செவ்வாய், 28 மார்ச், 2017

டப்...டப்பென ஒரு புல்லட் கனவு

லேட்.முத்துசாமி மகன்
(கேம்ப்) சிங்கப்பூர் முருகேசனுக்கு..புல்லட்டின் மீதான காதலென்பது
முழங்கால் மறைக்கும் காலணியோடு
புல்லறுக்கும் இயந்திரத்தின்
ஓசையெல்லாம்
டப் டப்பென
புல்லட்டின் ஓசையாகவே இருக்குமளவுக்கு..

அடுக்குக்கட்டில்களில் மூன்றாம் நிலையில்
டைகர் பீர் நனைத்த இரவுக்கனவுகளில்
லோராங்கின் சந்துகளிலெல்லாம்
சிவப்புவண்ண புல்லட்களில் பறந்து திரிந்தான்.
உண்டியல்காரன்  கொண்டுவந்த
பத்துப் பெண்கள் படத்தில்
வண்டியில் தன்னோடு வாகாய் அமரும்
பொருத்தம் மட்டும் தேடி..
புல்லட்டோடுதான்
புதுமாப்பிள்ளையாவதன் அவசியத்தை வலியுறுத்தினான்..

ஆறாவது பெர்மிட் நடப்பிலிருந்த
உச்சிவெயிலின் புல்தரையில் வீழ்ந்து
இதய நோயென்ற மருத்துவ ஆலோசனையில்
தாயகம் திரும்பிய அன்னார்..
கயிற்றுக்கட்டிலின் கனவுகளில்
காதலி கைபிடித்து
நடந்துதான் 
போகிறார்.

5 கருத்துகள்: