ஞாயிறு, 31 ஜூலை, 2016

அப்பா....




கருவறை
தாங்கியள்
தாயெனில்
கருவறை விட்டு
நம்
விரல்பிடித்த
சாமிகள்...
அப்பாக்கள்.

அம்மாக்கள்
முத்தங்கள்,
அழுகையென
காட்டிவிடுவார்கள்
கருணையை...
அப்பாக்களால்
எப்போதும்
அது
முடியாது...

இடுப்பில்
ஏந்தி
கற்பனைக்கதை
சொல்லுவாள்
அம்மா...
அதில்
அன்பிருக்கும்...

தோள்களில்
சுமந்து
தான்
காணா
உலகையும்
கண்ணுக்குக்
காட்டுவார்
அப்பா...
அதில்
எல்லாம்
இருக்கும்...

பிஞ்சின்
பருவக்கால்கள்
எட்டி
உதைக்கும் வேளையெல்லாம்
நீவிக்கொடுத்து..
கொழுசுக்கு
ஓடுவார்
அப்பா....

விரல்கள்
பிடித்து
நடக்கையில்
தார்ச்சாலை
பூப்பூக்கும்.

அப்பாக்கள்
எப்போதும்
வெளிக்காட்டாதவர்கள்.

தூக்கும்
மூட்டைச் சுமைகளில்,
இழுக்கும்
வண்டியின்
சக்கரச்
சுற்றுகளில்..
அடிமையாய்..
ஊழியனாய்..
நகரும்
அவன் நாட்களில்
ஒளிர்வதெல்லாம்
பிள்ளைகளின்
எதிர்காலம்..

பிள்ளையோ
பையனோ..
வயிறுகிழித்து
பெற்றுப்போட்டதில்
தொடங்கும்
சோதனை...

சுணங்கும்
குழந்தைக்குப்
பதறி...
சொட்டு
மருந்து
தொடங்கி..
விட்டுவரும்
காய்ச்சலுக்கு
கலங்கி..

பள்ளியென..
கல்வியென..
எல்லாம்
முடிந்த பின்..
அம்மாக்கள்
படமாகிறார்கள்..
அப்பாக்கள்
பாடமாகிறார்கள்..

ஆரம்பத்தில்
பிடிக்கும்
அப்பாக்கள்..
பருவத்தில்
பிடிக்காமல்
போவார்கள்.
செத்துப்போனபின்
புரியும்
தெய்வங்கள்.

அப்பாக்களிடம்
அடிவாங்கியவர்கள்
ஆசீர்வதிக்கப்
பட்டவர்கள்..
தெய்வத்தின்
தீண்டலது...

அடிவாங்கி
அழுத பிள்ளை ஓயும்..
அப்பாக்களின்
அழுகை
ஒருபோதும்
ஓய்வதில்லை...

தாயிற் சிறந்த
கோவிலில்லை
தான்...
அப்பாவெனும்
ஆண்டவன்
உறைந்தால் தான்
அது
ஆலயம்..

பெற்ற பெண்
மணமுடித்து
போகும்
நேரம்
அழுகாத
அப்பாக்கள்
எங்குமில்லை.

அப்பாக்கள்
இல்லையெனில்
ஆயிரம்
தொல்லை..

வியாபாரம்
நடக்குமெனில்
விபச்சாரத்துக்கும்
விளம்பரக்காலங்கள்..

கபாலிகர்களின்
தோட்டத்துள்
அப்பா
என்னும்
குறிஞ்சி
பூத்திருக்கிறது..

ராட்சஷர்கள்
உலவும்
திரைக்காட்டில்
ஒரு
புள்ளிமானாய்
வெளிவந்எதிர்க்கிறது
அப்பா...

அதன்
கதைகளில்
ஆக்கங்களில்
நோக்கங்களை
சொன்ன
விதங்களில்
ஆயிரம்
கருத்துக்கள்
இருக்கலாம்...
ஆனால்
அப்பா
என்னும்
தலைப்புக்கே
ஆயிரம்
முத்தங்கள்
கொடுக்கலாம்..

ஒரு
சண்டையில்லை..
துப்பாக்கிகள்
சீறவில்லை..
நாயகியின்
தொப்புள்
காணக்
கிடைக்கவில்லை...
போகாத
ஒரு நாடு
போய்
பாட்டொன்றும்
எடுக்கவில்லை..

நெய்வேலிச்
சுரங்கத்தில்
நிலக்கரி
எடுப்பார்கள்..
ஒரு
திரைப்படம்
எடுத்திருக்கிறார்
சமுத்திரக்கனி..

ஒரு
கட்டுமரம்
எடுத்துப்போன
சமுத்திரத்தில்
கப்பலளவு
மீன்
பிடித்திருக்கிறார்...
கட்டுமரம்
கரைசேர்ந்ததா
தெரியாது..
ஆயினும்
பிடித்த மீன்கள்
துடிப்பானவை..

நல்ல தமிழ்
பேசுவோர்
காமெடியானவன்
என்ற
உலகத்தில்
லட்சியங்களோடு
நடமாடுபவன்
கிறுக்கனாய்த்தான்
தெரிவார்கள்..

மிகைப்படுத்தப்பட்ட
லட்சியங்கள்..
பிள்ளைப்பேற்றுக்கு
மருத்துவமனை
போகாததை..
லட்சியம்
என்பதா?
அலட்சியம்
என்பதா..

மகனுகாய்
மனைவியை
பிரிதல்..
புரிதல்
இல்லாத
மனிதனைத்தான்
காட்டுகிறது..

எப்படியும்
பெரியாளாக
ஒருத்தரும்..
இப்படியே
இருக்கலாமென
ஒருவரும்
சமூகத்தின்
சில
சாட்சிகளாய்
உலவியிருக்கிறார்கள்..

பள்ளிகள்
சொல்லும்
பாடங்கள்..

பருவத்தில்
வரும்
கோளாறுகள்..

சாதிக்கத்தூண்டும்
ஆறுதல்கள்..
போதிக்கத்தான்
செய்கிறது..

நெஞ்சு
நிமிர்த்தி
போராடும் போது
இருக்கையின்
நுனிக்கு
வருகிறோம்..
விலை
அதிகமாய்
கொடுத்து
ஒரு
நுழவுச்சீட்டு
வாங்கியதை
எப்படி
மறப்பது..
மறுப்பது?

சினிமாத்தனங்களில்
நிரம்பித்தளும்புகிறார்
அப்பா..

பிள்ளை
காணாமல்
போவதும்..
வியர்வையும்
கண்ணீரும்
வழிய அலைவதும்
சினிமாவுக்காய்
சித்தரித்த
சிருங்காரம்.

திருநங்கை
காத்து
அழைத்துவந்தது
கருணையின்
ஸ்டிக்கர்
ஒட்டிய விளம்பரம்.

நல்ல
மாமனார்..
மோசமான
மைத்துனர்கள்
வழக்கமான பாதை.

பள்ளிப்பருவத்தில்
வரும்
பாலின
ஈர்ப்பை
இன்னும்
எளிதாய்
சமாளித்திருக்கலாம்.

பிள்ளை
கின்னஸ்
என்பதெல்லாம்
சினிமாவின்
மொழிதானன்றி
வேறில்லை..

பள்ளிகள்
பணம்
பறிப்பதும்
அடைகாத்து
மதிப்பெண்கள்
பொறிப்பதும்..
புதிதல்ல..
இன்னும்
தீ
தெறிக்காத
வருத்தம்
தான்..

பிள்ளைகள்
கூடி
கல்யாணம்
சமைப்பதும்..
வயசுக்கும்
உருவத்துக்கும்
மீறிய
செயல்களும்
அப்பாவுக்கு
அழகாயில்லை..

பாத்திரப்படைப்புகள்
நல்ல
முயற்சி...

தம்பி ராமையா
எம்பிக்குதிப்பது
ஈர்ப்பதாய்
இல்லை..

வழக்கமான
இசை...
பழக்கமான
பாதை..
அறிவியலின்
அற்புதமாய்
காட்சிப்படுத்துதலில்
புதுமை..

அப்பா
படத்தைப்பற்றிய
உங்கள்
பார்வைகளுக்கு
நான்
எதிரியில்லை..

சமுத்திரக்கனியோடு
எனக்கு
சண்டையுமில்லை.

ஆயிரத்தெட்டு
பிரச்சனைகளில்
பணத்தைத்தவிர
மூன்று
மணி
நேரத்தையும்
தொலைத்த
என்
பார்வையில்
என்ன
பட்டதோ
அதையே
பதிவு
செய்கிறேன்..

அப்பா
என்னும்
அமுதத்தை
திரைப்படமென்னும்
அரைகுறைக்கலசத்தில்
அழுத்தித்
திணித்திருக்கிறார்கள்..
அமுதமே
ஆனாலும்
அழுக்கான
பாத்திரம்
உறுத்தத்தான்
செய்கிறது..

ஒரு
ஆவணப்படமாய்
வந்திருக்க
வேண்டியது...
ஆணவக்கொலையில்
முடிந்திருக்கிறது..

நல்ல
கதை
நறுக்கென்ற
வசனங்கள்..
பிரமிக்கும்
காட்சிகள்..
பொட்டிலடிக்கும்
உண்மைகள்..
நேர்மையான
உழைப்பு..
தனித்த பார்வை.
எல்லாம்
சரிதான்..

என்ன செய்ய
எல்லாமே
வலியத்திணித்த
நடிப்பாய்
இருக்கிறதே..

இப்படியாக....
அழகாய்
இருக்கலாம்.
அறிவாய்
இருக்கலாம்.

என்
அப்பாவை
பிடித்தது போல்
எந்த
அப்பாவும்
எனக்குப்
பிடிக்கவில்லை.



































சனி, 30 ஜூலை, 2016

தேடுங்கள்...கிடைக்கலாம்..

அறுபதாயிரம்
மனைவியர்
அடைத்துக்கிடந்த
அந்தப்புரத்தை..

ஒற்றை நரைமுடி
உதிர்ந்த
கூடத்தை...

பிள்ளைப்பேறு தரும்
பாயசத்தின்
சமையற்குறிப்பை..

கூனியின்
முதுகடித்த
சிறு
கவண் கல்லை..

தடாகை
கொன்ற
தவமுனிவன்
யாகசாலையை..

அகலிகை
கல்லாய்
காத்துக்கிடந்த
கட்டாந்தரையை..

மகனுக்கு
ஆட்சி கேட்டதால்
காலமெல்லாம்
காயப்பட்ட
கைகேயி
எரித்தோ
புதைத்தோ
விடுதலையான
புனித பூமியை..

உறங்கா விழிகள்
இலக்குவனுக்கெனில்
விடியா
இரவுக்குள்
ஊர்மிளையின்
சோகத்தை..

மூக்கறுத்த
கத்தியின்
துருப்பிடித்த பாகத்தை..

வானரம்
அழித்த
மாநகரின்
மிச்சத்தை..

ஜானகி
தீக்குளித்த
நெருப்பின்
மிச்சத்தை...

இராவணன்
காத்த
காதலின்
உச்சத்தை...

காகுத்தன்
தொலைத்த
வாலியின்
வன்கொலைக்களத்தை

காலக்கதையின்
மூலத்தை
தேடும்
விஞ்ஞானப்
புலிகளே...

விமானம்
தொலைந்து
வாரங்கள்
கடந்தது...

சின்ன பாகமும்
சிக்கவில்லை
என்பீர்கள்..

முலிகை
தேடுதல்...
நல்லது மக்களுக்கு..

சேர்த்தே
தேடுங்கள்...

அந்த
செருப்புகளும்
தேவை தான்..






செவ்வாய், 26 ஜூலை, 2016

கபாலி ...பார்க்கலாம்

அன்பின் சக்திக்கு,
விளம்பர வலையில் நானும் சிக்கி கபாலி பார்த்துவிட்டேன்.
பிரமிக்கத்தக்க விளம்பரத்தால் இந்தப்படம் உருப்படவே கூடாது என்ற எண்ணம் கூட இருந்தது.
கபாலி பற்றிய விமர்சனங்களும் அதை ஒத்தே இருந்தன.
நண்பரின் கட்டாயத்தால் பார்க்க நேரிட்டது.
என்னளவில் கபாலி மோசமான படமல்ல.
அறுபது கடந்த ஒரு மனிதனிடம் திரையில் இதைவிட என்ன எதிர்பார்த்துவிட முடியும்?

இயக்குனர் என்ற முறையில் ரஞ்சித் என்னும் இளைஞர் ரஜினி படத்துக்கே உண்டான பல சம்பிரதாயங்களை உடைத்திருக்கிறார்.
அந்த துணிச்சல் அபாரம்..

திரையில் தோன்றும் போதே ஆரம்பிக்கும் பாட்டு..
பேத்தி வயது பெண்களுடன் ஆடும் நடனங்கள், பாம்பு, விளங்கும் ஒரு தத்துவப்பாட்டு என எல்லாவற்றையும் தாண்டியிருக்கிறார்.

கதை என்பதை இந்த திரையுகத்தில் எதிர்பார்த்துப் போவது அதிகப்பேராசை.

முக்கியமாய் ரஜினியின் வயதை மறைக்க அதிகம் மெனக்கெடவில்லை என்பதும் ஆறுதல்.
தாடி நரைத்ததால் அமிதாப் அளவிற்கு ரஜினியிடமிருந்து பிளாக்,பா, போன்ற படங்களை எதிர்பார்ப்பது நமக்கும் அவருக்கும் நல்லதல்ல.

கண்கள் விரியுமளவிற்கு மலேசிய நாட்டை திரையில் காட்டியிருக்கிறார்கள்.
நட்சத்திரங்கள் கொட்டிக்கிடப்பதைப்போல ஜொலிக்கும் கோலாலம்பூர், தாய்லாந்தின் இரவுக்கடைவீதி,
மலேசிய நாட்டின் தோட்டத்திடை ஒரு மாளிகை இன்னும் கண்ணில் நிற்கிறது..

பிண்ணனி இசை படத்தின் எந்த இடத்திலும் உறுத்தவில்லை.
நடித்த மற்றவர்களிடமிருந்தும் கதைக்கு மிகத்தேவையான அளவு எடுத்திருக்கிறார் இயக்குனர்.

மலேசிய கதைக்களத்தில் இயக்குனரின் மொழியே சிறந்த தேர்வு.

அதீத விளம்பரங்கள் படத்தைப்பற்றிய அளவுமீறிய ஆர்வத்தை கிளப்பினாலும் இந்த வயதில் ரஜினியை இப்படித்தான் காட்டமுடியும் என்ற நிதர்சனம் புரியுமெனில் படம் மோசமல்ல.

ரஜினி என்ற மாயவலைக்குள் படம் இருப்பதால் மலேசிய தமிழரின் போராட்ட வரலாறு,தமிழர்கள் அங்கே பட்ட துயர்கள் இன்னும் கொஞ்சம் அழுத்தமாய் பதியப்படவில்லையோ என்ற எண்ணம் வருகிறது.

மிகக்கூரான வசனங்கள் ஆடைகளைப்பற்றியும்,
வாழ்க்கை பற்றியும் இருக்கத்தான் செய்கின்றன.

நட்சத்திர தேர்வில் வழக்கமான ரஜினி படங்களில் காணக்கிடைக்கும் பல முகங்கள் இல்லை.
முற்றிலும் புதிய இணைகள்.
எல்லாரும் ரஞ்சித் என்னும் இயக்குனரின் அறிமுகங்களாகவும்,அவரின் படங்களில் காண்பவர்களாகவும் இருக்கின்றனர்.
அது மிகச்சரி..பின் எப்போது அவர்கள் ரஜினியுடன் சேர்ந்து நடிப்பது...

பொது ஊடகங்கள் சொல்வது போல் இந்தப்படத்தின் எதிர்மறை விமர்சனங்கள் என்னை கவரவில்லை..

மொத்தத்தில் கபாலி படம் இரண்டு வழிகளில் பயணிக்கிறது.

ரஞ்சித் என்ற இயக்குனரின் பாதையில் ஒரு பக்கமாகவும்,ரஜினி என்ற உச்சநடிகரின் பாதையில் ஒருபுறமாகவும் நடக்கிறது.

ஒவ்வொருவரின் பங்களிப்புக்காகவும் ஒவ்வொரு தடவை பார்க்கலாம்...

வேண்டாமெனில் ஒருமுறையேனும் பார்க்கலாம்.

வாழ்த்துகள் ரஞ்சித்.

புதன், 20 ஜூலை, 2016

நீங்க உண்மையான டாக்டரா?

அன்பின் சக்திக்கு,

நீண்ட நாளுக்குப்பின் நான் உனக்கெழுத மீண்ட நாள் இது.

இந்தியாவின் மருத்துவ நகரமாய் சென்னை இருக்கிறது.

பொதுவாய் எனக்கு மருத்துவத்துறையின் மீது நம்பிக்கை கிடையாது. விபத்துகளின் போது தேவைப்படும் அளவிற்கு வாழ்க்கையின் எல்லா நேரத்திற்கும் மருத்துவம் தேவையில்லை என்பதே என் நிலை..

தவறாயிருக்கலாம்.எனக்கு அப்படித்தான்.

சக்தி!
இயற்கையிலேயே நம் உடலின் தகவமைப்பு அற்புதமான ஒன்று..
அதன் தேவையை நமக்கு எளிதில் காட்டிக்கொடுத்துவிடும்.
உண்ணும் உணவே மருந்தாயிருக்கவேண்டும்.
நம் மண்ணில் விளையும் யாவுமே மருந்தே.
பயன்படுத்தும் வழிகளும் நம் முன்னோர்கள் அற்புதமாய் சொல்லிவிட்டுப்போய் இருக்கிறார்கள்.

உணவின் பழக்கத்தை மாற்றிவிட்டு,இன்று மருந்துகளின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறோம்.

பார்க்கும் நபரிடமெல்லாம் சர்க்கரை அளவு விசாரிக்கத்தொடங்கி விட்டோம்.

சர்வதேச அரசியலில் இந்த மருந்துக்கும்பல் அடிக்கும் கொள்ளையென்பது கணக்குப்பார்த்தால் கண்ணை இருட்டாக்கிவிடும்.

உலகத்தின் அத்தனை நோய்களுக்கும் கிட்டத்தட்ட 250 வகையான மருந்துகள் போதுமாம்.அதிலும் இந்தியா போன்ற தட்பவெப்ப நாடுகளுக்கு 200 என்ற அளவிலான மருந்துகளே போதுமாம்.
ஆனால் இந்திய மருந்துக்கடைகளைப் பார்த்தால் மலைக்கவைக்கும் அளவில் கொட்டிக்கிடக்கிறது மருந்துகள்.

ஒரே வகையான மூலக்கூறுகளை கொண்ட மருந்து 3 ரூபாயிலிருந்து 500 வரை நிறுவனத்தின் பெயருக்கேற்ப விற்கப்படுகிறது.

உலகெல்லாம் பறக்கும் பிரதமருக்கு வேறு வேலைகள்.காந்தியை கொன்றது யாரென்ற பிரச்சனையை கவனிக்கவே எதிர்க்கட்சிக்கு நேரமில்லை..

மக்களின் உயிரோடு விளையாடும் இந்த பிரச்சினையில் எல்லாத்தரப்பும் கண்ணை மூடிக்கொண்டிருப்பது கவலைக்குரியது தான்.

இந்திய மருத்துவத்துறையும் மூடிமறைத்த துறையாகவே இன்றும் இருந்துகொண்டிருக்கிறது.
நாட்டின் மக்கள் தொகைக்கேற்ப மருத்துவர்களின் அளவு குறைந்துகொண்டே வருகிறதாம்.

எண்ணற்ற இளைஞர் வளம் வேலைவாய்ப்பின்றி அலைய ,
இருக்கும் மருத்துவர்களின் வயதுவரம்பை அதிகரிக்கும் ஆலோசனைகள் நடக்கிறது.

மருத்துவப்படிப்பதென்பது லட்சங்களைத்தாண்டி கோடிகளில் பறக்கிறது.
படிப்பிடங்களுக்காய் கொலைவரை அரங்கேறும் அவலங்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆயிரக்கணக்கான கிலோ தங்கம் இருந்து எடுத்த மருத்துவத்துறை உயரதிகாரி கண்டிப்பாய் இப்போது சிறையில் இருக்க வாய்ப்பில்லை.

ஆனால், நான் சொல்ல வந்தது அதுவல்ல சக்தி!

இன்றைய நாளிதழ் ஒன்றில் ஒரு செய்தி..
உலக சுகாதார நிறுவனம் ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
இந்திய மருத்துவர்களில் பள்ளிப்படிப்பு மட்டுமே முடித்த,முடிக்காத போலி மருத்துவர்கள் கிட்டத்தட்ட பாதிபேர்கள் இருக்கிறார்களாம்.

அறிக்கை வெளியிட்டு இருப்பவது சாதாரண நிறுவனமல்ல.
உலக தர நிறுவனம்.
அதன் அறிக்கையும் எளிதில் கடந்துவிடும் சாதாரண அறிக்கை அல்ல.

மக்களின் உயிரோடும்,நாட்டின் நலத்தோடும், எதிர்காலத்தோடும் பின்னிப்பிணைந்த மருத்துவத்துறையில் இத்தனை கருப்பாடுகளை வைத்துக்கொண்டு ,இந்த அரசாங்கம் எத்தனை வாய்கிழிய பேசினாலும் புண்ணியமில்லை.

மருத்துவர்களை கண்ணில் காணும் கடவுளாய் உள்ளம் மட்டுமல்ல,உடலும் திறந்து காட்டி பேசும் எங்கள் இந்திய மண்ணில் இப்படி மருத்துவர்கள் இருப்பார்களெனில் இந்தியா எப்போது முன்னேற?

நட்சத்திர விடுதிகள் போல மருத்துவமனைகள் தேவைதான்...
மருத்துவரே போலியெனில் அவை சுடுகாட்டிற்கே ஒப்பாகும்.

இந்த அரசுக்கும்,
மருத்துவத்துறைக்கும் உலகம் பூசிய கருப்புச்சாயம் இது.
எதையும் துடைத்துவிட்டுப்போகும் வழக்கம் போல் இதற்கும் இருந்தால்...

அவர்களுக்கு இந்த போலி மருத்துவர்களை வைத்தே வைத்தியம் பார்க்க வேண்டும்.

சக்தி...
கொஞ்சம் பதட்டமாய்த்தான் இருக்கிறது..
என்ன செய்ய?
எப்போதேனும் மருத்துவரைப் பார்க்கப்போனால்
அவர் நம்மைப்பார்க்கும் முன் நாம் அவரின் சான்றிதழைப் பார்த்துக்கொள்ளலாம்.

மருத்துவர் சரியாய் இருந்து மருந்து சரியாய் இல்லையெனில்..
விதிதான்.

அன்புடன்.
செல்வக்குமார்.




திங்கள், 11 ஜூலை, 2016

தேடல்....

பின்னேரச் சந்தையில்
கூறுகளிட்ட
பூச்சிக்காய்களுக்காய்
காத்திருப்பாள்.

தண்டட்டியாடிய
நெகிழ்ந்த
காதுகளைவிட
விளையாட்டுச்சாமான்
ஏதுமில்லை
எனக்குத்தர
அவளிடம்.

துடைத்துசலித்த
சளியை
உறிஞ்சித்துப்பும்
அவளின்
பிரியம்
எந்த
மருத்துவனும்
செய்யாத
மகத்துவம்.

தொங்கல்
விழுந்த வயிற்றுக்கு
சங்கிலைக்
கசாயம்...

காலைவெயிலில்
காதுக்குள்
அழுக்கெடுக்க..
படர்ந்த
குறுகுறுப்பு..

கடகப்பெட்டியில்
கறி வறுத்து
பட்டுடுத்தி
கப்பலில்
தனியே வந்தாளாம்.

சீமைக்கருவை
முள்ளடித்து
சீலை கிழிந்தபோது
சொல்லி அழ..
ஒப்பாரியாய்
கவிழும்
வாழ்க்கை...

வெல்லம்
நக்கி
தேனீர் குடிப்பாள்.
செல்லம்
கொடுத்ததில்
சீமைக்கு
மகராணி.

வறுமை
புரிந்தநாளில்
சீக்கு வந்து
செத்துப்போனாள்.

தெய்வமே
அவளென்பேன்..
தேடிவந்த
கடவுளென்பேன்.

அப்பத்தா
செத்து
பல வருசமாச்சு.
சேலை
படைப்பதில்லை
சிரித்த
ஒரு
படமுமில்லை..

ஆலயச்சிலைகளில்
அப்பத்தா
தேடுவேன்..

ஆழ்ந்த
பக்தியென
அமைதியாயிருக்கிறாள்
சின்னவள்.