திங்கள், 9 அக்டோபர், 2017

கவரிமான்கள்.....

கூடைப்பூவை
புதைக்கலாம்
அவள் கூந்தலில்...

முகத்தினை
முழுவதாய்
பார்க்கவிடாது
கூந்தல்...

இடுப்புக்குக்கீழ்
இறங்கிகிடக்கும்
ஜடையை
இழுத்துப்பார்த்து
ஒட்டில்லை
என்பதால்
நொடித்துக்கொள்ளும்
கழுத்துகளதிகம்..

அள்ளிச்சொருகிய
கொண்டையும்
மடித்துக்கட்டிய
சீட்டிப்பாவாடையுமாய்
மரத்து உச்சிவரை
செல்லும் அக்கா
செங்காய்களை
ஒளித்துவைப்பதும்
கொண்டைக்குள் தான்..

தலைகுளிக்கும்
நாட்களில்
முகமெல்லாம்
மஞ்சள்பூசி
சாந்துபொட்டும்
சாம்பல் திருநீறுமாய்
கல்லாங்காய்
விளையாட
அக்கா உட்காரும் போது
காய்களை விட்டு
அக்காவை
மேய ஆரம்பிக்கும்
சக கண்கள்...

ஐஸ் விற்கப்போன
அக்காவின் அப்பா..
அடிபட்டு
ஐஸ் பாரிலேயே
படுக்கவைத்து
அனுப்பிய பின்னாளில்..
அவள் அம்மா
சத்துணவுக்கு
அடுப்பெரிக்கப்
போனாள்...

குலதெய்வ
கோயிலுக்குப் போனது
மொட்டையடிக்கவென
அக்காவுக்கு
அதுவரை
தெரியாது..

வைராக்கியமாய்
அக்கா
அடுத்து
முடிவளர்க்கவேயில்லை..

பத்தாப்பு பெயிலான
அக்காவை
கிழட்டு மாமனுக்கு
கட்டிவைத்தபோது
இழுத்துவச்சு
அடிக்க மசுரில்லைன்னு
சொன்னதுதான்
அந்த கல்யாணத்தின்
ஒரே சிரிப்பு..

எண்ணெய்
இல்லாக்கொடுமைக்கு
முடி இறக்கிய
சாமியை
சபித்துக்கொண்டே
இருக்கும்
அவள் அம்மாவுக்கும்
அடுப்புச்சூட்டில்
முடிகுறைய..

மயிர் நீத்தாலும்
பெயராகிப்போனது..

குட்டைமுடிக் குடும்பம்..2 கருத்துகள்: