திங்கள், 11 ஜூலை, 2016

தேடல்....

பின்னேரச் சந்தையில்
கூறுகளிட்ட
பூச்சிக்காய்களுக்காய்
காத்திருப்பாள்.

தண்டட்டியாடிய
நெகிழ்ந்த
காதுகளைவிட
விளையாட்டுச்சாமான்
ஏதுமில்லை
எனக்குத்தர
அவளிடம்.

துடைத்துசலித்த
சளியை
உறிஞ்சித்துப்பும்
அவளின்
பிரியம்
எந்த
மருத்துவனும்
செய்யாத
மகத்துவம்.

தொங்கல்
விழுந்த வயிற்றுக்கு
சங்கிலைக்
கசாயம்...

காலைவெயிலில்
காதுக்குள்
அழுக்கெடுக்க..
படர்ந்த
குறுகுறுப்பு..

கடகப்பெட்டியில்
கறி வறுத்து
பட்டுடுத்தி
கப்பலில்
தனியே வந்தாளாம்.

சீமைக்கருவை
முள்ளடித்து
சீலை கிழிந்தபோது
சொல்லி அழ..
ஒப்பாரியாய்
கவிழும்
வாழ்க்கை...

வெல்லம்
நக்கி
தேனீர் குடிப்பாள்.
செல்லம்
கொடுத்ததில்
சீமைக்கு
மகராணி.

வறுமை
புரிந்தநாளில்
சீக்கு வந்து
செத்துப்போனாள்.

தெய்வமே
அவளென்பேன்..
தேடிவந்த
கடவுளென்பேன்.

அப்பத்தா
செத்து
பல வருசமாச்சு.
சேலை
படைப்பதில்லை
சிரித்த
ஒரு
படமுமில்லை..

ஆலயச்சிலைகளில்
அப்பத்தா
தேடுவேன்..

ஆழ்ந்த
பக்தியென
அமைதியாயிருக்கிறாள்
சின்னவள்.

8 கருத்துகள்:

 1. தேடல் அருமை.......ஆமாம் நீங்கள் எழுதுவதை நிறுத்திவீட்டீர்களா அலது நீங்கள் எழுதியது என் டைம் லைனில் வரவில்லையா ? உங்கள் எழுத்தை தேடிக் கொண்டிருந்த போது இந்த தேடல் என் கண்ணில் பட்டது அருமை

  பதிலளிநீக்கு
 2. அருமை செல்வா... சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பகிர்வு. மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 3. அருமை
  நீண்ட நாட்களாகி விட்டது நண்பரே
  தங்களை வலையில் சந்தித்து

  பதிலளிநீக்கு
 4. காத்திருந்தாலும் ஏமாற்றவில்லை. தண்டட்டி போலவே கனம். என்றாலும் நஸ்தால்ஜியாவிலிருந்து கொஞ்சம் வெளியே வந்தால் நல்லது என்று தோன்றுகிறது செல்வா. த.ம.+1

  பதிலளிநீக்கு
 5. சூப்பர் கவிதை அண்ணா...
  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 6. Appaththa, appappa!!!! Selva sir, ungal ezhuthin vannam arpudham!!! Idhu dhan ungalidam nangal edhirparpadhu.

  பதிலளிநீக்கு
 7. உங்கள் தேடல் அருமை செல்வா. பல நாட்களாகிவிட்டது இல்லையா...

  பதிலளிநீக்கு