் சுவைக்கவும் ஆவலாக உள்ளேன் ஐயா.தொடருங்கள் தொடர்கிறேன்.நன்றி.

    பதிலளிநீக்கு
  6. கவிஞரே! ஒவ்வொருவருவருக்கும் ஒரு பாணி. விமர்சனங்கள் படைப்பாளியின் வளர்ச்சிக்கு அவசியம் தேவை. வேண்டாதவற்றை விலக்கிடுவோம்.

    போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரித்
    தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்
    ஏற்றதோர் கருத்தைஎன துள்ளம் என்றால்
    எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன் அஞ்சேன்
    - கவிஞர் கண்ணதாசன்

    பதிலளிநீக்கு
  7. கவிதை நடையில் கவிதைபற்றிய புரிதல் விளக்கம் அருமை. பாரதி, தனது பாஞ்சாலி சபதத்துக்கு எழுதிய சிறிய 15வரி முன்னுரையே புகழ்பெற்றது “எளிய பதம், எளிய சொற்கள், பொதுமக்களுக்குப் பிடித்தமான மெட்டு, இவற்றுடன், ஓரிரண்டு வருஷத்து நூல் பழக்கமுள்ளவர்க்கும் புரியக்கூடிய வகையிலும், அத்தோடு காவியத்துக்கு உள்ள நயங்கள் குறைவுபடாமலும்..” எழுத வேண்டும் என்பார்!

    பதிலளிநீக்கு