சனி, 14 மே, 2016

செய்வீங்களா....செய்வீங்களா

ஜாதகம் கொடுக்க வேண்டும்.
ஜாதிபலம் சொல்ல வேண்டும்..

ஒருநாள் சிறை சென்ற செய்தித்தாள்
இணைக்க வேண்டும்.

படித்ததாய் பட்டம் வேண்டும்.
படிகளுக்கும்
பணிதல் வேண்டும்.

வீதியின் ஓர் சேதிக்கும்
ஓடோடி விரைய வேண்டும்.

மாற்றுக்கட்சிக்கெல்லாம்
மறுப்பு சொல்லி
பேச வேண்டும்.

கூட்டணிக்கு போய்விடாமல்
சொந்த ஊரே கிடைக்க வேண்டும்.

மண்சோறு தின்ன வேண்டும்.
மயிர் மழித்து மகிழ வேண்டும்.

வட்டம் மாவட்டம்
மறுக்காமல் இருக்க வேண்டும்.

திட்டமிட்டு யார்கவிழ்ப்பார்
தெரிந்தாலும்
சிரிக்க வேண்டும்.

கூன் வளைந்து வணங்க வேண்டும்.
கும்பிட்டே உறங்க வேண்டும்.

தலைமைக்கும்
தனக்கும் சேர்த்து
விருப்பமனு
கொடுக்க வேண்டும்.

ஓட்டுனரோ
கூட்டுனரோ
உள்ளிருக்கும்
மனிதரென்றால்
உறவு சொல்லி பழக வேண்டும்.

ஒற்றறியும் திறனும் வேண்டும்.

செய்யாத செயலென்றால்
எதிர்க்கட்சி இழுக்க வேண்டும்.

செய்தித்தாள் திட்டிவிட்டால்
தீயிட்டுக்கொளுத்த வேண்டும்.

இணையத்தின் தொடர்பும் வேண்டும்.

முகம் சுழிக்கும் பகடிக்கும்
அகம் மகிழ்ந்து சிரிக்க வேண்டும்.

நள்ளிரவும் பேச வேண்டும்.
நாற்புறமும் பார்க்க வேண்டும்.

மாறுமொரு பட்டியலில்
பெயர் தங்கும் வரம் வேண்டும்.

நின்றுவிட்டால் அழவேண்டும்..
நிழல் கூட தொழல் வேண்டும்.

வீதிக்கட்சியையும்
விலை கொடுத்து வாங்க வேண்டும்..

வாக்கு விற்கும் விலையறிந்து பக்குவமாய் வாங்கவேண்டும்.

சாமி போகா வீதிக்கும்
சத்தியங்கள் தர வேண்டும்.

வெளியூரில் ஆளிருந்தால் விலை கொஞ்சம் அதிகமாகும்.

செத்தவர் ஓட்டுக்கும்
சிலநேரம் விலையிருக்கும்.

வாக்கெண்ணி முடியும் வரை வயிறெரியும் 
தாங்கவேண்டும்..

ஆள்வதற்கா.
எதிர்ப்பதற்கா,
மந்திரியா..

மனக்குரங்கை
கட்ட வேண்டும்.

நம்மில் ஒருவர் தான்
இத்தனையும்
செய்கிறார்.

நல்லவர்க்கு
வாக்களிக்கும்
ஒற்றை வேலை
விட்டுவிட்டு..

அழுது என்ன?

புலம்பி என்ன?

9 கருத்துகள்:

 1. நல்லவர் எவரென்று யோசித்தாலும்
  புரியவில்லையே....
  யாருக்கு வாக்களிப்பது என்றும்
  தெரியவில்லை...

  பதிலளிநீக்கு
 2. தேடினாலும் கிடைக்காத நிலையில்...உம்..முயற்சிப்போம்.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் !

  நின்றுவிட்டால் அழவேண்டும்..
  நிழல் கூட தொழல் வேண்டும்

  சாமி போகா வீதிக்கும்
  சத்தியங்கள் தர வேண்டும்.

  செத்தவர் ஓட்டுக்கும்
  சிலநேரம் விலையிருக்கும்.

  வாக்கெண்ணி முடியும் வரை வயிறெரியும்
  தாங்கவேண்டும்..

  யதார்த்தமான வரிகள் மிகவும் இரசித்தேன் மகிழ்ந்தேன் சிந்தித்தேன் பகிர்வுக்கு நன்றி வாழ்க வளத்துடன்
  தம +1

  பதிலளிநீக்கு
 4. அற்புதமான கவிதை!
  நல்லவர்களை அறிந்து அவர்களுக்கு வாக்களிப்பது மட்டுமே, நம்மால் முடிந்த அரசியல் களையெடுப்பு.
  த ம 3

  பதிலளிநீக்கு
 5. மனக்குரங்கை
  கட்ட வேண்டும்.
  அழுது என்ன?

  புலம்பி என்ன?
  Nanru...nanru....sako...
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 6. நல்ல வரிகள் செல்வா...ஆனால் பாருங்கள் முடிவுகளை....மாற்றம் இதுதானா?

  கீதா

  பதிலளிநீக்கு