வியாழன், 26 அக்டோபர், 2017

ஆஷ்....சாம்பலில் புதைந்த சரித்திர உண்மைகள்...

இந்த சமூகம் எதை வீரமாகவும் தியாகமாகவும் போற்றி துதித்துக்கொண்டிருக்கிறதோ...
எவரை கடவுளுக்கொப்பானவராய் வணங்கிக்கொண்டிருக்கிறதோ அதை அல்லது அவரை மாறுபட்ட ஒரு கோணத்தில் கிட்டத்தட்ட சரியான பார்வையில் கண்டு இந்த உலகத்தின் மஞ்சள் கண்ணாடி அணிந்த பார்வையை மாற்றுவதென்பது நீண்ட ஆரய்ச்சி அறிவும் ..
நிமிர்ந்த தைரியமும்,
எல்லாம் தவிர்த்து உண்மையும் வேண்டும்.
இந்த இலக்கணக்குறிப்புகளுக்கு(?) மிகச்சரியான உதாரணமாக சமீபத்தில் வெளியீடு கண்ட மருத்துவர்.நா.ஜெயராமன் எழுதிய "ஆஷ் படுகொலை புனைவும் வரலாறும்" என்ற நூல் இருக்கிறது...

விடியல் வெளியீடாக ஆதவன் தீட்சண்யாவின் அணிந்துரையோடு ராசி.பன்னீர்செல்வனின் உதவியோடும் வந்திருக்கும் இந்த நூல்...

இதுவரை வரலாற்றை பார்த்துவந்த கண்களுக்கு புதிய பல சாளரங்களை திறந்திருக்கிறது..

லட்சக்கணக்கான இன்னுயிர்களை ஈந்து எவர்பெயரும் வெளிவாராது புதைந்துபோன இந்திய சுதந்திர வரலாற்றில் .(நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பது போன்ற பல சதிவழக்குகள் போல)
குறிப்பிட்ட சிலரின் பெயர்கள் மட்டும் தூக்கிவைத்துக் கொண்டாடுவது ஏன்?என்ற ஒற்றைக்கேள்விக்கான விடை தேடும் ஆசிரியரின் பயணத்தின் தொடக்கப்புள்ளி யுகங்களின் கரடுமுரடான பாதைகளெங்கும் பயணித்துத்திரிந்திருக்கிறது.
பயணத்தின் ஊடாக மனுவின் தர்ம விளக்கமென்னும் அசிங்கங்கள் அப்பிக்கிடந்த குப்பைமேடுகளை காட்சிப்படுத்துவதாகட்டும்...

ஆரிய வீர பூமியின் நாயகர்களாக வரிந்திருக்கும்
ஸ்ரீராமன்,கண்ணன்,அர்ஜுனன் என்னும் பாத்திரங்களின் நீதி(?)தவறாத மேலாண்மையை குத்திக்கிழித்து

கட்டியிருக்கும் சலத்தை ஆணிவேறோடு பிடுங்கிக் காட்டுவதாகட்டும்...
சம்பூகப்படுகொலை,தன் மனைவியை பலமுறை தீயிலிறக்கிய காவிய நாயகன்...

கோபியர் குளிக்கையில் குதூகலித்த குழல்காரனின் ஆட்சியில் நடந்த நல்லவைகள்...
வீர சிவாஜியின் பின்னிருந்த கோரப்பின்னணிகள் என வரலாறு வண்டி வண்டியாய் நிரம்பி வழிகிறது..
மிக துணிச்சலாக எழுதத்தலைப்பட்டிருக்கும் ஆசிரியர் அதற்கான தேடலையும்,முன்னோர்களின் வழிகாட்டுதலையும் எடுத்தாண்டிருப்பதற்கு தமிழ்ச்சமூகம் நன்றி சொல்லவேண்டும்.

ஆரிய மிலேச்சர்கள் என்ற அயோத்திதாசரின் பார்வையை மங்கலாக்கிவிட்டு ஆரியக் கும்பல் கோமாமிச மிலேச்சர்களை கருவறுக்கப்புறப்பட்ட நயவஞ்சத்தின் வெளிப்பாடுகளை வெளிச்சமிட்டிருக்கும் தீரம்..வீரம்...

சரித்திரத்தை தனக்கு சாதகமாக அலங்கரித்து பொட்டுவைத்து பூச்சூடும் பொல்லாதவர்களின் போக்கை சொற்சிலம்பமெடுத்து வீசும் வேகம் அபாரம் தான்..

இந்த நூல் முழுவதையும் வாசித்துமுடிக்கும் போது நாம் படித்திருக்கும் சிலரின் வரலாறுகளை மீண்டும் தீவிர மறுபரிசீலனை செய்யவேண்டும் என்பதும் ஆராய்ச்சிக்கான கண்ணாடியை நாம் அனைவரும் அணிய வேண்டும் என்ற ஆவலும் ஏற்படுகிறது..
நூலாசிரியரின் அளவிற்கு ஆராய்ச்சி அறிவும்,கல்வித்தகுதியும் இல்லை என்றாலும் சில கேள்விகள் தவிர்க்கமுடியாததாகிவிடுவதையும் சொல்லியாக வேண்டும்..

வாஞ்சியின் செயலை மிக தீர்க்கமாக சனாததர்மத்தை காப்பதற்காகவே நிகழ்ந்திருப்பதை நிரூபிக்கும் முயற்சி உங்கள் ஆய்வினால் மிக நேர்த்தியாக நிறைவேறியிருக்கிறது..

நீலகண்டப்பிரம்மச்சாரியின் மாறுபட்ட வாக்குமூலங்களை கிழித்திருக்கும் உங்கள் பார்வை சரியாய் இருக்கிறது..

ஆங்கிலேய ஆட்சியின் கோரத்தை ஒழிக்க...வாஞ்சி எந்தவிதமான பிண்ணனியில் இயங்கி இருந்தாலும் அற்றை விடுதலை வேட்கைக்கு ஒருதுளியேனும் ஊக்கமாய் இருந்திருப்பதை மறக்கலாமா?

ஒப்பீடென்னும் பார்வையில் ஆரியக்கும்பலை விட ஆங்கிலக்கும்பலை சற்று மேலேற்றியே பார்த்திருக்கும் பார்வை சற்று கனக்கிறது...

ஆங்கிலேய ஆட்சியில் நிர்வாகமும்.தொழிலும் நல்ல முன்னேற்றத்துடனும் நியாயமாகவும் நடந்திருப்பதாய் நிறுவுதல் முறையா? வங்கத்தின் லட்சக்கணக்கான நெசவாளர்களின் கட்டைவிரல்களை வெட்டியதும் வரலாறுதானே..
அடங்கிக்கிடந்த அல்லது அடக்கிவைப்பட்டிருந்த ஒரு பேரினத்தின் கோபம் அணை உடைந்த வெள்ளமாய் பீறிட்டுக்கிளம்பும் வேகத்தில் அரித்தும்..பொங்கியும்.. அவலங்களை நினைத்து நினைத்து ஆற்றாமையால் துடிக்கும் நூலாசிரியரின் பேனா வார்த்தைக்கு வார்த்தை சீறியிருக்கிறது..

நூல் முழுவதும் பரவிக்கிடக்கும் தகவல்களும் ,வரலாற்று உண்மைகளும்  மீண்டும் மீண்டும் நூலாசிரியரின் உழைப்பை சாற்றினாலும்..

தற்கூற்றாக நூலின் முக்கால்வாசி இடங்களை
எழுதியிருக்கும் ஆசிரியர் வார்த்தைகளின் கடுமையை குறைக்க முயன்றிருப்பதும் புரிகிறது..

தான் எடுத்துக்கொண்ட ஒரு ஆய்வின் நோக்கிற்காக பல விசயங்களை எழுதும் ஆசிரியர் ....

வ.உ.சி தன் மகனுக்கு பெயர் வைத்த காரணத்தை போற்றுகிறாரா....தூற்றுகிறாரா என்பது புரியவில்லை..

திருப்பூர் குமரன் காத்த கொடி தேசியக்கொடி அல்ல ..ஒரு கட்சியின் கொடிதான் என்கின்றீர்கள்.. கொடி என்பது எதுவாக இருப்பினும் அது குமரனின் தேசப்பற்றை விடுதலை உணர்வை குறைத்து சொல்வதாகிவிடாதா?

மிக நீண்ட நூலாய் வந்திருக்கும் இதில் திரிக்கப்பட்ட உண்மை வாஞ்சியின் சிலவரிக்கடித்தோடே நிரூபிக்கப்பட்டு விடுகிறதே..
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா என்ன?

நூல் முழுதும் வசவு வாங்கும் வாஞ்சி செய்தது இந்து சனாதனத்தை காக்கவும்,மீண்டும் ஆரியவர்த்தத்தை ஏற்படுத்துவதே எனவும் எழுதிவைத்துவிட்டு கோழைத்தனமாக பெண்கள் கழிவறைக்குள் சுட்டுக்கொண்டு இறந்த போதே அவனின் இழிவு தெரிந்துவிடுகிறது..

ஆஷின் முடிவுக்குப்பிறகு அவனின் கூற்றாக கடிதம் மட்டுமே இருக்கும் போது,
ஆஷின் பேரன்களாக உருவெடுக்கும் பலபேர் செய்யும் வரலாற்றுப்புரட்டிற்கும்,தூக்கிவைத்துக் கொண்டாடும் சுயநலக்காரர்களின் போக்கிற்கும் வாஞ்சியையே நிந்திப்பது தும்பை விட்டு வாலைப்பிடிப்பது ஆகாதா?

உண்மையிலேயே கொல்லப்படவேண்டியது விஞ்ச் என்னும் பாதகந்தான் என்பதில் அன்றைக்கு இருந்த கட்டத்தில் ஒருவேளை வாஞ்சி விஞ்ச் அவர்களை சுட்டிருந்தால் நிலைப்பாடு என்னவாகி இருந்திருக்கும்.

இந்த தேசம் ஜாதி இன பிரிவினைகளால் சிதைந்து போனது ஆரிய சூழ்ச்சியால் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்றாலும்..
தன் சாதியை இனத்தை தூக்கிவைத்து சுமந்துகொண்டிருக்கும் அவர்களைப்போலவே..இன்னும் எத்தனை நாட்கள் தாழ்த்தப்பட்ட ,வஞ்சிக்கப்பட்ட சாதியும் இனமும் நாங்களென சொல்லிக்கொண்டிருப்பது?
மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளைக்காட்டிலும் இனி வளர்த்தெடுக்கப்படவேண்டிய அவர்களின் சுய முன்னேற்றம் மற்றும் சமூகத்தில் ஒன்றெனக்கலந்து போவதற்கு வேண்டியதை செய்யவேண்டாமா?


சமூகம் இதுவரை தூக்கிவைத்து கொண்டாடிய சில பொய்யர்களை துகிலுரிந்து காட்டிய விதத்திலும்,உண்மைகளை அதன் ஆணிவேர்தொட்டு ஆராய்ந்து வெளிக்கொண்டுவந்த பாங்கிலும்.ஆரிய மிலேச்சர்களால் இந்த மண்ணின் ஆதி குடிகள் பட்ட அவலங்களையும், பொற்காலமாய் பூத்திருந்த சமண,பவுத்த இசங்களை இந்து சனாதன வன்முறைகள் சூறையாடிய வன்கதைகளை ..இப்படி ஒரு சமூகத்தின் ...யுகங்களின்
வரலாற்றை துல்லியமாக படம்பிடித்திருக்கும் நூலாசிரியருக்கும் அவருக்கு துணை நின்ற அத்தனை பெருமக்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளும் அன்பும்..

வரலாற்றுப் புத்தகங்களை வகுப்பறையோடு மூடிவிட்டு புத்திசாலிகளாய் நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கும்,சுதந்திரப்போராட்டத்தின் கொடிய வரலாற்றில் இப்படியும் ஒரு களை முளைத்தது என்ற பெரு உண்மையையும் அறிந்துகொள்ள விரும்புவோர்க்கு இந்த நூல் மிக அவசியமான ஆவணம் என்பதில் சந்தேகமில்லை...


2 கருத்துகள்:

  1. அவசியம் படிக்க வேண்டிய நூல் என்பதை தங்களின் அருமையான விமர்சனம் கோடிட்டுக் காட்டுகிறது நண்பரே
    பதிப்பகத்தின் பெயரினையும், தங்களின் பதிவில் தெரிவிப்பீர்களேயானால் பயனுள்ளதாக இருக்கும் நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. இவ்வாறான நூல்களை எழுதுவது என்பது மிகவும் சிரமமாகும். உங்களுடைய அலசல் நூலாசிரியர் மேற்கொண்டுள்ள முயற்சிகளை மிகவும் சிறப்பாக முன்வைக்கிறது. கூற்று, எதிர்க்கூற்று, மாற்றுக்கூற்று என்பனவே சமுதாயத்தை முன்னுக்கு இட்டுச்செல்லும். அவ்வகையில் நூலாசிரியருக்குப் பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு